பூனைக் கண் நெபுலா (Cat’s Eye Nebula)
– ஏற்காடு இளங்கோ
பூமியின் வளிமண்டலத்தில் மேகங்கள் இருப்பதை நாம் காண்கிறோம். அதே போல் சூரிய குடும்பம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மற்ற கிரகங்கள் மற்றும் நிலவுகளின் வளிமண்டலங்களிலும் மேகங்கள் காணப்படுகின்றன. மேலும் அண்டவெளியில் விண்மீன்களுக்கு இடைப்பட்ட வெளியில் மேகங்கள் உள்ளன. இவை நெபுலா (Nebula) என அழைக்கப்படுகின்றன.
நெபுலா

நெபுலா என்பது தூசு மற்றும் வாயுகளால் ஆன ஒரு பெரிய மேகம் ஆகும். இதில் பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களே அதிகம் உள்ளது. நெபுலா என்ற இலத்தீன் சொல்லுக்கு மேகம் அல்லது பனிமூட்டம் என்று பொருள். நெபுலா நட்சத்திரங்களுக்கு இடையிலான இடத்தை ஆக்கிரமித்துள்ளது. இப்பகுதியை விண்மீன் இடைவெளி என்று அழைக்கப்படுகிறது.
சில நெபுலாக்கள் ஒரு சூப்பர்நோவா போன்ற இறக்கும் நட்சத்திரத்தின் வெடிப்பினால் வெளிப்படும் வாயு மற்றும் தூசியிலிருந்து வருகின்றன. மற்ற நெபுலாக்கள் புதிய நட்சத்திரங்கள் உருவாகத் தொடங்கும் பகுதியாக உள்ளன. இது புதிய நட்சத்திரங்களுக்கு நாற்றங்கால் போல் செயல்படுகின்றன. ஆகவே இந்த நெபுலாக்கள் “நட்சத்திர நர்சரிகள்” என்று அழைக்கப்படுகின்றன.
நெபுலாவின் வெப்பநிலை ஒரு டிகிரி கெல்வின் அல்லது மைனஸ் 458 டிகிரி பாரின்ஹீட் ஆகும். அது மிகவும் குளிராக இருக்கும். நெபுலா ஒரு மேகம் என்பதால் அதற்கு நன்கு வரையறுக்கப்பட்ட எல்லைகள் கூட இல்லை. இதன் அடர்த்தியான பகுதிகளுக்குள் ஒரு கன சென்டிமீட்டருக்கு 1,000 முதல் 10,000 அணுக்கள் வரை இருக்கும் என்கின்றனர்.
ஒரு நெபுலாவில் உள்ள தூசி மற்றும் வாயுக்கள் மிகவும் பரவி இருக்கும். ஈர்ப்பு விசையால் தூசு மற்றும் வாயு மெதுவாக ஒன்றாக இழுக்கப்படுகிறது. அப்போது பெரிய கொத்துகள் உருவாகும். இதனால் ஈர்ப்பு விசை மேலும் வலுவடைகிறது. ஈர்ப்பு விசையால் நெபுலாவின் பகுதிகள் சுருங்கத் தொடங்கும். நெபுலா சுருங்குவதால் அது வேகமாகச் சுழலத் தொடங்குகிறது. அப்போது மையத்தில் உள்ள பொருள் வெப்பமடைகிறது. இந்தச் சூடான மையமே ஒரு புதிய நட்சத்திரத்தின் தொடக்கமாகும்.
பழமையான நெபுலாக்களில் இருந்து பல புதிய விண்மீன்கள் உருவாகும். இதற்கு உதாரணமாகக் கழுகு நெபுலாவைக் குறிப்பிடலாம். நெபுலாக்களில் உள்ள வாயுக்கள் ஈர்ப்பால் ஒன்றிணைந்து விண்மீன்களாக உருவாக்குகின்றன. விண்மீன்களாக உருவாகாத நெபுலாவின் இதரப் பகுதிகள் ஈர்ப்பு விசையால் ஒன்றிணைந்து கோள்களாக மாறுகின்றன.
படங்கள்
சூரியக் குடும்பத்திற்கு அப்பால் நெபுலாக்கள் உள்ளன. தொலைதூரத்தில் உள்ள நெபுலாக்களின் படங்களை எடுக்க வானவியல் அறிஞர்கள் மிகவும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். நாசாவின் ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் நெபுலாவின் படங்களை எடுத்துள்ளனர்.
வகை
நெபுலாக்களில் 5 வகைகள் உள்ளன.
பிரதிபலிப்பு நெபுலா
இது தூசி மேகம் ஆகும். இவை அருகில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியைப் பிரதிபலிப்பதால் பிரதிபலிப்பு நெபுலா (Reflection Nebula) என அழைக்கப்படுகிறது. இது நீல நிற ஒளியைச் சிதறடிப்பதால் நீல நிறத்தில் காணப்படுகிறது.
உமிழ்வு நெபுலா
இவை (Emission Nebula) உயர் வெப்பநிலை வாயுக்களைக் கொண்டுள்ளன. இதில் உள்ள அணுக்கள் அருகில் உள்ள நட்சத்திரங்களில் இருந்து வரும் புற ஊதா ஒளியால் ஆற்றல் பெறுகின்றன. இந்த நெபுலாக்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
டார்க் நெபுலா

இவை (Dark Nebula) தூசியின் வடிவமாகும். இவைப் பின்னால் இருந்து வரும் ஒளிக் கதிர்வீச்சைத் தடுக்கின்றன. இதற்குக் குதிரைத் தலை நெபுலாவை எடுத்துக்காட்டாக கூறலாம்.
கிரக நெபுலா
சில நட்சத்திரங்கள் தங்கள் வாழ்நாளின் முடிவில் வெளியேற்றப்பட்ட வாயுவின் ஓடு ஆகும். நமது சூரியன் 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கிரக நெபுலாவை (Planetary Nebula) உருவாக்கும்.
சூப்பர்நோவா எச்சம்
ஒரு பெரிய நட்சத்திரம் ஒரு வெடிப்பில் தன் வாழ்க்கையை முடிக்கும் போது சூப்பர்நோவா ஏற்படுகிறது. இது ஒரு விண்மீன் மண்டலத்திற்கு சமமான ஆற்றலை வெளியிடுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு வாயுக்கள் வெளியேறி, நட்சத்திரத்தின் எச்சம் ஒரு நியூட்ரான் நட்சத்திரம் அல்லது கருந்துளையாக மாறுகிறது.
உருவ அமைப்பு
நெபுலாக்கள் பல்வேறு உருவ அமைப்பைக் கொண்டுள்ளன. எறும்பு நெபுலா, பூமரங் நெபுலா, நண்டு நெபுலா, கழுகு நெபுலா, எஸ்கிமோ நெபுலா, சுருள் நெபுலா, குதிரைத் தலை நெபுலா, பெலிகன் நெபுலா, செஞ்சதுர நெபுலா, ரோசெட் நெபுலா மற்றும் பூனைக் கண் நெபுலா என பல உருவம் கொண்ட நெபுலாக்கள் உள்ளன.
ஹெலிக்ஸ் நெபுலா

ஹெலிக்ஸ் நெபுலா (Helix Nebula) என்பது பூமிக்கு மிக அருகில் உள்ள ஒரு நெபுலா ஆகும். இது கால்டுவெல் 63 (Caldwell 63) என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு கிரக நெபுலா வகையைச் சேர்ந்தது. கிரக நெபுலா என்ற பெயரைக் கண்டு ஏமாந்து விட வேண்டாம். உண்மையில் இதற்கும் கிரகத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
கிரக நெபுலா என்ற சொல் தவறான பெயர் ஆகும். எனெனில் அவைக் கிரகங்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவை. ஆரம்பகால தொலைநோக்கிகள் மூலம் வானவியல் அறிஞர்கள் இதைக் கவனித்தபோது இந்த நெபுலாக்கள் சிறிய கோள்கள் (Planets) போன்ற வடிவத்தில் இருந்தன. இந்தத் தவறான புரிதல் காரணமாகவே கிரக நெபுலா எனப் பெயர் சூட்டப்பட்டது.
சிவப்பு ராட்சத நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையின் முடிவை நெருங்கும் போது அவற்றின் வெளிப்புற அடுக்குகளை வெளியேற்றத் தொடங்கும். அப்போது கிரக நெபுலா உருவாகிறது. நாம் பார்க்கும் இந்த நெபுலா உண்மையில் அயனியாக்கம் செய்யப்பட்ட வாயுவாகும். இதில் கார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்ற தனிமங்கள் உள்ளன.
பூமியில் இருந்து பார்க்கும் போது இது ஒரு ஹெலிக்ஸ் அமைப்பு போல் தோன்றும். ஹெலிக்ஸ் என்ற வார்த்தை கிரேக்கச் சொல்லான ‘முறுக்கப்பட்ட, வளைந்த’ என்பதிலிருந்து வந்தது. இது ஒரு சுழல் வளைவு கொண்டது. இது இது ஒரு மெல்லிய பரவப்பட்ட நெபுலா என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் காஸ்மிக் மேகத்தின் மூலம் பின்னணி நட்சத்திரங்களை எளிதாகக் காணலாம்.
கார்ல் லுட்விக் ஹார்டிங் (Karl Ludwig Harding)

இவர் (Karl Ludwig Harding) ஒரு ஜெர்மன் வானவியல் அறிஞர் ஆவார். இவர் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 3 வால்மீன்கள் மற்றும் சில புதிய நெபுலாக்களைக் கண்டுபிடித்தார். அவற்றில் ஒன்று ஹெலிக்ஸ் நெபுலா ஆகும். இதை 1824 ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.
இது கடவுளின் கண் (Eye of God) என்று பாப் கலாச்சாரத்தில் குறிப்பிடப்படுகிறது. அதன் பிரபலமான புனைப்பெயர் இதுவாகும். இது புனையின் கண் மற்றும் மோதிரம் போன்ற தோற்றத்தில் உள்ளது. ஆகவே பூனையின் கண் நெபுலா (Cat’s Eye Nebula) மற்றும் மோதிர நெபுலா (Ring Nebula) எனவும் அழைக்கப்படுகிறது.
இருப்பிடம்
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தினால் வானியலுக்காக வடிவமைக்கப்பட்ட விண்கலம் கயா ஆகும். பூமியிலிருந்து ஹெலிக்ஸ் நெபுலா சுமார் 655 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக கயா விண்கலம் (Gaia Mission) கண்டுபிடித்தது. இருப்பினும் இந்த நெபுலா சுமார் 700 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. நாம் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடிந்தால் அங்கு செல்ல 700 ஆண்டுகள் ஆகும்.
ஒளி வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது. ஓராண்டு காலத்தில் ஒளி கடந்துச் செல்லக்கூடிய தூரமே ஒளியாண்டு ஆகும். இந்தக் கணக்குப்படி ஒரு ஒளி ஆண்டு தூரம் என்பது 9 லட்சத்து 46 ஆயிரம் கோடி கிலோ மீட்டர் ஆகும்.
இந்த நெபுலாவின் வயது 10,610 ஆண்டுகள் ஆகும். இதன் விட்டம் 2.5 ஒளியாண்டு தூரம் கொண்டது. இது கும்பம் விண்மீன் தொகுதியில் உள்ளது. கும்பம் என்பது மகர ராசிக்கும் மீன ராசிக்கும் இடைப்பட்ட ராசியின் பூமத்திய ரேகை விண்மீன் ஆகும். இது 2 ஆம் நூற்றாண்டின் வானவியலாளர் தாலமி (Ptolemy) என்பவரால் பட்டியலிடப்பட்ட 48 விண்மீன்களில் ஒன்றாகும். மேலும் இது 88 நவீன விண்மீன்களில் ஒன்றாக உள்ளது.
கண் நெபுலா

ஹெலிக்ஸ் நெபுலா ஒளி ஊடுருவக் கூடியது. மேலும் ஒரு கண் போல தோற்றம் அளிக்கிறது. இது பூனையின் கண் மற்றும் மனிதனின் கண் போலவும் தெரிகிறது. இதன் நடுவில் ஒரு நட்சத்திரம் உள்ளது. அதைச் சுற்றியுள்ள சூடான வாயுக்கள் பிரகாசமான நீல நிறம் கொண்டவை. அவை படிப்படியாக குறைந்து சிவப்பு மற்றும் விளிம்புகளில் பழுப்பு நிறமாக இருக்கிறது.
இது பார்ப்பதற்கு உண்மையில் ஒரு கண் போலவே காணப்படுகிறது. ஆனால் அதை யாரும் அப்படி வடிவமைக்கவில்லை. எந்த ஒரு மனித உடல் பொருளின் தோற்றம், சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. ஆனால் நாம் எப்போதும் பார்ப்பதையோ அல்லது கேட்பதையோ நன்கு அறியப்பட்ட பொருளுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். ஆகவே தான் அந்த நெபுலா நமக்கு கண் போல் தெரிகிறது.
கட்டுரையாளர்:

ஏற்காடு இளங்கோ
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

