வருடம் 2000 முதல் உலகெங்கும் பிப்ரவரி 21, சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) ஆக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் சர்வதேச தாய் மொழி தினத்திற்கு வெள்ளி விழா ஆண்டு.
மொழி என்பது, பேசுவது. எழுதுவது மட்டுமல்ல. மக்கள் பேசும் அந்த மொழியினைச் சார்ந்து அந்த மண்ணின் கலாச்சாரம் விளங்குகிறது. காலப் போக்கில் அந்த மொழி பேசுபவர்கள் எண்ணிக்கை குறையும் போது, பேச்சு வழக்கு குறைந்து மொழி அழியும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. ஒரு மொழியின் பயன்பாடு குறையும் போது அதைச் சார்ந்த கலாச்சாரம் அழிக்கப்படுகிறது. ஆகவே மொழியியல், அதைச் சார்ந்த கலாச்சாரம், மொழிகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை, உலகெங்கும் பரப்பும் நோக்கத்துடன், சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) , ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 1999ஆம் வருடம், ஐக்கிய நாடுகளின் கல்வி மற்றும் கலாச்சார அமைப்பின் (யுனெஸ்கோ) பொது மகாநாடு, சர்வதேச தாய்மொழி தினத்தை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 21, 2000 ஆண்டு முதல்சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகில் 6700க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுவதாக யுனெஸ்கோவின் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால், இதில் 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மொழிகள் முற்றிலுமாக அழியும் நிலையில் இருக்கின்றன. இந்த மொழிகள் அழியாமல் காப்பாற்றப் பட ஒரே வழி, இந்த மொழி பேசும் மக்களுக்கு, அவர்களின் மொழியிலேயே கல்வி அறிவை போதிப்பது. இதற்காக அந்தந்த மொழிகளில் பாடத்திட்டம் வகுப்பது, புத்தகங்கள் பதிப்பது இன்றியமையாதது.
ஏன், சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) பிப்ரவரி 21 என தேர்ந்தெடுக்கப்பட்டது? இதற்கு சரித்திரத்தை சற்றுப் புரட்டிப் பார்க்க வேண்டும். இந்திய துணைக் கண்டம், 1947ஆம் வருடம் பிரிட்டன் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றது. ஒருங்கிணைந்திருந்த இந்தியா இரண்டாக இந்தியா, பாகிஸ்தான் என்று பிரிந்தது. இதில் பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று இரு பிரிவுகளாக இருந்தது. இந்த இரு பிரிவுகளுக்கும் இடையே, மொழி மற்றும் கலாச்சாரம் சம்பந்தமாக, சுதந்திரம் அடைந்த நாளிலிருந்தே மோதல் இருந்து வந்தது. மேற்கு பாகிஸ்தான் பெரும்பான்மையினரின் மொழி உருது. ஆனால், கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையினர் தாய்மொழி வங்காளம்.
1948ஆம் வருடம், பாகிஸ்தான் அரசாங்கம் உருது மொழியை, தேசிய மொழியாக அறிவித்தது. இதன் காரணமாக இரு பிரிவுகளுக்கும் இடையே பதற்ற நிலை அதிகரிக்க ஆரம்பித்தது. கிழக்கு பாகிஸ்தானில், வங்காள மொழி பேசும் பெரும்பான்மை சமூகத்தில் வன்முறை எதிர்ப்பு ஆரம்பித்தது. டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள், 21 பிப்ரவரி 1952 அன்று போராட்டம் தொடங்கினார். பாகிஸ்தான் அரசு, போராட்டத்தை அடக்க மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர். தங்களுடைய தாய்மொழி, அதிகார பூர்வமான மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று போராடி, உயிர் துறந்த மாணவர்களின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக, பிப்ரவரி 21, சர்வதேச தாய்மொழி தினம் (International Mother Language Day) ஆக தேர்வு செய்யப்பட்டது.
சர்வதேச தாய்மொழி தினத்திற்கு கருப்பொருள் உண்டு. 2024ஆம் ஆண்டிற்கான கருப்பொருள், “பல மொழிக் கல்வி, தலைமுறைகளுக்கு இடையேயான கற்றலின் தூண்”. 2025ஆம் ஆண்டின் கருப்பொருள், “சர்வதேச தாய்மொழி தினத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம்”
உலகில் பல மொழி பேசும் மக்கள், பற்பல கலாச்சாரங்கள் உள்ளன. இவை சிதையாமல் இருப்பதற்கான அடிப்படைக் காரணம் இவர்களின் தாய்மொழி வாயிலாக இவர்கள் கற்ற பாரம்பரிய கலாச்சாரம் மற்றும் நாகரிகம். உலக மக்கள் தொகையில் 40 சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் தங்களுடைய தாய்மொழியில் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். இது உலகின் ஒரு சில இடங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேல். ஆராய்ச்சிகள், தாய் மொழியில் கல்வி கற்பதின் நன்மையை எடுத்துரைக்கின்றன. சரியான புரிதலுக்கு, தாய்மொழிக் கல்வி உதவி செய்கிறது.
உலக அளவில், 25 கோடிக்கும் மேலான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பள்ளிக்குச் செல்வதில்லை. 76 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் அடிப்படை கல்வியறிவு திறன்களில் தேர்ச்சி இல்லாமல் இருக்கிறார்கள். ஆரம்பக்கல்வி தாய்மொழியில் கற்று, அதற்கு மேல் மற்ற மொழிகளில் கல்வி தொடர்வது எல்லோருக்கும் கல்வி சென்று சேர்வதற்கு வழி வகுக்கும்.
உலகில் அதிக மொழிகள் உள்ள நாடு பப்புவா நியூகினியா. மொத்த மொழிகள் 860. இரண்டாவது இடத்தில் 740 மொழிகள் உள்ள இந்தியா. இதில் ஆறு மொழிகள் செம்மொழிகள் என்ற சிறப்பு கௌரவத்தில் உள்ளன. 22 மொழிகள் அலுவலக மொழிகளாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. 122 முக்கிய மொழிகள். ஆனால் 1500க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. இப்படி பல மொழிகள் வழக்கத்திலும், பன்முகத் தன்மையும் உடைய நாட்டில், ஒரு மொழி மற்ற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது என்பது நடைமுறை சாத்தியமில்லை.
கட்டுரையாளர்:
கே.என்.சுவாமிநாதன்
சென்னை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.