கேரளாவை ரோல் மாடலாக ஒப்புக்கொள்ள, மத்திய அரசு மறுக்கிறது. எத்தனை காலத்திற்கு அப்படி மறுத்திட முடியும்?
மத்திய அரசு நாட்டிலுள்ள மக்கள் அனைவரையும் சோதனை செய்து பார்க்காமலேயே, குரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் என்று கற்பனை எண்களை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இன்றைய எதார்த்த நிலை. அதிக அளவில் சோதனை செய்து பார்ப்பதே மிகச்சிறந்த வழியாகும்.
மத்திய அரசாங்கம், சமூக முடக்கத்தை நாடு தழுவிய அளவில் அறிவித்ததன் காரணமாக மரணத்தின் எண்ணிக்கையை 37 ஆயிரத்திற்கும் 71 ஆயிரத்திற்கும் இடையே தவிர்த்துவிட்டோம் என்று கூறுகிறது. முதல் இரு சமூகமுடக்கமும் அறிவிக்கப்படாமல் இருந்திருந்தால் இந்தியாவில் 14 லட்சத்திற்கும் 29 லட்சத்திற்கும் இடையே தொற்றாளர்கள் அதிகரித்திருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுவதாகவும் அது கூறுகிறது.
அரசாங்கத்தின் தரப்பில் ஏப்ரல் 24 அன்று வெளியிடப்பட்ட ஒரு ஸ்லைடு காட்சியில், புதிய தொற்றாளர்கள் இப்போது பூஜ்யமாக இருக்கும் என்று கருத்தைப் பதிவு செய்தமைக்காக, அரசாங்கத்தின்சார்பில் நிட்டி அயோக் உறுப்பினர் ஒருவர், மன்னிப்புக்கோரியிருந்தார்.
வெள்ளிக்கிழமையன்று அவர், “ஒரு குறிப்பிட்ட தேதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை பூஜ்யத்திற்கு வந்துவிடும் என்று எவரொருவரும் எப்போதும் சொல்லவில்லை. ஏதோ தவறான புரிதல் ஏற்பட்டிருக்கிறது. இது சரிசெய்யப்பட வேண்டியிருக்கிறது. இத்தகைய தவறான புரிதலுக்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்,” என்று கூறினார்.

கோவிட்-19 தொடர்பாக அரசாங்கத்தின் தரப்பில் நடத்தப்படும் பத்திரிகையாளர்கள் மாநாடுகளில் அரசாங்கம் இரு விஷயங்களில் கவனம் செலுத்துகிறது. ஒன்று, தொற்று பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டிருப்பவர்கள் விகிதம். இரண்டு, பிரதமரின் சமூக முடக்க உத்தி மட்டும் இல்லாமலிருந்திருந்தால், இந்தியா பெரிய சங்கடத்திற்கு ஆட்பட்டிருக்கும். இந்த இரண்டை மட்டுமே அது திரும்பத்திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறது.
அவை புதிய தொற்றாளர்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை. ஏனெனில், அவர்கள் தங்களுடைய ஸ்லைடு காட்சியில் தெளிவாகக் குறிப்பிட்டதைப்போல், சமூகமுடக்கம் முடிவுக்கு வந்துவிடும் அல்லது தொற்றாளர் அதிகரிப்பது மெதுவாக நகரும் என்று நினைத்ததுதான்.
தொற்றிலிருந்து மீண்டோர் விகிதம் எப்படிக் கணக்கிடப்படுகிறது? இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சோதனை செய்து பார்க்கப்பட்டு, அவர்கள் தொற்றுக்கு ‘பாசிடிவ்’ என்று மெய்ப்பிக்கப்பட்டிருந்தால், அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்திருந்து சிகிச்சையளித்து, அதன்பின்னர் சோதனை செய்து அவர்கள் தொற்றுக்கு ‘நெகடிவ்’ ஆன பிறகு, தொற்றிலிருந்து மீண்டவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.
சனிக்கிழமை காலை வரையிலும், சோதனை செய்யப்பட்டவர்களில் சுமார் 1.25 லட்சம் பேர் ‘பாசிடிவ்’ என்று கண்டறியப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 52 ஆயிரம் பேர் தொற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். இதன்பொருள், தொற்றுக்கு ஆளானவர்களில் பாதிக்கும் குறைவானவர்கள் மீண்டிருக்கிறார்கள் என்பதாகும். உலக அளவில் 53 லட்சம் பேர் தொற்றுக்கு ஆளாகி, அவர்களில் 21 லட்சம் பேர் தொற்றிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறார்கள். தொற்றிலிருந்து மீண்டவர்கள் சதவீதம் இயற்கையாகவே உயர்ந்துகொண்டிருக்கும். அது 95 சதவீதம் வரைக்கும் உயரும். ஒருவேளை அதைவிட அதிகமாகக்கூட இருக்கும்.
ஏன்? ஏனெனில், கோவிட்-19ஆல் இறந்தோர் விகிதம், அதாவது இதனால் இறந்தோர் எண்ணிக்கை, தற்போது 6 சதவீதமாகும். இவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் இறந்தோர் விகிதம் இதுவரையிலும், சுமார் 3 சதவீதம் ஆகும். எனவே இதற்காக இந்த அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காதிருந்த போதிலும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நம் தொற்றிலிருந்து மீண்டோர் விகிதம் 97 சதவீதத்தை எட்டும்.

கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை என்பது இதுவரை இல்லை என்பதை நினைவுகூர்க. கோவிட்-19 தொற்று உங்களைப் பிடித்துக்கொண்டுவிட்டால், நீங்கள் பாதுகாப்பாக இருந்து அது உங்களைவிட்டுக் கடந்துசெல்லும்வரை நீங்கள் காத்திருக்க வேண்டும். வேறு வழியில்லை. அதன்பிறகும்கூட, உங்களுக்கு கோவிட்-19 தொற்றாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஏனெனில், மீளவும் பலபேருக்குத் தொற்றியிருப்பதாக விரிவான அளவில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. எனவே, மக்களுக்கு உத்தரவாதம் தருவதைத் தவிர, அரசாங்கம் தொற்றிலிருந்து மீண்டவர்கள் குறித்தே ஏன் பேசிக்கொண்டிருக்கிறது என்பதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை.
பிரச்சனை என்னவென்றால், செய்திகளில் கூறப்படும் எண்ணிக்கை புதிய தொற்றாளர்கள் குறித்ததாகும். இவ்வாறு நாள்தோறும் தொற்றுக்கு ஆளாகிறவர்கள் எண்ணிக்கை மே மாதத் தொடக்கத்தில் சுமார் 2,000 என இருந்தது. சென்ற வாரம் அது 4,000 ஆகியது. இப்போது அது 6,000க்கும் மேலாகும். கேரளாவைத் தவிர வேறெங்கும் இது தட்டையாவதற்கான அடையாளங்களே தெரியவில்லை. சமூக முடக்கம் விலக்கிக்கொள்ளப்பட்டபின், அதிக அளவில் மக்கள் சோதனை செய்து பார்க்கப்படுவார்கள். அப்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திடும்.
எங்கே மக்கள் தாங்களாகவே இதன் ஆபத்தை உணர்ந்து எச்சரிக்கையாகத் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டும், தனிநபர் இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டும், முகக்கவசம் அணிந்துகொண்டும், கைகளைக்கழுவிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் இத்தொற்றுக்கு ஆளாகும் நிலை அனைத்து நாடுகளிலும் இருந்து வருகிறது.
இன்றைய நிலையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் இருக்கும் நாடுகள் 11. இவற்றில், பிரேசில், இந்தியா மற்றும் பெரு ஆகிய நாடுகளில் தொற்றாளர்கள் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு மோசமான விஷயம்?
அமெரிக்காவில், கடந்த 50 நாட்களாக, ஒவ்வொரு நாளும் 20 ஆயிரத்திற்கும் 35 ஆயிரத்திற்கும் இடையே புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை பதிவாகிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா, 1 கோடியே 40 லட்சம் சோதனைகள் செய்திருக்கிறது. அமெரிக்கா, தன்னுடைய நாட்டில் பத்து லட்சம் பேர்களில் 42 ஆயிரம் பேருக்கு சோதனைகளைச் செய்துவரும் அதே சமயத்தில் நம்முடைய நாட்டில் பத்து லட்சம் பேருக்கு வெறும் 2,000 பேர்களுக்கு மட்டுமே சோதனைகள் செய்து வருகிறோம்.

இவ்வாறு சோதனைக்கு மக்கள் உட்படுத்தப்படாததால், தங்களுக்கு கரோனா வைரஸ்தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்று அவர்களுக்குத் தெரியாது என்று கூற முடியுமா? ஆம்.
இப்போது நமக்குப் போதுமான அளவிற்குத் தரவுகள் கிடைத்திருப்பதால் இறப்பு விகிதம் குறித்து ஆராய்ந்திடுவோம். குஜராத்தில் 13 ஆயிரம் பேருக்குத் தொற்று ஏற்பட்டிருக்கிறது, 800 பேர் இறந்திருக்கின்றனர். இது நாட்டின் சராசரியைவிட இரு மடங்கு. இதன் பொருள், நிச்சயமாக, குஜராத்தில் மேலும் 13 ஆயிரம் பேர் குறைந்தபட்சம் இத்தொற்றுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதாகும். அவர்கள் சோதனை செய்து பார்க்கப்படாததால் தங்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்று அவர்களுக்குத் தெரியவில்லை.
நடந்து சென்றுள்ள அனைத்துப் புலம் பெயர் தொழிலாளர்களும் இப்போது தங்கள் ஊர்களுக்குச் சென்றிருப்பார்கள். இவர்களும் இந்த பாதிப்பு விகிதத்தை அதிகரித்திடுவார்கள். ஒரு கட்டம்வரை இது உச்சத்திற்குச் சென்று, பின்னர்தான் வீழ்ச்சியடையத் தொடங்கும். இதுதான் மிகவும் பாதிப்புக்கு உள்ளான அமெரிக்கா, இத்தாலி மற்றும் கிரேட் பிரிட்டன் போன்ற நாடுகளில் நடந்திருக்கிறது.
தொற்றுக்குப் புதிதாக ஆளாகிறவர்கள் எண்ணிக்கை மிகவும் முக்கியமான அளவீடாகும். கடந்த காலங்களில் காப்பாற்றப்பட்டவர்கள் குறித்த கற்பனையான எண்ணிக்கையோ, மீண்டவர்கள் விகிதம் குறித்த கணக்கிடோ உதவிடாது. இவை தாமாகவே உயரும். நாள்தோறும் தொற்றுக்கு ஆளாகிறவர்கள் எண்ணிக்கையை எப்படி நாம் குறைக்கப் போகிறோம்?
கேரளம் மட்டுமே இதனை அறியும். மார்ச் மாத தொடக்கத்தில் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளான மாநிலங்களில் ஒன்றாக இருந்த கேரளம், இன்றைய தினம் அதன் எண்ணிக்கையை 17 என வீழ்த்தி இருக்கிறது. இதன் வெற்றியை உலகமே ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனாலும் நம் பிரதமரால் ஒருதடவை கூட இது குறித்துக் கூறப்படவில்லை. அவர்கள் கேரளாவில் செய்திருக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டின் இதர மாநிலங்களில் பின்பற்றப்பட வேண்டிய முன் மாதிரி (role model) ஆகும். புதிய தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்காத ஒரே மாநிலம் கேரளா மட்டுமே. தற்போது தொற்றுக்கு ஆளாகியிருக்கிறவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஏனெனில் அவ்வாறு தொற்றுக்கு ஆளாகிறவர்களும் விரைவாகக் குணப்படுத்தப்பட்டு விடுகிறார்கள்.

கோவிட்-19 தொற்றை மதிப்பிடுவதில் அர்த்தமுள்ள அளவீடாக இருப்பது புதிய தொற்றுகளைக் கட்டுப்படுத்தவது குறித்த அளவீடுதான். அதனை கேரளம் மிகவும் வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறது.
மகாராஷ்ட்ரா, குஜராத் மற்றும் தில்லி செய்யாதவற்றை கேரளம் செய்துகொண்டிருக்கிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? இவ்வாறு தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குக் காரணம், மத்திய அரசாங்கம், புதிய தொற்றாளர்களைக் கட்டுப்படுத்துவதில் ஒரு ரோல் மாடலாக (role model-ஆக), கேரளா இருப்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதேயாகும்.
(நன்றி: National Herald)
(தமிழில்: ச.வீரமணி)

