மத்தியப் பல்கலை நுழைவுத் தேர்வுகள் Central University Entrance Examinations (cucetexam) - Shahjahan R. Book Day is Branch of Bharathi Puthakalayam.



நேற்று இரண்டு ஆசிரியைகளுடன் தொலைபேசியில் பேசும்போது இரண்டு விஷயங்களை அவர்களுக்குச் சொன்னேன். எல்லாருக்குமே தேவையான தகவல் என்பதால் பகிர்கிறேன். ப்ளஸ் டூ தேர்ச்சி முடிவுகள் வருகின்றன. இனி அடுத்து கல்லூரிச் சேர்க்கை ஆரம்பிக்கும் என்பதால் இந்தப் பதிவு
நாடெங்கும் பல இடங்களில் மத்தியப் பல்கலைக்கழகங்கள் உள்ளன. (சென்ட்ரல் யுனிவர்சிடி என்பதே இதன் பெயர் என்பதால் மத்திய என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.) இவை ஒன்றிய அரசுப் பல்கலைக் கழகங்கள். இவற்றில் கட்டணம் மிக மிகக் குறைவு. இளங்கலை, முதுகலை, பிஎச்டி, டிப்ளமா எனப் பலதும் இருக்கும்.

<<இவற்றுக்கான சேர்க்கை, ஒரு நுழைவுத் தேர்வின் மூலம் முடிவு செய்யப்படும். அந்தத் தேர்வுக்கு cucetexam என்று பெயர் – Central University common entrance exam. மெரிட்டின் அடிப்படையில்தான் தேர்ச்சி. தமிழ்நாட்டில் திருவாரூர் அருகே ஒரு பல்கலை இருக்கிறது. தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இதுகுறித்துத் தெரியாது என்பதால் அதிகம்பேர் நுழைவுத் தேர்வில் பங்கேற்பதில்லை. அதனால் வேறு மாநிலத்திலிருந்து வருகிறவர்கள் இடம் பிடித்து விடுகிறார்கள். எனவே அந்தத் தேர்வு எழுத www.cucetexam.in என்ற தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.>>

இப்படியொரு தகவல் சுற்றிக் கொண்டிருக்கிறது. கடைசி வாக்கியத்தில் உள்ள விஷயம் தவிர மற்றதெல்லாம் சரிதான். கடைசி வாக்கியத்துக்கு மட்டும் கீழே விளக்கம் தருகிறேன். கடந்த ஆண்டு வரையில் இத்தகைய 15 பல்கலைகளுக்கு நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வந்தது. கடந்த பத்தாண்டுகளாக cucetexam நடத்தும் பொறுப்பு, இந்த 15 பல்கலைகளில் ஒன்றாகிய ராஜஸ்தான் பல்கலையிடம் இருந்தது.



நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கென நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி ஒன்றை ஒன்றிய அரசு உருவாக்கி விட்டது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். (ஒரு நீட் தேர்வில் மட்டுமே அந்த ஏஜென்சிக்கு 192 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்காது!) மேலே சொன்ன மத்திய பல்கலை நுழைவுத் தேர்வுகளையும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியிடம் ஒப்படைக்க ஒன்றிய அரசின் கல்வித்துறை முடிவு செய்தது. (இப்போது அந்த cucetexam வலைதளமே இயங்கவில்லை.)

அது மட்டுமல்ல, புதிய கல்விக் (காவிக்) கொள்கையின்படி, எல்லாக் கல்லூரிகளுக்கும், எல்லாப் பல்கலைகளுக்கும் பட்டப்படிப்பு உள்பட எல்லா படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு என்ற திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்ததும் நினைவிருக்கலாம். அதன் முதல்படியாக, இப்போதைக்கு, மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கு இந்த ஏஜென்சி மூலம் நடத்தலாமா என ஆலோசிக்கப்பட்டது. இங்கே இன்னொரு தகவல் – மேற்சொன்ன 15 பல்கலைகள் தவிர ஜேஎன்யு உள்பட இன்னும் நாற்பது பல்கலைகள் மத்தியப் பல்கலைகளாக இருக்கின்றன. இவற்றில் சில தமக்கென தனியாக நுழைவுத் தேர்வுகளை / சேர்க்கை முறைகளை வைத்திருக்கின்றன.

கடைசியாகக் கிடைத்த தகவல்களின்படி, கடந்தமாதம் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், மொத்தம் 56 மத்தியப் பல்கலைக்கழகங்களின் 45 துணைவேந்தர்கள், நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சியே நுழைவுத் தேர்வு நடத்தலாம் என ஒப்புக் கொண்டதாக செய்திகளின்வழி தெரிகிறது. இன்னும் அரசு முடிவு செய்யவில்லை. ப்ளஸ் டூ முடிவுகள் வர இருக்கின்ற படியால், ஒன்றிய அரசு இதற்கான முடிவை விரைவில் அறிவிக்கும். ஆனால் இந்த நுழைவுத் தேர்வினைக் குறித்து விவாதிக்க யாருக்கும் அவகாசம் இல்லாத வகையில் இதற்கான முடிவினை அறிவிக்கும் என்று நினைக்கிறேன்.



இப்போதைக்கு இந்த 45 பல்கலைக் கழகங்களுக்கு நுழைவுத்தேர்வு என்பது நாளை எல்லாப் பல்கலைகளுக்கும் என விரிவாகவும் கூடும். அது வேறு விஷயம்.
மற்றொரு விஷயம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என்ற பிரிவின்கீழே இட ஒதுக்கீடு செய்வது தமிழ்நாட்டில் இன்னும் அறிமுகம் ஆகவில்லை என்றே நினைக்கிறேன். மத்தியப் பல்கலை தமிழ்நாட்டில் இருந்தாலும் இது ஒன்றிய அரசின் பல்கலை என்பதால் இங்கே 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு இருக்கிறது. அதாவது, பிஎஸ்சி டெக்ஸ்டைல்சுக்கு 100 இடங்கள் என்றால், கூடுதலாக பத்து இடங்கள் இவர்களுக்கு! ஆக 110 இடங்கள்.

என்னுடைய கோரிக்கை என்னவென்றால், அது எந்தத் தேர்வாக இருந்தாலும், தமிழக மாணவர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் மிகக் குறைந்த கட்டணத்தில் சிறப்பான கல்வி பெறக்கூடிய வாய்ப்பினை நழுவ விடக்கூடாது. ஆசிரியர்கள்தான் இதனை மாணவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். ஜூலை மாதத்தில் விண்ணப்பங்கள் வெளிவரும் எனத் தெரிகிறது.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக் கழகத்தில் என்னென்ன படிக்கலாம் என்ற விவரங்களை அதன் வலைதளத்தில் பார்க்கலாம் – https://cutn.ac.in – இந்தப் பல்கலையில் மட்டும் சேர்க்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 1100 + 110 (EWS இட ஒதுக்கீடுகள்)

* * *
இரண்டாவது விஷயம், ரேடியோ மிர்ச்சி ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி செய்வதாக ஓர் இளம்பெண் (ரேடியோ ஜாக்கி) பேசும் வீடியோ ஒன்று சுற்றி வருகிறது. அதில் தரப்பட்டுள்ள வாட்ஸ்அப் எண்ணுக்கு தகவல் அனுப்பினேன், ஆனால் பதில் வரவில்லை.

ஆயினும், கடந்த ஆண்டின் தகவல்படி, ‘மிர்ச்சி முதல் படி’ என்ற திட்டத்தின்படி 25 மாணவர்களுக்கு, ஸ்பான்சர்களின் உதவியால், கல்லூரிக் கட்டணத்தை செலுத்தியுள்ளது. இந்த ஆண்டும் அதே திட்டம் தொடரக்கூடும். ஆர்வம் உள்ளவர்கள் கவனித்துக் கொண்டே இருக்கவும்.


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *