கதிர் குருவிகளைக் கண்டாலே, பொதுவாகப் பறவை நோக்குபவர்களும், வன உயிரின புகைப்படக் கலைஞர்களும் அதனைக் கண்டுபிடிப்பதும், புகைப்படம் எடுத்து அடையாளப்படுத்துவதும் மிகவும் கடினமானது என்று சொல்வார்கள். அதற்குக் காரணம் அதன் சுறுசுறுப்பான இயல்பு தான். தவழ்ந்து நடை பழகிய குழந்தைகள் ஓரிடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருப்பது போல அங்கும் இங்கும் கதிர் குருவிகளும் தவ்விக்கொண்டே இருக்கும். அதிலும் மனிதர்களின் நடமாட்டமோ அல்லது தான் கவனிக்கப்படுகிறோம் என்று தெரிய வந்தால் மிகத் துரிதமாகப் புதர்களுக்குள் சென்று மறைந்துகொள்ளும். நாம் இன்று கதிர் குருவிகளில் ஒரு வகையான “செட்டி கதிர்க்குருவிகளுடன்” பயணிக்கப் போகிறோம்.
ஆங்கில பெயர் – Cetti’s Warbler
அறிவியல் பெயர் – Cettia cetti (Temminck, 1820)
பிரான்செஸ்கோ செட்டி (Fr. Francesco Cetti -1726-1778) என்பவர் 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலியைச் சேர்ந்த விலங்கியலாளர் ஆவார். இவர் இத்தாலியிலுள்ள சசாரி என்ற நகரத்தைச் சுற்றி நீண்ட பயணம் மேற்கொண்டார். அப்போது சார்டினியா என்ற தீவில் உள்ள பறவைகள், மீன்கள், பூச்சிகள் மற்றும் புதைபடிவங்கள் ஆகியவற்றைப் பற்றிய இயற்கை வரலாற்றுத் தகவல்களைத் திரட்டினார். பின்னர் இதனை ஒன்றுதிரட்டி 4 தொகுதிகளாக (1774 – 77) ல் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
செட்டி கதிர் குருவி என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த இறந்த பறவையின் உடலை ஆல்பர்டோ டெல்லா மர்மோராவும் சார்டினாவிலிருந்து சேகரித்து வைத்திருந்தார். ஆனால் 1820 ஆம் ஆண்டு தான் டச்சு நாட்டு விலங்கியலாளர் கோன்ராட் ஜேக்கப் டெமின்க் அவர்கள் இதைப் பற்றிய தகவல்களைப் பதிவுசெய்து, செட்டி அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதற்குச் செல்வியா செட்டி என்று பட்டப்பெயரையும் வைத்தார்.

அதற்கு பின்பு 1834 ல் பிரெஞ்சு பறவையியலாளர் சார்லஸ் லூசியன் போனபார்டே Cettia என்ற பேரினத்தை உருவாக்கினார். Cettia என்ற பேரினத்தில் மூன்று துணையினங்கள் உள்ளன. அவையாவன.
C. c. cetti (Temminck, 1820) – west Europe to Greece and the Balkans, northwest Africa
C. c. orientalis (Tristram, 1867) – Turkey to Iran and Afghanistan
C. c. albiventris (Severtsov, 1873) – Kazakhstan and Turkmenistan to northwest China and north Afghanistan.
செட்டி கதிர் குருவிகள் 13-14 சென்டி மீட்டர் வரை வளரும். ஆண் பறவை சுமார் 15 கிராமும், பெண் பறவை 12 கிராம் எடையும் கொண்டது. இப்பறவைகள் உருண்டை வடிவ தலையைக் கொண்டிருக்கும், மற்ற கதிர் குருவிகளை விட இதன் வால் பகுதி நீளமாகவும் அகலமாகவும் இருக்கும். செட்டி கதிர்க்குருவியின் குரல் கடிகார ஒலி போலத் தனியாக டிக் டிக் என்று கேட்கும். இந்த ஒலியின் மூலமே ஆண் பறவை பெண் இனத்தைக் கவர்ந்து இனப்பெருக்கத்திற்குத் தயாராகிறது. பொதுவாகவே கதிர் குருவிகளை அதன் ஒலியை வைத்தே அடையாளம் காண்பதே சிறப்பு எனலாம்.
செட்டி கதிர் குருவியின் பதிவுகள்
1961 ல் ஐரோப்பிய நாடுகளில் பறவையியலாளர்கள் இதனைப் பதிவு செய்துள்ளனர். இத்தாலி, துருக்கி, போன்ற நாடுகளிலும் இப்பறவை காணப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இந்தியாவிற்கு இப்பறவைகள் வலசை வருகின்றன. இந்தியாவில் முதன் முறையாக 1968 ல் இமாச்சல் பிரதேசத்தில் பார்த்துப் பதிவு செய்துள்ளனர். பின்பு ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பகுதியில் 1971ல் ஒரே ஒரு பறவையைப் பார்த்துப் பிடித்து, தற்போது பம்பாய் இயற்கை வரலாற்றுக் கழகத்தில் பாடம் செய்து வைத்துள்ளனர். பத்து செட்டி கதிர் குருவிகளை ஒன்றாக 1994 ல் பரத்பூரில் பார்த்துள்ளனர். ஆனால் புகைப்படம் எடுக்க முடிந்தது என்னவோ 2005ல் தான். அதன் பின் ராஜஸ்தானில் படோபால் பகுதி, ஹரியானாவில் ஹிசார் மாவட்டம் தப்ரா கால்வாய், சண்டிகர், மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் தானே சிற்றோடை, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஓக்லா பறவைகள் சரணாலயம், புத்த நகர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் பார்த்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செட்டி கதிர் குருவியை நீண்ட நேரம் காத்திருந்து பல போராட்டங்களுக்குப் பின்பு தான் தெளிவான புகைப்படம் எடுக்க முடிந்ததாக ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளனர். புகைப்படங்களின் மூலம் குளம், குட்டை, ஆறுகளுக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் வாழும் என்பதையும், அப்பகுதியில் இருக்கும் பூச்சிகளைப் பிடித்து உண்ணும் என்பதையும் சேர்த்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

ஒரு வருடத்திற்கு இரண்டு முறை இனப்பெருக்கம் செய்கின்றன. ஏப்ரல் மற்றும் சூன் மாதங்களில் அடர்ந்த இலைகளைக் கொண்டு தாவரங்களில் 30 முதல் 45 சென்டி மீட்டர் வரை குடுவை வடிவ கூட்டை பெண் பறவை மட்டுமே கட்டி முடிக்கிறது. முட்டை சிவப்பு நிறத்தில் இருக்கும். முட்டைகளின் எண்ணிக்கை 4 முதல் 5 வரை இருக்கும். 16 – 17 நாட்கள் வரை அடைகாக்கின்றன. குஞ்சுகளுக்கு 14- 16 நாட்கள் வரை இரை ஊட்டுகிறது. அதன் பிறகு குஞ்சுகள் பறந்து சென்று தனது உணவைத் தேடி உட்கொண்டு அதன் வாழ்வை வாழ ஆரம்பிக்கின்றன.
இந்த பறவையைப் பற்றிய தகவல்கள் பெரும்பாலும் புகைப்படங்களின் மூலமே பதிவு செய்துள்ளனர். அதன் மூலம் நீர் நிலைகளை மாசு படுத்தினால் இந்த பறவைகளுக்கான வாழிடம் அழிக்கப்பட்டு உணவும் இல்லாமல் காலப்போக்கில் பறவைகளும் அழிந்துவிடும் என்பதையும் சேர்த்தே பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் கொரானா காலத்தில் மக்களின் அவலநிலையையும், விவசாயிகள் போராட்டத்தையும் புகைப்படங்களின் மூலம் பதிவு செய்து வெளி உலகிற்கு தெரியப்படுத்தி, சமீபத்தில் ஆப்கானிஸ்தான் போரில் மரணமடைந்த, புகைப்பட ஜர்னலிஸ்ட் டேனிஷ் சித்திகி (photojournalist Danish Siddiqui) அவர்களையும், வியட்நாம் போரை நிறுத்துவதற்குக் காரணமாக இருந்த புகைப்படத்தை எடுத்த நிக் உட் அவர்களையும், இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.
நண்பன் படத்தில் வரும் ஜீவா கதாபாத்திரத்தைப் போல் தற்போது புகைப்படக்கலை குறிப்பாக வன உயிரினங்களைப் புகைப்படம் எடுப்பதில் பல இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியே. ஆனால் விலை உயர்ந்த புகைப்படக் கருவிகளைக் கொண்டு fashion, style, crazy போன்ற நவீன வார்த்தைகளில் முடங்கிவிடாமல், நீங்கள் எடுக்கும் புகைப்படங்களின் மூலம் இயற்கையைப் பாதுகாத்து அதன் மூலம் சமூக மாற்றங்களையும் ஏற்படுத்தலாம் என்பதையும் மனதில் வைத்துச் சூழலைக் காப்பாற்ற முன்வர வேண்டுகிறேன்.
தரவுகள்
1. http://indianbirds.in/pdfs/IB_14_6_Abhinav_Sangha_CettisWarbler.pdf
2. https://www.tandfonline.com/doi/pdf/10.1080/11250009309355808
முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: knlifescience01@gmail.com
முந்தைய தொடரை வாசிக்க:
பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 3: பச்சைக்கிளி – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 4 (Green Cheeked Parakeet) – முனைவர். வெ. கிருபாநந்தினி
பெயர் சொல்லும் பறவைகள் 5 – லோட்டன் தேன்சிட்டு (Loten’s Sunbird) | முனைவர். வெ. கிருபாநந்தினி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

