வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் நம்முன் உள்ள சவால்கள் – பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம் (தமிழில்: ச.வீரமணி)  அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இது மார்ச் 27 தொடங்கி, ஏப்ரல் 29 வரையிலும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரத்யேக நிலைமைகளுக்கு ஏற்ப, மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. எனினும், அவற்றை ஒருமுகப்படுத்திப் பார்க்கும்போது, அவை விரிவாக தேசிய அளவிலான முக்கியத்துவத்தையும் பெற்றிருக்கின்றன.  தேர்தல் முடிவுகள், பாஜக-விற்குத் தன்னுடைய ஒரு கட்சி மேலாதிக்க ஆட்சியை நாடு முழுவதும் நிறுவிட வசதி செய்தி தரப்போகிறதா, அல்லது, இவர்களின் எதேச்சாதிகார முயற்சிகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினரை வலுப்படுத்தப் போகிறதா? இந்த ஐந்து மாநிலங்களில், அஸ்ஸாமில் மட்டும் பாஜக ஆட்சியில் இருக்கிறது. அங்கே முதன்முதலாக 2016இல் பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வென்றது. அஸ்ஸாமில் அது ஆட்சியைக் கைப்பற்றியது, வடகிழக்கு மாநிலங்களில் முன்னேறுவதற்கு அதற்கு உதவியது. பின்னர் பாஜக, பல்வேறு வழிகளில், திரிபுராவில், மணிப்பூரில், பின்னர் அருணாசலப்பிரதேசத்தில் அரசாங்கங்களை அமைத்தது.

அஸ்ஸாமில், பாஜக தேசியக் குடிமக்கள் பதிவேட்டையும், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தையும் தன்னுடைய மதவெறி நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்துச் செல்வதற்காகப் பயன்படுத்தக் கோரி இருக்கிறது. தேர்தல் நெருங்கியிருக்கக்கூடிய சமயத்தில், பாஜக தலைமை அங்கே மதவெறித் தீயை விசிறிவிட வேண்டுமென்ற நோக்கத்துடன் வெறிபிடித்த மதவெறிப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியை முறியடிப்பதை உத்தரவாதப்படுத்துவது அதிமுக்கியமாகும். இதனை எய்துவதற்காக அங்கே காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி  (AIUDF-All India United Democratic Front), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), அஞ்சாலிக் கண மோர்ச்சா மற்றும் போடோலாண்ட் மக்கள் முன்னணி ஆகிய ஏழு கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணி உருவாகி இருக்கிறது. இந்தக் கூட்டணி பாஜக கூட்டணிக்கு ஒரு வலுவான தாக்குதலைக் கொடுக்கக்கூடிய விதத்தில் அமைந்திட வேண்டும்.

தமிழ்நாட்டில், 2016இல், ஜெயலலிதா தலைமையில் அஇஅதிமுக கூட்டணி பெரும்பான்மை பெற்று, அரசாங்கத்தை அமைத்ததுடன், அடுத்த தடவை நடைபெற்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியில் தொடர்ந்தது. அப்போது பாஜக அதன் கூட்டணியில் இல்லை. ஆனால், ஜெயலலிதா இறந்த பின்னர், அஇஅதிமுக தலைமை பிளவுண்டது. இது, பாஜக மத்திய அரசாங்கத்தை அக்கட்சிக்குள் மூக்கை நுழைக்க வாய்ப்பு கொடுத்தது. அதிலிருந்து, அஇஅதிமுக பாஜக-வின் ஒரு கூட்டணிக் கட்சியாக இருந்து வருகிறது. 2019இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அஇஅதிமுக-பாஜக கூட்டணி துடைத்தெறியப்பட்டது. இடதுசாரிக் கட்சிகள் உட்பட அமைக்கப்பட்ட திமுக தலைமையிலான கூட்டணி மாநிலத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக தற்போது தமிழ்நாட்டிற்குள் தன் செல்வாக்கை அதிகப்படுத்திக்கொள்வதற்காக, அஇஅதிமுக-வை ஒரு பகடைக் காயாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. எனவேதான் இந்தத் தேர்தலானது இரு திராவிடக் கட்சிகளுக்கு இடையே வழக்கமாக நடைபெற்றுவந்த தேர்தல் போன்றதல்ல. அஇஅதிமுக-விற்கு எதிரான போட்டி என்பது, பாஜக-வை தமிழ்நாட்டிற்குள் நுழையாதவாறு தடுத்து நிறுத்த வேண்டிய ஒரு போட்டியாகவும் பார்க்கப்பட வேண்டும்.2016இல் திமுக கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விசிக மற்றும் மதிமுக ஆகிய நான்கு கட்சிகளும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் தனித்துப் போட்டியிட்டதாகும். இப்போது, திமுக இந்த நான்கு கட்சிகளுக்கும் தொகுதிகளை நியாயமான முறையில் ஒதுக்கீடு செய்து கூட்டணியை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

புதுச்சேரியில்,   தேர்தல் நடைபெறக்கூடிய சமயத்தில், பாஜக, வழக்கமான தன்னுடைய தகாவழி சூழ்ச்சி நடவடிக்கைகள் மூலமாக காங்கிரஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்தது. ஆரம்பத்தில் யூனியன் பிரதேசத்தின் துணை ஆளுநரைப் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தை முறையாகச் செயல்படுத்த அனுமதிக்கவில்லை. பின்னர் கட்சித் தாவல்கள் ஊக்குவிக்கப்பட்டன. இதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிவந்த கோஷ்டிப் பூசல்களாலும், என்ஆர் காங்கிரஸ் அமைக்கப்பட்டதாலும் காங்கிரஸ் பலவீனப்பட்டது. என்ஆர் காங்கிரஸ்-அஇஅதிமுக-பாஜக கூட்டணி தங்களிடம் உள்ள பண பலத்தைக் கொண்டு தேர்தலில் வெற்றிபெற அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் இறங்கும். பாஜக-இன் சூழ்ச்சிகளை முறியடித்திட எந்த அளவிற்கு காங்கிரஸ்-திமுக-இடதுசாரிக் கட்சிகள் கூட்டணி வலுவாக அமையவிருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடதுசாரிக் கட்சிகளும் பெரிய அளவில் போட்டியிட இருக்கின்றன.  மேற்கு வங்கத்தில் நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கிறது. பாஜக அம்மாநிலத்தில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறது. அதற்காக, அது ஆர்எஸ்எஸ்-இன் ஆதரவு ஆட்கள் மற்றும் வளங்களை அங்கே அனுப்பிக்கொண்டிருக்கிறது. 2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜக-விற்கும் இடையே ஒருவிதமான ஏற்பாடு இருந்ததைப் பார்க்க முடிந்தது. பாஜக மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18இல் 40.6 சதவீத வாக்குகளுடன் வென்றது. இடது முன்னணி கடுமையாகக் கசக்கப்பட்டு, 7.4 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் தாங்கள் இழந்த தளங்களை மீளவும் வென்றெடுக்கக் கடுமையாக உழைத்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற போராட்டங்களையும் இயக்கங்களையும் இடதுசாரிக் கட்சிகளும், வெகுஜன ஸ்தாபனங்களும் நடத்தியிருப்பது, அவர்களுக்கு மக்கள் ஆதரவைப் புதுப்பித்திட உதவி இருக்கின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜக-வையும், திரிணாமுல் காங்கிரசையும் தோற்கடிக்க வேண்டும் என்றும், இடது, ஜனநாயக, மதச்சார்பற்ற மாற்றை உருவாக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்திருக்கிறது.

மேற்கு வங்கத்தில் பாஜக முன்னேறிக்கொண்டிருக்கும் அபாயம் என்பது உண்மை. இது, வங்கத்திற்கு வெளியே இருக்கின்ற மிதவாத மற்றும் இடதுசாரி வட்டத்தினர் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது முன்னணியும் திரிணாமுல் காங்கிரசுடன் ஒத்துப்போக வேண்டும் என்று கூற வைத்திருக்கிறது. இவ்வாறு முடிவெடுத்தால் அது இடதுசாரிகளுக்குத் தற்கொலையாகவே இருந்திடும். உண்மையில் அது பாஜக வெற்றிக்கு வசதி செய்து கொடுத்ததுபோலாகிவிடும். மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கும், அதன் குண்டர்களின் தலைமையிலான மோசமான ஆட்சிக்கும் எதிராக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்து வருகிறது. மமதா பானர்ஜியிடமும், அவருடைய கட்சியிடமும் ஒரு மென்மையான அணுகுமுறையை இடதுசாரிகள் கடைப்பிடிப்பார்களேயானால் அது, திரிணாமல் காங்கிரசுக்கு எதிராகவுள்ள வாக்காளர்களை, பாஜக-வின் கரங்களுக்குள் தள்ளிவிடும். உண்மையில், இடது முன்னணி, காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத, திரிணாமுல் காங்கிரஸ் அல்லாத சக்திகள் அனைத்தின் ஒரு மாற்று சேர்க்கையால் மட்டுமே இம்மக்களை அணிதிரட்ட முடியும் மற்றும் பாஜக-விற்கு கூடுதல் ஆதரவு கிடைக்காது பறித்திட முடியும்.கேரளாவில், போட்டி என்பது இடது ஜனநாயக முன்னணிக்கும், ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையேயானதாகும். இங்கே பாஜக ஒரு மூன்றாவது அணியாக மாற வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனெனில் அதனால் இங்கே பிரதான போட்டியாளராக இருக்க முடியாது என்பது அதற்கு நன்கு தெரியும். பினராயி விஜயன் தலைமையில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம், மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளிலும், சமூக நல நடவடிக்கைகளிலும் மகத்தானமுறையில் செயல்பட்டு மக்களின் அபரிமிதமான ஆதரவினைப் பெற்றிருக்கிறது. இவ்வாறு மக்களை வென்றெடுத்திருப்பதன் காரணமாக காங்கிரசும் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் விரக்தி அடைந்திருக்கின்றன. சென்ற ஆண்டு முழுவதுமே காங்கிரஸ் கட்சி, பாஜக-வுடன் இணைந்து இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்திற்கு எதிராகவும், முதலமைச்சருக்கு எதிராகவும் தங்கக் கடத்தல் வழக்கிலும், மற்றும் வெளியேயே தெரியாத ஊழல் வழக்குகளிலும் பொய்க் குற்றச்சாட்டுகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. இவர்களின் இத்தகைய “தாக்குதல்களை”, பிரதானமான ஊடகங்களில் ஒரு பிரிவு ஒத்து ஊதின. எனினும், இத்தகைய இடது ஜனநாயக முன்னணிக்கு எதிரான வசைமாறிகளைப் புறந்தள்ளிவிட்டு, 2020 நவம்பரில் நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், மக்கள் இடது ஜனநாயக முன்னணிக்கு மகத்தான வெற்றியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.

இடது ஜனநாயக முன்னணி, தன் முன்னணியில் கேரள காங்கிரஸ் (மாணி) மற்றும் லோக் தந்த்ரிக் ஜனதா தளம் (எல்ஜேடி) ஆகிய இரு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு விரிவடைந்து, புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையுடன் தேர்தலை சந்திக்க இருக்கிறது. பாஜக மற்றும் மதவெறி சக்திகளுக்கு எதிரான அரணாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இடது ஜனநாயக முன்னணியுமே இருந்திடும் என்பதை கேரளாவில் உள்ள ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட மக்கள் தங்கள் சொந்த அனுபவத்திலிருந்து, நன்கு அறிந்திருக்கிறார்கள்.  கேரளா என்றால் ஒவ்வோர் ஐந்தாண்டிற்கும் ஒருமுறை ஆட்சி மாறும் என்கிற பதிவை அடித்து நொறுக்கிடும் விதத்தில் இடது ஜனநாயக முன்னணி மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.  ஆனாலும் காங்கிரசும் பாஜகவும் தங்களுடைய பொது எதிரிக்கு எதிராக கூட்டு சேர மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை என்கிற உண்மையை மனதில் கொண்டு செயல்பட வேண்டியிருப்பதால்,  அங்கேயும் திருப்தி மனோபாவத்துடன் இருந்துவிட முடியாது.

(மார்ச் 3, 2021)