சந்துரு கவிதைஎன்னை தொடர்ந்துவராதே…
என் பாதங்களுக்குத் தெரியாது
எனது பாதை எதுவென்று…

எனது சுவடுகளை
நான் ஓரக்கண்ணால் திரும்பி
பார்ப்பதற்குள்ளாகவே
அலைகள் அவற்றை
ஒளித்துக்கொள்கின்றன….

என்னை தொடர்ந்து வராதே…
பின்தொடர்வதில் ஒரு வேளை
பிழை நேர்ந்தால்
என் சுவடுகள் தீண்டமுடியா திசையில்
தேங்கிவிடலாம் நீ…
அல்லது
தொலைந்தும் போகலாம்..

ஈரமணலெங்கும் நானெழுதிச்செல்லும்
பெயர்களை தேடித்திரியாதே
அவையனைத்தும்
நண்டுகள் நடந்துபோன தடங்களில்
வேறு ஓர் அர்த்தமாய்
சிதைந்திருக்கலாம்

நான் அமர்ந்திருந்த இடம்
இதுதானென்று உறுதி செய்யாதே
நேற்று அங்கே சிலர்
கூடி அமர்ந்திருக்கலாம்…
மணல் இருக்கைகள் எப்போதும்
மாறும் தன்மையுடையது….

என் மேல் பட்டு
உன் மீது மென்மையாய்த் தழுவும்
காற்றைக் கண்டு மயங்கிவிடாதே…
அது
முரட்டுத்தனமாய் என் மேல்
மோதி மோதி கரைந்த மிச்சங்கள்
என்பவற்றை உணர்ந்துகொள்…

என் சுவடுகளின் முகவரி
என்னிடமில்லை
அவை
அலையிழுத்துச்சென்று
வேறொரு கரையில்
அனாதையாய் கிடக்கலாம்
அல்லது
அலைகள் துப்பி கரை ஒதுங்கிய
கிளிஞ்சல்களின் உதட்டுக் குழிக்குள்
உறைந்துகிடக்கலாம்…
அல்லது…..
ஆழங்களில் சிக்கி
வெளியேறத்தெரியாமல்
தரை வரை புரட்டும்
பேரலை ஒன்றிற்காகக் காத்திருக்கலாம்….

தேடியலைந்தபின் ஒருவேளை
எனது உடைந்துபோன
சுவடுகளின் அடையாளங்கள்
உன்னிடம் கிடைக்கப்பெற்றால்
உன்னுள் அவற்றைப் பத்திரப்படுத்திகொள்…

ஆனால் அவற்றை
உனதென்று ஒருபோதும்
உரிமை கொண்டாட முயலாதே…
உனக்குத்தெரியாது
வெற்றுக் கால் தடங்களையல்ல
நான் தொலைந்துபோன
பாதைகளை
தேடிக்கொண்டிருப்பவனென்று…

என் சுவடுகள் தேடுவதை நிறுத்தி
நீயாகிலும் இனி
அலையடித்து தேய்ந்து போகாத
ஒரு நிரந்தரமான பாதையை
உனக்கென
தேர்ந்தெடுத்துக்கொள்…

சந்துரு…