கவிதை: *பனியையும் குளிரையும் உருட்டி விளையாடுபவர்கள்* – சந்துரு

கவிதை: *பனியையும் குளிரையும் உருட்டி விளையாடுபவர்கள்* – சந்துரு



பனியையும் குளிரையும் உருட்டி விளையாடுபவர்கள்
******************************************
முன்னோர்களின் விரல் பிடித்த
கலப்பைகளின் மிச்சங்களால்தான்
தேசத்தின் மனிதர்கள்
இன்னமும் உழுதுகொண்டிருக்கிறார்கள்…
.
நிலம் அவர்களையும்
பயிர்களை அவர்களும்
சேர்ந்தே வளர்க்கிறார்கள்…
.
முதுகுத் தோலுரிக்கும் வெயிலையும்
உதட்டுத்தோல் வெடிக்கும் குளிரையும்
சமமாய் குடித்தே அவர்கள்
சாகுபடி செய்கிறார்கள்…
.
அதிகாரத்தின் லகான்களை
கைப்பிடிக்குள் இடுக்கிக்கொண்டு
எங்கிருந்தோ உள் நுழைபவன்
நிலம் காக்கும் கடவுளென்றே
தன்னை அறிவித்துக்கொள்கிறான்…
.
வெட்டுக்கிளிகளுக்கு அஞ்சாமல்
ஆடிக்கொண்டிருந்த வயல்வெளிகள்
புதிய சட்டங்களால் நடுங்குகின்றன…
.
தானியக் குதிர்களில்
எறும்புகள் இறங்கி நடக்கலாம்
எலிகள் வசிப்பதை
எப்படி அனுமதிப்பது…?
.
களமடித்த மணிகளை
தனியொருவன் கிடங்குகளுக்கு
தாரை வார்க்கும் தத்துவங்களால்
கண்கள் பிதுங்கி நிற்கின்றன
நிலமும் உழைப்பும்…
.
முப்போகம் விளைந்து
காவல் தெய்வங்களுக்குப் படையலிட்டு
பகிர்ந்து கொண்ட தானியங்களை
பூதங்களின் கஜானாவுக்கு
மொத்தமாய்க் கடத்தும் தந்திரத்தை
கருணையென்று போதிக்கிறார்கள்.
.
அமிர்தமெனப் பருகச்சொல்லி
கார்ப்பரேட் பாலாடைகளில்
அதிகார பீடங்கள் புகட்ட விரும்புவது
அத்தனையும் ஆலகாலம்…
.
விளைச்சலை மட்டுமல்ல
மரபு சிதைந்த மலட்டு விதையெடுத்து
நிலத்தையும் விழுங்க வருகின்றன
கார்ப்பரேட் கருந்துளைகள்…
.
உழுபவனை
இருளின் பாதாளங்களுக்குள்
விரட்டுவதற்கெதிராய்
சேற்றிலூறிய பாதங்களை உதறி
பாதுஷாக்களின் வீதிகள் நோக்கி
நடக்கத் தொடங்கிவிட்டார்கள்
நிலத்தின் புதல்வர்கள்…
.
அவர்களின் பாதங்களை
மூத்த தாயொருத்தியின் ஆசியுடன்
முத்தமிட்டு இளகி வழிவிடுகின்றன
நெடுஞ்சாலைகள்…
.
நிலம் குனிந்து
விதையூன்றிய விரல்கள்
வானுயர்த்திய கொடிகளசைத்து நகர்கின்றன.
.
நடக்கும் கால்களை நடுவிலே நிறுத்த
வெட்டப்படும் பள்ளங்களில்
ஆள்வோரின் வாக்குறுதி
அழுகிய மாமிசமாய்க் கிடக்கிறது…
.
தடுப்பு வேலிகள்
முன்னேறும் தாகத்தை
முன்னிலும் உறுதிப்படுத்துகிறது…
கைகள் உயர்த்திப் பிடித்த கம்புகள்
கைத்தடி ஊன்றி நடந்தவனின்
கலக யாத்திரையை நினைவு படுத்துகிறது.
.
எதிர்காலத்தின் புன்னகைக்காக
அவர்கள்
பனியையும் குளிரையும்
வீதிகளில் உருட்டி விளையாடுகிறார்கள்
.
ஆயுதமின்றி அகிம்சையின் குரலுயர்த்தி
ஊர்வலம் செல்லும் கூட்டத்தை
எளிதாய் அடக்கிவிடலாமென
ஆருடம் கணித்தவர்கள்
முதன் முதலாய் அறிந்திருக்கக்கூடும்
அவர்கள் ஒவ்வொருவருமே
ஆயுதம்தானென்பதை…
சந்துரு…



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *