பெருந்தொற்றின் காலம்
வாழ்வின்
இரு கரைகளுக்கு நடுவில்
வறண்ட நதியின் வெறுமையை
உணர்த்திச் செல்கிறது…
மேகங்கள் கைவிட்ட நாளில்
சூரியன் புசிக்கும்
ஆற்றின் பாதைகளில்
மீன்களின் செதில் சிலுப்பலும்
புரளும் தண்ணீரின் அதிர்வுகளுமின்றி
அனலின் புழுக்கம்…
ஆற்றிம் பக்கம்
தலை சாய்ந்த கிளையில்
சருகுடன் தரை உதிர்ந்த
எறும்பொன்று
கொதிக்கும் நதித்தடத்தில்
மேலேறி புற்றடையுமென்ற
நம்பிக்கை பொய்த்துப்போகிறது…
இல்லாதவர்களின்
இரவுகளில்
நட்சத்திரங்கள்
கருப்பாகவே இருப்பதைப்போல்…
முடக்கப்பட்ட காலத்தில்
வீதியில் உணவின்றி
முடங்கிக்கிடக்கும்
பிறழ்வு நிலைக்காரனின்
விலாப் பள்ளங்களில்
படிந்த அழுக்குகள்
சதைப்பிடித்து
எப்போது உதிருமோ…!
சந்துரு…
***************************
தேவைகளின் கால்கள்
இயலாமையின்
விசும்பலொன்று
மெல்லிய ஓசையுடன்
எல்லோருக்குள்ளும்
கேட்டுக்கொண்டேயிருக்கிறது…
அச்சமூட்டும்
மரணத்தின் எச்சரிக்கைகள்
மனதின் சுவர்களில்
வித விதமாய் பாதிப்புகளை
கற்பனைக்கேற்ப
வரைந்துகொள்கிறது…
இல்லாதவர் தவிர
எல்லோருமே
பதுக்கிக்கொள்வதற்கும்
பதுங்கிக்கொள்வதற்கும்
சுலபமாய்
பழகிக்கொண்டோம்…
துன்ப நாட்களின்
உறை பனிக்கட்டிகள்
எளியவர்களின்
கூடாரங்களையே
முதலில் மூடுகிறது…
தீயெனப்பரவும்
தற்காப்பின் எச்சரிக்கைகள்
குடிசைகள் எரிந்த பின்பே
தப்பிச்செல்ல போதிக்கிறது…
உத்தரவுகளால்
முடங்கிய உழைப்பு
வாழ்வின் கைகளில்
விலங்கிட்டு
தேவைகளின் கால்களை
அவிழ்த்து விடுகிறது…
ஓசைகளற்று
தனிமைப்பட்டுக்கிடக்கும்
வீதிகளில்
வாழ்தலின் பொருட்டு
நோய்களை அலட்சியம் செய்து
உணவுக்காக அலைகிறது
பசி…
இருள் சூழ்வதாய்
வெளியிடப்படும்
அறிவிப்புகள் எதுவும்
பசியைக்காட்டிலும்
அச்சமூட்டுவதாயில்லை
கைவிடப்பட்டவர்களின்
வீடுகளில்…
சந்துரு…
***************************