துரோகங்களை பிணைத்தபடி – சந்துருதுரோகங்களை பிணைத்தபடி
***************************************
ஏமாற்றத்தின் இழைகளால்
நெய்யப்பட்டிருக்கிறது மனதின் அறை

அழுத்தும் துரோகங்களால்
தேற்றுவாரற்று
நினைவுகளின் செதில்கள் உதிர்கின்றன

துரோகத்தின் பள்ளங்களில்
பதுக்கப்பட்டிருக்கின்றன
பறிகொடுத்த செல்வங்கள்

காக்கையின் தாகத்தில்
இரவின் குடுவைக்குள்
நித்திரையின் கற்கள் போட்டாலும்
உறக்கத்தின் துளிகள்
கண்களை மறுதலித்து
கன்னத்தின் ஓரத்தில்
காய்ச்சிய உலோகத்துளிகளாய்
கசிகின்றன…

ஏமாற்றங்களின் பாரத்தை
நெட்டித் தள்ளத்தெரியாமல்
அறையெங்கும் இருளின் வெறுமையை
துழாவுகின்றன கண்கள்…

எதிர்பாராத தோல்வியும்
ஏமாற்றப்பட்டதின் வெறுப்பும்
வெளிப்பகிர முடியா விரக்தியிலும்
குரலற்று விசும்புகின்றன…

திட்டமிட்டே இழைத்த துரோகங்களால்
மேல் வாய் நசுங்கி
இனியெப்போதும் மூடமுடியாமல்
பிளந்த வாயுடன்
பொருந்தா மூடிகளாய் கிடக்கின்றன
உறவுகளின் பாத்திரங்கள்…

விலகி வெகுதூரம் வர நினைத்தாலும்
ஓட்டைகள் நிரம்பிய கலயத்தை
சொட்டை தட்டி
மீண்டும் தண்ணீர் நிறைத்து
புழங்கிடச்சொல்லித் துரத்தி விடுகின்றன
வாழ்க்கையின் நிர்பந்தங்கள்…

இருளின் வனாந்திரத்தில்
தொலைத்தவைகளை மீட்கமுடியாமல்
பறித்தவரை விலக்க முடியாமல்
துரோகங்களையும்
சேர்த்தே பிணைத்தபடி
ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும்
ஏமாளியைப் போல்
உங்களுக்கும் நேர்ந்திருக்கக்கூடும்
துரோகிகளை சுமந்துகொண்டு
ஓடவேண்டிய ஓர் நிர்பந்தம்…

சந்துரு…