ஜூன் 2024இல் வெளிவந்துள்ள இந்தி திரைப்படம். தமிழ் ஆடியோவும் உள்ளது. பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்க பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்கர் எனும் இந்திய வீரரின் சுயசரிதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. கபீர் கான் இயக்கத்தில் சஜித் நடித்வாலா தயாரித்துள்ளார். கார்த்திக் ஆர்யன், விஜய் ராஸ்,புவன் அரோரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் கர்ட் கிராமத்தை சேர்ந்த முரளி பெட்கர் ஒலிம்பிக்கில் மல் யுத்தத்தில் தங்க மெடல் வாங்கி நாட்டிற்கும் ஊருக்கும் தனக்கும் பெருமை தேட விரும்புகிறான். சக மாணவர்கள் அவனை சந்து சேம்பியன் அதாவது தோல்வியின் சேம்பியன் என கேலி செய்கின்றனர். தந்தையும் அவன் மல்யுத்தம் பழக போகக் கூடாது என கண்டிக்கிறார்.
அதையும் மீறி அவன் மல்யுத்தம் பழகுகிறான். இன்னொரு ஊர் வீரனை தோற்கடித்ததால் அவர்கள் அவனை துரத்துகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் ஏறி பூனா செல்கிறான். இன்னொரு சீக்கிய நண்பனுடன் ராணுவத்தில் சேர்கிறான். அங்கு குத்து சண்டை பயிற்சி பெறுகிறான். பன்னாட்டுப் போட்டி ஒன்றின் இறுதி சுற்றில் கண நேர கவனக் குறைவால் தோற்கிறான்.
இதனால் கோபம் கொண்ட பயிற்சியாளர் அவனுக்கு பயிற்சி அளிக்க மறுக்கிறார். எல்லைப் போரில் அவன் உடலில் எட்டு குண்டுகள் பாய்ந்து இரண்டு ஆண்டுகள் கோமாவில் இருக்கிறான்.
மருத்துவ சிகிச்சையால் குணமடைகிறான். ஆனால் கால்கள் ஊனமாகி விடுகிறது. குடும்பத்தினர் அவன் மருத்துவ மனையில் இருப்பது தான் நல்லது என்று கூறி அவனை விட்டு சென்று விடுகின்றனர். மனம் உடைந்த முரளி தற்கொலை முயற்சி செய்கிறான். ஆனால் பிழைத்து விடுகிறான்.
மீண்டும் பயிற்சியாளர் அலியை சந்திக்கிறான். அவன் பாரா ஒலிம்பிக்கில் மெடல் வாங்க முடியும் என்று கூறி நீச்சல் பயிற்சி அளிக்கிறார். ஜெர்மனியில் நடைபெறும் பாரா ஒலிம்பிக்கில் 50 மீட்டர் பிரீ ஸ்டைல் போட்டியில் தங்கம் வெல்கிறான்.
50 ஆண்டுகள் கழித்து தன் கிராமத்திற்கு சாலை வசதி கிடைப்பதற்காக அர்ஜுனா விருதுக்கு விண்ணப்பிக்கிறான். முதலில் அதை ஏற்றுக் அரசாங்கம் ஏற்க மறுக்கிறது. பெட்கர் தனது சொந்த முயற்சியில் சாலை அமைக்கும் பணியில் இறங்குகிறார். பத்திரிக்கை மற்றும் இராணுவ நண்பர்கள் அவனது முழு வரலாற்றையும் வெளிக் கொணர்ந்த பின் அரசாங்கம் பத்ம ஶ்ரீ விருதே அளிக்கிறது.
கபீர் கான் இயக்கம் சிறப்பாக உள்ளது. கதாநாயகன் கார்த்திக் ஆர்யன் நடிப்பும் சிறப்பு. மல்யுத்த பயிற்சிக் கூடம், மல்யுத்த போட்டி களம், இராணுவ முகாம், விமானங்கள் குண்டு போடுவது , 50-60 கால கட்ட ரயில் பெட்டிகள் என காட்சி அமைப்புகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. 65ஆம் ஆண்டு போர் யாருடன் என்பதை சொல்லாமல் போரில் பெட்கர் காயம் அடைகிறான் என்பதை மட்டும் காட்டுவது, 72 ஒலிம்பிக் போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பதை மட்டும் காட்டுவது போன்றவற்றில் இயக்குனர் கதைக்கு தேவையானதை மட்டும் காட்டி பார்வையாளர் கவனத்தை சிதறடிக்காமல் செய்துள்ளார்.
பரவலாக விமர்சகர்களின் பாராட்டை பெற்றுள்ளது. வசூலும் 80 கோடி செய்துள்ளது.
வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டே பல வீரர்கள் சாதித்துள்ளார்கள் என்பதற்கு இந்த வரலாறு நல்ல எடுத்துக் காட்டு. 1972இல் செய்த சாதனைக்கு 2018இல் விருது, ஊருக்கு சாலை வசதி கூட தங்க பதக்கம் வாங்கித்தான் செய்ய வேண்டி உள்ள நிலமை ஆகியவை நம் நாட்டின் நிலமையை சுட்டிக் காட்டுகிறது. ராணுவத்தில் இருந்ததால் பெட்கருக்கு மருத்துவ வசதிகளும் பயிற்சியும் மற்ற வசதிகளும் கிடைக்கிறது. சாதாரண மாற்று திறனாளிகள் அடையாள அட்டைக்கு கூட போராட வேண்டியதிருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.
எழுதியவர்
இரா.இரமணன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.