சாப்ளினுடன் பேசுங்கள் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள்:
நூல்: சாப்ளினுடன் பேசுங்கள் (சினிமா கட்டுரைகள்)
ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன்
வெளியீடு : உயிர்மை பதிப்பக வெளியீடு
பக்கம் ; 160
விலை : ரூ.140
மனித வாழ்வின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்று திரைப்படம். அத்திரைப்படத்தின் வாயிலாக ஒவ்வொரு மனிதனுக்கான ஆசைகளை, கனவுகளை, லட்சியத்தை எட்ட வைக்கும் வழிமுறைகளும் கற்றுத்தரப்படுகின்றன.
கேளிக்கையாக வெளிவர ஆரம்பித்த திரைப்படங்கள் நிறைய லட்சியங்களை அடைவதற்கான இலக்காக மாறி இன்று எல்லோர் மனதிலும் நிரந்தர இடத்தை பிடித்திருக்கின்றன என்றால் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
திரைப்பட உலகில் பேசும் படம் இன்று நிறைய சாதனைகளை செய்து கொண்டிருப்பது போல் மௌனப் படங்கள் ஆரம்ப காலங்களில் வசனங்கள் சொல்லாமலேயே வாழ்வின் அர்த்தங்களை பார்வையாளர்களுக்கு கடத்தின.அப்படியான மௌனப் படங்களை ஆட்சிசெய்து மன்னனாக விளங்கிய சார்லி சாப்ளின் அவர்களைப் பற்றிய முதல் கட்டுரை சிறப்பான அறிமுக கட்டுரை.
ஏன் சாப்ளின் இன்றும் உலகமெல்லாம் கொண்டாடப்பட்டு வருகிறார். அவரது நகைச்சுவை மட்டுமல்ல அவரது படங்களில் காணப்படும் எதார்த்தமான அடித்தட்டு மக்களின் வாழ்வியல் சித்தரிப்பு, தன்னை சுற்றிய சமூகத்தின் வறுமை, அதிகாரம்,போராட்டம்,,சுய அடையாளம் குறித்த தேடுதல், உதிரி மனிதர்களின் புறக்கணிப்பு மீதான அக்கறை, அடிபட்டு மிதிபட்டு வறுமையோடு போராடி அறிந்த வாழ்வைப் பற்றிய சுய புரிதல்களும் அதிலிருந்த உண்மையுமே முக்கிய காரணங்கள்.
சினிமாவின் வழியே சாப்ளின் நிறைய நமக்கு கற்றுத் தருகிறார். அவரது படங்களில் வரும் பெண் கதாபாத்திரங்கள் வலிமையானவர்கள். ஆரம்பத்தில் நடித்த முதல் திரைப்படத்திற்கு கதாபாத்திரம் பொருந்தாமல் அவரை வேண்டாம் என்று இயக்குனர் பலமுறை நிராகரித்தும் தனது திறமையால் வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றவர் சார்லி சாப்ளின். அவரைப்பற்றிய சாப்ளின் உடன் பேசுங்கள் அறிமுக கட்டுரை அவரது வாழ்வை நாம் நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது.
இந்நூலில் வரும் ஒவ்வொரு கட்டுரைகளும் நூலாசிரியரை பாதித்த சினிமாக்கள் பற்றிய கட்டுரையாக மட்டுமே மலராமல் அந்த சினிமாக்களின் வழி உலகிற்கு நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்ன என்பதை அழகாக எடுத்துரைக்கிறார்.
பொம்மலாட்ட கலைஞர் மற்றும் ஓவியர் என்ற வகையில் பல ஆண்டுகள் வேலைசெய்த டிரிங்கா என்பவரைப் பற்றிய பொம்மலாட்ட சினிமா கட்டுரையும் அவர் தன் வாழ்வில் ஒரு சினிமா தயாரிப்பதற்காக எவ்வளவு இன்னல்களை அடைகிறார்.,தனது கதைகளின் வழியே அனிமேஷன் என்று சொல்லப்படுகிற பொம்மலாட்டக் கலையை அழகான படமாக மாற்றி கொடுப்பதை சிறப்பாக விவரிக்கிறது.

A scene at the sea என்ற ஜப்பானிய படம் இரு மாற்றுத்திறனாளிகள் ஒரு சந்திப்பில் நட்பாக கடல் அலையோடு விளையாடும் கதாநாயகனுக்கு நாயகி வாழ்த்துச் சொல்லி ஊக்குவித்து அவனின் லட்சியத்தை அடைவதற்கு எவ்விதம் உதவி செய்கிறாள் என்பதை அழகான படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் டகாசி கிடானோ.
அந்த படத்தைப் பற்றியும் அது வளர்ந்த கதையை பற்றியும் நிசப்தமான அலைகள் கட்டுரையில் விளக்குகிறார் ஆசிரியர்.
ஓரிகாமி என்றழைக்கப்படும் காகித சிற்பங்களை உருவாக்குவது பற்றிய ஆவணப்படமப between the folds என்ற படத்தை பற்றிய கட்டுரை காகிதச் சிற்பங்கள்.
காகிதத்தை மடித்து கப்பல் செய்வது மட்டும்தான் நாமறிந்த கலை. ஆனால் ஜப்பானிய காகித சிற்பக்கலையில் காகிதம் ஒரு மாய பொருள் போலாகி விலங்குகள் மனிதர்கள் கற்பனை உருவங்கள் என்று எல்லா வடிவங்களும் பெறுகின்றன. இது வெறும் பொழுதுபோக்கு இல்லை. விஞ்ஞான நுட்பம் கொண்ட உயர்ந்த கலை என்கிறார்கள் அறிவியலாளர்கள். அதை பற்றிய இந்த ஆவணப்படம் சிறப்பான ஒன்று என கட்டுரையாசிரியர் ஆச்சரியப்படுகிறார்.
காகிதம் சிற்பமாக உருவான உடனே அது மூச்சு விடுகிறது சிரிக்கிறது நடனம் ஆடுகிறது அந்த விந்தையை நீங்களே செய்து பார்க்க முடியும் உங்கள் குழந்தைகளை மகிழ்விக்க இதை கற்றுக் கொடுங்கள் என்கிறார் இந்த படத்தின் இயக்குனர் வனேசா.
ஹரிச்சந்திரா ஃபேக்டரி என்ற தலைப்பிலான கட்டுரை 50 ஆண்டுகளுக்கு முன் இந்திய சினிமா எவ்வாறு ஆரம்பிக்கப்பட்டது, இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகிப் பால்கே தனது ராஜா ஹரிச்சந்திரா படத்தை எடுப்பதற்காக அலைந்த விவரங்களையும் சிரமங்களையும் இந்த படம் விவரிக்கிறது. இன்று சினிமா வெகுமக்களின் கலை. ஆனால் சினிமா அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் அதை காண்பது மிகப்பெரிய பாவம் என்று கருதப்பட்டது. சினிமா பார்ப்பதே பாவம் என்று இருந்த சூழலில் சினிமா எடுக்க முயன்ற வாழ்க்கையின் அவஸ்தைகளை பற்றிய இந்த படம் அன்றைய மக்களின் உணர்வுகளை நகைச்சுவையுடன் பிரதிபலிக்கிறது. நடிப்பதற்கு ஆள் கிடைக்காமல் வாழ்க்கையில் பால்கே அலைந்த அலைச்சலும் அதை படமாக மாற்றுவதற்கு அவர் கற்றுக்கொண்ட கலையை எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை நகைச்சுவை கலந்த வலியை வாசிக்கும் நமக்குள்ளும் கடத்துகிறது இந்த படம்.
ஜல்லிக்கட்டு என்ற தலைப்பிலான கட்டுரையில் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு பற்றிய தேடல்களின்வழி பல ஆண்டுகளாக அது எவ்வாறு ஒரு கலையாக ஒரு பண்பாடாக தமிழர்களுக்குள் மாறிக் கொண்டது என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது. மாடு வளர்ப்பு பற்றியும் மாடுகளின் இயல்பை ஜல்லிக்கட்டின் போது எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றியும் உணர்வுப் பூர்வமாக விவரிக்கிறார்.
ஒரு மாடு தன்னை தொடர்ந்து பல ஆண்டுகள் அடக்கிய ஒரு மனிதனை ஒருமுறை அடக்கி அவனை தன் கொம்பால் குத்தி வீசாமல் ஒருமுறை பார்த்துவிட்டு வழி விடுகிறது என்று எழுதுகிறார். இவ்வாறாக ஜல்லிக்கட்டு தமிழக மக்களின் மனங்களுக்குள் எவ்விதமான மாடுகள் பற்றிய புரிதலை உருவாகிறது என்பதையும் இக்கட்டுரை ஆழமாக விவரிக்கிறது.
இப்படியாக இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் நாம் பொழுதுபோக்கு என்று நினைத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் நமக்குள் எவ்விதமான மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அருமையான எண்ணத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் கட்டுரைகளாக மிளிர்கின்றன.
நூலின் தகவல்கள்:

இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

