ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம்  – சார்லஸ் டார்வின் (கடற்பயணங்களால் உருவான மாமேதை) – R.ரமேஷ்

ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்: நூலறிமுகம் – சார்லஸ் டார்வின் (கடற்பயணங்களால் உருவான மாமேதை) – R.ரமேஷ்

 

 

 

 

ஆசிரியர் பற்றி:

உணவுத் தொழில்நுட்ப வல்லுநர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயற்பாட்டாளர். கதைகளையும் அறிவியலையும் குழந்தைகளுக்கு எடுத்துச்செல்வதில் ஆர்வம் கொண்டவர். ‘உழைப்பாளி வாத்து’, ‘மாடுகளின் வேலைநிறுத்தம்’, ‘துள்ளி’, ‘பாஸ்ராவின் நூலகர்’, ‘மூன்று குண்டு மனிதர்கள்’ (ரஷ்ய நூலின் குழந்தைகளுக்கான வடிவம்) உள்ளிட்டவற்றை மொழிபெயர்த்திருக்கிறார்.

பதிப்பகம் பற்றி:

வாசிப்புப் பழக்கம் நோக்கி சிறாரை நகர்த்த அறிவியல், சமூகம், சூழலியல், ஆளுமைகளின் வாழ்க்கைச் சித்திரம் என வெவ்வேறு தலைப்புகளில் சிறுசிறு புத்தகங்களாக ஓங்கில் கூட்டம் வெளியிட்டு வருகிறது.

இதில் சிறப்பு என்னவெனில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் படைப்புகள் வெளிவருவதாகும்.

“பஞ்சுமிட்டாய்”பிரபு அவர்கள் ஒருங்கிணைப்பாளராகவும்,எழுத்தாளர் கமலாலயன் மேற்பார்வையாளராகவும் இருக்க வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள் பலர் துணையோடு ஓங்கில் கூட்டம் இயங்கி வருகிறது.

நூலைப்பற்றி ஆசிரியர் :

“உயிரினங்களின் தோற்றம்” என்கிற ஆய்வு நூலின் மூலம்,உலகில் பரபரப்பை ஏற்படுத்திய டார்வின்,தன் 20 ஆண்டுகால ஆய்வை “மனித குலமும், பல்வகை உயிரினங்களும் இயற்கைத் தேர்வின் மூலமும்,பரிணாம வளர்ச்சியின் அடிப்படையிலும் உருவானவை”என்கிற கருத்தை வெளிப்படுத்தி,அதுவரை இருந்துவந்த மதப்பூர்வமான,பிற்போக்குத்தனமான வாதங்களை ஆட்டம் காண வைத்தார்.

மற்ற விஞ்ஞானிகள் அவரைப் பின்பற்றி ஆய்வை நடத்தி,அவர் கூறியதை உறுதிப்படுத்தியதை தொடர்ந்து டார்வின் 140 ஆண்டுகள் கடந்தும் நம்மை ஆட்கொண்டுள்ளார்.

நம் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு கற்பிதமாக இல்லாமல் அறிவியல்பூர்வமாக தீர்வு காண மாணவர்களுக்கு இந்நூல் தூண்டுகோலாக அமையுமென ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

நூலிலிருந்து (வாசிப்பனுபவம்):

கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தின் ஷ்ருஸ்பரி நகரத்தில் பிறந்த டார்வின் அவர்களுக்கு பூச்சிகள்,வண்டுகள் போன்ற உயிரினங்கள் மீது நாட்டம் அதிகம்.

வகுப்பறையில் நாட்டம் இல்லாமல் பலவகையான பூச்சி,வண்டுகளை சேகரித்து ஒரு பெட்டகத்தையே உருவாக்கி இருக்கிறார்.

அவரது தந்தை,தாத்தா இருவரும் சிறந்த மருத்துவர்களாக இருந்திருக்கின்றனர்.இவரையும் மருத்துவராக்க அவர்கள் ஆசைப்பட…….
(ஏன் மருத்துவர் ஆகல? – விடை புத்தகத்தில்)

டார்வின் அவர்கள் மருத்துவப் படிப்பைப் பாதியில் விட்டுவிட, அப்பா கோபப்பட்டு,பாதிரியார் ஆவதற்கான பட்டப்படிப்பில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்து விடுகிறார்.

அங்கு உள்ள புவியியல்,விலங்கியல்,தாவரவியல் பேராசிரியர்களோடு நட்புக்கொண்டு தன்னுடைய ஆய்வு மனப்பான்மையை மேம்படுத்திக்கொள்கிறார்.

இவரும்,பேராசிரியர் ஜான் ஹென்ஸ்லோவும் வடக்கு வேல்ஸ் பகுதிக்கு ஒரு புவியியல் பயணம் மேற்கொள்கின்றனர்.

வெவ்வேறு நிலப்பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்ய பிரிட்டன் கடற்படை எச்.எம்.எஸ். பீகிள் என்கிற கப்பலில் பயணத்தை ஏற்பாடு செய்கிறது.அதில் ஒரு ஆய்வாளர் தேவைப்படவே,பேராசிரியர் ஜான் ஹென்ஸ்லோ டார்வினை பரிந்துரை செய்கிறார்.

டார்வின் தன்னுடைய 22வது வயதில் இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகத்தில் இருந்து ஆய்விற்கான பயணத்தை தொடங்குகிறார்.

மனிதகுல வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவப்போகும் வரலாற்றுப் பயணமாக மாறும் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

ஆரம்பத்தில் கடற்குமட்டல் நோய்க்கு ஆளானார். எந்த உயிரினங்களையும் காண முடியாமல்,பயணம் சலித்துப்போக,தனக்கு கிடைத்த வாய்ப்பினை எண்ணி உற்சாகம் கொள்கிறார்.

அதே சமயம் கப்பலின் முதல் தரையிரங்கல் ஆரம்பிக்கிறது.

முன்னதாக அவர்கள் போர்ச்சுகல் கடல் பகுதியில் உள்ள அஸோர்ஸ் தீவு, மேற்கு ஆப்பிரிக்காவை ஒட்டிய வெர்டே முனைத் தீவுகளில் முதலில் அவர்கள் இறங்கினார்கள்.

தான் செல்லும் இடங்களிலெல்லாம் எல்லா உயிரினங்களையும் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் இருந்தார் டார்வின்.

(பிரேசிலின் வெப்பமழைக் காடுகள் பற்றிய அத்தியாயம் சிறப்பானதாக இருந்தது.அவர் அங்குள்ள சூழலை உற்றுநோக்கிய விதம் அவருடைய ஆய்வை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது)

பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் வலுவாகவும்,வாழும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் மாறியிருப்பதை அவர் கண்டறிந்தார். பூமியில் வெவ்வேறு உயிரினங்கள் தொடர்ந்து வாழ்ந்துவருவதற்கு பரிணாம வளர்ச்சிதான் காரணம் என்றும்,அது எப்படி நிகழ்கிறது என்பதைக் கண்டறிவதற்குமான தனது ஆராய்ச்சிகளை டார்வின் தொடர்ந்தார்.

புற்களின் வளர்ச்சியில் உள்ள மாறுபாடுகள் பற்றியும்,தென் அமெரிக்காவின் தெற்கு முனையில் டியெர்ரா டெல் ஃபியூகோ தீவில் வசித்த ஃபியூஜிய மக்களைப் பற்றியும் அவர்களின் தகவமைப்பையும் வியக்கிறார்.

அவர்கள் சென்ற கப்பல் 1900 கி.மீ. நீளமுள்ள கடற்கரையை கடந்து செல்கையில் தெற்குப்பகுதி பாறைகள் வடக்குப்பகுதியை விட கடல்மட்டத்திலிருந்து உயர்ந்திருப்பதை காண்கிறார்.

இதன்மூலம் உயிரினங்களில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகளையும் கவனிக்கிறார்.

நிலநடுக்கோட்டுக்கு அருகில் உள்ள கலாபகஸ் தீவு அவரது ஆய்வுக்கு தீனிபோடும் விதமாக ஏராளமான நிகழ்வுகளை தன்னகத்தே கொண்டிருப்பதைப் பார்த்து டார்வின் வியக்கிறார்.

அங்குள்ள 13 தீவுகளிலும் வாழ்ந்த ஒரே வகையான உயிரினங்கள் சிற்சில வேறுபாடுகளோடு இருப்பதைக் காண்கிறார்.

இதை அடிப்படையாக வைத்து அவர் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரு மூதாதையர் இருந்திருக்கலாம் என கணிக்கிறார்.

இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை அவர் அறிந்த விதம் நமக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.

அந்தத் தீவுகளில் வாழ்ந்த பறவைகள் இடங்களைப் பொறுத்து அவற்றின் அலகுகளில் மாறுபாடுகள் ஏற்பட்டு இருக்கின்றன.

சூழலுக்கு ஒத்துப்போன உயிர்கள் இனப்பெருக்கம் செய்து பரிமாண வளர்ச்சி அடைய, மற்ற உயிர்கள் காலப்போக்கில் அருகி,மறைந்து போயின.

உணவைத் தேடுவதில் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில் ஒட்டகச்சிவிங்கிக்கு எப்படி கழுத்து நீளமானது என்கிற விஷயம் அவருடைய கண்டுபிடிப்பால் நமக்குத் தெரிய வருகிறது.

(விஷயம் அப்படி இருக்க,நானெல்லாம் சின்ன வயசுல ஒ.சி.யோட தாத்தாவுக்கு இருந்தத விட அதோட அப்பாவுக்கு கொஞ்சம் பெரிய கழுத்தா இருந்திருக்கும்,அப்புறம் அப்படியே வளர்ந்து இப்போ இருக்க மாதிரி ஆகி இருக்கும்’னு நெனச்சேன்.நம்ம எஸ்டிடி அப்படி….ம்ம்)

இந்த மாதிரியான உண்மைகளை அறிந்ததன் மூலம் டார்வின் அவர்கள் “பரிமாணவியல் கோட்பாடு” என்கிற புதிய கோட்பாட்டை உருவாக்கி, உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஒரு சகாப்தத்தை ஏற்படுத்தினார்.

முடிவில், கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் நிகழ்ந்த சிறியசிறிய மாற்றங்கள் வேறுபட்ட பல வகை உயிரினங்களை உருவாக்கியுள்ளன என்கிற முடிவை டார்வின் வந்தடைந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் குறித்த நூலை எழுதினார்.

டார்வின் அவர்களைப் பற்றிய சிறந்த அறிமுகமாக இந்த நூல் பயனுள்ளதாக இருக்கிறது.

‘சிறியதே அழகு’ என்பதற்கேற்ப இந்த மாதிரியான சிறிய புத்தகங்கள் மாணவர்களை வாசிப்பின் பக்கம் எளிதாக ஈர்க்கும்.

அதிலிருந்து கிடைக்கும் செய்திகள் அவர்களின் ஆர்வத்திற்கும்,அறிவு வளர்ச்சிக்கும் விருந்தளிக்கும்.

-R.ரமேஷ்,
ஆசிரியர்,
பட்டுக்கோட்டை.

 

நூலின் பெயர்  : சார்லஸ் டார்வின் (கடற்பயணங்களால் உருவான மாமேதை)
ஆசிரியர் : அன்பு வாகினி
வெளியீடு : ஓங்கில் கூட்டம்
பக்கங்கள் : 31

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *