சேகுவேரா ஒரு போராளியின் வாழ்க்கை – நூல் அறிமுகம்
சே குவேரா யார்?
அவன் என்ன பெரிய கொம்பனா? அல்லது கடவுளின் அவதாரமா? அல்லது கடவுள்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவ தூதன? இல்லை.. இல்லை சாதாரண, மிக..மிகச் சாதாரண ஒரு மனிதன். சாதாரணமாக எல்லாக் குழந்தைகளையும் போல் அவனும் தாய்ப்பால் குடித்துத்தான் வளர்ந்தான், தேவதைகள் யாரும் வந்து அவனுக்கு பாலூட்டவில்லை. பசி, தாகம், ஆசை, மோகம்,கோபம், எல்லாம் நிறைந்த எளிய மனிதன் தான். மூன்று தலைகளோ ஆறுகைகளோ கொண்ட விசித்திர மனிதன் அல்ல. உன்னைப்போல் என்னை போல் அவனைப் போல் ஒரு மனிதன் தான் சே குவேரா. சாதாரணமாணவன் தான். ஆனால் அவன் எண்ணங்கள் சாதாரணமானதல்ல.
பெரிய படிப்பு படிக்க வேண்டும், பெரிய வேலையில் அல்லது பெரியதொரு தொழில் தொடங்கி,பெரிய பணக்காரனாகி, பெரிய இடத்தில் திருமணம் செய்து. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அடுத்த வீடு, எதிர் வீடு என எல்லோரையும் விட பெரிய பணக்காரனாகி, பெரிய பண்ணை வாங்கி, பெரியதொரு தீவை வாங்கி, கலெக்ட்டர், டாக்டர் என பிள்ளைகளை பெரிய படிப்பு படிக்க வைத்து…. என கனவு கண்டு,கால் புடுச்சு,காக்கா புடுச்சு, அடுத்தவன் கழுத்தை நெரித்து, ஓடி.. ஓடி ஓடாய்த் தேய்ந்து, உறுத்தெரியாமல் அழிந்து, மனிதனாய் வந்து வாழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இன்றி …ஓடி மறையும் சராசரி மனிதன் அல்ல சே குவேரா,
இறக்கை இன்றி உலகைச் சுற்றி வந்து விட வேண்டும், உலகில் உள்ள அத்தனை நாடுகளிலும் தன் பாதம் படர வேண்டும், உலகில் உள்ள அத்தனை மனிதர்களிடமும் கை குலுக்கி விட வேண்டும், என்ற வேட்கை கொண்டு. எதனுள்ளும் சிக்கிக் கொள்ளாமல், எதுவும் தன்னை கட்டுப்படுத்தி விடாமல், எந்த ஒரு கட்டுக்குள்ளும் அடங்கி விடாமல் சுதந்திர மனிதனாக இந்த பூமியை புரட்டி விட முனைப்பாக இருந்தவனே எர்னஸ்டோ சே குவேரா. அவன் சராசரி மனிதன் இல்லை என்றாலும் அவனுடைய குழந்தைப் பருவம், மாணவப் பருவம் எப்படி இருந்தது?
சே குவேரா : தியாகம் மிக்கவர், தன்னலம் இல்லாதவர்,போர் தந்திரம் மிக்கவர் ….இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இருக்கட்டும் முதலில் அவர் எப்படிப்பட்டவர் என்பதை பார்க்க வேண்டும். அதனை ஒரு சம்பவம் இங்கே விளக்குகிறது, வேறொரு நாட்டில் பிறந்திருந்தாலும் இன்னொரு நாட்டின் சுதந்திரத்திற்காக, உண்மையாக, தலைமைப் பண்போடு, படை நடத்தி வெற்றி கண்டு, கியூபாவைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கின்ற காலகட்டத்தில், பிடல் காஸ்ட்ரோவுக்கு உறுதுணையாக தொழில்துறை மந்திரியாக பதவியேற்கிறார். மந்திரியாக இருந்த போதும் பகுதி நேரம் வேளாண்மை தொழிலிலும் ஈடுபடுகிறார். இந்த நிலையில் சே குவேரா வின் தாய் தந்தையர் கியூபாவை சுற்றிப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் சென்று சுற்றிப் பார்ப்பதற்கான வாகனங்களை ஏற்பாடு செய்து கொடுத்த சே குவேரா, “இந்த வண்டி வாகனங்களுக்கான வாடகையை நீங்கள் தான் கொடுக்க வேண்டும். அதோடு உங்களுடைய உணவுச் செலவையும் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று சேகுவேரா தெரிவிக்க. அவருடைய தந்தை, “என்னிடம் அவ்வளவு பணம் இல்லை” என்று கூறவே அந்தப் பயணமே ரத்தாகிப் போகிறது. அவ்வளவு ஒரு தீவிரமான கம்யூனிஸ்ட்டாக இருக்கிறார் சே குவேரா. இதுபோல், மனிதர்கள் நினைத்தே பாராத பல தியாகங்கள்….. இது எப்படி? எதனால்? இந்த மனிதனுக்கு மட்டும் இப்படி ஒரு மனது!.
ஆனால், சில மனிதர்கள் இருக்கிறார்கள், யாரும் சாதிக்காததை சாதித்துக் காட்ட வேண்டும், மனிதர்கள் நினைத்தே பாராத பெரும்.. பெரும் அதிசயங்களை நிகழ்த்திக் காட்ட வேண்டும், என்கிற ஆவலாதியும் அவசரமும்….. இன்னும் சிலருக்கு அது ஒரு நோயைப் போலவே தீவிரமாகவே இருக்கிறது, அது ஏன் எதனால்? அது ஒரு மனநோயா? அது போன்றதொரு நோய் தான் சே குவேராவுக்குமா? ஏனெனில், சுகம், தூக்கம், வலி, வேதனை, போதும் என்ற மனது இது எதுவும் இல்லை. சேகுவேரா சராசரி மனிதனும் இல்லை அது ஏன்? அவர் படிக்கின்ற காலத்தில்,
பள்ளியிலும் அவர் சராசரி மாணவர் இல்லை, அவர் உடல் நிலை ஆரோக்கியமும் சராசரியாக இல்லை. ஆனால், சேகுவேராவின் மாணவப் பருவம் எப்படி இருந்தது? அது பல சேட்டைகளும் லீலைகளும் நிறைந்ததாக உள்ளது.
அவர் மூன்றாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் அவனது டீச்சர் மிகவும் கண்டிப்பும் கடுமையும் கொண்டவராக இருந்திருக்கிறார். சேகுவேராவை எப்போதும் அடித்துக் கொண்டே இருந்ததின் காரணமாக. ஒரு நாள் வழக்கம் போல் அடி வாங்க வேண்டி வந்த போது ஆசிரியரை பழி வாங்குவதற்காகவே கால் சட்டைப் பையில் ஒரு செங்கல்லை எடுத்து வைத்துக் கொண்டான்.ஓங்கி அடித்த ஆசிரியரின் கையில் நன்றாக அடிபட்டு விட்டதாம்.
தொடக்கப்பள்ளிக் காலத்தில் சே குவேரா திருத்த முடியாத பிலுக்கனாக இருந்தான். உண்மையில் ஆர்வம் கொண்டிருந்தானா? அல்லது ஊரே அறிந்த தனது நோய் தந்த பாதிப்பிலிருந்து மீழ்வதற்காகவா?, என்று தெரியவில்லை. ஆனால் அதி தீவிரமான போட்டி மனப்பான்மை உள்ளவனாக இருந்தான். பாட்டிலில் இருந்த இங்கை குடிப்பது, மரங்களில் ஏறுவது, குறுக்குக் கம்பிகளை கையால் பிடித்துக் கொண்டு தொங்குவது என்று தன் வயதொத்தவர்களை வாய்ப்பிழக்க வைக்கவும், பெரியவர்களை கவலை கொள்ளவும். சாகசங்களை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதில் பெரு விருப்பம் கொண்டிருந்தாகத் தெரிகிறது. சே குவேராவின் சின்ன வயது சேட்டைகளில் முக்கியமான ஒன்று,
அந்த ஊரில் உள்ள தெரு விளக்குகளை உண்டி கொண்டு உடைப்பது. அல்தாஸ் ஆசியாவின் தெரு விளக்குகளை உடைப்பதில் ஈடுபட்டனர். ஒரு முறை அவனும் அவனது நண்பர்களும், ஒரு எதிரிக் குழுவை பழி வாங்குவதற்காக எதிரியின் வீட்டுக்குள் நுழைந்து, அவர்கள் பெற்றோர் பெருமையாக வைத்திருந்த பியானாவின் வெள்ளையான கந்திகளின் மீது மலம் கழித்து வைத்தனர். இவ்வற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தார் போல், அண்டை வீட்டார் இரவு விருந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக பட்டாசு கொழித்திப் போட்டு அனைவரையும் அரளச் செய்தார்.
இதுபோல் சே குவேராவைப் பற்றி ஒழிவு மறைவின்றி, இதுவரை எந்த நூலிலும் வராத அறிய பல தகவல்கள் இந்நூலில் நிரம்பிக் கிடக்கிறது. அதாவது, இதுவரை வந்த நூல்களில் சேகுவேரா என்றாலே ஒரு நாயக பிம்பம் இருக்கும். சிலவற்றை கூடுதலாகவும் குறைவாகவும் எழுதி இருப்பார்கள். அப்படி எதுவும் இல்லாமல், இந்த நூல் தெளிந்த நீரோடையாக சேகுவேராவின் வாழ்க்கையை நமக்கு தெளிவாக காட்டுகிறது.
1952. எர்னஸ்டோ சே குவேராவின் வாழ்வில் பெறப்போகும் பெரும் மகத்துவத்திற்கான நிகழ்வு ஜூலை 26 இல் கியூபாவில் அரங்கேறத் தொடங்கியிருந்தது. கியூபாவின் கிழக்குப் பகுதி நகரமான சாண்டியாகோவில் மான்கேடா ராணுவ முகாம்களையும் தற்காலிகமாக வீழ்ச்சி அடையச் செய்திருந்தனர்.
சேகுவேரா ஒரு புரட்சி வீரனாக ஆக வேண்டும், என்று லட்சியம் கொண்டு வளரவில்லை. சொல்லப்போனால் அவனுக்கு எந்த விதமான லட்சியமும் இல்லை. தான் என்னவாக வேண்டும், என்னவா ஆகப் போகிறோம், என்ற எண்ணமும் இல்லை. ஆனால், நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்பதே அவரது நீண்ட நாள் விருப்பம். அதன்படி ஒரு நாள் மோட்டார் சைக்கிளில் பயணத்தை தொடங்கினார். வாழ்க்கை முழுவதையுமே பயணத்திலேயே கழிக்க வேண்டும் என்பதே அவரது எண்ணம். முதலில் சொந்த ஊரான அர்ஜென்டினாவை முழுவதுமாக சுற்றி விடுவது. அதன் பிறகு லத்தின் அமெரிக்க நாடுகள். அடுத்து ஆசிய கண்டம், முக்கியமாக சீனாவையும் இந்தியாவையும் சென்று பார்த்து விட வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. பயணங்களின் போது பணத்திற்காகவும் தங்கும் இடத்திற்காகவும் உணவுக்காகவும். அவர் தினந்தோறும் சிரமப்படுகிறார். ஆனால் அந்த அனுபவங்களை அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு, கொண்டாடுகிறார். சில நேரங்களில் அவர் லாரிகளில் பயணம் செய்ய வேண்டிய இருந்தது. அதற்கு பணம் கொடுக்க வேண்டியிருந்ததால், லாரிகளில் மூட்டைகளை ஏற்றி இருக்கும் வேலைகளையும் செய்து இருக்கிறார். அது மட்டுமின்றி, அவரோடு கூடவே பிறந்த ஆஸ்துமா நோயும் அவரை பல நேரங்களில் வறுத்தெடுத்திருக்கிறது. அதையும் சமாளித்து, கிடைத்த வேலையை செய்வது, கிடைத்த இடத்தில் தூங்கி, கிடைத்த உணவை உண்டு அவ்வப்போது கிடைக்கும் சுகமான வாழ்வையும் அனுபவித்துக்கொண்டே அவனது பயணம் தொடர்கிறது.
அவன் எதை நோக்கிப் பறந்தாலும், எந்த இடத்திலே இறங்க வேண்டும் என்று நினைத்தாலும் அது அப்படியே நடந்து விடுவதில்லை. திருமணமும் கூட அப்படித்தான். அவன் அதை எதிர்பார்க்கவே இல்லை. அதில் அவனுக்கு அவசரமும் இல்லை. ஆனால் சே குவேராவின் குழந்தைக்குத்தான் அவசரம். எனவே வேற வழியில்லாமல் அவசர அவசரமாய் ஹில்டாவை திருமணமும் செய்து அவசர அவசரமாய் பிள்ளையையும் பெற்றுக் கொள்கிறார்.
எர்னஸ்டோ சே குவாரா ஒரு கம்யூனிஸ்டா?
எர்னஸ்டோ அனுப்பி வைத்த குவாதமாலா கம்யூனிச அகதிகளின் நடத்தையை, எர்னஸ்டோவின் சகோதரி சிலியா விமர்சித்திருந்தார். அவருக்கு பதில் சொல்லும் வகையில்,சேகுவேரா தன் தாய்க்கு எழுதிய கடிதத்தில் இப்படிச் சொல்கிறார்,
“கம்யூனிஸ்டுகளின் நட்பு உங்களுடையதைப் போல அல்ல. ஆனால் அவர்களுடைய நட்பு சமத்துவமாகவும் உங்களுடையதைக் காட்டிலும் உயர்வாகவும் இருக்கும். அரசு வீழ்ந்த போது குவாதமாலா எப்பேர்ப்பட்ட பலிபீடமானது என்பதை கண்ணால் பார்த்தவன் நான். எல்லோரும் சுயநலத்துடன் தங்களை காத்துக் கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கையில் கம்யூனிஸ்டுகள் மட்டுமே பரஸ்பரம் உறுதியான நம்பிக்கையும் தோழமையும் கொண்டு ஒருங்கிணைந்து மக்களுக்காக பணியாற்றினார்கள். அவர்கள் பெருமதிப்பிற்கு உரியவர்கள் என்று நம்புகிறேன். நான் விரைவில் அவர்கள் கட்சியில் இணைந்து விடுவேன்”
தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதையே சே குவேரா அப்போதுதான் முதன்முதலாக உணர்ந்ததாகத் தெரிகிறது.
அடுத்த கடிதத்தில் சேகுவேரா ஒரு கம்யுனிட்ஸ்ட்டாக ஆகப்போகிறேன் என்று சொன்னதைக் கேட்ட அவருடைய தாயும் தங்கையும் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள். அந்த அதிர்ச்சிக் கடிதத்திற்கு அடுத்த மாத பதில் கடிதத்தில் சே குவேரா இப்படிச் சொல்கிறார்.
“நீங்கள் அச்சப்படும் பாதையை அடைய இரு வழிகள் உண்டு. ஒன்று நேர்மறையாக பொதுவுடைமையின் மீது பெரு நம்பிக்கை கொண்டு அதன் பாதையில் செல்வது. இன்னொன்று எதிர்மறையாக, எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்து பின்பு கம்யூனிசம் தான் விடிவு என்று கண்டு கொள்வது.
நான் இரண்டாவது முறையில் கம்யூனிசத்தின் வழி சென்று பின்பு தான் உணர்கிறேன் தொடக்கத்திலேயே அதனை பின்பற்றி இருக்க வேண்டும் என்பதை” என்று எழுதினார்.
சேகுவேரா சொன்னது போல அவர் முதலிலேயே அவர் கம்யூனிஸ்டாக இல்லை. சிறிது சிறிதாக அவர் கம்யூனிசத்துக்குள் போனார், அவருக்குள் கம்யூனிசம் வந்தது. ஆக அவர் கியுபாவுக்குள் காலடி எடுத்து வைக்கும் முன்னேயே அவர் முழு கம்யூனிஸ்ட்டாக மாறிவிட்டார். அவர் மாறிவிட்டார் என்பதை அவருடைய கடிதமே காட்டுகிறது. அவருடைய தங்கை சிலியாவுக்கு, பிறந்த தன் குழந்தையை நகைச்சுவையாக அறிமுகப்படுத்துகிறார். அந்த நகைச்சுவையிலும் கூட,
“என்னுடைய கம்யூனிஸ ஆன்மா மிகுதியாக வெளிப்பட்டுள்ளது. அவள் பார்ப்பதற்கு மாவோ வைப் போலவே இருக்கிறாள். அதே வழுக்கைத் தலை, கருணை மிகுந்த அதே கண்கள். அவரைப் போலவே சத்தமான கூச்சல்கள். இப்போதைக்கு எடையில் மட்டும் அவரை விட எவ்வளவோ குறைந்தவளாக இருக்கிறாள். காலப்போக்கில் அதையும் சரிக் கட்டி விடுவாள் என்றே நினைக்கிறேன்”
அடி முதல் நுனிவரை சேகுவேரா கம்யூனிசத்தால் நிறைந்து கிடக்கிறார். அப்படி இருப்பதால்தான், குழந்தையை பார்க்கின்ற பார்வையில் கூட, சீனப் புரட்சியாளர் மாவோ சேதுங் தெரிகிறார்.
எர்னெஸ்டோ சே குவேரா சொல்கிறான், “எங்கே அன்பு கண் விழிக்கிறதோ அங்கே ‘நான்’ எனும் கொடிய சர்வாதிகாரம் மடிந்து போகும்” என்கிறான்.
உலகம் முழுவதும், அன்று முதல் இன்று வரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும் ஒரு கேள்வி அது என்ன கேள்வி என்றால்?
முதல் முறையாக சியரா மலையேறி அர்ஜென்டினாவை சேர்ந்த மாசாட்டி என்ற ஒரு பத்திரிக்கையாளன் வருகிறான். இவன் அர்ஜென்டினாவில் இருந்து வரும் முதல் பத்திரிக்கையாளனாவான். சேகுவேராவைக் கண்டு பேட்டி எடுக்க வருகிறான். நீண்ட நாட்களுக்கு பிறகு. புரட்சியும், சே குவேராவும், பிடல் காஸ்ட்ரோவும் உலகப் புகழ் அடைந்திருந்த நேரம். அந்த அர்ஜென்டினா நிருபர் கேட்கிறான்.
“தனக்கு சொந்தமில்லாத வேறொரு நாட்டின் விடுதலைக்காக சே குவேரா ஏன் போராட வேண்டும்”
இந்த கேள்விக்கான பதிலை பெற்று விட வேண்டும் என்று நிருபர் மீண்டும்..மீண்டும் கேட்டுத் துளைக்கிறார். சேகுவேரா மென் புன்னகையோடு பதில் உரைக்கிறார்.
“முதலாவதாக அர்ஜென்டினாவை மட்டுமல்ல அமெரிக்கக் கண்டம் முழுவதையும் எனது தாய் நாடாக எண்ணுகிறேன். மார்டி போன்ற புகழ் வாய்ந்த முன்னோர்கள் வாழ்ந்த நிலத்தில்தான் எனது கொள்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறேன். மேலும், கொடுங்கோன்மையால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் மக்களின் விடுதலைக்காக என்னை முழுவதாக ஒப்புக் கொடுப்பதையும், ரத்தம் சிந்துவதையும் எனக்கு சம்பந்தமில்லாத வேலையாக என்னால் எண்ண முடியவில்லை. கியூபாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலையிடுவதை எந்த நாடும் இதுவரை கண்டிக்கவில்லை. பாடிஸ்டா தன் சொந்த மக்களை கொன்று குவிக்க அமெரிக்கா உதவுவது குறித்து ஒரு யாங்கி பத்திரிக்கையும் எழுதவில்லை. ஆனால் என்னைக் குறித்து ஆயிரம் கேள்விகள் கேட்கிறீர்கள். நான்தான் அந்நியனாகத் தெரிகிறேன். என் உயிரையும் உணர்வையும் கொடுத்து போராளிகளுடன் துணை நின்று அவர்களின் போராட்டத்தில் தலையிட்ட நான் அந்நியனா? கியுபாவின் உள்நாட்டில் வன்முறையை ஊக்குவித்து ஆயுதங்கள் வழங்கிய அவர்கள் அந்நியர்களா? “
இந்தக் கேள்வியாலும் அதற்கு கிடைத்த பதிலாலும், சேகுவேராவின் எண்ணங்களை உலகம் அறிந்து கொண்டது. லத்தின் அமெரிக்க நாடுகளை கொஞ்சம் படித்தறிந்திருந்த சேகுவேரா, அந்த நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யும்போது, அந்த மக்கள் படும் அவதியையும் அமெரிக்கா நாட்டின் ஏகாதிபத்தியம் ஒவ்வொரு நாட்டுக்குள்ளே புகுந்து பொருளாதாரத்தை கொள்ளை அடித்து எடுத்துச் செல்வதையும். அந்த நாட்டு மக்களுக்கு வறுமையை மட்டும் விட்டுச் செல்வதையும் சேகுவேரா நேரில் கண்டிருக்கிறார். அப்போது இதையெல்லாம் எதிர்த்து போராட வேண்டும் என்று மனதில் நினைத்திருக்கிறார். மெக்சிகோ நாட்டுக்குள் வந்த போது, பல நாட்டு போராளிகளையும் சந்தித்திருக்கும் சேகுவேரா, கியுபா நாட்டின் போராளிகள் சிலரை சந்தித்த போது, மற்ற போராளிகளிடம் இல்லாத உணர்ச்சியும் உணர்வும் நம்பிக்கையும் கியூபா போராளிகளிடம் இருப்பதைக் கண்டு ரசிக்கிறார். பிடல் காஸ்ட்ரோவை கண்டபோது, அந்த மனிதரிடம் உள்ள தலைமை பண்பு, வீரம், வெற்றி பெற்று விடுவோம் என்கிறார் பெரும் நம்பிக்கையைக் கண்ட சே குவேரா, உடன் சம்மதிக்கிறார். ஒரு போராளியாக கியூபா புறப்படுகிறார்.
கியூபா மண்ணை தொடுவதற்கே அத்தனை போராட்டம். கியூபா செல்ல தேதி குறித்த அந்த நேரமே போராட்டம் துவங்கி விடுகிறது. மெக்சிகோவிலேயே சேகுவேராவும் பிடல்காஸ்ட்ரோவும் கைது செய்யப்படுகிறார்கள். மாதக்கணக்கில் சிறையில் இருந்து ஒரு வழியாக விடுதலை பெற்று. சிரமப்பட்டு கஷ்ட்டப்பட்டு கப்பல் வாங்கி, பயிற்சி முடித்த, போராளிகளை எல்லாம், கிட்டத்தட்ட ஒரு 100 பேர் கொண்ட பெரும் கூட்டத்தை கப்பலில் ஏற்றி, ஐந்து நாள் என்பது ஏழு நாட்களாகி, ஏழாவது நாளில் கடற்கரையில் கால் வைத்த போது. பாடிஸ்டாவின் ராணுவம் சுற்றி வளைத்துக் கொண்டு, நிலத்திலிருந்தும் வானத்திலிருந்தும் குண்டு மழை பொழிந்தது.
போர் என்றால் என்னவென்று தெரியாத, அறியாத ஒரு கூட்டத்தைத் தான் போராளிகள் என்று பிடல் காஸ்ட்ரோ திரட்டிக் கொண்டு வந்திருந்தார். ஒரு மாதமோ இரண்டு மாதமோ ஆகி இருந்தால் ஓரளவு பயிற்சி எடுத்திருப்பார்கள். ஆனால், கப்பல் பயணம் ஒத்துக்கொள்ளாத பல பேர் வாந்தி எடுத்து காய்ச்சல் கண்டு சரியாக உணவு இன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக அந்தக் கப்பலின் கேப்டன் உடல்நிலை குன்றி கடலில் விழுந்து இறந்து போனான். இப்படி நொந்து நூடுல்ஸாகிப்போன நேரத்தில், கடற்கரையில் இறங்கி ஆசுவாசமாகும் முன்னே துப்பாக்கிச் சூடு என்றால் என்ன செய்வார்கள். தெரியாத நிலம், இந்தப் பக்கம் ஓட வேண்டும் எந்த பக்கம் ஓடக்கூடாது என்று தெரியாமல் ஓடுகிறார்கள். யார் பிழைத்தார்கள்? யார் செத்தார்கள்? யார் பிடிபட்டார்கள். யாரும் எதையும் கவனிக்கவில்லை. ஓடினார்கள், கண்ணும் தெரியாமல் மண்ணும் தெரியாமல் ஓடி ஓடி முடிந்த அளவு ஒழிந்து கொள்கிறார்கள். ஓடும்போது சேகுவேராவின் கழுத்தில் குண்டு பாய்ந்து விடுகிறது. மருத்துவம் பார்ப்பதற்கு மருந்து இல்லை. சேகரித்து வந்த ஆயுதம், மருந்து உணவு அனைத்தும் கப்பலிலேயே போய்விட்டது. அடுத்து அவர்கள் உடுத்திக் கொள்வதற்கு உடையும் இல்லை, உணவும் இல்லை.
யாருக்கு என்ன ஆனது, எத்தனை பேர் பிழைத்தார்கள், எப்படி ஒன்று சேர்கிறார்கள், அவர்கள் எப்படி ஒரு போராளிகளாக செயல்படுகிறார்கள், எத்தனை துரோகிகள், எத்தனை வகையான துன்பங்கள், எத்தனை வகையான மனிதர்கள், அதில் அவ்வப்போது தென்படும் தியாகிகள், வீரர்கள்,கோழைகள், எல்லாம் கடந்து எப்படி வெற்றி பெறுகிறார்கள். என்பது தான் ‘சே குவேரா, ஒரு போராளியின் வாழ்க்கை, இது முதல் நூலாகும் இது 632 பக்கத்தில் நிறைவு பெறுகிறது. மொத்தம் 1301 பக்கங்கள்.
ஜான் லீ ஆண்டர்சன் எழுதியிருக்கிறார். தமிழில் ஜே. தீபலட்சுமி மொழிபெயர்த்து இருக்கிறார். ஆண்டர்சன் எதுவுமே விட்டு விடக் கூடாது என்று அனைத்தையும் அள்ளி திணித்திருக்கிறார். இவ்வளவு பக்கங்கள் தேவை இல்லை இன்னும் கொஞ்சம் சுருக்கமாக எழுதி இருக்கலாம் என்பது எனது கருத்து. ஆனால் கியூபாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும்,லத்தின் அமெரிக்கா நாடுகளிலும், அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளிலும் இந்த நூல் வரவேற்பு பெற்று இருக்கலாம். இங்கே நமக்கு சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ தவிர வேறு எவரும் தெரியாது. சின்னச் சின்ன கதாபாத்திரங்கள், சின்னச் சின்ன சம்பவங்கள். எதையும் விட்டுவிடாமல் பதிவு செய்து இருக்கிறார். ஆகவே பக்கங்கள் அதிகமாகி நமக்கு அனுப்ப தட்டுகிறது. ஆனாலும் ஒரு நூறு நூற்றி அம்பது பக்கங்களுக்கு பின் விறுவிறுப்பாக ஒரு நாவலைப்போல் நகர்கிறது. மொழிபெயர்ப்பாளர் அதனை சுருக்கி எழுத முடியாது என்று நினைக்கிறேன். மொழிபெயர்ப்பு சிறப்பாக உள்ளது. தீபலட்சுமி ஒரு கடினமான வேலையை சிறப்பாக செய்துள்ளார் அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
நூலின் தகவல்கள் :
நூல்: சேகுவேரா ஒரு போராளியின் வாழ்க்கை
எழுத்தாளர் : ஜான் லீ ஆண்டர்சன்
தமிழில்: ஜெ.தீபலட்சுமி
வெழியீடு: பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/che-guevara-oru-poraliyin-vazhkkai/
நூல் அறிமுகம் எழுதியவர் :
பொன் விக்ரம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
சே பற்றிய புத்தகங்களில் இது தனித்துவம் வாய்ந்தது. நிரடலற்ற சரளாமான மொழி பெயர்ப்பு வாசிப்பை சுலபமாக்குகிறது.