பூமிக்கு யார் சொந்தம் ஆசிரியர் பற்றி :
செ.கா உதவி பெறும் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர். இவர் ஈரோடு மாவட்ட TNSF மாவட்ட செயலாளராகவும், அறிவியல் இயக்க செயல்பாடராகவும், சினிமா வாசிப்பு பயணம் ஆகியற்றின் மீது ஆர்வம் உடையவராகவும் இருக்கிறார். டார்வின் பரிணாமக் கொள்கை மக்கள் சந்திப்பு இயக்கத்தை மேற்கொண்டவர். சூழலியல் பரிணாமம் சார்ந்து வெளியாகும் இந்நூல் இவருடைய முதல் கட்டுரை தொகுப்பு.
பூமிக்கு யார் சொந்தம் நூல் பற்றி :
இந்நூலின் கட்டமைப்பை ஒருவகைமைக்குள் அடக்கி நிறுத்தி விட முடியாது . கட்டுரை நேர்காணல் மொழிபெயர்ப்பு இப்படியாக இந்த நிலம் எப்படி கலவையாக இருக்கிறதோ அப்படியே நூலும் கலவையாக வந்துள்ளது.
இப்புத்தகத்தை இரண்டு பகுதியாக பிரித்தால் முதல் பகுதியில் தற்போதுள்ள சூழலில் பல்லுயிர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் பற்றியும் அவை குறித்த அறிவியல் பார்வையும் பற்றி பேசுகிறது. இரண்டாவது பகுதியில் சூழலியல் சிந்தனைகள், சுற்றுச்சூழல் ஆளுமைகள் பற்றி விரிவான தகவல்களைத் தருகிறது.
மனிதர்களைப் போலவே ஏனைய விலங்குகளும் கற்பித்தல் பணியில் ஈடுபடுகின்றது என்பது ஓரளவுக்கு நாம் உற்று நோக்கி கண்டிருந்தாலும் , தரவுகளின் அடிப்படையில் சில விலங்குகளின் கற்றல் கற்பித்தல் பணி செவ்வனே நடைபெறுவதை பதிவு செய்தது வியப்பிற்குரியது. எடுத்துக்காட்டாக பாறை எறும்புகளை எடுத்துக் கொண்டால் அவை பிற எறும்புகளைப் போல தகவல்களை பரிமாறிக் கொள்ள Pheromone பயன்படுத்திக் கொள்ளாமல் தம் இரையைத் தேடி செல்லும் பாதையை ஒரு வரைப்படமாக நினைவில் எடுத்துக் கொள்வதை சொல்லலாம்.
ஒரு இனம் முற்றிலும் அழிந்து போகாத வண்ணம் அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு தேவையான முக்கியமான அறிதலையும் தகவலையும் கடத்துவதற்கு இவ்வாசிரியர்கள் உதவுவதை , வேறு வகைப்பட்ட உயர்ந்த ஆசிரிய விருதுகளின் சிறப்புகளை விட ஒப்பற்றதும் உயர்வானதும் ஆகும்.
“சிவிங்கி மறுஅறிமுகத் திட்டம்” உலகளாவிய அளவில் அதிக முக்கியத்துவம் உடைய செயல் திட்டமாக பார்க்கப்படுகிறது. சிறுத்தைக்கும் சிவிங்கிக்கும் உள்ள வித்தியாசத்தை நமக்கு அளிக்கிறது. கருநிற கண்ணீர் கோடுகள் தான் சிவிங்கிகளின் தனித்த அடையாளம் . ஆனால் இந்த வித்தியாசங்கள் தெரியாமல் பல நாளிதழ்கள் கூட சிறுத்தையின் படங்களை சிவிங்கிகளாக பகிர்வது வருத்தம் தருகிறது என்கிறார் ஆசிரியர்.
சிவிங்கிகளின் இடப்பெயர்ச்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை கூறி , அது வெற்றிகரமாக நடந்தால் உலகிலேயே சிங்கம் புலி சிறுத்தை சிவிங்கி வாழும் (வாழ்ந்த) ஒரே நிலப்பரப்பு *குனோ* தான் என்கின்ற பெருமையை இந்தியா உரிமை கொண்டாடும்.
பருவநிலை மாற்றம் என்று சொன்னாலே மரம் நடுவது மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அதற்கு காரணமானவர்கள் மனிதர்கள் என்று பொத்தாம் பொதுவில் சொல்லி விடுகிறார்கள். அந்த மனிதர்கள் என்பவர்கள் யார் என்பதற்கான தெளிவான விளக்கம் இப்புத்தகத்தில் வரையறுக்கப்படுகிறது.
தெற்கு கென்யாவின், கிளிமாஞ்சாரோ எரிமலையின் பக்கவாட்டில் அமைந்துள்ள “அம்போசெலிதேசிய பூங்கா” அழுகல் வாடை உலக மக்களுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்திருந்தாலும், துளி நீர் கூட இல்லாமல் பாளம் பாளமாக பிளந்த வறண்ட நிலத்தோடு எலும்பும் கூடுமாக வீழ்ந்து கிடக்கின்ற நூற்றுக்கணக்கான உயிரினங்கள் கண்முன்னே காட்சிப் படுத்தி பார்க்க வைக்கிறது.
மனிதர்களால் (முதலாளித்துவம் மற்றும் அரசு) தொடங்கப்படும் சீரழிவிற்கு மனிதர்கள் தானே தீர்வைத் தேட வேண்டும் . இதுபோன்ற இன்னும் பல அவலங்களுக்கும் அழுகல் வாடைகளுக்கும் நாம் சமகால சாட்சியங்களாகத்தான் இருக்கப் போகிறோமா என்ற கேள்விக்கு ஒரு நிமிடமாவது தெளிவான விடை கிடைக்க சிந்திக்க வேண்டும். இவை பல உயிரினங்களின் முற்றொழிப்புக்கு காரணமாக இருக்கிறது. இன்று கிட்டத்தட்ட புவியில் உள்ள 80 லட்சம் வகை உயிரினங்களில் 15 ஆயிரம் வகை சிறப்பினங்கள் முற்றிலும் அழியும் தருவாயில் உள்ளன.
1690 ஆம் ஆண்டில் டோட்டோ பறவைகளில் தொடங்கி 2004 ஆம் ஆண்டில் அழிக்கப்பட்ட ஆலிவ் மரங்கள் வரை முற்றிலும் மனிதர்களால் அழிக்கப்பட்ட உயிரினங்கள் அழிவுறுந்தருவாய் பட்டியலில் உள்ளன.
நவீன மனிதர்களாக பெருமை பீற்றிக் கொள்ளும் நாம் இப்புவியின் வரலாற்றில் சுமார் 0.001 சதவீதத்திற்கும் குறைவான காலம் மட்டுமே வாழ்ந்து இருக்கிறோம். ஆனால் இந்த சிறிய காலத்திற்குள்ளாகவே நமது பூமியை எந்த நிலையில் கொண்டு வந்து நிறுத்திருக்கிறோம் . அழிவின் ஆரம்பத்தில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறோம். நாம் எப்போது என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யப் போகிறோம்? சிந்திப்போம்.
நிலக்கரியின் வரலாற்றை குதிரையின் பரிணாமத்தை எளிதில் ஏற்றுக் கொள்ளும் நாம் நம்முடைய பரிணாமத்தை ஏற்றுக் கொள்ள மறுப்பதும் நியாண்டர்தால் வழியின் தொடர்ச்சிதானே . சார்லஸ் டார்வின் அவர்கள் அன்றைய காலகட்டத்தில் தான் மேற்கொண்ட பீகிள் கப்பல் பயணம் வழியாக “அனைத்து உயிரினங்களும் ஏதோ ஒரு பொதுவான மூதாதையிலிருந்து தோன்றியவை இதில் கடவுளின் பங்கு ஒன்றும் இல்லை” என்று சொன்னார். இன்றைய விஞ்ஞான உலகத்தில் கூட இந்த கருத்தை ஒப்புக் கொள்வோர் இல்லை.
இன்னும் பல அறிவியலாளர்களின் நேர்காணல்கள் , கடல்வாழ் உயிரினங்கள் நெகிழியால் அழியும் பல்வேறு நிலைகள் பற்றிய தகவல் குவியலாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அலைவாய்க்கரையின் ஞாழல் மலர் பேரா. வறீதையாவின் நூல்கள் பல பற்றிய அறிமுகங்களும் நமக்கு இப்புத்தகத்தின் வாயிலாக கிடைக்கின்றன. புத்தகத்தை வாசிப்பதின் மூலம் பூமிக்கு யார் சொந்தம்..? என்ற கேள்விக்கு விடை எளிதாக கிடைக்கும் . ஆனால் மனம் தான் கனத்து விடும்.
நூல் விவரம்:
புத்தகத்தின் பெயர்: பூமிக்கு யார் சொந்தம்? (Boomikku Yar Sontham)
ஆசிரியர் : செ.கா
வெளியிடு: புத்தகக்கடை (Puthagakadai)
விலை : 160
பக்கங்கள் : 123
நூல் அறிமுகம் எழுதியவர்:
✍️பா விமலா தேவி
பட்டுக்கோட்டை
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.