செ.கா. (Che Ka) எழுதிய “பிஸாரோ” (Pizarro) அறிவியல் புனைவு புத்தகம் | Che Ka's Pizarro Tamil Book Review | விஜய் தரணீஸ் | www.bookday.in

செ.கா. (Che Ka) எழுதிய “பிஸாரோ” (Pizarro) அறிவியல் புனைவு – நூல் அறிமுகம்

“பிஸாரோ” (Pizarro) அறிவியல் புனைவு – நூல் அறிமுகம்

ஆசிரியரும் அறிவியல் செயற்பாட்டளருமான செ.கா. (Che Ka) அவர்கள் எழுதிய இப்புத்தகம் (“பிஸாரோ” – Pizarro) கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஈரோட்டில் வெளியிடப்பட்டது. இது ஒரு அறிவியல் புனைவு என்பதாலும் பயணத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதாலும் புத்தக வெளியீட்டின் போதே புத்தகத்தைப் படித்துவிட வேண்டும் என்று வாசிக்கத் தொடங்கினேன்.

பயணம் என்றாலே இயல்பாகவே எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றுதான். ஆனால் அந்தப் பயணத்தின் வழி கற்றலும், கற்றதை கற்பித்தலும் மிக முக்கியமானது. மனித சமூக வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில் அதில் நடந்த பல்வேறு சமூக மாற்றங்களுக்கு பயணங்கள் அடிப்படையாக இருந்துள்ளன. பௌத்தம், கிருத்துவம், இஸ்லாம் போன்ற நிறுவினவிய மதங்களின் பரவலுக்கும் வளர்ச்சிக்கும் பயணம் மிக முக்கியமானதாக இருந்துள்ளது. விடுதலை போராட்டங்களில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதற்கு சேகுவேராவிற்கும் காந்திக்கும் அவர்கள் மேற்கொண்ட நீண்ட நெடிய பயணங்கள் ஆதரவாக இருந்துள்ளன.

இப்படி சமூக மாற்றத்தில் பயணங்கள் முக்கிய பங்கினை வகித்திருந்தாலும் அவை அறிவியலுக்கும் அறிவியலின் வளர்ச்சிக்கும் எவ்வாறு முக்கிய பங்காற்றியுள்ளன என்பதனை ஒரு வரலாற்று அறிவியல் புனைவின் வழியாக சொல்லிச் சென்றுள்ளார் எழுத்தாளர் செ கா. ஆய்வகங்களிலும் நூலகங்களிலும் இருந்து மட்டும் ஒரு அறிவியலாளன் பிறப்பதில்லை. காடு, கடல், மலை ஆகியவற்றின் வழியாக பயணிப்பதும் அப்பயணத்தின் ஊடாக இயற்கை கவனிப்பதும், மக்களிடையே உரையாடுவதும் தான் மக்களுக்கான ஒரு அறிவியாலாளனை உருவாக்குகிறது. அத்தைகைய ஒரு அறிவியாலாளன் தான் மனிதப் பேராசைகளில் இருந்து இயற்கையையும் காப்பாற்றுகிறான் என்பதைத்தான் பிஸா

ரோ நாவலும் அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்டின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது.

இன்றைய ஜெர்மனியும் அன்றைய பிரஸ்யாவை சேர்ந்தவருமான அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட் தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக ஒரு நீண்ட பயணத்தை, அவருடைய நண்பரும் அறிவியாலளருமான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பாண் ப்ளண்ட்டுடன் சேர்ந்து 1799-ல் மேற்கொள்கிறார். தன்னுடைய சொந்த செலவில் இப்பயணத்தை மேற்கொள்ளும் வான் ஹம்போல்ட் அப்போது ஐரோப்பாவில் அதிகாரமிக்க பேரரசாக விளங்கிய ஸ்பெயின் அரசவையின் ஒப்புதலோடும் ஆதரவோடும் இப்பயணத்தைத் தொடங்குகிறார். ஸ்பானிய பேரரசின் அத்தனை கப்பல்களிலும் அதன் பகுதிகளுக்கும் அவர்களின் விருப்பப்படி செயல்பட அவர்களுக்கு முழு உரிமையும் வழங்கப்படுகிறது.

ஜூன் 5, 1799-ல் ஸ்பெயினின் லா கொருனாவில் தொடங்குகிற ஹம்போல்ட்டின் பயணம் ஆகஸ்ட் 1, 1804-ல் பிரான்சின் போர்தோவில் நிறைவடைகிறது. ஐந்து ஆண்டுகள் இரண்டு மாதங்கள் கொண்ட இந்த நீண்ட நெடிய பயணத்தில் ஹம்போல்ட் பல்வேறு பழங்குடி இன மக்களைச் சந்தித்து உரையாடுகிறார். அன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வந்து கொண்டிருந்த முதலாளித்துவம் எப்படி பழங்குடி இன மக்களையும் அவர்களின் நிலத்தையும் பண்பாட்டையும் அழிக்கிறது என்பதை ஒவ்வொரு உரையாடல்களின் வழியாகவும் எழுத்தாளர் நமக்கு இப்புத்தகத்தின் உணர்த்திச் செல்கிறார்.

ஒரினோகோ ஆற்றின் கரையோர காடுகளுக்குள் ஒரு பழங்குடி முதியவர் தன்னுடைய கிளியிடம் அவருடைய தாய் மொழியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறான். அதைப் பார்த்த ஹம்போல்ட் அது குறித்து விசாரிக்கையில் அங்கிருந்த பாதிரியார் கூறுகிறார் “அவன் அத்துரேஸ் பழங்குடி இனத்தவன் அந்த இனத்தில் எஞ்சியிருக்கும் ஒரே மனிதன் இவன்தான்” என்று. தன் இனத்தின் மொழி அழிந்துவிடாமல் இருக்க அவன் அதனை அக்கிளிக்கு சொல்லிக் கொடுத்து அதன் மூலம் தன இனத்து மொழியைக் காப்பற்ற முயல்கிறான் என்பதைப் புரிந்து கொள்கிறார் ஹம்போல்ட்.

நாகரிகத்தின் பெயராலும் இலாப நோக்கத்திற்காகவும் காடுகளையும் அங்குள்ள இயற்கை வளங்களையும் அதைக் காப்பற்றி வருகிற பழங்குடிகளையும் அழித்து ஒழிப்பதையே எல்லாப் பேரரசுகளும் செய்து வந்துள்ளன. பேரரசுகளின் இத்தகைய சுரண்டலையும் புத்தகத்தின் வழியாக சொல்லி செல்கிறார் எழுத்தாளர். மெக்சிகோவின் பழங்குடிகள் அங்குள்ள வெள்ளி சுரங்கங்களில் உள்ளாக்கப்பட்ட சொல்லொனா துயரங்களையும் விவரித்துச் செல்கிறார். அதே போல மெக்சிகோவின் அஸ்டெக் பேரரசையும் அன்டீஸ் மலைத் தொடர்களில் இருந்த இன்கா பேரரசையும் அதன் மக்களையும் ஸ்பானிய பேரரசு அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்தியதை சொல்லி செல்லும் அதே வேளையில் அங்கே மூட நம்பிக்கையின் பெயரால் பெண்கள் சுரண்டப்படுவதையும் பலியிடப்படுவதையும் மிக அழுத்தமாக சொல்லி செல்கிறார்.

பயணத்தின் இறுதியில் அமெரிக்க சுதந்திர பிரகடனத்தை எழுதியவரும் அமெரிக்க அதிபருமான தாமஸ் ஜெபர்சுடன் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார் ஹம்போல்ட். “மனிதர்கள் அனைவரும் சமமாக படைக்கப்பட்டவர்கள்” என்று உங்களது சுதந்திர பிரகடனத்தில் எழுதியுள்ளீர்கள் ஆனால் உங்களது புகையிலை தோட்டத்திலேயே அடிமைகள் இருக்கிறார்களே” என்று அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புகிறார்.

இது ஒரு அறிவியல் புனைவு நாவல். அறிவியலாளரைப் பற்றிய நாவல். ஆனால் புத்தகம் அறிவியலோடு நின்றுவிடாமல் பழங்குடி மக்களின் வாழ்வியல், பண்பாடு, முதலாளித்துவத்தின் வளர்ச்சியால் அவர்கள் அழிவுக்குள்ளாக்கப்படுதல் என அது சமூகத்தையும் பேசி செல்கிறது. மேலும் பயணத்தின் வழியாக இவற்றை சொல்லுவதால் பல்வேறு இன மக்களையும் அவர்களது நிலத்தையும் பண்பாட்டையும் நாம் புரிந்து கொள்ள முடிகிறது. கடற் பயணமும், டெனரிப் தீவின் எரிமலையும், ஒரினோகோ ஆற்றின் கரையோர காடுகளும், அந்தீஸ் மலைத் தொடரின் பனி சிகரங்களும், மெக்சிகோவின் சமவெளி ஏரிகளும் என இப்புத்தகத்தைப் படிக்கின்ற போது பல்வேறு நிலப்பரப்புகளும் அதன் காட்சியமைப்புகளும் நம் கண்ணே விரிந்து செல்கின்றன.

“அறிவியல் என்பது மனித குல விடுதலைக்கானது மட்டுமல்ல, மனித குலத்தின் பேராசையிலிருந்து இந்த ஒட்டுமொத்த இயற்கையையும் விடுவிப்பதுதான் உண்மையான அறிவியலாக இருக்க முடியும்” என்பதையே இந்தப் புத்தகமும் வான் ஹம்போல்ட்டின் வாழ்க்கையும் நமக்குக் கற்றுத் தருகிறது. AI தொழில் நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வந்து கொண்டிருக்கும் இன்றைய கால கட்டத்தில் தமிழில் இதுபோன்ற அறிவியல் புனைவு நூல்கள் மாணவர்களிடையே பரவலாக வாசிப்புக்கு உட்படுத்துவதன் வழியே வளரும் இளம் தலைமுறையினர் அறிவியலோடு சேர்த்து இயற்கையை பாதுக்காக வேண்டியதன் அவசியத்தையும் புரிந்து கொள்வார்கள்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்: “பிஸாரோ” (Pizarro)
ஆசிரியர்:செ.கா. (Che Ka)
வெளியீடு:
சகா பப்ளிகேசன்ஸ் (Saha Publications)
விலை:₹.220
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 வழக்குரைஞர் விஜய் தரணீஸ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Show 1 Comment

1 Comment

  1. பா. அசோக்குமார்

    அருமையான பதிவு. வாழ்த்துகள் செ. கா தோழர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *