சே நீ வாழ்கிறாய்! புத்தக அறிமுகம் – சுபாஷ், இந்திய மாணவர் சங்கம்

சே நீ வாழ்கிறாய்!
 ஏன்  ‘சே’வுக்கு மீண்டும் மீண்டும்  பிறப்பெடுக்கும் ஆபத்தான பழக்கம் உள்ளது?. நினைத்ததை சொன்னதாலா? சொன்னதை செய்ததாலா?     வார்த்தைகளும்,செயல்களும்  வெகு அபூர்வமாகவே ஒன்றுசேரும் இவ்வுலகில் அவன் இத்தனை அசாதாரணமானவனாக திகழ்வதற்கும் இதுதான் காரணமோ? “செயலே சிறந்த சொல்” என்று சொன்ன அப்பெருமகனின் உற்ற தோழன் கலிகா பெரர் உதிர்த்த வார்த்தைகள் இவை. 1848இல் ஜெர்மனியில் இரண்டு நண்பர்கள் மார்க்சும், எங்கல்சும் சத்தமில்லாமல் பாட்டாளி வர்க்க விடுதலை சாசனத்தை படைத்திருந்தனர். நூறாண்டுகள் கழித்து 1953இல் அதேபோல் இரு நண்பர்கள் சேவும், பிடலும் பெருத்த சத்தத்தோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தை நடுநடுங்க வைக்கத் துவங்கியிருந்தனர். அழகிய காதலனா, கவிதை வாசிக்கும் இலக்கியவாதியா, ஊர் சுற்றும் வாலிபனா, ஏழைகளின் தோழனா, ஏகாதிபத்தியத்தின் எதிரியா எந்த வார்த்தைகளுக்குள் அடக்குவது இவனை?. வார்த்தைகளுக்குள் அடங்காதவன் சே! எல்லைகளில்லாதவன் சே! தேசங்கள் கடந்து பரந்த உலகை நேசிப்பவன் சே!!!
மக்களிடம் செல்!!! 
 மாவோ சொன்னார் “மக்களிடம் செல்! மக்களிடம் கற்றுக் கொள்!!” என்று, அதை இந்த எர்னஸ்டோ அறிந்து இருப்பானா? என்று தெரியவில்லை. ஆனால்,அவன் அதைத்தான் செய்தான்! வெறும் எர்னஸ்டோ ராஃபெல் குவேரா டி லா செர்னா ஆகிய அவன் “சே”வாக, உழைப்பாளிகள், ஏழைகளின் தோழனாக மாற வேண்டி மக்களிடமே சென்றான். அர்ஜென்டினா துவங்கி, பொலிவிய காடு மலை ஏறி, பெருவின் ரோடுகளை கடந்து, ஈக்வடாரின் கடல்களைக் கடந்து குவாதமாலாவை அடைந்து அவன் புரட்சிகாரனாக மாறினான். தென்அமெரிக்காவின் ரோடுகளை எர்னஸ்டோவும் கிரானடேவும் சுற்றி வந்தது தான் “மோட்டார் சைக்கிள் டைரி” என்ற பெயரில் 2000ஆம் ஆண்டில் படமாக வந்தது. அப்போது அவன் முழுமையான  “சே” வாக மாறியிருக்கவில்லை. ஓர் ஆண்டு கழித்து தன் நண்பன்  கலிகாவுடன்  லத்தின் அமெரிக்காவை தரைவழி கால்நடையாகவும், ஓட்டை லாரி பேருந்துகளிலும் , நீண்ட ஏரியை சிறிய படகுகளாலும்  கடந்து பொலிவிய புரட்சி அரசாங்கத்தின் துவக்க கால சீர்திருத்தங்களையும், பெரு நாட்டு அரசின் சர்வாதிகார அடக்குமுறைகளையும் , ஈகுவடார் புரட்சியின் சுதந்திர காற்றையும் சுவாசித்தான் எர்னஸ்டோ
விடுதலைப் பயணம்
 தன்னுடைய இரண்டு வயதில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட குழந்தை பருவத்தை வீட்டுக்குள்ளேயே கழித்த எர்னஸ்டோ அடைப்பட்ட நாட்கள் முழுமைக்கும் சேர்த்து விடுபட்ட  பறவையாய் தன் இளமைக் காலம் முழுவதையும் உலக விடுதலைக்கான பயணத்திலேயே கழித்தான். அவன் கால்கள் ஓர் இடத்தில் நிற்கவே இல்லை. பாட்டாளி வர்க்க விடுதலைக்காக அது பயணித்துக் கொண்டே இருந்தது. அவன் சிறு வயது முதலே தன் பெற்றோர்களை போன்று இலக்கியத்தில் நாட்டம் பெற்றவனாகவும், அரசியலில் ஆர்வம் கொண்டவனாகவும் இருந்தான். ஒரு லத்தீன் அமெரிக்க இளைஞனுக்கான அத்தனை குணாம்சங்களையும் கொண்டவனாக வளர  அவன்  தவறவில்லை. நீச்சலில் வித்தகனாக, அர்ஜென்டீனியனுக்கே  உரிய பண்பான சிறந்த கால்பந்து வீரனாக, நல்ல நண்பனாக, காதல் நாயகனாக, முக்கியமாக தன் சிரிப்பை மற்றவர்களுக்கு எளிதில்  கடத்துபவனாக விளங்கினான். மருத்துவப் படிப்பை முடித்த கையோடு கலிகருடன்  தங்கள் பெற்றோர்களுக்கு விடைகொடுத்து தன் வாழ்க்கையே வேறு திசைக்கு மடை மாற்றப்போகும் அந்த நீண்ட நெடும் பயணத்தை தொடங்கினான் எர்னஸ்டோ.
தேசங்களைக் கடந்து…
அவன் சொல்வதெல்லாம், நான் அர்ஜென்டினாவில் பிறந்தேன், அது ஒன்றும் ரகசியம் அல்ல. நான் ஒரு அர்ஜென்டினன்.  ஒரு கியூபன். அதேசமயம் அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகளின் தேசபக்தனாகவும் உணர்கிறேன். தேவைப்பட்டால் யாருடைய வேண்டுகோளும் இன்றி இதில் எந்த ஒரு நாட்டின் விடுதலைக்காகவும் நான் என் உயிரையும் தரவும் சித்தமாக இருக்கிறேன். இந்தப் பண்புதான் என்னவோ அவனை கியூபப் புரட்சி அரசின் கோப்புகளில் கையெழுத்திடும் அமைச்சகனாக அமர விடாமல், பொலிவிய கருப்பின மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி போராடி வீரமரணம் அடைய செய்தது. சொற்ப காசுகளுடன்  வீட்டை விட்டு   வெனிசுலா நோக்கி பயணத்தை கிளப்பிய எர்னஸ்டோவும் கலிகரும் பொலிவியாவில் ஒருமாதம் , பெருவில் ஒரு வாரம்,  ஈகுவடாரில்  ஒரு மாதம் என தங்கி சமூக அரசியல் சூழலை அறிந்து கொண்டனர். நல்ல மதிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்ததால் எர்னஸ்ட்டோவுக்கு  நிறைய பணக்கார நண்பர்கள் உண்டு.
அதேசமயம் ஏழை நண்பர்களும் உண்டு. இருதரப்புக்கும் சம இடம் தர அவன் ஒருபோதும் தவறியதில்லை. அது அவன் பயணத்திலும் தெரிந்தது. பணக்கார பார்ட்டிகளில், விருந்துகளில் கலந்து கொண்டாலும், ஏழை மக்களின் வீடுகளுக்கும் அவன் சென்றான். அவர்களின் கஷ்டத்தை அறிந்தான். அவர்களோடு உண்டான். குறிப்பாக செவ்விந்தியர் என்று அழைக்கப்படும் அமெரிக்க பூர்வகுடிகள் லத்தீன் அமெரிக்க நாடுகளில் விலங்குகள் போல மோசமாக நடத்தப்படுவதை கண்ணுற்று வெம்பினான். பெருவின் மருத்துவமனைகளில் உள்ள தொழு நோயாளிகளுக்கு மருந்துகளைவிட எர்னஸ்டோவின் அரவணைப்பும், அன்பும் அருமருந்தாக தெரிந்தது. அங்குதான் அவன் வாழ்க்கையில் பின்நாட்களில் நீங்கா இடம் பெற்ற வரலாற்றுப் பெயரும் கிடைத்தது. அவன் நண்பன் கலிகர், எர்னஸ்டோ தொழு நோயாளிகளை கட்டி தழுவுவதை கண்டு பயந்தான். ஒருமுறை கலிகர் தொழுநோயாளிகளிடம்  அன்பின்பால் கை குலுக்கி விட்டு வெளியே வந்து தனக்கும் பரவிடுமோ என்று எர்னஸ்டோவிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.அதற்குச் எர்னஸ்டோ சொன்ன வார்த்தைகள். “தொழுநோய் அப்படி பரவும் நோயல்ல,நானும் அப்படி தற்கொலை செய்து கொள்பவன் அல்ல” இது அவன் முதிர்ச்சியையும், அறிவியல் பார்வையையும் காட்டுகிறது.
சே உருவாகிறான்..
இறுதியாக , அவர்கள் ஈகுவடாரை அடைந்து மொத்த பணமும் செலவாகி அங்குதான் அந்த இரு நண்பர்களும் தங்கள் வாழ்க்கையை புரட்டிப்போடும் முடிவுகளை எடுத்தனர். வெனிசுலாவை இலக்காக கொண்டு பயணத்தை துவங்கிய இருவரில் ஒருவன் புரட்சியை நோக்கி குவாதமாலா சென்றான்.  மற்றொருவன் வாழ்க்கையை நோக்கி குயிடோ சென்றான்.  குவாதமாலா சென்றவன் “சே” வாக அறியப்பட்டு பாட்டாளி வர்க்க  விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்தான். குயிடோ சென்றவன் 50 ஆண்டுகளுக்குப் பிறகு எர்னஸ்டோ “சே” வான கதையை இந்த புத்தகம் மூலம் “சே”வின் கோடான கோடி தோழர்களுக்கு சமர்ப்பித்தான். அதுதான் “சே” உருவான கதை என்ற இந்த புத்தகம் .எர்னஸ்ட்டோவுக்கு “சே” என்ற பெயரை கொடுத்த மக்கள் இந்த புத்தகத்தில் தான் ஒளிந்திருக்கிறார்கள். புத்தகத்தைப் படித்து கலிகருடன் உரையாடுங்கள். “சே”வை அறிந்து கொள்ளுங்கள். சேகுவேராவாக வாழ கற்றுக்கொள்ளுங்கள்..
சே வாழ்கிறான்!!!
 
சே உருவான கதை
கார்லோஸ் கலிகா ஃபெரர்
தமிழில்: ச. சுப்பாராவ் 
முதல் பதிப்பு :2009 | மூன்றாம் பதிப்பு:2016
வெளியீடு : பாரதி புத்தகாலயம்