ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “செல்லம்மா…” [நாவல்] – பரிவை சே.குமார்

Bookday Avatar

 

 

 

எழுத்தாளர் தசரதனின் மூன்றாவது (குறு) நாவல் இது. இதற்கு முந்தைய இரண்டு நாவல்களிலும் சிக்கலான களத்தைத்தான் கையில் எடுத்திருப்பார், அவரின் கதைகளை தொடர்ந்து வாசிப்பவன் என்ற முறையில் எனக்கு அவர் எடுக்கும் களங்கள் குறித்த பார்வை உண்டென்றாலும், தனது முன்னுரையில் தசரதனே சிக்கலான களத்தைக் கையில் எடுத்திருப்பது குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

மற்ற நாவல்களைப் போல் இதிலும் சிக்கலான களத்தில்தான் பயணித்திருக்கிறார். ஆம் கற்பனைக்கும் எதார்த்தத்துக்கும் இடையே கதையை நகர்த்தியிருக்கிறார். காதல், திருமணம், முன் ஜென்ம காதலியின் மிரட்டல், பயம் எனக் கதையை விறுவிறுவென நகர்த்திச் செல்கிறார்..

நாயகன் சீனு… தனக்குள் ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்ற பயத்தில் மன அழுத்தம் கொண்டிருப்பதால் இசையின் பக்கமாய் நகர்ந்து, சங்கீத வித்வானாகி, நாகர்கோவிலில் இருந்து சென்னையில் இருக்கும் தனது அக்காவின் வீட்டில் வந்து தங்கிக் கொண்டு பாட்டு வாத்தியாராக வேலை செய்கிறான்.

அவனிடம் படிக்கும் மாணவி வாணிக்கு அவன் மீது காதல் பூப்பூக்கிறது. அந்தப் பூவின் வாசத்தில் சீனுவும் மயங்குகிறான். காதலில் விழுந்து மகிழ்ந்திருக்கும் அவனைப் பிடித்திருக்கும் மன அழுத்தம் இப்போது இன்னும் தீவிரமாக வேலை செய்கிறது, அவனை மிரட்டுகிறது.

அதன் பின்னான நாட்களில் ரயில்வே நிலையத்தில் காத்திருக்கும் போது, வீட்டில் டிவி பார்க்கும் போது, செல்போனில் அழைப்பு வரும்போது என அவனோட இணைந்த எல்லா நிகழ்வுகளிலும் அவனை மிரட்டும் அந்த விளம்பரப் பாடலும் அதைப் பாடுபவளும் இம்சிக்க ஆரம்பிக்கிறார்கள். அந்தப் பாடகி அவன் கன்னம் தொட்டு மறைவதாய் தோன்றுகிறது. கூட இருப்பவர்களுக்கு இது எதுவும் தெரிவதுமில்லை, அவனால் இன்னது எனக்கு நடக்கிறது எனக் கத்தவும் முடியாத அளவுக்கு அவனின் வாயை ஏதோ ஒரு சக்தி கட்டி வைக்கிறது.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிந்த முதல் இரவு அன்று, அவனை அந்த விளம்பரப் பாடலில் வரும் பெண் ஆக்கிரமிக்கிறாள். இனி இரவெல்லாம் நான்தான் உன்னுடன் இருப்பேன். உன் மனைவி பகலில் மட்டுமே உன்னோடு இருப்பாள் என்ற மிரட்டலுடனும் அவனைப் பயமுறுத்துகிறாள்.

அவளின் கதை மெல்ல விரிகிறது. அழகி செல்லம்மாள் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவள். ஊர் ஊராய்ப் போய் பாடி ஆடுவது அவர்களின் தொழில். அவளைக் காதலித்து, குடும்பத்தைப் பிரித்துக் கூட்டி வந்து திருமணம் செய்து சந்தோசமாக வாழ்கிறான் சீனுவின் முற்பிறவியான மாறன்.

இவர்கள் வாழ்வு என்னவாகிறது…?

செல்லம்மா ஏன் மாறனின் மறுபிறவியான சீனுவைத் தேடி வருகிறாள்..?

சீனுவை சித்ரா பௌர்ணமிக்கு என்னுடன் இருந்தால் விட்டு விடுவேன் எனச் சொல்லும் செல்லம்மா அதைச் செய்தாளா..?

செல்லம்மாவின் பிடியில் இருந்து சீனு தப்பித்தானா…?

செல்லம்மாவின் தொந்தரவால் அவனது திருமண வாழ்க்கை என்ன ஆனது?

நாளுக்குநாள் உடலளவிலும் மனதளவிலும் தளர்ந்து கொண்டே போகும் சீனுவின் நிலைதான் என்ன..? என்பதையெல்லாம் விரிவாகச் சொல்லும் சின்னச் சிறிய சற்றே வித்தியாமான குறுநாவல்தான் செல்லம்மா.

சீனு – வாணியின் கதையை விட, மாறன் – செல்லம்மாளின் கதைதான் நாவலுக்கு அழுத்தத்தைக் கொடுக்கிறது. இந்தக் கதை இராஜராஜ சோழன் காலத்தில் நிகழ்வதாய் வரலாற்றுடன் இணைத்துச் சொல்லியிருப்பது சிறப்பு.

தசரதனின் கதைகள் மற்றவர்களின் கதைகளைப் போலச் சாதாரணமாய்ப் பயணிப்பதில்லை. சற்றே வித்தியாசமான களத்தில் எதிர்பாராத நிகழ்வுடன் பயணிக்கும் கதைகளைத்தான் அவர் அதிகம் எழுதுவார், பெரும்பாலும் முதன்மைக் கதாபாத்திரத்தைச் சாகடித்து விடுவதை தனது முதல் இரண்டு நாவல்களிலும் செய்திருப்பார், அதையே இதிலும் செய்துள்ளார்.

கதையை ஆரம்பித்து முடித்த விதம், செல்லம்மாவின் கதையை உள்ளே கொண்டு வந்து நகர்த்திய விதம், அரச பிண்ணனியைக் கதைக்குள் கொண்டு வந்தது என மிகச் சிறப்பாகச் செல்லம்மாவை உயிர்பித்திருக்கிறார்.

செல்லம்மாவின் கதையை இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கலாமே எனத் தோன்றியது. மேலும் சில இடங்களில் இப்படி நடக்குமா எனத் தோன்றினாலும் கற்பனைக் கதை, அதிலும் முன் ஜென்மம் என்பதைக் கற்பனையாகக் கொண்டு செல்லும் போது எப்படிச் சொன்னானும் சிறப்புத்தானே என்ற எண்ணம் ஏற்படும்போது இப்படி நடக்குமா என்ற சந்தேகம் கூட செத்துவிடுகிறது.

82 பக்கங்களுக்குள் இரு வேறு காதல் வாழ்க்கையை – நிகழ்காலக் காதல் மற்றும் முன் ஜென்மக் காதல் – மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

இந்தக் கதையைப் பற்றி தசரதனுடன் பேசும்போது ஒரு நகைச்சுவை நாவலாக எழுத நினைத்த கதை, இப்படி மாறிப் போய்விட்டது என்று சொன்னார். கதையின் முடிவு நகைச்சுவையாய்தான் இருக்கும். அதை முன்னே கொண்டு வந்து கதையை நகைச்சுவையாய் மாற்றியிருந்தார் என்றால் மற்றுமொரு வித்தியாசமான களத்தில் நாம் செல்லம்மாவை வாசித்திருக்கலாம்.

செல்லம்மா வாசிப்பவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்.

குமார்  சேதுபதி 

நூல் : செல்லம்மா [நாவல்]
ஆசிரியர் : தசரதன்
வெளியீடு  : கலக்கல் ட்ரீம்ஸ்
பக்கம் : 82
விலை : ரூ. 88

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

article Arul Narerikkuppam Venugopal Audio ayesha era natarasan Ayesha natarasan bharathi books Bharathi Publications Bharathi puthakalayam bharathi tv BJP Book day Bookday book review bookreview books Books Catalogue books for children catalogue children children story cinema corona virus coronavirus Covid -19 delhi education Era Ramanan Farmers Farmers Protest history India internet classroom interview kavithai Life Love mother Music Music life N.V.Arul narendra modi novel Online education People's Democracy poem Poems Poetries poetry Prof.T.ChandraGuru S.V. Venugopalan science Short Stories Shortstories short story Shortstory Speaking Book story Storytelling competition Suganthi Nadar Synopsis tamil article tamil books tamizh books thamizh books thamizhbooks Translation VeeraMani video web series கவிதை

Red Book Day 2024 in Tamilnadu