“தத்துவ ஆசிரியர்” மா. செல்லாராம் – பா.வீரமணிசென்னைக் காசிமேட்டில் திரௌபதி அம்மன் கோவில் அருகில் வசித்த மாணிக்கம் மற்றும் சௌந்தரம் அம்மாள் ஆகிய இணையருக்குப் பிறந்தவர்தான் (1940) மா.செல்லாராம். செல்லாராமின் தந்தையார் அப்பகுதியில் பேர் பெற்று விளங்கிய சிலருள் ஒருவராவார். அப்பகுதி மக்கள் அவரை பல்லன் செட்டியார் என அழைப்பர். மீன்பிடித் தொழிலில் சிறந்து விளங்கிய அவருக்கு இரு மனைவியர். முதல் மனைவியருக்கு மூன்று ஆண்கள்; இரு பெண்கள். இரண்டாம் மனைவிக்கு ஒரு பெண்; ஒரு ஆண். அந்த ஆணே செல்லாராம். அவருக்கு மூத்தவர் அவருடைய அக்கா மனோரஞ்சிதம் என்ற பெயர் கொண்டவர் . செல்லாராம் அக்காலத்தில் குடும்பச்சூழலாலும், சுற்றுச்சூழலாலும் ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியாத சூழலுக்கு ஆட்பட்டார். பிற்காலத்தில் தம் குறையை உணர்ந்து மெட்ரிக் வகுப்பில் சேர்ந்து படித்தார். அதிலும் அவரால் ஒராண்டுக்கு மேல் படிக்க இயலாமல் போயிற்று. எனினும், மெட்ரிக் வகுப்பில் அவர் படித்தாலும், எப்படியோ அவருக்குக் கணிதத்திலும், ஆங்கில இலக்கியத்திலும் தணியா ஆர்வம் ஏற்பட்டது. இதனால், படிப்படியாக அவற்றில் “விடுதல் அறியா விருப்பினன்” ஆயினார். அவர் மெட்ரிக் படிப்பில் கவனம் செலுத்தித் தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றிருந்தால் அவரது வாழ்க்கை வேறு நிலையில் சென்றிருக்கும். அப்படி சென்றிருந்தால், பொருளாதாரத்தில் அவரது வாழ்க்கை மேம்பட்டிருக்கும். ஆனால், இன்று நமக்குக் கிடைத்துள்ள தொண்டுள்ளம் கொண்ட தோழர் செல்லாராமன் கிடைத்து இருப்பாரா? என்பது ஐயமே.

பள்ளிப் படிப்பிலிருந்து அவர் விடுபட்டுக் கொண்டாலும், கணிதத்திலும், ஆங்கிலத்திலும் பேரார்வம் கொண்டு படிக்கலானார். இடைவிடாது தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார். இந்தப் படிப்பிலும், ஆசிரியர் துணையில்லாமல் தாமே முயன்று முயன்று படித்துத் தம்மையே தமக்கு ஆசிரியராக்கிக் கொண்டார். இப்படித் தாமே படித்து வெற்றி பெறுவது மிக மிகக் கடினம். ஆனால், அதில் செல்லாராமன் வெற்றி பெற்றார். பள்ளிக்குத் தொடர்ந்து செல்லாத செல்லாராமன், தாமே படிக்கும் சுய படிப்பில் செல்லும் இராமனாக மாறிவிட்டார். இவரொரு சுய சிந்தனைக் கொண்ட அறிஞர் (Self thought Scholar). வள்ளலார் கூறுவது போல, ஒரு வகையில் “ஓதாது உணர்ந்த உணர்வாளரே” ஆவர். இது எல்லோருக்கும் வாய்க்காது. ஆனால், இவருக்கு வாய்த்து விட்டது. ஆம், செல்லாராமன் இதில் செல்வராமாக மாறிவிட்டார். அந்த அறிவுச் செல்வத்தின் அடையாளமே இப்போதைய செல்லாராம்.

செல்லாராமின் தந்தையார் இறந்த பிறகு அவருடைய குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தனிக்குடித்தனம் மேற்கொண்டு விட்டனர். முதல் மனைவியரின் பிள்ளைகள் செல்லாராமனிடத்தில் போதிய கவனம் செலுத்தாது விட்டுவிட்டனர். இவருடைய தாயார் சொந்தமாக வியாபாரம் செய்து, தம் இரு குழந்தைகளைக் காப்பாற்றும் நிலைக்கு ஆளானார். அவரது வியாபாரம் நிரந்தரமான வியாபாரமாக இல்லாததால் குடும்பம் நெருக்கடிக்கு ஆளானது. இந்த நெருக்கடியே செல்லாராமனின் தொடர் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. குடும்பத்தினர் உதவியும் செல்லாராமனுக்கும், அவருடைய தாயாருக்கும் கிடைக்காமல் போயிற்று. இதனால் தாயாருக்கும், இவருக்கும் மன உளைச்சல் ஏற்பட்டிருக்கும். மன உளைச்சல் ஏற்பட்டிருந்ததை அவருடைய வாழ்க்கையில் அவ்வப்போது வெளிப்பட்டதை நெருங்கிப் பழகியவர்கள் அறிந்திருக்கிறார்கள். குடும்பத்தினர் உதவியும், போதிய வருவாயும் இல்லாததால் இளமையில் இவருக்குப் பெரும் பணச்சுமை  ஏற்பட்டுள்ளது. உரிய வயதில் இவருக்கு வேலை கிடைக்காததால், மன உளைச்சல் இவருக்கு மேலும் ஏற்பட்டிருக்கக்கூடும். கணிதத்திலும், ஆங்கிலத்திலும் இவர் கருத்துச் செலுத்தியதற்கு அவரது பேரார்வம் மட்டும் காரணம் அன்று. வாழ்க்கையில் ஏற்பட்ட மன உளைச்சலும் காரணமாகும். அந்த மன உளைச்சல் மாற்றுரு (Sublimation) கொண்டு இவரைக் க தத்திலும், ஆங்கிலத்திலும் ஆர்வம் கொள்ளச் செய்துள்ளது எனலாம். எவை , எவ்வாறு இருப்பினும், செல்லாராமனின் சுய வாசிப்பு (Self Study) மிகப் பாராட்டத்தக்கதாகும். இளைஞர்கள் பின்பற்றத்தக்கதாகும்.செல்லாராம் இளைஞராக இருந்த காலம், திராவிட இயக்கம் சென்னையில் எழுச்சிப் பெற்று வளர்ந்த காலம். அக்காலத்தில் அரசியல் உணர்வு எங்கும் பெருகியதுடன், படிப்பகங்களும் நூலகங்களும் பெருகின. அக்காலத்தில் ஊரில் சிறு பகுதிக்குப் பகுதி, மன்றங்களும், வாசக சாலைகளும் இருந்தன. படிக்கும் பழக்கம் சீராகப் பரவிக் கொண்டிருந்த காலம் அக்காலம். பெரும்பான்மையோர் வாசிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்த எழுச்சி செல்லராமனையும் இயக்கி இருக்கக்கூடும். செல்லராம் அந்த இளம் பருவத்திலேயே அரசியலுணர்வு பெறத் தொடங்கிவிட்டார். இந்த அரசியலுணர்வும் அவரை வாசிப்பில் தீராத பற்றுடையவராக ஆக்கியிருக்கும். அக்காலத்தில் எந்நேரத்திலும் அவர் தம் கையில் ஏதாவதொரு புத்தகத்தை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டே இருப்பார். அவர் படித்துக் கொண்டிருக்கும் இடம் படிப்பகமோ, நூலகமோ மட்டுமல்ல; மரத்தடிகளும் சமாதிகளுமே ஆகும். அக்காலத்தில் காசிமேட்டில் நான்கு இடுகாடுகள் இருந்தன. ஒன்று இந்து இடுகாடு; இரண்டாவது முகமதியர் இடுகாடு, அந்த இடுகாட்டிற்குப் பக்கத்தில் இரு கிறிஸ்துவ இடுகாடுகள். முகமதிய இடுகாட்டிலும் கிறிஸ்துவ இடுகாட்டிலும் அப்போது எண்ணற்ற மரங்கள் இருந்தன. அவற்றில் 80% விழுக்காட்டிற்கு மேல் கொன்னை மரங்களே மிகுந்திருந்தன.

இந்து இடுகாட்டில் மரங்கள் கிடையாது. செடிகள் நிறைந்திருக்கும் ஆனால், இறந்தவர்களின் சமாதிகள் நிறைய இருக்கும். இந்தச் சமாதிகள் சற்றுப் பெரிய கட்டமாக இருக்கும். எதிரே கடற்கரை. இந்த இடுகாடு இப்போது கடலில் போய் விட்டது. இப்போது மீன்பிடித் துறைமுகம் இருக்கும் இடமே அன்றைய இந்து இடுகாடு. அப்போது பிணங்களைக் கொளுத்துவது மிக மிகக் குறைவு. அக்காலத்தில் பெரிய சமாதிகளில் உட்கார்ந்து கொண்டு படித்தவர்தான் செல்லாராமன். மரத்தடியில் படித்தது மிக மிகக் குறைவு என்றே சொல்லலாம். காரணம், மரத்தடியில் அப்போது பலர் வந்து உட்காருவர்; விளையாடுவர். அதனால், அவர் அமைதிக்காகச் சமாதியைப் பயன்படுத்திக் கொண்டார் போலும்! சமாதிகளில் உட்கார்ந்து நீண்ட நேரம் படித்ததால் அவரைப் பைத்தியக்காரன் என்று சிலர் நினைத்ததும் உண்டு; கல்லெடுத்து எறிந்ததும் உண்டு. எனினும், அவர் கருமமே கண்ணாயினார் போல படிப்பிலேயே ஆழ்ந்துவிடுவார். அந்தப் பழக்கமே அவரைச் சிறந்த கல்விமானாக வளர்த்தது எனலாம். அவர் கல்விமான் மட்டும் அல்லர். நல்ல கலையுணர்வு நிரம்பிய கலைஞர் கூட.

அக்காலத்தில் திராவிட இயக்க கூட்டங்கள் நிகழும்போது நிகழுவதற்கு முன்னர் இன்னிசை நிகழ்ச்சியோ, நாடக நிகழ்ச்சியோ நடைபெறும். 1958 – ஆண்டுக்கு முன்னர் திராவிட இயக்கக் கூட்டம் நிகழ்வதற்கு முன்னர் மேடையில் இவர் ரத்தக்கண்ணீர் நாடகத்தின் இறுதியில் எம்.ஆர்.ராதா “ஏ, காந்தா” என்று சொல்லிக்கொண்டு நடிப்பதைப் போல இவரும் நடித்துக் காட்டுவார். நன்றாகவே நடித்துக் காட்டுவார். எல்லோரும் ஆரவாரம் செய்து கை தட்டுவார்கள். இரத்தக்கண்ணீர் நாடகத்தை மட்டுமன்றி, கலைஞரின் சாக்ரடீஸ், சேரன் செங்குட்டுவன் நாடகக் காட்சிகளையும் நடித்துக் காட்டுவார். தொடக்கக் காலத்தில் இவர் திராவிட இயக்கச் சார்புடையவர். வடசென்னையில் திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பிய என். ஜீவரத்தினத்தோடு இவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. அவ்வியக்கத்தின் ஈடுபாட்டால் அவர் நெஞ்சில் பதிந்த பகுத்தறிவும், நாத்திகமும், பொதுத் தொண்டும் இன்று வரை கனன்று கொண்டிருக்கின்றன. என்.ஜீவரத்தினம் நோய்வாய்ப்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் இருந்தபோது, அவர் சிலரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். அவர் இறப்பதற்கு மூன்று ம நேரத்திற்கு முன்பாக இது நடந்தது. அப்போது அவர் அழைத்து வருமாறு கூறியது யார் யார் தெரியுமா? அவர் அழைத்தது செல்லாராமன், சிவலிங்கம், வீரம ஆனந்தன் ஆகியோரேயாவர். இப்படி, நாத்திகச் செம்மல் ஜீவரத்தினத்தின் உள்ளத்தில் இடம் பெற்றவர்தான் இவர்.

இவரது கணிதம் மற்றும் ஆங்கில இலக்கியம் ஆர்வம் குறித்து முன்னர் குறிப்பிட்டிருந்தேன். அவற்றில் அவருக்கு இருந்த அறிவைக் குறித்துச் சில நிகழ்வுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும். இவர், தம்மிடம் படிக்க வருபவர்களுக்கு இலவயமாகப் பாடம் நடத்தினாரேயன்றி யாரிடமும், எந்நிலையிலும் கட்டணம் வாங்கியவர் அல்லர். இது அவருக்கொரு சிறப்பு. இவர் பற்பலருக்கு ஆங்கில இலக்கண வகுப்பு எடுத்துள்ளார். இந்த வகுப்பு பலமுறை பல மாதங்களாக தொடர்ந்தன. அப்போது இவரிடம் இரா.ஆனந்தன், வீர அருண், சி.மூர்த்தி, இராசலிங்கம், ம , மதிவாணன் போன்றோர் பாடங் கேட்டுள்ளனர். இவர்களில் இரா.ஆனந்தன், ஆங்கில இலக்கணத்தை மட்டுமன்றி கணிதத்தையும் பாடமாக கேட்டுள்ளார். இரா.ஆனந்தன் பி.எஸ்.சி. பட்டப்படிப்புப் படிக்கும் போது அவருடைய தந்தையார் இராதாகிருட்டிணன் செல்லாராமனை அணுகி, தன் மகனுக்குக் க தப் பயிற்சி அளித்து அவனைத் தேர்வில் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவரும் இரவு, பகல் பாராது அவருக்குக் கணிதப் பயிற்சி அளித்துத் தேர்வில் தேர்வுயடைய செய்துவிட்டார். ஆனந்தனும் தேர்ச்சியடைந்து நல்ல வேலையில் அமர்ந்து விட்டார் . தன் மகனை தேர்ச்சியடைய செய்தால் இராதாகிருஷ்ணன் அதற்கு நன்றியாக, அதுவரை வேலை இல்லாது இருந்த செல்லாராமனைச் சென்னை ஐ.டி.சி கம்பெனியில் (சிகரெட் கம்பெனி) நிரந்தர வேலையில் அமர்த்தினார். அப்போதுதான் செல்லாராமனுக்குச் சற்று பணமுடை நீங்கியது. வாழ்க்கையும் அமைதியாகச் சென்றது. தன்னை வேலையில் அமர்த்திய இராதாகிருஷ்ணனுக்கு நன்றி காட்டும் முறையில் செல்லாராமன் அவருடைய திருவுருவப்படத்தைத் தம் இல்லத்தில் வைத்திருப்பது உளங்கொள்ளத்தக்கது. செய்ந்நன்றியைப் போற்றும் மனிதராகச் செல்லாராமன் விளங்குகிறார். ஏன் பெரியவர் இராதாகிருஷ்ணனும் அப்படித்தான் விளங்கியுள்ளார்.

திராவிட இயக்கம் பின்னர் தேசிய இயக்கம் சார்புடைய செல்லாராம் ஐ.டி.சி யில் சேர்ந்த சில மாதங்களில், அங்கிருந்த தொழிற்சங்கங்களின் செயல்பாட்டால் பொதுவுடமைவாதியாக மாற்றம் பெற்றார். இதனைப் பற்றிப் பின்னர் நோக்குவோம். வேலையில் சேர்வதற்கு முன்னர் இவர் பாடங்களை நடத்திக் கொண்டிருக்கும்போதே இலக்கியத் தொண்டிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரது வாழ்க்கையில் அது ஒரு முக்கியப் பகுதி. காசிமேட்டில் 1967 -ஆம் ஆண்டில் கு.எழிலரசு (திருக்குறள் பேராசிரியர் கு.மோகனராசு) என்பவர் அன்னை கலை இலக்கிய நற்ப மன்றத்தை நிறுவி இலக்கியப் ப யாற்றி வந்தார். அது ஒரு சிறு அவையாகவே இருந்தது. அதில், பா.வீரமணி, பா.சிவலிங்கம், சி.மாயகிருஷ்ணன், இரா.ஆனந்தன், மு.கருணாமூர்த்தி, து.தூயமூர்த்தி, கோவி வாசுதேவன் போன்ற இலக்கிய ஆர்வலர்களை மோகனராசுவிடம் இணைத்து அந்த அவையைப் பேரவையாக மாற்றிய பெருமை இவரையே சாரும். அம்மன்றம் இலக்கியப் பணியில் மட்டுமன்றி, அரசியல், வரலாறு, பொருளியல் போன்ற துறைகளைப் பற்றி எல்லாம் கருத்தரங்குகளை நிகழ்த்த இவரே முன் ஏராக இருந்துள்ளார். இவற்றோடு நில்லாமல், வி.பி.சிந்தன், பி.ஆர்.பரமேஸ்வரன் போன்றோரைக் கொண்டு பலமுறை மார்க்சிய வகுப்புகள் நடத்த காரணமாக இருந்துள்ளார். வடசென்னையில் ஒருவாறு மார்க்சியத்தைப் பரப்புரை செய்ததில் இம்மன்றத்திற்குப் பெரும் பங்கு உண்டு. இவ்வகுப்புகளில் பொது அன்பர்கள் மட்டுமல்லாமல், பேராசிரியர்களும், அரசியல்வாதிகளும் கூடக் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாகப் பேரா. ந.சஞ்சீவி, பேரா. சி.பாலசுப்பிரம யன், அவ்வை நடராசன், சிலம்பொலி செல்லப்பன், குமரி ஆனந்தன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டுள்ளனர். இலக்கிய மன்றம், பல துறைகளை விரித்துரைக்கும் பாசறையாக விளங்கியதற்கு இவர் தோன்றாத் துணையாக இருந்துள்ளார். இதுதான் மிக முக்கியமானது.

May be an image of 1 person and indoor

வி.பி.சிந்தனும், பி.ஆர்.பரமேஸ்வரனும் செல்லாராமன் மீது எத்துணை பேரன்பு கொண்டிருந்தனரோ அவ்வாறே பேரா. சஞ்சீவியும், அவ்வை நடராசனும் அவர்பால் பேரன்பு கொண்டிருந்தனர். அவ்வை நடராசன் செல்லாராமனைப் பற்றி வினவும் போது “தத்துவ ஆசிரியர்” செல்லாராமன் நன்றாக இருக்கிறாரா? என்றுதான் வினவுவார். அவர் அப்படி வினவுவதிலிருந்து செல்லாராமனின் தகுதி பாட்டை நாம் உணரலாம். அத்தகுதிக்கு உரியவர்தான் அவர். இங்கு மற்றொன்றை எண்ணிப் பார்க்கவேண்டும். அதனை எண் ப் பார்த்தால்தான் அவரது உண்மையான ஆற்றலை உணர முடியும். அவர் மெட்ரிகுலேஷன் வகுப்பில் ஓராண்டுதான் படித்தார். அவர் ஏற்கனவே ஏழாம் வகுப்பு வரைதான் படித்திருந்தார். இப்பயிருக்க பி.எஸ்.ஸி பட்டப் படிப்புக்கு அவரால் எப்படி கணிதம் பயிற்றுவிக்க முடிந்தது? இந்தப் பட்டப் படிப்புக்கு க தம் சொல்லித் தர கணிதத்தில் எம்.எஸ்.ஸி-யாவது தேறியிருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருக்கவேண்டும். இவற்றைச் சரி வரப் பெற்றிருந்தாலும் கணிதத்தைப் பயிற்றுவிப்பதில் வெற்றி பெறுவது கடினம். அதுவும் வித்தகராக விளங்குவது அதனினும் கடினம். அந்த வித்தகம் இருக்கவேண்டுமென்றால் இயல்பான கணித ஆர்வமும், முறையான தொடர் கல்வியும் (Formal Education) மிகுந்த தெளிவும், நல்லாசிரியரும் கிடைக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்தான் கணிதத்தில் வித்தகராக இருக்க முடியும். நல்லாசிரியர் இல்லாமல், தொடர் கல்வி இல்லாமல், ஆசிரியர் பயிற்சி இல்லாமல், நல்லாசிரியர் போதனை இல்லாமல் கணிதத்தை நன்முறையில் போதிப்பவராகவோ, வித்தகராகவோ விளங்க முடியாது. ஆனால் இவையெல்லாம் இல்லாமல் செல்லாராமன் கணிதத்தில் வித்தகராக விளங்கியுள்ளார். அதுதான் வியப்புக்குரியது. இத்துணைச் சிறப்பாக அவர் விளங்க வேண்டுமென்றால், கணிதத்தில் அவர் எவ்வளவு ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் காட்டியிருக்க வேண்டும்? எவ்வளவு உழைத்திருக்க வேண்டும்? அந்த உழைப்பின், சுயமுயற்சியின் அடையாளம்தான் அவர்.

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் – 661. முயற்சி திருவினையாக்கும் -616 -என்றார் வள்ளுவனார். இவற்றிற்கு ஏற்ப அவருக்கு முயற்சியும், சிறந்த வினைதிட்பமும் இருந்ததால்தான், க தத்தில் அவருக்கு வல்லமை ஏற்பட்டது. இந்த ஆற்றல்களைப் பெற வேண்டுமென்றால் அசையாத தன்னம்பிக்கை வேண்டும். இந்தத் தன்னம்பிக்கை இருந்தால்தான் முயற்சியும், வினைத்திட்பமும் வெற்றி பெறும். தன்னம்பிக்கை இல்லையென்றால் எதுவும் சிறக்காது. அதனால்தான் ஆங்கில நாட்டு பேரறிஞர் ஜான்சன் ““Self confidence is the first requisite to take great under takings” என்றார்.

(மகத்தான செயல்களைச் செய்து முடிப்பதற்கு தன்னம்பிக்கையே தேவையானது) இதனைத்தான் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவனார்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின் – 666

என்று மிகச் சிறப்பாகக் கூறினார். தன்னம்பிக்கையில் சிறந்தவர்தான் திண்ணியர். இந்த திண் யர்தான் சாதனைகளை நிகழ்த்தும் வித்தகராக விளங்குவர். இவ்வாறு சுய முயற்சியால், சுய நம்பிக்கையால் வித்தகராக விளங்கியவர்தான் செல்லாராமன்.

நம் காலத்தில் இப்போது அறிவையும், கற்பித்தலையும் வணிகப் பொருளாக மாற்றி விட்டார்கள். அனைத்திற்கும் விலை பேசுகிறார்கள்; விலைக்காக விலை போகிறார்கள். இப்படிப்பட்ட உலகில் செல்லாராமன் எந்தக் காலத்திலும் போதனைக்கு சிறு காசும் வாங்கியதில்லை. முற்காலத்தில் ஆசிரியர்கள் அப்படித்தான் இருந்தார்கள். அந்தக் காலம் போய்விட்டது. நம் காலத்தில் அந்தச் சான்றாண்மையுடன் இருந்தவர்கள், இருப்பவர்கள் மிகச் சிலர். அவர்களில் ஒருவர்தான் செல்லாராமன்.

இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கு மேல் கட்சியில் இருப்பவர். இவரின் இந்த அரிய ஆளுமையை அக்கட்சியில் பெரும்பாலோர் அறியார். அக்கட்சியும் இவரை நன்கு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இவரும் கட்சிக்குத் தம் ஆளுமையைப் புலப்படுத்திக் கொள்ளவில்லை. கட்சியில் அவர் முழு நேரத் தொண்டனாக இருந்தும், இந்தச் சோகம் எப்படியோ தொடர்ந்து விட்டது. தொடர்கிறது.

இங்கு இன்னொன்றையும் சுட்டிக்காட்ட வேண்டியது நம் கடமை. செல்லாராமன் கணிதத்தில் பெற்றிருந்த அறிவைக் காலத்திற்கேற்ப வளர்த்திருக்க வேண்டும். அது முடியாமல் போனது. அதற்குக் காரணம் அவருடைய பொருளாதார முடையும், குடும்பச் சூழலுமே காரணமாகும். அரசியல் வாழ்க்கை அதனை மேலும் குறைத்துவிட்டது. இவற்றைக் கூறுவதற்குக் காரணம் ஆளுமையும், தனித்திறமையும் எவ்வாறெல்லாம் குன்றிப் போய் விடுகிறது என்பதைக் காட்டத்தான். இது மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கட்டும். செல்லாராமனின் கணிதப் பயிற்றுவிக்கு மற்றொரு நிகழ்வையும் இங்குக் காட்டலாம். வடசென்னையில் பல பள்ளிகளுக்குத் தாளாளராக இருந்தவரும் அன்னை கலை இலக்கிய நற்ப மன்றத்தின் தலைவராக இருந்தவருமான அரு. சங்கர் தம் மூத்த மகனான இராசேந்திரன் பொறியியல் படிப்பு சேர்ப்பதற்கு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டி, செல்லாராமனை அவருக்குப் பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். செல்லாராமனும் அந்த மாணவனுக்கு மூன்று மாதப் பயிற்சி அளித்தார். அந்த பயிற்சியினால் அம்மாணவர் நல்ல மதிப்பெண் பெற்று 500-க்கு 480 மதிப்பெண் பெற்றுத் தேறி, பின்னர் பொறியியல் வகுப்பில் சேர்ந்து நன்முறையில் பட்டம் பெற்று இப்போது அமெரிக்காவில் வேதியல் துறையில் விஞ்ஞானியாக இருக்கிறார். இந்தப் பயிற்சிக்கும் அவர் காசு பெறவில்லை. காசு பெறவும் இயலாது. காரணம், அந்த மாணவர் செல்லாராமனின் நெருங்கிய நண்பரான அரு. சங்கரின் மகன்.

கணித ஆசிரியருக்குப் பேச வராது என்பது உலக வழக்கு. அனால் செல்லாராமன் நல்ல பேச்சாளர். கூர்த்த பேச்சாளர். இவரது பேச்சுத் திறன் வளர்வதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒரு காரணம் அன்னை கலை இலக்கிய நற்ப மன்றமும் ஆகும். அவரது பேச்சுத் திறனுக்கு வளர் களமாக இருந்தது அன்னை மன்றமேயாகும். அன்னை மன்றத்தில் அவர் பலமுறை பேசி இருந்தாலும், 1970-க்கு முன்னர் அம்மன்றத்தில் நிகழ்ந்த பட்டிமன்றங்களில் அவர் பேசிய பேச்சுக்கள் மிக பாராட்டத்தக்கவை. அவரது பேச்சில் க த ஆசிரியர்க்கும், தத்துவ ஆசிரியருக்கும் உரிய பகுப்பாய்வு ((Self Study) சிறப்பாக இருக்கும். அவரது பேச்சில் மிகப்குறிப்பிடத்தக்கது அதுதான். இந்தப் பேச்சுத்திறனும், தொண்டுள்ளமும் தான் வடசென்னையில் குறிப்பாக இராயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சிறப்பாகக் கட்டமைக்க முடிந்தது. இராயபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமைக்கு அவர்தான் காரணம். அவரது சுயநலமற்ற தன்மையும், ஆசை பாசமற்ற தன்மையும், உண்மையும் அதற்குத் துணை நின்றன. இப்பண்புகளால்தான் இராயபுரத்தில் அக்கட்சி வளர்ந்துள்ளது.கட்சி வளர்ச்சிக்காகச் சொந்தப் பந்தங்களுக்கும், எதிர்கட்சிகளின் மிரட்டலுக்கும் , அடிபணியாமல் கட்சியை வளர்த்தெடுத்தார். தி.க. காரர்களையும், திமுக காரர்களையும், அதுவும் குறிப்பாக இளைஞர்களையும் கட்சிக்குக் கொண்டு வந்த பெருமை இவரையே சாரும். கட்சிகளுக்கு ஆட்களை கொண்டு வருவதில் இவர் மிக வல்லவர். கைதேர்ந்தவர். இப்போது ராயபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இளைஞர்களில் பெரும்பாலோர் இவரால் சேர்க்கப்பட்டவர்ளே ஆவர். இராயபுரத்தில் இப்போது இராதாகிருஷ்ணன் தொகுதியிலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் சங்க அலுவலகம் ஏற்படுவதற்கும், அது சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பெயரில் அமைவதற்கும், இப்போது இரண்டடுக்கு கட்டடமாக அமைவதற்கும் மூலகாரணமாக இருந்தவர் இவர். கட்சி வளர்ச்சிக்காக தம்மைச் சுருக்கிக் கொண்டவர். ஐ.டி.சி கம்பெனியில் 30 ஆண்டுகாலம் (1968 – 1998) பணிபுரிந்தவர். பணிக்காலத்தில் எந்தப் பழிக்கும் ஆளாகாதவர். பணிக்காலத்தில் அங்கு தொழிற்சங்கத்தை வழிநடத்தியவர். தொழிற்சங்கத்தின் முக்கியத்துவத்தைத் தொழிலாளர்களுக்குச் சரிவர உணர்த்தியவர். அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தியவர். பணிக்காலத்தில் சங்கப் பணியும், கட்சிப்பணியுமே இவரது இரு கண்களாக விளங்கின. இவருக்கு மூன்று பெண் மக்கள். அவர்களில் இருவரைக் கட்சி ஊழியர்களுக்கே திருமணம் செய்து கொடுத்தார். நண்பர்களிடத்திலிருந்து நல்ல நூல்களைப் பெற்று கட்சி அலுவலத்தில் நல்ல நூலகத்தை அமைத்தார்.

வடசென்னையில் எந்தக் கட்சி அலுவலத்திலும் அதுபோல நூலகம் இல்லை. இப்போது அந்த நூலகமும் அந்த அலுவலகத்தில் இல்லை. இது மிக சோகமானது.
10.09.1982 – அன்று விநாயகபுரத்தில் தோழர் இ.எம்.எஸ் அவர்களைக் கொண்டு கொடியேற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சங்கத்தை நிறுவ மூலவராக இருந்தவர். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின் கட்சியின் முழுநேர ஊழியராகப் ப புரிந்தார். 1999-ஆம் ஆண்டில் காசிமேட்டில் மாநகராட்சித் தேர்தலுக்காக வேட்பாளராக நிறுத்தப் பெற்றார். மற்ற கட்சிகளின் பணபலத்தாலும், அதிகார பலத்தாலும் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். எனினும் துவளாது தொடர்ந்து கட்சிப் பணியாற்றினார் . ஆற்றிக் கொண்டிருக்கிறார்.

“தொண்டு செய்வாய்
துறைதோறும் துறைதோறும்
துடித்து எழுந்தே” என்றார் பாரதிதாசன். அந்தப் பாட்டு மொழிக்கு உகந்தவராக விளங்குபவர்தான் இவர். தொண்டறத்தில் இவர் மிகச் சிறந்தவர். தாம் வளர்வதைக் காட்டிலும், மற்றவர்களை வளர்ப்பதிலேதான் இவர் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இப்பண்பு இவரது தொடக்ககால ஆசிரியப் பணியின் காரணமாக நிகழ்ந்திருக்கலாம். ஆசிரியர்கள் தன்னலம் கருதாது மாணவர்களின் வளர்ச்சிக்காக ஏணியாக இருப்பர். அவர்களை வளர்ப்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கும். இதுதான் ஒர் உண்மை ஆசிரியரின் உயர் பண்பு. ஆசிரியராக இருந்தபோது இப் பண்பைப் பெற்றிருந்த அவர், கட்சிப் பணியிலும் பலருக்கு ஏணியாகவே இருந்துள்ளார். இவர் நேர்மையும் உண்மையும் வாய்த்தவர்; தற்பெருமையோ தற்செறுக்கோ உடையவர் அல்லர். எதிலும் நீதியின் பக்கமே நிற்பவர். சமரசம் செய்து கொள்ளாதவர். சுருங்கக்கூறின் ஒரு கம்யூனிஸ்ட் தொண்டன் எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருந்தவர். இருப்பவர். பலருக்கு ஆசானாக விளங்கியவர். வழிகாட்டி மரமாக விளங்குபவர்.

“our self – made men are the glory
of our institutions”

-Wendell Philips

சுய செயல்திறன் கொண்டோரே நிறுவனங்களுக்குப் புகழ் சேர்க்கிறார்கள் என்றார் மேலை நாட்டுச்சிந்தனையாளரான வெண்டல் பிலிப். இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்தான் செல்லாராமன். “இராமன் எத்தனை இராமனடி” என்றார் கவியரசு கண்ணதாசன். இவர் கோசலை ,ராமன் அல்லன். இவர் ஒரு தனி இராமன். அதாவது தனித் தொண்டன். கம்பர் இராமனை குறித்துக் கூறும்போது

“பொன்னின் முன்னம் ஒளிரும்
பொன்னே! புகழின் புகழே” என்றார். அதாவது, பல பொன்களுக்கு முன்னர் ஒரு பொன் பெரும் ஒளிவீசுவதைப் போல, பல புகழுக்கு இடையில் ஒரு புகழ் சிறந்து விளங்குவது போல், செல்லாராமன் எனும் தொண்டன் பற்பல தொண்டருக்குள் சிறந்த தொண்டராக விளங்குகிறார். காட்சியளிக்கிறார். அவரொரு நற்றொண்டர்.