புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன் – நூல் அறிமுகம்
நூலின் தகவல்கள் :
நூல் : புதுச்சேரி செங்கொடி இயக்கத்தில் தோழர் முருகன்
நூலாசியர்: எஸ்.இராமச்சந்திரன்
விலை : ரூ.275
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : thamizhbooks.com
ஒரு தோழரின் வரலாறு
புதுச்சேரி மாநில பொது வுடைமை இயக்கத்தின் அடையாளங்களில் ஒருவராகத் திகழ்பவர் தோழர் தா.முருகன். அவ ருடைய வாழ்க்கை வரலாற்றை எஸ். இராமச்சந்திரன் நூலாக எழுதி யுள்ளார். “இந்த நூல் தோழர் தா.முருகனின் வாழ்க்கை வரலாறாக அல்லாமல் புதுச்சேரியின் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றையும், 1964-ஆம் ஆண்டுக்குப்பிறகு உரு வான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் வரலாற்றையும் சுருக்கமாக அறிமுகம் செய்யும் நூலாக வெளியாகிறது” என்று கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் ச.தமிழ்செல்வன் எழுதியுள்ள முன்னுரையில் “நள்ளிரவுக் கடைகளின் நாயகன்” என்பது அடையாளம் என்கிறார் தோழர் முருகன். எளிய மக்களின் பிளாட்பாரக் கடைகளை பாதுகாப்பதற்காகக் கட்சித் தலைவர் என்ற முறையில் நடத்திய போராட்டத்தினால் கிடைத்த பெயர் இது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாற்றை இன்னமும் ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில் தோழர் எஸ்.இராமச் சந்திரன் ஆற்றியுள்ள பணி போற்று தலுக்குரியது. கம்யூனிஸ்ட்டுகளின் வாழ்க்கையை ஒரு தனிமனித வரலாறாகக் கருதாமல், இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாகக் கருதி பதிவு செய்வது எதிர்கால தலைமுறையினருக்கு உதவும்.
கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த வரை கூட்டு முடிவு, கூட்டுத் தலைமை என்பதே பிரதானம். எனினும், ஒவ்வொருவரின் தனித்துவமான ஆற்றலும் பங்களிப்பும் வித்தியாசப்படும். அந்த வகையில், புதுச்சேரி தோழர் முருகன் பன்முகத்தன்மை கொண்ட ஒரு போராளி. வெகுஜனத் தன்மையோடு அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தலைவர். கொண்ட கொள்கையிலும், ஏற்றுக் கொண்ட பாதையிலும் தடுமாறா மலும்; தடம் மாறாமலும் பயணிப்பவர்.
புதுவையில் அமைந்துள்ள ஜிப்மர் மருத்துவமனை புதுவை, தமிழக மக்களுக்கு மட்டுமின்றி தென்மாநில மக்கள் அனைவருக்கும் பலனளிக்கக்கூடிய ஒன்றாகத் திகழ்கிறது. அந்த மருத்துவமனையை தனியாருக்குத் தாரை வார்க்க ஒன்றிய அரசு முயற்சித்தபோது மக்களைத் திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் ஒரு வீர காவியம். அந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவர் தோழர் தா.முருகன்.
இந்த நூலில் ஜிப்மர் பாதுகாப்புப் போராட்டம் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இதைப் படித்தால், ஒரு போராட்டத்தை எவ்வாறு தொய்வின்றி தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
பண்டித ஜவஹர்லால் நேரு, தோழர் ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்களது பங்களிப்புடன் தொடங்கிய இந்தியன் காபி ஹவுசை பாதுகாத்ததையும் அங்கே ஒரு தொழிலாளர் சங்கத்தை உருவாக்கி சிஐடியு தலைமையில் இயங்க வைத்ததையும் அதில் முருகனின் பங்களிப்பையும் இந்நூல் விளக்குகிறது.
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை யாரின் பாடல்களை தன்னுடைய உரைகளில் பொருத்தமாக இணைத்துக் கூறுவது தோழர் முருகனின் தனிச் சிறப்பு. இதனால் அவர் இலக்கிய மேடைகளுக்கும் சென்றார். பட்டுக் கோட்டையாரின் புகழ் பாடுகிற வானம்பாடிகளில் ஒருவர் என்பதில் பெருமை கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் பிறந்து வேலை நிமித்தமாக புதுச்சேரிக்குச் சென்ற தோழர் முருகன் அந்த மாநில தொழிலாளர் வர்க்க மற்றும் அரசியல் இயக்கங்களோடு தன்னை நெருக்கமாக பிணைத்துக் கொண்டார்.
தெருமுனைக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, போராட்டக்களங்களாக இருந்தாலும் சரி இவரது குரல் தனித்து ஒலிக்கும் என்பதை இந்நூலில் பல்வேறு அத்தியாயங் களில் எஸ்.இராமச்சந்திரன் விவரித் துள்ளார்.
இந்த நூலுக்கு தோழர் சுதா சுந்தரராமன் வழங்கியுள்ள முன்னுரையில், தோழர்களோடும் அவர்களது குடும்பத்தாரோடும் தோழர் முருகன் எந்தளவு நேசத்தோடும் பாசத் தோடும் பழகுவார் என்பதை பெரு மிதத்தோடு குறிப்பிட்டுள்ளார். அவர், எளிய மக்களின் தோழர். எளிய குடும்பங்களின் நலன் விரும்பி. அனைத்தும் சேர்ந்த அலாதியான கம்யூனிஸ்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.
சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியில்லாமல் அவருடைய குடும்பம் ஒரு சமத்துவபுரமாகவே விளங்குகிறது. தமிழக அரசியலிலிருந்து புதுவை மாநில அரசியல் சற்று வித்தியாசமானது. அதை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த நூல் உதவும்.
இது ஒரு தனி மனிதரின் வரலாறல்ல. தத்துவத்தால் இயக்கப்படும் லட்சக்கணக்கான தொண்டர்களில் ஒருவரான தோழரின் வரலாறு.
நூல் அறிமுகம் எழுதியவர் :
மதுக்கூர் இராமலிங்கம்
நன்றி : தீக்கதிர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.