சென்னப்பட்டின வரலாறு: சென்னப்பட்டணம் - வரலாற்றுப் பதிவுகள் | சென்னை பட்டணம் (Chennai City - Historical Records) | ராமச்சந்திர வைத்தியநாத்

சென்னப்பட்டின வரலாறு – ராமச்சந்திர வைத்தியநாத்

சென்னப்பட்டின வரலாறு

*சென்னப் பட்டணம் – வரலாற்றுப் பதிவுகள் -3*

இவ்வரலாற்றின் ஆசிரியர் குன்றில் குமார் அவர்களே முன்னுரையில் கூறுவதைப் போன்று, பழம் பெருமைகளையும் புது அருமைகளையும் முடிந்த அளவிற்கு திரட்டித் தந்துள்ள விரிவான வித்தியாசமான புத்தகமாகும் இது. சென்னையைச் சார்ந்த அழகு பதிப்பகம் 2012ல் இதன் முதல் பதிப்பை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல்வேறுபட்ட நூல்களை குன்றில் குமார் எழுதிய அனுபவத்தை கொண்டுள்ளதால், அவரது சென்னப்பட்டின வரலாறு வாசிக்கத்தக்க வகையில் லகுவாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டிதொன்றாகும். .

கிட்டத்தட்ட 370 பக்கங்களில் ஆங்கிலேயேயர் வருகைக்கு முன், ஆங்கிலேயேர் வருகைக்கு பின், ஜார்ஜ் கோட்டை, சென்னையில் பஞ்சம், சென்னையில் ஆங்கிலேயேர்கள், சென்னை பெயர்க் காரணங்கள், சென்னை ஆட்சியாளர்கள், அன்றும் இன்றும், முக்கிய இடங்களும் நிகழ்வுகளும், சென்னை திருக்கோயில்கள் சென்னையின் மாமனிதர்கள் எனும் பதினோறு அத்தியாயங்களில் சென்னையின் வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது.

சென்னையும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களும் வரலாற்றுப் பெருமையினை கொண்டிருப்பதும் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர், திருமுல்லைவாயில், திருவான்மியூர், பல்லாவரம் ஆகிய பகுதிகள் பாடல் பெற்ற தலங்களாகவும் தொண்டை மண்டலப் பகுதிகளாகவும் இருந்து வந்ததும் சுருக்கமாகவே முதல் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது, இந்தப் பின்னணியில்தான் வர்த்தக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் கால் பதித்தது என்பதை அறிகிறோம். இது பற்றி குன்றில் குமார் எடுத்துரைக்கிறார்,

ஆங்கிலேயர்கள் மட்டுமே நமது நாட்டைச் சுரண்டியவர்களாக இருந்த போதிலும், இந்திய மக்களை அடிமைகளாக்கி ஆட்சி செய்த போதிலும், வெள்ளையர் கறுப்பர் என்ற பாகுபாட்டினை உருவாக்கி வளர்த்துவிட்ட போதிலும், நம்மவர்களை கொத்தடிமைகளாகப் பல தேசத்திற்கு அவர்கள் கடத்திவிட்டிருந்த போதிலும் சென்னை மாநகரை உருவாக்கிய மிகப் பெரிய சேவையை அவர்கள் செய்துள்ளனர்.

காலனிய ஆட்சி முறையின் நோக்கத்தையும் தேவையையும் நிறைவேற்றுவதற்கு ஓர் அடிப்படையான அதே தருணத்தில் வலுவான கட்டமைப்பின் அவசியத்தை நிர்வாகம் அறிந்து வைத்திருந்ததன் பேரில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டது. கம்பெனி ஆட்சிக்கு மாற்றாக நேரடி ஆட்சி, நிர்வாக முறை, போக்குவரத்து கட்டமைப்புகளை உருவாக்குவது, வர்த்தக மையங்களை நிறுவுவது, இவற்றை கட்டிக் காப்பது போன்றவை அதற்குள் உள்ளடங்கும், இதன் ஒரு பகுதிதான் பல்வேறு கிராமங்களை இணைத்து நகரங்களை உருவாக்குவது அவற்றின் உள் கட்டமைப்பில் அதீத கவனம் செலுத்துவது போன்றவையெல்லாம். இந்த அடிப்படையில் வரையறை செய்கையில்தான் வரலாற்றின் பல்வேறு பக்கங்களையும் நம்மால் ஒருங்கிணைக்க முடியும்.

ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னரே வர்த்தக நோக்கங்களில் பேரில் இங்கே தளங்களை உருவாக்கிக் கொண்ட போர்ச்சுக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்களின் வணிகம் மற்றும் ஆதிக்க நடவடிக்கைகள் இரண்டாவது பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது,

மண் சுவர்களால் கட்டப்பட்ட கோட்டையில் முதன் முதலாக வீடு ஒன்றைக் கட்டிக் குடியமர்ந்தவர் தாமஸ் கிளார்க் என்பதை ஜார்ஜ் கோட்டை பற்றிய அத்தியாயத்தில் அறிகிறோம், கோட்டை பற்பல மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. கோட்டைக்கு வடக்கே உள்ள பகுதி சென்னப்பட்டின (வரலாறு) என்றும், தெற்கே அமைந்திருந்த பகுதி மதராஸ் பட்டணம் என்றும் அழைக்கப்பட்டன என்று குன்றிலார் குறிப்பிடுவதிலிருந்து இரு பட்டணங்களும் ஆதியிலிருந்தே இருந்து வந்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது,

தாமரல வேங்கடபதி நாயக்கர் என்பவர் ஆங்கிலேயே வணிகர்களுக்கு நான்கு சிற்றூர்களைக் கொடுத்ததாக மெக்கன்சியில் கைப்பிரதி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தியை ஆசிரியர் பகிர்ந்து கொள்கிறார்.

மதராஸ் குப்பம் – இங்குதான் ஆங்கிலேயர் கோட்டை ஒன்றைக் கட்டினர். அதுவே மதராஸ் என்ற பெயரால் அழைக்கப்பட காரணமாக இருந்தது. இக்கோட்டைதான் தற்போதைய ஜார்ஜ் கோட்டை. சென்னை குப்பம் – இப்பகுதி பின்னர் முத்தியாலுப்பேட்டை என்று அழைக்கப்பட்டது.
ஆர்.குப்பம் மேலுப்பட்டு – மேற்குப் பகுதியில் இருந்த இடத்தில்தான் அப்போது உப்பு விளைவிக்கப்பட்டது.

எனினும் ஆங்கிலேயே வணிகர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் பற்றிய விவரங்கள் குறித்து திட்டவட்டமான குறிப்புகள் எதுவும் கிடையாது என்பேதே உண்மை
ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, வணிகத்தில் ஏகபோகத்தை கொண்டிட பல்வேறு போர்க்களங்களையும் தந்திரோபாயங்களையும் ஆங்கிலேயேர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அவற்றை குமார் விவரிக்கும் விதமே அலாதியானது.

சென்னை மாகாண பஞ்சங்களை அவர் விரிவாகவே எடுத்துரைக்கிறார். பஞ்சம் மனித உயிர்களை பலிகொண்டதோடன்றி வர்த்தகத்தையும் பெரிதும் பாதித்திருக்கிறது. பின்னரே பஞ்ச நிவாரண நடவடிக்கைகள் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து ஆந்திரம் வரை செல்லக்கூடிய பக்கிங்காம் கால்வாய் உருவாக்கம் என்பது பஞ்ச நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியே.

சென்னையில் ஆங்கிலேயர்கள் என்ற ஐந்தாவது பகுதியில் குடிநீர்த் திட்டம், துறைமுகம் போன்ற பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதையும் மதச் சண்டைகள் நிலவி வந்ததையும் அறிகிறோம்.

பெரும்பாலான சென்னைப் பட்டிண வரலாற்றாசிரியர்கள் சென்னைப்பட்டணம், மதராஸ் பட்டணம் இவற்றுக்கான பெயர்க்காரணத்தை விவரிக்கையில் எந்த முடிவுக்கும் வராமல் போவதுதான் வழக்கமாக உள்ளது, குமாரும் இதில் எது உண்மையானது என்பதை அவரவர்களுக்குத் தோன்றுகிற விதத்தில் எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார். தவிர இதுவரை அறிந்திடாத மற்றொரு தகவலை இங்கே இணைக்கிறார். கோட்டை உருவாவதற்கு முன்னரே இருந்து வந்த காளிகாம்பாளை பின்னர் கோட்டை அம்மன் என்று அழைக்கத் தொடங்கியதாலும் இந்த அம்மனுக்கு செந்தூரம் பூசி வழிபட்டமையால் செம்மை அன்னை என்பது காலப்போக்கில் சுருங்கி சென்னம்மன் என்று ஆகிப் போனதாகவும் இக்காரணத்தை ஏற்றுக் கொள்ளாவிடிலும் இப்படிப்பட்ட ஒன்றை பதிவு செய்வது அவசியம் என்பதன் மூலம், வரலாற்றாசிரியர் என்பதிலிருந்து ஸ்தல புராணீகராக உருமாற்றமடைகிறார்.

சென்னை ஆட்சியாளர்கள் என்ற ஏழாவது அத்தியாயத்தில் ஆண்ட்ரூ கோகனில் தொடங்கி 1948ல் கடைசி ஆங்கிலேயே கவர்னராக இருந்த ஆர்ச்பால்ட் எட்வர்ட் நை அவர்கள் வரையிலான தகவல்களை அறிய முடிகிறது, இதன் தொடர்ச்சியாக இந்திய ஆட்சியாளர்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளது. இது ஒரு வித்தியாசமான மாறுபட்ட முயற்சி என்றே கூறலாம்.

அன்றும் இன்றும் எனும் பகுதியிலும் ஏராளமான தகவல்கள் காணப்படுகிறது. விளக்கேற்றிய வெள்ளையர்கள் என்ற தலைப்பின் கீழ் தெருவிளக்குகளைப் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளது. 1762 வரை சென்னை வீடுகளில் விளக்கெண்ணெய் விளக்குகள் இருந்ததாகவும் வீதிகளில் தெரு விளக்குகள் இல்லையென்றும் கூறும் குமார் பின்னரே தேங்காய் எண்ணெய்க்கு மாறியதும் தெருக்களில் விளக்குகள் எரியத் தொடங்கியதையும் தெரிவிக்கிறார். 1914 வரை மண்ணெண்ணெய் விளக்குகள் ஒளிர்ந்திருக்கின்றன. 1911ல் சென்னையில் 6,269 விளக்குகள் இருந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிப்பதையும் 1914ல் முதன் முதலாக மின் விளக்குகள் 15 இடங்களில் அமைக்கப்பட்டதாகவும் இதன் பொருட்டு 13 லட்ச ரூபாயை அரசு ஒதுக்கியதன் பேரில் 1924ல் 8,297 மின் விளக்குகள் சென்னையில் நிறுவப்பபட்டதையும் அறிகிறோம்.

1905ல் 392மைல் நீளத்திலான கழிவுநீர்க்கால்வாய் அமைக்கப்பட்டதாக இப்பகுதியில் தகவல் தரப்படுகிறது. ஆயின் கேப்டன் ஹெக்டார் டூலாக் 1865லேயே பகுதிவாரியான விவரங்களுடன் பாதாள சாக்கடைக்கான திட்டத்தை வெளியிட்டிருக்கிறார் என்பதோடு இத்தகவல் இணைந்திடவில்லை.

முக்கிய இடங்களும் நிகழ்வுகளும் எனும் பகுதி சென்னைப் பட்டிணத்தின் சுற்றுலாவுக்கான கையேடாகவே அமைந்துள்ளது. இதில் டவ்டன் மாளிகை பற்றிய விவரங்கள் உள்ளது. கூடுதல் விவரங்கள் மேலும் வரலாற்றை விரிவுபடுத்தும். வானிலை ஆய்வுக் கூடத்திற்கு அடுத்த வளாகத்தில் அமைந்துள்ள இந்த டவ்டன் ஹவுசில் காங்கிரஸ் மகாசபையின் 29வது கூட்டம் 1914 டிசம்பர் 28 முதல் 30 வரை நடைபெற்றிருக்கிறது. பின்னரே மகளிர் கிறித்துவக் கல்லூரி அங்கே செயல்படத் துவங்கியுள்ளது.

இதே பகுதியில் தெய்வநாயக முதலியார் பெயரே மருவி தேனாம்பேட்டையாகியது என்று குன்றில் குமார் குறிப்பிட்டுள்ளார். முன்னர் குறிப்பிட்ட டூலாக்கின் புத்தகத்தில் மதராஸின் நிலப்படமொன்று காணப்படுகிறது. மவுண்ட் ரோடையொட்டிய பகுதி வெள்ளாய் தேனாம்பேட்டை என்றும் செனடாப் ரோடையொட்டிய தென்பகுதி பள்ளி தேனாம்பேட்டை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதியாரும் காங்கிரஸ் சரித்திரத்தில் தெய்வநாயகம் பேட்டை என்றுதான் குறிப்பிடுகிறாரேயொழிய சாதியை சுட்டிக்காட்டவில்லை. எனவே இத்தகவல் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமாகும்.

இத்தருணத்தில் இவ்வரலாற்றில் மற்றொன்றையும் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. பெயர்க்காரணங்கள் என்ற பகுதியே அது. இங்கே வரலாறும் ஸ்தலபுராணமும் இணைவதால் புத்தகத்தின் தன்மையே மாற்றமடைகிறது. மாம்லான் என்ற ஆங்கிலேய கலெக்டர் தங்கியருந்தமையால் அல்லது மா அம்பலம் இருந்ததால் மாம்பலம் என்ற பெயர் உருவாகியது என்று காணப்படுகிறது. பல்வேறு ஆங்கிலேயே ஆட்சியாளர்களை வரிசையாகப் பட்டியலிட்ட குன்றில் குமாரே எந்த இடத்திலும் மாம்லான் என்ற பெயரில் எவருமில்லை என்பதை அறியத்தவறிவிட்டார்.

சைதை, கிண்டி, ராயபுரம், தண்டையார்பேட்டை, அமைந்தகரை போன்ற ஊர்களுக்கு ஸ்தலபுராணங்களின் அடிப்படையில் விளக்கமளிப்பது வரலாற்று நூலுக்கு பொருத்தமாக இராது. மாம்பலத்திற்கும் சைதைக்கும் இடைப்பட்ட புதிய பகுதிக்கு பெயர் சூட்டும்படி அன்றைய மாகாண பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தபோது அன்றைய தமிழ் ஆண்டின் அடிப்படையில் நந்தன என்று பெயர் வைத்து அதுவே நந்தனம் என மருவியிருக்கிறது. இப்படி பல ஊர்களின் பெயர்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இதுவே வரலாற்றை முழுமையடையச் செய்யும்.

சென்னையின் மாமனிதர்கள் சென்னையில் வாழ்ந்த பெரும் ஆகிருதிகள் பற்றிய குறிப்புகளாக அமைந்துள்ளது. வாழ்ந்த நகருக்கு மட்டுமின்றி மாகாணத்திற்கே பெருமை சேர்த்த அவர்கள் பற்றிய குறிப்புகள் புத்தகத்திற்கும் பெருமை சேர்ப்பதாகவே உள்ளது.

சென்னப்பட்டின வரலாறு எழுதியவர் :

ராமச்சந்திர வைத்தியநாத்

 

சென்னப்பட்டின வரலாறு தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்:-  மெமரிஸ் ஆஃப் மதராஸ்: சென்னப் பட்டணம் – வரலாற்றுப் பதிவுகள் -2


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *