சென்னப் பட்டணம் – வரலாற்றுப் பதிவுகள் -5
ஹிஸ்டரி ஆஃப் தி ஸிட்டி ஆஃப் மதராஸ் – 5
1939ல் சென்னப்பட்டணத்தின் 300வது ஆண்டினைக் கொண்டாடும்வகையில் பட்டணத்தின் வரலாறு குறித்த ஆய்வுத் தொகுப்பினை வெளியிடும் நோக்கில், மதராஸ் பல்கலைக் கழகத்தின் சார்பில் குழுவொன்று அமைக்கப்பட்டு அதன் செயலாளராக பேராசிரியர் சி.எஸ்.ஸ்ரீனிவாஸாச்சாரியார் செயல்பட்டார். அதே கட்டத்தில் இவரே சென்னைப் பட்டணத்தின் வரலாற்றையும் விரிவாக எழுதியிருந்தார். மதராஸ் பல்கலைக் கழகத்தின் அன்றைய துணைவேந்தர் திவான்பகதூர் எஸ்.இ.ரங்கநாதன் அவர்களின் முன்னுரையுடன் கூடிய இந்த ஆங்கில நூல் சென்னை பதிப்பாளர் பி.வரதாச்சாரி அண்ட் கோவினால் 1939ல் வெளியிடப்பட்டது.
மிகச் சிறந்த வரலாற்றாய்வாளராக விளங்கிய ஸ்ரீனிவாஸாச்சாரியார் அவர்கள் பல்வேறு வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார். சென்னையின் வரலாறு மட்டுமின்றி வாலாஜா பாரம்பரியம் குறித்தும், செஞ்சியின் வரலாறு மற்றும் ஆட்சியாளர்கள் பற்றியும், கர்நாடகத்தில் மராத்தியர்கள் ஆட்சி பற்றியும் இவர் எழுதியவை குறிப்பிடத்தக்கவையாகும். மேலும் “ஆனந்தரங்கம் பிள்ளை பிரெஞ்சு இந்தியாவில் நாட் குறிப்பாளர்” எனும் ஆங்கில புத்தகமொன்றினையும் பின்னாளில் எழுதியுள்ளார். சென்னை அயன்புரத்தில் 30.03.1709ல் பிறந்த ஆனந்தரங்கம் பிள்ளையின் வாழ்வினையும், அவர் எழுதிய நாட்குறிப்புகளையும் விவரமாக எடுத்துச் சொல்லக்கூடிய இப்புத்தகம் அவர் எழுதியவற்றில் மட்டுமின்றி, ஆனந்தரங்கம் பிள்ளை பற்றிய புத்தகங்களிலும் ஆகச் சிறந்தது என்றே கூறமுடியும்.
சென்னப்பட்டணத்தின் வரலாற்றைக்கூறும் புத்தகங்களில் வித்தியாசமான முறையில் யாவரும் வாசிக்கத்தக்க விதத்தில் எளிமையாக ஏராளமான அடிக்குறிப்புகளுடன் வெளியான ஸ்ரீனிவாஸாச்சாரியாரின் புத்தகம் இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்றே கருதுகிறேன், இது ஆச்சரியத்தை அளிப்பதாகவும் உள்ளது. 370 பக்க அளவில் பதினெட்டு அத்தியாயங்களாக பகுக்கப்பட்டு விரிவான சொல்லடைவுடன் படங்கள் மட்டுமின்றி, மதராஸின் பல்வேறு காலகட்ட நிலப்படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.
அவரது புத்தகத்தின் சுருக்கமாக இக்கட்டுரையை கொள்ளலாகாது. பல்வேறு சிறப்பு வாய்ந்த தகவல்களை எடுத்துரைத்து அதனை அறிமுகம் செய்யும் முயற்சியாகவே கொள்ளலாம். 38 பக்கங்களைக் கொண்ட தனது அறிமுக உரையிலேயே சென்னப்பட்டணத்தின் வரலாற்றினை அதன் சிறப்பினை ஸ்ரீனிவாஸாச்சாரியார் முழுமையாக வெளிப்படுத்தி விடுகிறார். தற்போதைய விரிவான நகரமான சென்னை என்பது ஆங்கிலேயர்கள் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தனித்தனியாக பரவலாக இருந்த கிராமங்களின் வடிவில் அமைந்திருந்தது என்று பட்டணத்தின் தோற்றுவாயை உணர்த்தி விடுகிறார். சென்னையின் குறுக்கே நூற்றுக்கணக்கான சிறிய குளங்கள் உள்ளனவென்றும் அவை எவ்விதத்திலும் உபயோகமாக இல்லையென்றும் மலேரியா நுண் கிருமிகளின் இனப்பெருக்கத்திற்கான இடமாக இருக்கிறதென்றும் கூறியுள்ளார். மேலும் வியாசர்பாடி ஏரி, ஸ்பர்டாங்க் ஏரி, நுங்கம்பாக்கம் ஏரி, லாங் டேங்க் எனப்படும் மயிலை ஏரி ஆகியவைகள் நகரின் நீர்த்தேவையை நிறைவேற்றி வருவதையும் அவர் குறிப்பிடுகிறார்.
சென்னப்பட்டணத்தில் மற்றைய மொழிகளைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கு மேலாக தமிழ் மொழி பேசப்பட்டுவருவதையும், ஐந்தில் ஒருவர் தெலுங்கு பேசுபவராக இருப்பதையும் அறிகிறோம். சாதி என்ற அடிப்படையில் வெள்ளாளர், வன்னியர், பலிஜாக்கள், நெசவாளர்கள், வாணியர் மற்றும் ஆதிதிராவிடர்களும் இங்கே உள்ளனர். மற்றைய பகுதிகளைக் காட்டிலும் பிராம்மணர்கள் எண்ணிக்கை பட்டணத்தில் அதிகமாகவே உள்ளது என்பதும் அறியத்தக்கது. இருபதுகளில் நுங்கம்பாக்கம் ஏரி மேடடிக்கப்பட்டு நுங்கம்பாக்கம் பகுதி விரிவுபடுத்தப்பட்டதோடு, லாங் டேங்கின் பகுதியில் தியாகராய நகரும் மவுண்ட் ரோடின் கிழக்குப் பகுதியும் உருவாயிருக்கிறது.
வரலாற்றுக்கு முந்திய கால கட்டங்களின் எச்சங்கள் சென்னைப்பட்டணத்தில் ஏராளமாகவே இருந்ததையும் நாம் அறிகிறோம். பல்லாவரம், கீழ்பாக்கம் பகுதிகளில் பல்வேறு தாழிகளும் இதர தொன்மைவாய்ந்த பொருட்களும் கிடைத்ததிலிருந்து சென்னையை உள்ளடக்கிய பகுதிகளின் தொன்மை வெளிப்படுகிறது. சென்னையின் சுற்றுப்புறத்தில் இருந்து வரக்கூடிய வரலாறு மற்றும் பண்பாட்டியல் அடிப்படையிலான முக்கியத்துவம் என்பது தொடர்ச்சியானதொன்று. தென் இந்தியாவில் இந்துக்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தபின்னர் இது மறைந்துவிடவில்லை என்பதை ஸ்ரீனிவாஸாச்சாரியார் சுட்டிக் காட்டியுள்ளார். மதராஸ் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்னரே அது வெறும் மீனவக் கிராமம் மட்டுமல்ல, மாறாக சமூக வாழ்வின் முக்கியத்துவம் வாய்ந்த கூறுகளை தன்னத்தே கொண்டிருந்ததோடு, பண்பாட்டியலின் மையமாகவும் விளங்கியிருந்ததையும் அவர் எடுத்துரைக்கிறார். சாந்தோம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் போன்ற மதராஸின் சுற்றுப்புற பகுதிகள் இன்றும் தொடர்ந்து மதரீதியிலும் சமூகசெயல்பாடுகளின் பேரிலும் முக்கியத்துவம் வாய்ந்த மையங்களாக விளங்கி வருவதையும் அவர் விவரித்துள்ளார்.
பட்டணம் குறித்த முழுத்தகவல்களையும் அவரது முன்னுரையிலேயே முழுமையாக அறிகிறோம். கவர்னர்களின் சிலைகள், முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள், நகரம் குறித்த தகவல்கள், தொழில் நிறுவனங்கள், இன்றும் புகழ்பெற்ற புத்தகக்கடையாக விளங்கும் ஹிக்கின்பாதம்ஸ் ஆகியவை பற்றிய குறிப்புகள் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன. பூந்தமல்லி சாலை என்பது கோட்டையின் மேற்கில் செயிண்ட் ஜார்ஜ் வாயில் அருகில் துவங்கினாலும் அம்முனையிலிருந்து சென்டிரல் ரயில் நிலையம் வரை ஜெனரல் ஹாஸ்பிடல் சாலையென்றே அழைக்கப்பட்டு வந்திருக்கிறது, மூர் மார்க்கெட் தவிர மெமோரியல் ஹால் அருகில் குஜிலி பஜார் இருந்து வந்ததும் தெரியவருகிறது.
பூந்தமல்லி சாலையில் எழும்பூர் பீரங்கி தொழிற்சாலையொன்று செயல்பட்டு வந்திருக்கிறது, பின்னரே அந்த இடத்தில் கிர்க் என்று அழைக்கப்படும் ஸ்காட்டிஷ் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.
முன்னர் குறிப்பிட்டதைப் போன்று முன்னுரையிலேயே ஒட்டு மொத்த சென்னையின் பண்பாட்டியல் கூறுகளையும் வரலாற்றினையும் அறிகிறோம். அடுத்தடுத்த பதினெட்டு பகுதிகளில் இவற்றினை அவர் விரிவாகவே எடுத்துரைத்துள்ளார், ஏற்கனவே கூறியபடி அதில் முக்கியத்துவம் பெற்றவற்றை நாம் சுருக்கமாக காண்போம்,
1. நிரந்தர இடமொன்றைத் தேடி
இந்தியாவில் 1612ல் மொகலாயர்களின் சூரத் துறைமுகத்தில் ஆங்கிலேயர்களின் கிட்டங்கி முதன் முதலாக உருவாகியது. பின்னர் கிழக்கு கடற்கரையில் மசூலிப்பட்டணத்திலும் அவர்கள் கிட்டங்கிகளை உருவாக்கினர். டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த பழவேற்காட்டிற்கு வடக்கில் 35 மைல்களுக்கு அப்பால் ஆர்மகானில் மற்றொரு தளத்தை உருவாக்கிக் கொண்ட போதிலும், திருப்தி இல்லாமையால் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் உகந்த பாண்டிச்சேரியையொட்டிய கூனிமேட்டைத்தான் கம்பெனியின் நிர்வாகிகளில் ஒருவரான பிரான்சிஸ் டே தேர்வு செய்தார். ஆயின் இறுதியில் தாமர்ல வெங்கடப்பா, பூந்தமல்லி ஐயப்பா அவர்களின் உதவியுடன் சென்னையில் கிழக்கிந்திய கம்பெனி கால்பதித்தது. கோட்டை கட்டுவதற்கு தாமர்ல சகோதரர்கள் உதவி செய்யவில்லை எனினும் தங்கள் தந்தையார் சென்னப்ப நாயகரின் பெயரினை புதிய பகுதிக்கு சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததன் பேரில் சென்னப்பட்டணம் பிறந்தது. சென்னையின் பெயர்க் காரணங்களில் இதையும் ஒன்றாகக் கொள்ளலாம்.
2 அசல் இடமும், குடியேறிய இட மேம்பாடும்
1639ல் சென்னப்பட்டணத்தில் கால் பதிந்த பின்னர் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையின் நிலப்படமொன்று 1733ல் வெளிவந்துள்ளது, அதில் ஏற்கனவே பெறப்பட்ட நிலப்பரப்பினைத் தவிர நரிமேடும் பின்னாளில் கூடுதலாக பெறப்பட்டிருக்கிறது என்பதை அறியலாம். அன்றைய மதராஸ் பட்டணமென்பது நரிமேட்டினை உள்ளடக்கியதாகவும் கோட்டைப் பகுதியையும் தீவுத்திடலையும், வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள துண்டு நிலப்பரப்பினையும் கொண்டிருந்ததாகவே இருந்திருக்கிறது.
முப்பது ஆண்டுகளில் இதே பட்டணம் மூன்று பகுதிகளாக இருந்தது. கோட்டையின் உள் பகுதி, நான்கு மூலையிலும் கொத்தளங்கள், பாதுகாப்பான சுற்றுச் சுவர் இது முதல் பகுதியாகும். கோட்டையின் உட்பகுதிக்கு வெளியே அமைந்திருந்த பகுதி, ஆங்கிலேயர்களின் குடியிருப்பு, இந்தியர் வசிக்கும் நகருக்கு செல்லுவதற்கேற்ப இரு வாயில்களைக் கொண்டு மூன்று பக்கமாய் அமைந்திருந்த வெளிச்சுவர் இது இரண்டாவது பகுதி, வடக்கில் அமைந்திருந்த இந்தியர் நகரம், வாயில்களைக் கொண்ட மண் சுவர் இது மூன்றாவது பகுதியாகும்.
1670-78க்கு இடைப்பட்ட காலத்தில் வெளிநாட்டிலிருந்து பட்டணத்திற்கு வந்த டேனியல் ஹவார்ட் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் சர்ஜன் டாக்டர் ஜான் ஃபிரையர் போன்றோர் எழுதிய குறிப்புகளிலிருந்து அன்றைய பட்டணத்தின் நிலைமையினை தெளிவாகவே அறிய முடிகிறது, சென்னப்பட்டணத்தை சுற்றியுள்ள மயிலை, திருவொற்றியூர், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் சைவ வைணவ ஆலயங்கள் புகழ் பெற்றவையாக விளங்கிய போதிலும் 1652 வரை பட்டணத்தில் ஆலயங்கள் ஏதும் இல்லையென்றே ஆவணப்பதிவுகளில் அறிய முடிகிறது. 1710ல் கவர்னர் பிட் வரைந்த நிலப்படத்தின் வாயிலாக கறுப்பர் நகரில் முத்தியால்பேட்டை, பெத்தநாயக்கன்பேட்டை, கொமர்பேட்டை ஆகிய இடங்களில் பல்வேறு கோயில்கள் கட்டப்பட்டிருப்பது தெரிய வருகிறது. நாகபத்தன், ஆலங்காத்த பிள்ளை, பெரி திம்மண்ணா போன்றோர் இதில் முன் முயற்சியை மேற்கொண்டிருக்கின்றனர்.
3 மதராஸ் மற்றும் குறு நிலங்களின் அதிகாரம்
இக்கடற்கரைப் பகுதி சந்திரகிரி மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் 1645-46 வரை இருந்து வந்தது, அதற்கு முன்னர் நாயக மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது, தாமர்ல சகோதரர்கள் வெங்கடப்பா, அய்யப்பா மற்றும் அங்கா ஆகியோர் காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் எனும் கிராமத்தைச் சார்ந்தவர்களாகும், அதிகாரப் போட்டிக்கும் மோதலுக்கும் பஞ்சம் இல்லாத பகுதியாகவே பட்டணம் இருந்தது.
ஸ்ரீரங்கராயர் கிழக்கிந்திய கம்பெனிக்கு அளித்த சாசனம் அன்றைய வழக்கத்திற்கேற்ப தங்கத் தட்டுகளில் பொறிக்கப்பட்டு அளிக்கப்பட்டிருந்தது, தற்போது இவை ஏதும் இல்லை, பிரெஞ்சுக்காரர்கள் சென்னையின் மீது 1746ல் தாக்குதல் தொடுத்தபோது ஓரிரு தட்டுகளை எடுத்துச் சென்றுவிட்டனர். இது மீட்கப்படவில்லை. மற்றொன்று 1693க்கு முன்னர் கடலில் காணாமல் போயிற்று.
4 மதராஸ்பட்டணம் மற்றும் சென்னப்பட்டணத்தின் பெயருக்கான சாத்தியக்கூறுகள்
ஸ்ரீரங்கராயர் சாசனம் அளித்த போதே புதிய பட்டணம் ஸ்ரீரங்கராயபட்டணம் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளார். ஆனாலும் உள்ளூர் அளவிலான நாயகர் தன்னுடைய தந்தையின் பெயரால் இப்பட்டணம் அழைக்கப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளதாக 1820ல் பதிப்பித்துள்ள இந்தியா பற்றிய தனது புத்தகத்தில் வால்டர் ஹாமில்டன் எழுதியுள்ளதாக ஸ்ரீனிவாஸாச்சாரியார் எடுத்துரைக்கின்றார். 1630-42 வரை இரண்டாவது வெங்கடபதி ராயரிடம் முதலமைச்சராக இருந்த தாமர்ல வெங்கடபதி வட ஆற்காடு ஜில்லாவில் ஏரியொன்றை நிர்மாணித்து தன் தந்தையின் நினைவாக சென்னா சாகரம் என்று பெயர் சூட்டியுள்ளதை சென்னப்பட்டணம் பெயருடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
1639-40ல் ஆங்கிலேயர்களின் குடியேற்றம் உருவாவதற்கு முன்னரே மதராஸ் பட்டணம் இருந்திருக்கிறது என்றும், கோட்டையைச் சுற்றிலும் உருவான புதிய பட்டணத்திற்கு சென்னப்பட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்ற தகவல் தவிர மீனவக் கிராமத்தின் தலைவராக இருந்த கிருஸ்துவர் மதரேசன் கோரிக்கைக்கிணங்க மதராஸ் என்ற பெயர் வந்திருக்கலாம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. பட்டணத்தின் பெயருக்கான காரணங்கள் என்பது எந்த முடிவுக்கும் இட்டுச் செல்லவில்லையென்றாலும் அவை சுவாரசியமாகவே இருக்கிறது.
காலப்போக்கில் சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, கோமளீஸ்வரன்பேட்டை, எழும்பூர், முத்தியால்பேட்டை, நெடும்பாறை, நுங்கம்பாக்கம், பெத்துநாயக்கன்பேட்டை, பெரம்பூர், புரசைவாக்கம், சாந்தோம், தொண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி, வேப்பேரி, வியாசர்பாடி, எருங்குன்றம் ஆகிய பதினாறு சுற்றுக் கிராமங்கள் இணைக்கப்பட்டு மதராஸ் பெயருக்கேற்ப பெரும் பட்டணமாக விரிவடைந்திருக்கிறது.
5. கிழக்கிந்திய கம்பெனி நியமனம் செய்யக்கூடிய ஊழியர்களே பட்டணத்தை நிர்வகித்திருக்கின்றனர். கோகன் மற்றும் டே க்குப் பின்னர் தாமஸ் ஐவி எனும் ஏஜெண்ட் 1644 முதல் 1648 வரை நிர்வாகியாக இருந்திருக்கிறார். 1652 முதல் 1655 வரை நிர்வாகியாக இருந்த ஆரோன் பேக்கர் காலத்தில்தான் பட்டணத்தில் வலங்கை இடங்கை மோதல் முதன் முறையாக உருவாகியிருக்கிறது. தங்களின் வியாபார நடவடிக்கைகளை மேம்படுத்தும் விதத்தில் பட்டணத்தில் புகழ்பெற்ற வணிகர்களை கிழக்கிந்திய கம்பெனி அங்கீகரிப்பது என்பது இதே காலத்தில்தான் உருவாகியிருக்கிறது. அவ்வாறே வெங்கடப்பா பிராமணி அவரது சகோதரர் காணப்பா பிராமணி ஆகியோரும் நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியிருக்கின்றனர், பின்னாளில் புகழ்பெற்ற வீரராகவ பிராமணி வெங்கடப்பாவின் மகனாவார். ஃபாக்ஸ்கி ராஃப்ட்டுக்குப் பின் 1672ல் கவர்னராக பொறுப்பேற்ற லாங்ஹார்ன் காலத்தில்தான் ஆணவங்களை முறைப்படி பாதுகாப்பது என்பது பட்டணத்தில் துவங்கியிருக்கிறது.
1672முதல் 1678வரை மதராஸ் கவர்னராக செயல்பட்ட லாங்ஹார்ன் காலத்தில் காணப்பட்ட முன்னேற்றம் பற்றி 6வது பகுதியிலும், 7ல் கவர்னர்கள் ஸ்டேரேய்ன்ஷாம் மாஸ்டர் மற்றும் கைஃபோர்டு தவிர 8ல் கவர்னர்கள் எலிஹு ஏல் மற்றும் நதானியல் ஹிக்கின்ஸன் ஆகியோரின் நிர்வாகம் குறித்தும் இதே பகுதியில் அந்நாளில் பட்டணம் அடைந்த மேம்பாடு பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறே 9ல் கவர்னர் பிட்டின் நிர்வாகம் குறித்தும் 10ல் அதற்குப் பின் 1711 முதல் 25 வரை இருந்த கவர்னர்களின் வித்தியாசமான நிர்வாக முறையையும் ஸ்ரீனிவாஸாச்சாரியார் விவரமாகவே எழுதியுள்ளார்.
1522க்குப் பின்னர் போர்ச்சுக்கீசியர்களின் ஆளுகைக்குட்பட்டிருந்த சாந்தோம் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக விளங்கி வந்திருக்கிறது, பின்னாளில் அருகாமையில் உள்ள வரலாற்றுப் புகழ் பெற்ற மைலாப்பூருடன் அந்நகர் இணைத்துப் பார்க்கப்பட்டது, சாந்தோமின் முழுமையான பெயர் சான் தோம் டி மெலியபோர் என்பதேயாகும். அங்கிருந்து பழைய தேவாலயம் 1893ல் இடிக்கப்பட்டு 1896ல் தற்போதைய தேவாலயம் உருவாகியிருக்கிறது.
1672 வாக்கில் லாங்ஹார்ன் கவர்னராக இருக்கையில் நவாப் நெக்னம் கான் மதராசின் பொருட்டு சாசனம் ஒன்றை அவருக்கு அளித்திருக்கிறார். “சூரியனும் சந்திரனும் இருக்கும் வரை ஆங்கிலேயர்கள் வாடகையின் அடிப்படையில் இருந்து கொண்டு முழுமையாக எதையும் அனுபவிக்கலாம்” என்ற உத்தரவாதம் அதில் தரப்பட்டிருந்தது. வெங்கடகிரி மன்னர் அளித்த சாசன உத்தரவாதத்தைக் காட்டிலும் பெருமளவில் ஆங்கிலேய வர்த்தகர்களுக்கு சலுகைகள் பல வழங்கப்பட்டிருந்தது, இவ்வாறே 1645ல் ராஜா ஸ்ரீரங்கராயரின் சாசனத்தின்படி சென்னப்பட்டணத்தின் மேற்கில் உள்ள நரிமேடும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்திருக்கிறது.
1678லிருந்து 1681 வரை கவர்னராக இருந்த ஸ்டெய்ன்ஷாம் மாஸ்டர் தனது அன்றாட செயல்பாடுகளை நாட்குறிப்பில் பதிவு செய்திருக்கிறார், இது பின்னர் தொகுக்கப்பட்டு 1911ல் வெளியிடப்பட்டது. இப்பதிவுகளிலிருந்து கூடுதலான விவரங்களை பெற முடிகிறது. 1678ல் தெருக்களை பெருக்குவது முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. தவிர வீடுகளுக்கு வரிவிதிக்கும் ஏற்பாடு துவங்கியிருக்கிறது. ஸ்காவென்ஜர் எனும் தூய்மைப் பணியாளருக்கே வரி வசூலிக்கும் பணி ஒதுக்கப்பட்டிருக்கிறது, வரிவிதிப்புக்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருந்தமையால் இடைக்காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் அமலுக்கு வந்திருக்கிறது.
1683ல் மதராஸ் பட்டணத்தில் அடிமை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இத்தனைக்கும் ஒரு கட்டத்தில் கவர்னர் ஏல் அடிமை வியாபாரத்தில் நிறையவே சம்பாதித்ததாக சொல்லப்படுவதுண்டு.
சென்னப்பட்டணத்தின் கீர்த்தி வாய்ந்த வர்த்தகராக இருந்த வீரண்ணா ஒரு கட்டத்தில் இஸ்லாமியராக மதம் மாறி ஹசன் கான் என்ற பெயரை கொண்டிருக்கிறார். அவர் மரணமுற்ற போது இந்து முறைப்படி சடங்குகள் செய்ய முயற்சிக்கையில் இஸ்லாமியர்கள் தடுத்திருக்கின்றனர். கவர்னரின் குழு அவர் இந்து என்ற முறையில் இறுதிச் சடங்குகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதே தருணத்தில் அவரது கடைசி மனைவியை வீரண்ணாவுடன் சிதையில் வைத்து கொளுத்தும் ஏற்பாடுகள் நடைபெற்றிருக்கின்றன. கவர்னர் இதையும் அனுமதிக்கவில்லை, மதராஸ் அரசாங்கம் சதிக்கு எதிராக துவக்க காலத்திலேயே மேற்கொண்ட நடவடிக்கைகளில் இது ஒன்றாகும் என்கிறார் ஸ்ரீனிவாஸாச்சாரியார்.
1687ல் ஏல் கவர்னரான பின்னர் கோட்டையின் கொத்தளத்தில் கிழக்கிந்திய கம்பெனியின் கொடி இறக்கப்பட்டு, பிரிட்டன் அரசின் யூனியன் ஜாக் கொடி ஏற்றப்பட்டது. நகரின் முக்கியப் பிரமுகர்கள் அத்தருணத்தில் திரளாக குழுமியிருந்தனர். ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது. பல்வேறு கைதிகள் விடுவிக்கப்பட்டனர். சிப்பாய்களின் மகிழ்ச்சி அளவு கடந்த வெள்ளமாக ஓடியது. விருந்தினர்களுக்கு உணவுடன் மாடிய்ரா மற்றும் ஷிராஸ் மது பரிமாறப்பட்டது. நிகழ்ச்சியின் பொருட்டு மன்னருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 31 முறையும், கிழக்கிந்திய நிறுவனத்துக்காக 19 முறையும், இந்நிகழ்ச்சிக்கு அனுமதித்த சர் ஜோசையா சைல்டுக்காக 19 முறையும் குண்டுகள் முழங்கின.
1687 டிசம்பர் 30 அன்றுதான் மதராஸ்பட்டணத்தில் மாநகராட்சியைத் துவக்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. “பொதுவாக கிறிஸ்துவ நகரமான நமது ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் நகரமும், கிழக்கிந்தியாவில் உள்ள சோழமண்டலக் கரையில் உள்ள மதராஸா பட்டணமும், இது தவிர செயிண்ட் ஜார்ஜ் கோட்டையிலிருந்து 10 மைல் தொலைவிற்கு மேம்படாத இதர பகுதிகளும். செயிண்ட் ஜார்ஜ் கோட்டை மற்றும் மதராஸாபட்டண நகர் ஆகியவற்றுக்கான ஒரு மாநகராட்சி மற்றும் மேயர் எனும் பதவி தவிர ஆல்டர்மேன் மற்றும் பர்ஜஸ்ஸஸ் ஆகியவற்றின் கீழ் உள்ளடங்கும்”. இதற்கேற்ப 12 ஆல்டர்மேன்களும், 60 பர்ஜஸ்ஸஸ் என்போரும், கவர்னரின் நிர்வாகக் குழுவில் இரண்டாவதாக இருந்த நதானியல் ஹிக்கின்ஸன் மேயராகவும் நியமனம் செய்யப்பட்டனர். ஆண்டுதோறும் செப்டம்பர் 29 அன்று புதிய மேயரை தேர்வு செய்யும் நடைமுறையும் உருவாகியது.
அன்னாளில் பட்டணத்தில் நிலவிவந்த நாணய முறை வித்தியாசமானதாகவும் மற்ற இடங்களிலிருந்து வேறுபட்டதாகவும் இருந்திருக்கிறது. மாகாணம் முழுமைக்கும் ஒரே மாதிரியான காசு என்று ஒன்று இருந்ததாக தெரியவில்லை. பொதுவாக புழக்கத்தில் இருந்த பகோடா என்பது நிர்ணயிக்கப்பட்ட நாணயமாக இருந்தது, பிரிட்டனின் நாணயம் 8 ஷில்லிங்குக்கு சமானமாக அது இருந்தது. நாணயத்தில் தங்கத்தின் மாற்று என்பது 24 காரட்டைக் காட்டிலும் சற்றே குறைவானதாகும், 53 தான்ய எடை அதாவது வெள்ளி டாலரில் எட்டில் ஒரு பங்கு எடை குறைவானதாக அது இருந்தது. 6 காசு ஒரு பணம், 32 பணம் ஒரு பகோடா என்பது நாணயத்தின் பகுப்புகளாகும். பணம் என்பது தங்க நாணயம் என்றாலும் அதன் மாற்று என்பது கிட்டத்தட்ட 12 ஆக இருந்திருக்கிறது. மொகலாய மன்னர்களின் நிர்வாக முறையைப் போன்றே பிரிட்டிஷாரும் வெள்ளியிலும் தாமிரத்திலும் நாணயங்களை அச்சிட விரும்பினர். கோல்கொண்டா மன்னரிடமிருந்து உரிமையைப் பெற முடியாததினால் 1686ல் பிரகடமொன்றின் வாயிலாக மன்னர் இரண்டாவது ஜேம்ஸ் மூலம் இவற்றை அச்சிடும் உரிமையினைப் பெற்றனர். 1692ல்தான் மொகலாயர்கள், கம்பெனி நிர்வாகம் தங்களின் நிர்ணயிப்புக்கேற்ப நாணயத்தை அச்சிடுவதற்கு அனுமதி வழங்கினர். இதற்கு முன்னர் 1640லேயே சென்னைப்பட்டணத்தில் நாணய சாலை உருவாகிவிட்டது என்பது அறியத்தக்கது.
1692 முதல் 1698 வரை கவர்னராக நதானியல் ஹிக்கின்ஸன் காலத்தில்தான் வர்த்தகர்களின் கூட்டமைப்பின் கீழ் இருந்த பட்டணத்தின் கோயில் நிர்வாகம் அரசினால் ஏற்கப்பட்டது. இதன் பொருட்டு ஓவர்சீயர்களையும் சர்ச் வார்டன்களையும் அரசு நியமித்திருக்கிறது.
ஏற்கனவே மொகலாயரின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வந்த திருவல்லிக்கேணி, எழும்பூர், புரசவாக்கம் மற்றும் தொண்டையார்பேட்டை ஆகிய நான்கு நகரங்கள் 1720ல் அரசால் ஏற்கப்பட்டன.
சென்னை மாகாணத்தின் கவர்னராக தாமஸ் பிட் 1698 முதல் 1709 வரை இருந்த காலம் மதராஸின் பொற்காலமென ஸ்ரீனிவாஸாச்சாரியார் எழுதுகிறார். 1708 அக்டோபர் 5 அன்று வெளியிடப்பட்ட சாசனம் ஒன்றின் பேரில் திருவொற்றியூர், நுங்கம்பாக்கம், வியாசர்பாடி, எண்ணூர் அருகில் உள்ள கத்திவாக்கம் மற்றும் திருவொற்றியூருக்கு மேற்கில் உள்ள சாத்தங்காடு ஆகிய ஐந்து கிராமங்களை ஆங்கிலேய அரசு இனாமாக பெற்றிட்டது.
1707 ஜூன் 26 அன்று பதிவு செய்யப்பட்ட அரசு ஆவணங்களின்படி வலங்கை இடங்கை மோதல் பட்டணத்தில் வெடித்திருக்கிறது. திருமண ஊர்வலப் பாதை சம்பந்தமாக இந்த மோதல் உருவாகியிருக்கிறது. ஒரு பிரிவு வர்த்தகர்களுக்கு அரசு விசேஷ சலுகை வழங்குகிறது என்று மற்றொரு பிரிவு சந்தேகித்ததும் இந்த மோதல்களின் காரணங்களில் ஒன்று என்கிறார் ஸ்ரீனிவாஸாச்சாரியார்.
பிட் கவர்னராக இருக்கும்போதுதான் கள்ளுக்கடைகளும், ஒயின் விற்பனையகங்களும் முறைப்படுத்தப்பட்டு உரிமம் வழங்கும் முறை உருவாகியிருக்கிறது, இதே காலத்தில் சூதாட்ட விடுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு அரசினை எச்சரிப்பதாகவே இருந்திருக்கிறது. தவிர கோழிச் சண்டைப் போட்டிகளுக்கு அரசு பெருமளவில் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதையும் அறிய முடிகிறது, பிட் டுக்குப் பின் பதவியில் இருந்தவர்களைப் பற்றிய 10 வது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. 1716ல் மீண்டும் வலங்கை இடங்கை மோதல் கிளம்பிருக்கிறது. இப்போது இடங்கை செட்டிகள் வலங்கையர் குறித்து கவர்னரிடம் புகார் அளித்தனர். மோதல் முற்றியதும் இடங்கை சார்ந்த கலவை செட்டியும் காளாஸ்திரி செட்டியும் பட்டணத்திலிருந்து வெளியேறி சாந்தோமிற்கு சென்றனர்.
இம்முறையும் மத்யஸ்தம் மேற்கொள்ளப்பட்டது, கோயில் விழாக்களிலும் ஸ்வாமி ஊர்வலத்திலும் சிலுவைக் கொடியைத் தவிர வேறெந்த பதாகையும் எடுத்துச் செல்லலாகாது என்பதும், இடங்கையரோ அல்லது வலங்கையரோ இரு பிரிவினரும் தங்கள் முறைப்படி பட்டணத்து கோயிலில் வழிபாட்டை மேற்கொள்ளலாகாது என்பதும் இந்த மத்யஸ்த உடன்பாட்டின் அம்சங்களாகும்.
1717 வாக்கில் மதராஸில் முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தகர்களாக சுங்குராமா, பாலா செட்டி, கலவை செட்டி, காளாஸ்திரி செட்டி ஆகியோர் விளங்கினர். இதில் சுங்குராமா கோட்டைக்குள்ளே வீடொன்றை வாங்க அனுமதிக்கப்பட்டதோடு கம்பெனியின் பிரதான வர்த்தராகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார். இந்த வீட்டை துணிகள் வைக்கும் கிட்டங்கியாக சுங்குராமா பயன்படுத்தியிருக்கிறார்.
1717 முதல் 1720 வரை கவர்னராக இருந்த காலட் காலத்தில்தான் பட்டணத்தில் பள்ளிக்கூடங்கள் பெருமளவில் திறக்கப்பட்டிருக்கின்றன. 1720ல் நெசவாளர்கள் மற்றும் சாயம் தோய்ப்பவர்களின் பொருட்டு திருவொற்றியூர் அருகில் காலட் பேட்டையை உருவாகியுள்ளது. 104 வீடுகளும் 10 கடைகளும் அங்கே இடம் பெற்றன. தற்போது பெயர் திரிந்து காலாடி (கீழ்த்தரமானோர்) பேட்டை என்றாகி விட்டது என்கிறார் ஸ்ரீனிவாஸாச்சாரியார்.
ஹேஸ்டிங்ஸ் கவர்னராக இருந்தபோது புரசைவாக்கத்தில் ஏரியொன்று சீரமைக்கப்பட்டு பெருமளவில் நெசவாளர்கள் குடியேறியிருக்கின்றனர், அவர்களின் பொருட்டு பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டிருக்கிறது.
பகுதி 11ல் மாநகராட்சி சீரமைப்பு மற்றும் சிந்தாதிரிப்பேட்டை உருவாக்கம் குறித்து விரிவாகவே கூறப்பட்டுள்ளது, ஏற்கனவே சுங்குராமாவிற்கு வழங்கப்பட்ட தோட்டத்திலிருந்து நிர்ப்பந்தமாக நெசவாளர்களுக்கான இந்த கிராமம் ஜார்ஜ் மார்டன் பிட் கவர்னராக இருந்தபோது 1734ல் உருவாக்கப்பட்டது. இந்த தோட்டம் 804 கெஜம் நீளமும் 500 கெஜம் அகலமும் கொண்டதாகும். அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையும், அதில் அவர்கள் கட்டிக் கொண்ட வீடும் அவர்களுக்கே சொந்தமாகியது என்றும் தெருக்களில் சாதிப் பாகுபாடு அங்கே அறவே இல்லையென்றும் ஸ்ரீனிவாஸாச்சாரியார் கூறுவது கவனத்தில் கொள்ள வேண்டியதொன்றாகும். மேலும் அங்கே உள்ளவர்கள் வழக்கு வியாஜ்யம் என்றால் கோர்ட்டுக்கு செல்லாமல் தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், சாதாரண முறையில் வீட்டு வரி தவிர வேறெந்த வரியும் அங்குள்ளவர்களுக்கு விதிக்கப்படவில்லை என்பதும் தெரியவருகிறது.
பகுதி 12ல் 1735 முதல் 1752 வரை மதராஸ் பட்டணத்து நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளது, பட்டணத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் எப்படி ஏன் இணைக்கப்பட்டன என்ற விவரங்களை அறிய முடிகிறது, பகுதி 13ல் (1752 முதல் 1755 வரையிலான காலம்)சாண்டர்ஸ் மற்றும் பிகாட் தவிர அவர்களுக்குப் பின்னர் வந்த கவர்னர்களின் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன, 1750 வாக்கில் பூந்தமல்லியும், சாந்தோமும் முறையே மேற்கு மற்றும் தெற்கில் பட்டணத்தின் பாதுகாப்பு நிலையாக விளங்கின, நவாப்பின் ஆளுகைக்குட்பட்டிருந்த பூந்தமல்லி நாட்டின் ஆண்டு ரெவின்யூ 44,000 பகோடாக்களாகவும் 3,000 பகோடாக்களுக்கு குறைவான ஜாகிர்களை கொண்டதாகவும் இருந்தது. இது 1750ல் கம்பெனிக்கு சொந்தமானது.
பிரெஞ்சுக்காரர்கள் 1758 டிசம்பர் 6 அன்று பெரும் படையுடன் தாக்குதல் நடத்தியபோது எழும்பூர் கோட்டையின் கமாண்டராக இருந்த மேஜர் லாரன்ஸ் அங்கிருந்து ஓடிவிட்டார். நவாப் முகமது அலி கோட்டைக்குள் அடைக்கலம் புகுந்தார். அவரது ஏகப்பட்ட உறவினர்கள் பாதுகாப்பு கருதி டச்சு கப்பல் ஒன்றின் மூலம் நாகப்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
1767ல் ஹைதர் அலி பட்டணத்தின் மீது தாக்குதல் தொடுத்த போது பட்டணமே கதி கலங்கியிருக்கிறது. கவர்மெண்ட் கார்டன் ஹவுசில் இருந்த நவாப்பும், கவர்னரும் தவிர மற்றவர்களும் ஓர் சிறிய படகில் ஆற்றின் வழியே தப்பித்துச் சென்றிருக்கின்றனர். 1769லும் ஹைதர் மீண்டும் தாக்குதலை தொடுத்த போதும் இம்முறை அப்படையினரே செயிண்ட் தாமஸ் மவுண்டிற்கு பின்வாங்க வேண்டியிருந்திருக்கிறது. இந்த தாக்குதலுக்குப் பின்னரே தற்போதைய ஜார்ஜ் டவுனுக்கு வடக்கிலும் மேற்கிலும் சுற்றுச் சுவர்களும் கொத்தளங்களும் கட்டப்பட்டிருக்கிறது.
பகுதி 14ல் கவர்னர் பிகாட் மற்றும் அவருக்குப் பின் வந்தோர் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1769லிருந்து 1772 வரை பட்டணத்தில் கவர்னரின் நிர்வாக சபையில் உறுப்பினராக வாரன் ஹேஸ்டிங்ஸ் இருந்திருக்கிறார். நகர மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை குறிப்பாக துறைமுகம் குறித்தும் ஆலோசனைகளை அளித்திருக்கிறார். இவர்தான் கம்பெனியின் பிரத்யேக வர்த்தகர்களுக்கான அலுவலகங்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார். அதற்குப் பதிலாக குமாஸ்தாக்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களே இடைத் தரகர்கள் யாருமின்றி நெசவாளர்களுக்கு முன் பணம் அளிப்பதை மேற்கொண்டிருக்கிறார்கள். கம்பெனியின் கடைசி பிரதான வர்த்தகராக இருந்தவர் மணலி முத்துகிருஷ்ண முதலியாவார். இவர்தான் கவர்னர் பிகாட்டின் துபாஷியாக இருந்ததோடு நியூ டவுனில் கோயிலை கட்டியவரும் கூட.
பட்டணத்திற்காக போலீஸ் நிர்வாக அமைப்பொன்று இதே கட்டத்தில்தான் உருவாக்கப்பட்டது, கோட்டைக்குள் இருக்கக்கூடிய தெருக்களின் நடைபாதைகளின் பொறுப்பினை அது ஏற்றுக் கொண்டது. வேண்டத்தகாத தெரு நாய்களை வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்டது. தவிர கோட்டைக்குள் இருக்கக்கூடிய அனைத்து வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் முன்னர் பொது விளக்குகளை அமைத்தது. சந்தைகளை முறைப்படுத்துவதையும் புதிய மீன்கள் கிடைப்பதற்கும் பெரு முயற்சிகளை இந்த நிர்வாக அமைப்பு மேற்கொண்டிருக்கிறது. ஆனாலும் ஓராண்டுக்குப் பின்னர் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களின் காரணமாக இந்த நிர்வாக அமைப்பு கலைக்கப்பட்டிருக்கிறது.
நகரில் பெரிய பறச்சேரி உருவான செய்தியையும் ஸ்ரீனிவாஸாச்சாரியார் பதிவு செய்திருக்கிறார். ஏற்கனவே கவர்னர் ஹேஸ்டிங்ஸ் வர்த்தகர் நாராயணனுக்கு கொடுத்த இடம்தான், பறையர்கள் தங்களுக்கென்ற தனியே ஒரு இடம் வேண்டும் என்று வேண்டுகோள்விடுக்க ஒதுக்கப்பட்டிருக்கிறது, வரிகள் மற்று வாடகை மட்டுமின்றி கக்கூஸ்களை சுத்தம் செய்யும் பணியிலிருந்தும் தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் அவர்கள் முன் வைத்திருக்கின்றனர்.
கம்பெனி நிர்வாகக் குழுவின் உத்தரவின் பேரில் வானிலை ஆய்வு மற்றும் திசை வழிப் பயணம் பற்றிய அறிவாற்றலை ஊக்கப்படுத்தும் விதத்தில் 1793ல் நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு நிலையமொன்று நிறுவப்பட்டது, இதற்கு முன்னரே கம்பெனிக்கு சொந்தமான வானிலை ஆய்வுக் கருவிகளைக் கொண்டு நிரந்தர அமைப்பொன்றை நிறுவிடும் யோசனை இருந்து வந்திருக்கிறது.
1797ல் பாப்ஹாம் காலத்தில்தான் முறையான போலீஸ் அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது, மார்க்கெட்டுக்கு ஒரு குமாஸ்தா, கொத்தவால் மற்றும் உதவியாளர் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
1786ல் பிரத்யேகமான மருத்துவத் துறையொன்றும், 1793ல் மனநோய் சிகிச்சை மையமொன்றும் உருவாகியது,
புகழ்பெற்ற அவதானம் பாப்பையா மோசடி, சர் வில்லியம் மெடோஸ் (1790-92) காலத்தில்தான் நிகழ்ந்தது, பாப்பையாவின் மோசடியில் சிக்காதவர் எவரும் இல்லை என்றநிலைதான் அன்றைய தினம் இருந்து வந்திருக்கிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகளில் சென்னையின் வளர்ச்சி குறித்து 15 வது பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் இருந்த கவர்னர்கள், நீதித்துறைக்கான நிரந்தர ஏற்பாடு ஆகியவை குறித்த விவரங்களை இப்பகுதியில் அறியலாம்.
அரும்பொருட்களையும், ஆவணங்களையும் சேகரித்து பாதுகாத்து வந்த கர்னல் காலின் மெக்கன்சி பற்றிய அறியாதார் எவரும் இருக்க முடியாது, 1810களில் பட்டணத்தில் அவர் சர்வேயர் ஜெனரலாக நியமிக்கப்பட்டிருக்கிறார். 1821ல் அவர் அகால மரணமுற்றதும் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்கிஸ் ஹேஸ்டிங்ஸ் ஆலோசனைக்கிணங்க ஒட்டு மொத்த சேகரிப்பையும் இந்திய அரசு பெற்றுக் கொண்டது. சமஸ்கிருதம், பெர்சியன், அரபி, ஜாவா, பர்மன் போன்ற மொழிகளில் உள்ள ஆவணங்கள் மட்டுமின்றி, ஏராளமான நிலப்படங்களும், திட்டங்களும், சித்திரங்களும், உருவங்களும், சிற்பங்களும் இரண்டு தவணைகளாக இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மிச்சம் மீதி இருந்தது மதராஸ் லிட்ரரி சொஸைட்டைக்கு வழங்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்பட்டது, இதற்கு மெக்கன்சிக்கு ஏற்கனவே பல்வேறு வழிகளின் தரவுகளை சேகரித்து அளித்து வந்த பண்டிட் காவாலி வேங்கட லக்ஷ்மையா உதவி செய்திருக்கிறார். மேலும் மதராஸ் யூனிவர்சிட்டி நூலகத்திற்கும் கணிசமான அளவில் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வரக்கூடிய லாண்டன்ஸ் தோட்டத்தைத்தான் மெக்கன்சி தனது இருப்பிடமாக கொண்டிருக்கிறார்.
ரயத்துவாரி முறையின் தந்தையென அறியப்படும் சர் தாமஸ் மன்றோ 1820 முதல் 1827 வரை மாகாண கவர்னராக இருந்திருக்கிறார். மாகாணத்தில் கல்வி மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதி கொண்டவராக அறியப்படுகிறார். சாதி அடிப்படையில் அறியாமை இருந்து வருவதை கண்டறிந்திருக்கிறார். ஆங்கிலக் கல்வி முறையை பரவலாக்கும் விதத்தில் ஜில்லாக்களில் பள்ளிக்கூடங்களையும் ஆசிரியர்களுக்கான பயிற்சிப் பள்ளிகளையும் நிறுவியிருக்கிறார்.
பட்டணத்தில் 1800 முதல் 1832 வரை நடைபெற்ற மேம்பாட்டுப் பணிகளை ஸ்ரீனிவாஸாச்சாரியார் விவரமாகவே எடுத்துரைக்கிறார். மவுண்ட் ரோடு 1796ல் அகலப்படுத்தப்பட்டு சீரமைக்கப்பட்டிருக்கிறது, ஐலண்ட் மைதானத்தையொட்டி நிழல் தரும் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன. மவுண்ட் ரோடின் இடைப்பகுதியில் 1814-16ல் புகழ் பெற்ற இன்ஜினியர் டி ஹவிலாண்ட் அவர்கள் செயிண்ட் ஜார்ஜ் கதீட்ரலை கட்டியிருக்கிறார், ரோமானிய கட்டுமானக்கலையின் அமைப்பில் உருவான எழில் மிக தேவாலயமாகும் அது, இவ்வாறே இதே ஹவிலாண்ட் வடிவமைப்பில் பூந்தமல்லி சாலையில் எழும்பூரில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயம் 1818-21 ல் உருவானது, 1827க்கும் 1859க்கும் இடைப்பட்ட காலம் என்பது பட்டணத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுப் பணிகளின் காலமென 16 வது பகுதியில் எடுத்துரைக்கப்படுகிறது, கொடுக்கக்கூடிய விஷயத்தில் ஆங்கிலத்தில் ஆறு வாக்கியங்களை எழுதவோ அல்லது புத்திசாலித்தனமாக ஒரு பக்கத்தை படிக்கவோ இலக்கணப்படி திறனற்றவர்களாக பெரும்பாலான இந்திய இளைஞர்கள் இருப்பதை நிர்வாகம் சுட்டிக் காட்டியது. எனவே சுற்றுப் புறத்தில் நான்கு ஆங்கில துவக்கப்பள்ளிகளை துவக்கியிருக்கிறது.
தலைமை ஆசிரியருக்கு மாதச் சம்பளமாக ரூ 130ம் வீட்டு வாடகைப்படியாக ரூ20 மட்டுமின்றி பள்ளிக் கட்டணத்தில் பாதியும் அளிக்கப்பட்டிருக்கிறது, 1839ல் எலிபின்ஸ்டோன் கல்விக்கான சீர்திருத்தங்களை துரிதப்படுத்தியிருக்கிறார். இலக்கியம், தத்துவம், அறிவியல் ஆகியவற்றை போதிக்கக்கூடிய கல்லூரி அமைப்பு அல்லது பல்கலைக் கழகமொன்றை நிறுவுவது, பல்கலைக் கழகத்துடன் இணைந்த ஒரு உயர்நிலைப்பள்ளியை உருவாக்கி அதில் கெட்டிக்காரத்தனமாக ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் தெரிந்த பையன்களை சேர்ப்பது என்று அவர் சிபாரிசு செய்திருக்கிறார். இதற்கேற்ப 1841ல் உயர்நிலைப்பள்ளி திறக்கப்பட்டிருக்கிறது. 1850 டாக்டர் ஹண்டரின் முயற்சியின் பேரில் தொழில் துறைக்கான கலைக் கல்லூரி துவக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே 1834ல் சேப்பாக்கில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த இன்ஜினியரிங் கல்லூரி இதே கட்டத்தில்தான் கிண்டிக்கு இடம் பெயர்ந்தது, 1835ல் மதராஸ் மருத்துவக் கல்லூரியும் 1857 செப்டம்பரில் மதராஸ் யூனிவர்சிட்டியும் செயல்படத் துவங்கியிருக்கிறது, சுத்தமான தரம் வாய்ந்த தண்ணீர் பட்டணத்தில் வழங்கப்பட்டிருக்கிறது, கிணறுகளில் 20 லிருந்து 30 அடி ஆழத்தில் நீர் கிடைத்து வந்திருக்கிறது, ஏழு கிணறு என்று சொல்லப்பட்டாலும் பத்து கிணறுகள் அங்கே இருந்திருக்கிறது, அதிலும் பலவற்றில் நீராதாரம் வற்றிய நிலையில் . இரண்டு கிணறுகள் மட்டும் பயன்பாட்டில் இருந்திருக்கிறது.
இவற்றிலிருந்து இருபத்தி நான்கு மணி நேரத்தில் 264,000 காலன் தண்ணீர் கிடைத்து வந்திருக்கிறது, பட்டணத்து மார்க்கெட்டுகளில் சகலவிதமான பொருட்களும் கிடைத்து வந்ததை ஸ்ரீனிவாஸாச்சாரியார் பட்டியலிடுகிறார். மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கன்றின் இறைச்சி, அவ்வாறே ஆட்டுக்குட்டியின் இறைச்சி போன்றவை தரமிக்கதாகவும் மிதமான விலையிலும் கிடைத்து வந்திருக்கின்றன. மேலும் கோழி, சேவல், வாத்து, வான்கோழி, அன்னம் ஆகியவை மட்டுமின்றி பல்வேறுபட்ட தரமான மீன்களும் சந்தையில் பெருமளவில் இருந்திருக்கின்றன. விதம் விதமான காய்கறிகளுக்கும் சந்தையில் பஞ்சமில்லை. உருளை, டர்னிப், நூல்கோல், காரட், கோஸ், பீன்ஸ், கீரை வகைகள், வள்ளிக் கிழங்கு, சேனை, வெங்காயம், கத்திரி, வெள்ளரி, புடலை வகைகள் விற்பனையில் இருந்திருக்கின்றன. அரிசி தவிர இதர தானிய வகைகளும் குவிந்து கிடந்திருக்கின்றன, மா, வாழை, அன்னாசி, சீதா, ஆரஞ்சு, திராட்சை, பலா, கொய்யா போன்ற பழவகைகளும் தரமிக்கதாக தேவைக்கேற்ப கிடைத்து வந்திருக்கின்றன.
18ம் நூற்றாண்டு வரை ஹுக்காவில் புகைப்பது ஆங்கிலேயேர் மத்தியில் வழக்கமாக இருந்து வந்திருக்கிறது, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே இப்பழக்கம் வழக்கொழிந்து விட்டிருக்கிறது, சில இடங்களில் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது, இதே போன்ற பல்லக்குகளை பயன்படுத்துவதும் முடிவுக்கு வந்திருக்கிறது, அலங்காரமான பல்லக்குகளை பார்ப்பது அரிதாகியது.
17வது பகுதியில் 1860 முதல் 1900 வரையிலான மெட்ராசின் வரலாறு கூறப்பட்டிருக்கிறது, 1859 முதல் 1860 வரை கவர்னராக சர் சார்லஸ் டிராவல்யான் காலத்தில்தான் வெட்ட வெளியாக இருந்த எஸ்ப்ளனேட்டின் வெளிப்பகுதி பீப்பிள்ஸ் பார்க்காக மாற்றமடைந்திருக்கிறது, 1800 களின் இடைக்காலத்தில் பட்டணத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும் விளங்கிய காஜுலு லக்ஷ்மிநரசு செட்டி அவர்கள் ஜார்ஜ் நார்டன் மற்றும் ஜான் ப்ரூஸ் நார்டன் உதவியுடன் அரசுப் பள்ளிகளில் பைபிள் போதனை செய்யும் திட்டத்தை முறியடித்திருக்கிறார்.
பட்டணத்திற்கும் வாலாஜாநகருக்கும் இடையில் ரயில்பாதையை அமைத்திடும் நோக்கில் மதராஸ் ரயில்வே கம்பெனி 1845 ஜூலை 8 அன்று லண்டனில் பதிவு செய்யப்பட்டது, 1856 ஜூலை முதல் நாளன்று ராயபுரத்திலிருந்து ஆற்காடு செல்லும் ரயிலை அன்றைய கவர்னர் ஜார்ஜ் பிரான்சிஸ் ராபர்ட் ஹாரீஸ் கொடிசைத்து துவக்கி வைத்திருக்கிறார்.
1872 முதல் 1875 வரை மாகாண கவர்னராக ஹோபர்ட் பிரபு இருந்தபோதுதான் பட்டணத்தில் முதலாவது முறைப்படுத்தப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறைக்கு வந்தது, இவர் துறைமுகக் கட்டுமானத்தையும் ஊக்குவித்திருக்கிறார். 1881ல் கட்டுமானப் பணிகள் முடிவுற்று துறைமுகம் செயல்பாட்டிற்கு வந்திருக்கிறது, பட்டணத்தில் ஜனத் தொகை கணக்கெடுப்பு எனப்படும் சென்சஸ் 1871 ல் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. பட்டணத்தில் அன்றைய மக்கள் தொகை 397,552 ஆக இருந்திருக்கிறது. இது 1931ல் 647,232 ஆக உயர்ந்திருக்கிறது.
கன்னிமாரா பிரபு கவர்னராக இருந்தபோதுதான் 1887 டிசம்பரில் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது சபை பட்டணத்தில் கூடியிருக்கிறது. காங்கிரஸ் மகா சபையொன்று இங்கே கூடுவது இதுவே முதல் தடவையாகும். விஜயராகவாச்சாரியார் எழுதிய காங்கிரஸ் வினா விடை என்ற புத்தகம் முப்பதினாயிரம் பிரதிகள் விற்றதையும், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் ஜான் ஆடம், பட்டணத்தின் புகழ் பெற்ற வக்கீல் எர்ட்லி நார்டன் அவர் மகன் ஜான் புரூஸ் நார்டன் ஆகியோர் பிரதிநிதிகளாக பங்கேற்றதையும், கன்னிமாரா பிரபு பிரதிநிதிகளுக்கு இரண்டாவது நாள் கவர்மெண்ட் ஹவுசில் விருந்துபசாரம் அளித்ததையும் விசேஷமாக குறிப்பிட்டுள்ள ஸ்ரீனிவாஸாச்சாரியாருக்கு இந்த மகாசபை ஆயிரம்விளக்கு மக்கீஸ்தோட்டத்தில் போடப்பட்ட விசேஷ பந்தலில் கூடியது என்பதும் இங்கேதான் ராவ்சாகிப் மூக்கணாச்சாரி அவர்கள் தமிழில் பேசினார் என்பதும் ஏனோ முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை.
1889ல்தான் உயர்நீதிமன்ற கட்டுமானப் பணிகள் துவங்கியிருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கான பழைய கல்லறை மைதானத்தில்தான் சட்டக் கல்லூரியும் கட்டப்பட்டது. காங்கிரசின் 11வது தேசிய சபை பட்டணத்தில் கூடியிருக்கிறது, மதராஸ் முனிசிபாலிட்டியின் தலைவராக இருந்த சர் ஜார்ஜ் மூர் இம்மாநாட்டிற்கு சகலவிதமான உதவிகளையும் செய்திருக்கிறார். (இச்சபை பனகல் மன்னருக்கு சொந்தமானதும் பூந்தமல்லி சாலையில் அமைந்திருக்கக்கூடியதுமான ஹைடல் பார்க் கார்டனில் கூடியிருக்கிறது. தற்பொழுது இங்கே கீழ்பாக்கம் அரசினர் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது.)
இந்த காலகட்டத்தில் முனிசிபாலிட்டியின் முக்கியத்துவம் வாய்ந்த சாதனையாக குடிநீர் வினியோகம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டினைக் கூற முடியும், ஏழு மைல் தூரத்திலுள்ள ரெட்ஹில்ஸிலிருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டம் முனிசிபல் இன்ஜினியர் லீ அவர்களின் மேற்பாற்வையில் 1866ல் துவக்கப்பட்டு 1872ல் நிறைவடைந்திருக்கிறது.
18வது பகுதியில் இந்த நூற்றாண்டில் பட்டணத்து நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. பட்டணம் வேகமாக வளரத் துவங்கிய போதும் அது பரவலாக அமைந்திடவில்லை என்பதை 1918ல் இது குறித்து ஆய்வினை மேற்கொண்ட எச்.வி.லான்செஸ்டர் கருத்து தெரிவித்திருந்தார். இது பற்றிய விரிவான திட்ட அறிக்கையொன்றினையும் அவர் முனிசிபாலிட்டிக்கு அளித்திருந்தார். இவ்வாறே மாறுதலுக்குள்ளாகி வரும் நகரமும் மெட்ராஸின் சமூக வாழ்வு பற்றிய ஆய்வினை சி.டபிள்யூ. ரான்ஸன் அவர்கள் 1938ல் வெளியிட்டிருந்தார். 1901க்கும் 1921க்கும் இடைப்பட்ட காலத்தில் பட்டணத்தின் மக்கள் தொகை 509,346 லிருந்து 526,911 ஆக உயர்ந்திருப்பதாக ரான்சன் ஆய்வில் தெரிவித்திருந்தார். இதே தொகை 1931ல் 647,230 ஆக உயர்ந்தது, பட்டணத்தின் வடகிழக்கு பகுதியில் மக்கள் தொகையில் அடர்த்தியின்மைக்கான காரணங்களை ஜே.சி.மலோனி 1911 மக்கள் தொகை அறிக்கையில் பட்டியலிட்டிருந்தார். வட மேற்கு பகுதியில் போக்குவரத்து வசதி குறிப்பாக டிராம் இல்லாதிருப்பதும், எண்ணூர் பகுதியில் மலேரியா பற்றிய அச்சம் இருந்து வருவதும், துறைமுகத்தையொட்டி அவ்வப்போது கடல் அரிப்பு ஏற்படுவதும் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
1871ல் எட்டு டிவிஷன்களைக் கொண்டதாக இருந்த பட்டணத்தில் 1931ல் முப்பது டிவிஷன்கள் இருந்தன. புதிய பகுதிகள் பட்டணத்தோடு இணைந்த மெட்ராஸை பெரும் பட்டணமாக்கியிருக்கிறது. வடக்கில் திருவொற்றியூர், மேற்கில் பெரம்பூரையொட்டிய செம்பியமும் வில்லிவாக்கமும், பூந்தமல்லி சாலையில் அமைந்தகரை சுங்கச் சாவடிக்கு அப்பால் உள்ளவை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை முனிசிபாலிட்டி, கிண்டி, அடையார் ஆகியவை பட்டணத்திற்குட்பட்ட பகுதிகளாயின.
மெட்ராசின் வினோதமான அம்சமாக திகழும் குடிசைகளை அகற்றுவது என்பது கடினமானது என்கிறார் ஸ்ரீனிவாஸாச்சாரியார். மண் சுவரில் ஓர் அறையுடன் இவை உள்ளன. மோசமான சுகாதார நிலையில் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் இருந்து வருகிறது என்கிறார். 1871ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 10,752 குடிசைகள் இருந்திருக்கின்றன. 1932ல் பட்டணத்தில் உள்ள குடிசைப்பகுதிகள் அல்லது சேரிகளை அதிகாரபூர்வமற்ற முறையில் கணக்கெடுத்தபோது மாநகராட்சி 158 சேரிகளின் பட்டியலை அளித்தது. இது தவிர இப்பட்டியலில் இடம் பெறாத 23 சேரிகளும் இருந்திருக்கின்றன. இவற்றில் 40,500 பேர் வசித்து வந்திருக்கின்றனர், 1933ல் கார்ப்பரேஷனின் வீட்டு வசதிக்கான ஒரு விசேஷ குழு அமைக்கப்பட்டது. சேரிகளில் இரண்டு லட்சம் பேர் வசிப்பதாகவும் அதாவது பட்டணத்து மக்கள் தொகையில் 30 விழுக்காட்டினர் இப்பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்றும் இக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. இது சற்றே மிகைப்படுத்தப்பட்டதுதான், அக்குழு 15,942 குடிசை வீடுகள் பட்டணத்தில் இருப்பதாகவும் அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருவதாகவும் மதிப்பீடு செய்திருக்கிறது.
1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பட்டணத்தில் வீடற்றவர்கள் எண்ணிக்கை என்பது 10,749 ஆக இருந்திருக்கிறது, இதில் பெருவாரியானவர்கள் கொத்தவால் சாவடி, எஸ்ப்ளனேட் மற்றும் பார்க் டவுன் பகுதியில் இருந்து வருகின்றனர், கீழ்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. இந்த விவரங்களை மாநகராட்சியின் விசேஷ குழு ஏற்றுக் கொண்டுள்ளது.
விவசாயக் கல்லூரியானது 1876ல் சைதாப்பேட்டையில்தான் துவக்கப்பட்டிருக்கிறது, பின்னர் 1808ல் அது கோவைக்கு இடம் மாறியிருக்கிறது.
ராயபுரம் ஆக்சிலரி மருத்துவப் பள்ளி அன்றைய தினம் மாகாண கவர்னராக இருந்து சர் ஜார்ஜ் ஸ்டான்லியை கௌரவிக்கும் விதமாக 1933ல் ஸ்டான்லி மருத்துப் பள்ளியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது, 1889ல் பட்டணத்தில் கெரோசின் விற்பனையை பெஸ்ட் அண்ட் கோ துவக்கியுள்ளது, ஆனாலும் அதற்கு முன்னரே ஸ்பென்சர்ஸ் நிறுவனம் அமெரிக்க கெரோசினை வினியோகம் செய்து வந்திருக்கிறது, 1878 ஜனவரியில் ஓட்டேரி நல்லா அருகில் அமைந்துள்ள தொழிற்சாலையில் பக்கிங்காம் மில் நிறுவனம் 15000 ஸ்பிண்டில்களுடன் 11000 தொழிலாளர்களுடன் தனது உற்பத்தியைத் துவக்கியிருக்கிறது, அதே காலகட்டத்தில் குஜராத்தி தொழில் நிறுவனமொன்று சூளையில் நெசவாலை ஒன்றினை நடத்தி வந்திருக்கிறது.
18வது இறுதிப்பகுதியில் இன்றைய நூற்றாண்டில் மதராஸ் எப்படி இருந்து வருகிறது என்பதை ஸ்ரீனிவாஸாச்சாரியார் விவரங்களுடன் எடுத்துரைக்கிறார். பட்டணத்தின் சகல அம்சங்களையும் அது தொடர்பான சின்னஞ்சிறு தகவல்களையும் அளித்துள்ளார்.
பட்டணத்தில் 1898ல் இந்திய தேசிய காங்கிரசின் 14வது சபையும் 1903ல் 19வது சபையும் 1908ல் 23வது சபையும் கூடியிருக்கின்றன. 1908ல் சபை நடவடிக்கைகள் மவுண்ட் ரோடில் எலிபிண்ட்ஸ்டோன் மைதானத்தில் அமைக்கப்பட்ட விசேட பந்தலில் நடைபெற்றிருக்கின்றன. மீண்டும் 29வது சபை 1914ல் நுங்கம்பாக்கம் டவ்டன் ஹவுசில் கூடியிருக்கிறது. இதன் பின்னர் 1927ல் 42வது சபை பட்டணத்தில் நடைபெற்றிருக்கிறது. இச்சபைக்கான வரவேற்புக் குழு வசூலித்த தொகையில் செலவு போக மிச்சத்தில்தான் ராயப்பேட்டையில் காங்கிரசுக்கென்று பிரத்யேக வளாகமொன்றை சீமான் எஸ்.ஸ்ரீனிவாசய்யங்கார் வாங்கியிருக்கின்றார். (அங்கேதான் பின்னாளில் சத்யமூர்த்தி பவன் உருவானது).
மவுண்ட் ரோட் அமைதியானது என்றும் முக்கியத்துவம் வாய்ந்த கடைகள் இங்கிருப்பதாகவும் மற்றவை பிராட்வே பகுதியில் இருந்து வருவதாகவும் சுவாரசியமான தகவல்களை ஸ்ரீனிவாஸாச்சாரியார் அளிக்கிறார், காண்ட்ஸ் புத்தக கடை மவுண்ட் ரோடில் இருப்பதை கூறும் அவர் புகழ் பெற்ற பேக்கரி அங்கொன்று இருப்பதாகவும் அதன் பெயர் தனக்கு மறந்து போய்விட்டது என்று கூறுகிறார். (டி ஏஞ்சல்சில் இடம் பெயர்ந்த பொசோட்டோவைத்தான் குறிப்பிடுகிறார் போலும்)
மூன்று நூற்றாண்டுகளில் அபரிமிதமான மாற்றத்தின் காரணமாக மதராஸ் பட்டணம் வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்றும் ஒரு பக்கம் அடர்த்தியான மக்கள் திரளும் மறுபக்கம் அடத்தியின்மையும் இருந்து வந்தாலும் திறந்த வெளிகளும், பூங்காக்களும், மைதானங்களும் நகரின் தேவையை நிறைவு செய்கிறது என்கிறார். பம்பாய், கல்கத்தா ஆகிய மற்ற நகரங்களோடு ஒப்பிடுகையில் மதராஸ் நகரங்களின் ராணி என்கிறார் ஸ்ரீனிவாஸாச்சாரியார்.
உண்மையில் மெட்ராசின் 300 ஆண்டு வரலாற்றைச் சுருக்கமாக சுவையாக அனைவரும் வாசிக்கத்தக்கவிதத்தில் அதன் வரலாற்றுப் பின்னணியுடன் கூறுவது என்பது எளிதான செயல் அல்ல. ஆனால் ஸ்ரீனிவாஸாச்சாரியார் எழுதிய மதராஸ் வரலாறு என்பது ஆய்வாளர் முதற்கொண்டு சாதாரண வாசகர் வரையிலான சகல தரப்பினருக்குமானதாகும்.
சென்னப்பட்டின வரலாறு எழுதியவர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
சென்னப்பட்டின வரலாறு தொடரின் முந்தய கட்டுரையை படிக்க கிளிக் செய்யவும்:- தி ஸ்டோரி ஆஃப் ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ் (The Story of Fort St. George)
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.