சென்னப் பட்டணம் – வரலாற்றுப் பதிவுகள்(மெட்ராஸ் டிஸ்கவர்ட்)
முத்தையாவின் மெட்ராஸ் டிஸ்கவர்ட்
சென்னைப் பட்டணம் குறித்து அவ்வப்போது பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டு வந்தாலும், வெகுஜன வாசிப்புக்கும் நகரம் குறித்து ஒரு விரிவான புரிதலை உருவாக்குவற்கும் முன்னோடி புத்தகமாய் விளங்கியதெனில் “மெட்ராஸ் டிஸ்கவர்ட் – எ ஹிஸ்டாரிகல் கைட்டுலுக்கிங் அரௌண்ட்” எனும் புத்தகத்தை குறிப்பிட்டாக வேண்டியுள்ளது. இத்தனைக்கும் இந்தப் புத்தகம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு 1981ல் வெளியிடப்பட்டதாகும்.
ஏற்கனவே என்.எஸ்.ராமசாமி எழுதிய சென்னை வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் பகுதி பகுதிகளாக வெளியிடப்பட்ட சூழலில், எஸ்.முத்தையாவின் புத்தகம் நகரம் குறித்து அக்கறை கொண்டிருப்போர் மத்தியில் மட்டுமின்றி, பரவலான வாசகர்கள் மத்தியிலும் கவனத்தைப் பெற்றிட்டது, இதன் பின் பல ஆண்டுகளுக்குப் பின்னரே நகரம் குறித்த அவரது பத்திகள் இந்து ஆங்கில நாளிதழில் வெளிவரத் தொடங்கியது. அவை புத்தகமாகவும் பதிப்பிக்கப்பட்டன. அதே நேரத்தில் 1981ல் வெளியிடப்பட்ட இந்த புத்தகம் விரிவாக்கப்பட்டு 1987லும், மீண்டும் பல்வேறு பகுதிகளை இணைத்து 1992லும், பின்னர் முழுமையாக மாற்றியமைத்து விரிவாக்கப்பட்ட பதிப்பாக 1999ல் “மெட்ராஸ் ரி டிஸ்கவர்ட்” என்று ஈஸ்ட் வெஸ்ட் டால் வெளியிடப்பட்டது. அடுத்த கட்டத்தில் முத்தையா சி.வி.கார்த்திக் நாராயணன் மொழிபெயர்ப்பில் சென்னை நகரின் முழுமையான வரலாறாக “சென்னை மறு கண்டுபிடிப்பு” 2009ல் கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது,
சென்னை நகருக்கான பிரத்யே மாதமிருமுறை ஆங்கிலப் பத்திரிகையாக வெளியிடப்பட்டு வந்த “மெட்ராஸ் ம்யூசிங்”கின் ஆசிரியராகவும் இருந்த முத்தையா, இவையன்றி நகர வரலாற்றுடன் இணைந்த பல்வேறு நிறுவனங்களின் வரலாற்றையும் எழுதியுள்ளார். நகர வரலாற்றோடு இணைந்த சிம்சன், ஸ்பென்ஸர்ஸ் நிறுவனங்கள் பற்றிய அவரது வரலாற்றுப் பதிவு முக்கியத்துவம் வாய்ந்தது, சென்னைத் துறைமுகக் கழகத்தின் 125வது ஆண்டையொட்டி கடலோடி நரசய்யாவுடன் இணைந்து தமிழிலும் ஆங்கிலத்திலும் உருவாக்கிய “துறைமுக வெற்றிச் சாதனை” ஓர் அசாதாரண முயற்சி என்றே கூறமுடியும். இவையன்றி காஃபி டேபிள் வகையில் அஜய் குல்லரின் படங்கள் நிறைந்த “மதராஸ் குளோரியஸ் சிட்டி”, “மெட்ராஸ் தட் ஈஸ் சென்னை” என்ற இரு புத்தகங்களும் நகரம் குறித்த அவரது ரசனை உணர்வை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது, 2000ல் தோட்டா தரணியின் அட்டைப் படத்துடன் அவர் தொகுத்த “அட் ஹோம் இன் மெட்ராஸ்” ஒரு தனித்துவம் வாய்ந்த சென்னை பற்றிய வழிகாட்டிக் கையேடாகும்.
சென்னையைச் சுற்றி பார்க்க விழைவோருக்கு ஒரு வரலாற்று வழிகாட்டி என்ற அளவில் அல்லது நகரம் குறித்து மேலும் அறிய ஆவலுள்ளோருக்கு மட்டுமின்றி அதன் பண்பாட்டியல் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாத்திட விரும்பும் இந்தியரோ அல்லது ஆங்கிலேயரோ எவராக இருப்பினும் அவர்களுக்கும் “மெட்ராஸ் டிஸ்கவர்ட்” உதவிகரமாக இருக்கும் என்று முன்னுரையிலேயே புத்தகத்தின் திசைவழியை முத்தையா வெளிப்படுத்தி விடுகிறார். பத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களுடன், இருபது அத்தியாயங்களாக சென்னையின் கதை 170 பக்கங்களில் கூறப்பட்டுள்ளது.
இவை அசைட் பத்திரிகையில் பத்திகளாக வெளியிடப்பட்டதன் தொகுப்பு என்று அவரே முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதோடு இவ்வரலாறு குறித்து மற்றொரு தகவலையும் அவர் பகிர்ந்து கொள்கிறார். இந்தப் புத்தகத்தில் மேற்கத்திய சார்பு இருப்பதாக ஒரு சில வாசகர்கள் கருதக்கூடிய சாத்தியப்பாடு இருக்கலாம். ஒருவேளை இது தவிர்க்க முடியாததும் கூட. ஏனெனில் இந்த வரலாறு குறித்தவை யாவுமே மேற்கத்திய ஆசிரியர்களால் பதிவு செய்யப்பட்டது அல்லது அதே ஆதாரங்களையே இந்தியர்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் விவரிக்கிறார். முத்தையாவின் கூற்று சென்னை வரலாற்றுக்கு மட்டுமல்ல பொதுவாக எந்த இந்திய வரலாற்று ஆய்வுகளுக்கும் பொருந்தக்கூடியதுதான். இந்த உள்வாங்கலுடன் புத்தகத்திற்குள் நுழைவோம்.
பெயரில் என்ன உள்ளது என்ற கேள்வியுடன் துவங்கும் முதல் அத்தியாயத்தில் சென்னையின் பெயர்க்காரணங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. துர்கராயபட்டினத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் சீரழிவுற்ற ஃபேக்டரி மேற்பார்வையாளராக இருந்த டேதான் சென்னை நகரத்திற்கு வித்திட்டது என்பதை அறிவோம். அவன் பெருங்குடியன், உற்சாகம் மிக்க சூதாடி தவிர ஸ்தீரி லோலனும் கூட என்று கூறும் முத்தையா சென்னை நகர உருவாக்கத்தில் முக்கிய பங்கினை கொண்டிருந்த டே, கோகன், பெரி திம்மண்ணா மற்றும் நாகபத்தன் ஆகியோர் இன்றும் நினைவு கூறப்படாது இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
சென்னை மற்றும் மெட்ராஸ் பட்டணங்களின் பெயருக்கான காரணங்கள் என்னவாக இருப்பினும் ஏற்கனவே வரலாற்றுச் சிறப்பினைக் கொண்ட திருவல்லிக்கேணி, மைலாப்பூர், திருவொற்றியூர், பல்லாவரம் போன்ற கிராமங்களின் இணைப்பால் இது புகழ்பெற்றது எனும் கருத்தும் இங்கே முன்வைக்கப்படுகிறது.
இரண்டாவது அத்தியாயத்தில் டே சென்னைக்கு வந்ததையும் அதன் பின்னணியையும் கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக நடவடிக்கைகளையும் அறிகிறோம். டே மசூலிப்பட்டணத்தில் அவரது மேலாளர் கோகன் இவர்களோடு ஒரு சில இந்திய உதவியாளர்களும், சில குமாஸ்தாக்களும், 25 ஐரோப்பிய சிப்பாய்களும், உள்ளூர் அளவிலுள்ள இயந்திரப் பணியாளர்களும் சென்னைக்கு வந்து 100 கஜம் சதுரத்தில் 9250 பகோடாக்கள் செலவில் கோட்டை கட்டியுள்ளது தெரியவருகிறது. 1676லிருந்து படிப்படியாக பட்டணத்தைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை கம்பெனி நிர்வாகம் வெவ்வேறு வழிமுறைகளைக் கையாண்டு எடுத்துக் கொண்டிருக்கிறது.
சென்னையின் எல்லைகள் விரிவடைந்ததோடு இது பற்றிய நிலப்படங்களும் உருவாக்கப்பட்டிருப்பதை மூன்றாவது பகுதியில் அறிய முடிகிறது. 1673ல் ஃபிரையரின் நிலப்படமும், அடுத்ததாக 1688ல் லெங்கிளின் நிலப்படமும் உருவாகியிருக்கிறது.
1674ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்த ஒயிட் டவுனில் 118 வீடுகளும், கறுப்பர் நகரில் 75 வீடுகளும் இருந்தை முத்தையா குறிப்பிடுகிறார். 1772ல் நகரம் பற்றிய சர்வே ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஆறு எல்லைக் கற்கள் நடப்பட்டதாகவும் அதில் பாரி முனை, கொண்டிசெட்டித் தெரு, ஸ்டிரிங்கர் தெரு, பத்ரியன் தெரு ஆகியவற்றில் உள்ளவற்றை இன்றும் காண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
1871ல் சென்னையில் முதன் முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்போதைய மக்கள் தொகை 3,97,552, 1971 கணக்கெடுப்பின்படி 24,69,449 என்பது மாநகர்களை நோக்கிய கிராமப்பகுதி மக்களின் புலம்பெயர்தல் தொடங்கிவிட்டது என்பதையே உணர்த்துகிறது.
கோட்டையின் விரிவாக்கத்தில் கிளைவ் மற்றும் வெலிங்டன் ஆகியோரின் பங்காற்றலை 5வது அத்தியாயத்தில் அறிகிறோம். அத்தோடு செயிண்ட் மேரி தேவாலயத்தின் உருவாக்கத்தையும் அரும்பொருட்கள் அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருப்பதையும் அறிய முடிகிறது. இங்கே ஒரு அரிய தகவலை முத்தையா இணைத்துள்ளார். ஆங்கிலேய அதிகாரியான சார்நாக் பிகாரில் இறந்த கணவனுடன் கொளுத்தப்படவிருந்த பெண்ணை காப்பாற்றி கரம் பற்றியுள்ளார். அவர்களுக்கு பிறந்த மேரி, எலிசபெத், காத்தரீன் எனும் மூன்று பெண்களுக்கும் 1689ல் இதே செயிண்ட் மேரி தேவாலயத்தில்தான் ஞானஸ்நானம் வழங்கப்பட்டிருக்கிறது. இதே சார்நாக்தான் வங்காளத்திற்கு
திரும்பிய பின்னர் கல்கத்தா நகரை உருவாக்கியுள்ளார். ஆங்கிலேயர்களே செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்குள் இருந்த கத்தோலிக்க தேவாலயத்தை சந்தேகத்தின்பேரில் 1752ல் இடித்துத் தள்ளியிருக்கின்றனர் என்ற செய்தியும் அறிதலுக்குரியதாகும்.
மவுண்ட் ரோடையும் அதைச் சுற்றி அமைந்துள்ள கட்டுமானங்களின் வரலாற்றைக்கூறும் ஐந்தாம் பகுதி சுவாரசியமாகவே அமைந்துள்ளது. சென்னை நகர பத்திரிகைகளின் வரலாறும் விரிவாகவே இதில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
1729ல் பெட்ரஸ் உஸ்கான் எனும் அர்மீனிய வணிகர் சொந்தமாக முப்பதினாயிரம் பகோடா செலவில் மர்மலாங் பாலத்தைக் கட்டியதோடு நில்லாமல், பராமரிப்புக்காக 1500 பகோடாக்களையும், செயிண்ட் தாமஸ் குன்றில் அவர் கட்டிய 160 கருங்கற் படிகளின் பராமரிப்புக்காக இன்னொரு 1500 பகோடாக்களையும் ஒதுக்கி வைத்துள்ளார் என்ற செய்தி நகர வரலாற்றில் உருவாக்கத்தில் பல்வேறு சக்திகளின் பங்களிப்பினை விரிவாகவே வெளிப்படுத்துகிறது.
ஆறாவது பகுதியில் இறைத் தூதர் தாமஸின் இந்தியா வருகையும் தாமஸ் குன்று அதையொட்டிய சின்னமலையின் வரலாறும், ஏழாவது பகுதியில் பல்லாவரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் விவரிக்கப்பட்டுள்ளதோடு அதன் வரலாற்று முக்கியத்துவமும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தீவுத் திடலின் உருவாக்கம் எப்படி நிகழ்ந்தது என்பது 8ம் அத்தியாயத்தில் விரிவாக காணப்படுகிறது. பின்னாளில் மாகாண கவர்னராக இருந்த நதானியல் ஹிக்கின்ஸன் மதராஸ் கார்ப்பரேஷனில் மேயராக இருந்த போது வடக்கு நதியின் போக்கு மாற்றப்பட்டு உருவாகியிருக்கிறது. இத்தோடு பஞ்ச நிவாரண நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பக்கிங்காம் கால்வாய் பற்றிய குறிப்பும் உள்ளது. 1877-78களில் தற்போதைய பல்கலைக் கழகத்தின் பின்னே அடையாறு கூவத்தின் முகத்துவாரத்தில் ரூபாய் முப்பது லட்சத்தில் இணைக்கப்பட்டுள்ளதையும் இதில் மூன்றில் இருபங்குக்கும் மேலாக மனித உழைப்பிற்கு செலவழிக்கப்பட்டதையும் அறிகிறோம்.
கிராண்ட் டஃப் மாகாண கவர்னராக இருந்தபோதுதான் சென்னையின் கடற்கரைப் பகுதி மேம்படுத்தப்பட்டு மெரீனாவாகியதை பெரும்பாலானோர் அறிவர். இக்கடற்கரையை யொட்டிய பகுதிகள் கட்டுமானங்கள், சென்னையில் கிரிக்கெட் விளையாட்டின் துவக்கம், மதராஸ் கிரிக்கெட் கிளப்பின் தோற்றுவாய் ஆகியவை அழகிய மெரீனா பகுதியில் விவரிக்கப்படுகிறது. சென்னையில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்களின் வடிவமைப்பாளராகவும் பொறியாளராகவும் இருந்த சிஷோம் குறித்தும் அறிய முடிகிறது. இந்திய ஆவணங்களை பெருமளவில் சேகரித்து பின்னாளில் காப்பகத்திற்கு வழங்கி கர்னல் மெகன்ஸி பற்றி அறியாதோர் இருக்க முடியாது. அவர் வாழ்ந்து வந்து லாண்டன் தோட்டத்திலிருந்து பல்வேறு ஆவணங்கள் 1828ல் கோட்டைக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று இங்கே முத்தையா குறிப்பிட்டுள்ளார். இந்த லாண்டன் தோட்டத்தில்தான் பின்னர் லண்டன் தொட்டி ஆஸ்பத்திரியும் தற்போது கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
10, 11, மற்றும் 12ம் அத்தியாயங்களில் முறையே சாந்தோம், மயிலாப்பூர், அடையாறு போன்ற பகுதிகளின் வரலாற்றுச் சிறப்பினையும் நகரின் கேந்திரமான பகுதிகளாக மாறிய இவற்றின் பண்பாட்டியல் கூறுகளையும் முத்தையா சுவைபடக் கூறுகிறார். மொகரத்திற்குப் பின்னர் மயிலை கபாலி திருக்கோயில் குளத்தில் இஸ்லாமியருக்கு குளிக்க அனுமதி இருந்திருக்கிறது என்பதும் அடையாறில் பிரம்ம ஞான சபையில் ஆண்டு விழாவிற்கு வந்தோர் மயிலையில் கூடி தேசிய காங்கிரசுக்கு வித்திட்டனர் என்பதும் நகருக்கு பெருமை சேர்க்கக்கூடியதுமாகும்.
13 மற்றும் 14ம் அத்தியாயங்களில் கிண்டி அதைச் சுற்றியுள்ள பகுதிகள் தவிர தற்போதைய ராஜ் பவனாக மாற்றமடைந்த கிண்டி லாட்ஜ் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. 15ம் பகுதியில் கிட்டத்தட்ட சென்னையின் வடக்குப் பகுதி விவரிக்கப்பட்டுள்ளதோடு நகருக்கு பெருமைகூட்டிய தொழில் அமைப்புகளான பின்னி, பக்கிங்காம் அண்ட் கர்நாடிக் மில்ஸ், சிம்சன், ஹிக்கின்பாதம்ஸ், பி ஆர் அண்ட் சன்ஸ் போன்ற நிறுவனங்களின் வரலாறு விவரிக்கப்பட்டுள்ளது,
உயர்நீதி மன்றமும் சட்டக் கல்லூரியும் உருவானது பற்றிய செய்திகளையும் அறிகிறோம். 1892ல் நீதி மன்றத்தின் மேற்கே இந்தோ சாரசெனிக் அமைப்பில் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டிருக்கிறது. அதில் முக்கியத்துவம் என்னவெனில் வெள்ளையர் நகரின் முதலாவது இடுகாட்டின் மீது அதன் கட்டுமானம் அமைந்ததுதான்.
சென்னை நகரின் வரலாற்றுச் சிறப்பு 16ம் அத்தியாயத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. செங்குன்றமும் மாதவரமும் பல்லவர் காலத்திய புழலூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகள் என்பதையும், கோவில்மாதவரம் எனும் ஊரும் அங்கே கீர்த்தி வாய்ந்த சிவன் கோயிலும் இருந்தன என்பதையும் இவை தற்போது நகரத்திற்குட்பட்ட பகுதிகளாக விளங்குவதையும் முத்தையா கூறுகிறார். நகர மருத்துவ மனைகள் மற்றும் அயன்புரம் டாக்கர் சத்திரம் உருவாக்கம் பற்றிய குறிப்புகளும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.
17 மற்றும் 18 பகுதிகளில் பூந்தமல்லி சாலையையொட்டிய பகுதிகள் விவரிக்கப்பட்டுள்ளது. தவிர பாந்தியன் சாலையில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தின் தோற்றுவாயையும் அறிகிறோம். இப்பகுதியில் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஆவணக் காப்பகம் குறித்து விரிவாகவே அறிய முடிகிறது.
1672ல் ஃபாக்ஸ்கிராஃப்ட்டுக்குப் பின்னர் மாகாண கவர்னராக நியமனம் செய்யப்பட்ட சர் வில்லியம் லாங்ஹார்ன் 1670 முதற்கொண்டு நடைபெற்று வந்த கடிதப் போக்குவரத்து உத்தரவுகள் இதர ஆவணங்கள் யாவற்றையும் முறைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டார். இதன் பின்னரே ரிகார்ட் ஆபீஸ் அமைப்பு உருவாகியிருக்கிறது. இதன் தலைவராக அரசியல் மற்றும் ராணுவ அமைப்பைச் சார்ந்த முத்தையா என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த அலுவலகம்தான் 1909ல் எழும்பூருக்கு இடம் பெயர்ந்திருக்கிறது.
19ம் அத்தியாயத்தில் மவுண்ட் ரோடின் தென்பகுதி பற்றிய விவரணங்களைக் காண முடிகிறது. மஹாபில்வ க்ஷேத்திரம் என்பதே மாம்பலம் ஆகியது என்ற அவரது தகவல் ஆய்வுக்குரியதாகும். சென்னைப் பட்டணத்தின் பல்வேறு பகுதிகளுக்குள்ளே முத்தையா நம்மை அழைத்துச் செல்வதோடன்றி, அதன் வரலாற்றுத் தொடர்புகளை, பண்பாட்டியலை, ஆட்சி நிர்வாகத்தை அடிப்படையாக விவரணம் செய்வதாக இப்புத்தகம் அமைந்ததுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளுடன் வரலாற்றினை தொடர்புபடுத்தும் கூறுகளை நம்மால் இனங்காண முடிகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு நகரின் வரலாற்றை மேஜிக்கல் ரியலிசத்தோடு முன்வைப்பதாகவே உள்ளது. இதுதான் முத்தையாவின் சிக்னேச்சர் ஸ்டைலாக பின்னாளில் பெரும் வரவேற்பினையும் பெற்றிட்டது.
சென்னையில் கடந்த காலமும், நிகழ் காலமும், எதிர் காலமும், பாரம்பரியமும், தற்போதைய நிலையும், முன்னேற்றமும் பெரிதும் போற்றுதலுக்குரிய புரிதலுடனும் வசீகரமான சகிப்புத்தன்மையுடனும் அருகருகே இருந்து வருகிறது என்று முத்தையா நிறைவு செய்கையில் போற்றுதலுக்குரிய அப்பண்பாட்டியல் தொடர்ந்திட வேண்டும் என்று நாமும் உத்வேகமடைகிறோம்.
கட்டுரையாளர் :
ராமச்சந்திர வைத்தியநாத்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.