1917 ஜுன் 17இல் ஹோம் ரூல் லீக்கின் தலைவர் பெசன்ட் அம்மையாரும் அவருடைய சகாக்களான ஜி எஸ் அருண்டேலும் பி பி வாடியாவும் உதகமண்டலத்தில் பாதுகாப்புக்காவலில் வைக்கப்பட்டனர். நாடெங்கிலும் எழுந்த கண்டனங்களுக்கு பிறகு அரசு தன் ஆணையை விலக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. 1917 கல்கத்தா இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்….
… வ உ சிதம்பரம் பிள்ளை, சுப்ரமணிய சிவா, பி பி வாடியா போன்றோர் கேந்திரமான தொழில்களில் தொழிலாளர்களைத்திரட்டி ஒரு மாபெரும் பொது வேலைநிறுத்தத்தை நடத்தினால் ஆங்கில அரசு வீழ்ந்துவிடும் என நம்பினார்கள்…. 1917 அக்டோபர் புரட்சிக்கு பிறகு தொழிலாளர் வர்க்கத்தின் புரட்சிகரத்தன்மையை தேசிய தலைவர்கள் உணரலாயினர். உருசியாவில் இருந்து வந்த செய்திகள் தம்மை மிகவும் கவர்ந்தன என்று திரு வி க குறிப்பிட்டுள்ளார். சுப்ரமணிய பாரதியார் உருசியப்புரட்சியை வரவேற்று பாடல் இயற்றினார். அந்நாட்டு செய்திகளை வெளியிட்டு அவற்றுக்கு விளக்கங்கள் அளித்தார்.
…. சென்னைத்தொழிலாளர் சங்கம் தான் இந்தியாவில் அமைக்கப்பட்ட முறையான முதல் தொழிற்சங்கமாகும். இரண்டு வணிகர்கள் அதன் தோற்றத்திற்கு வித்திட்டார்கள். துணிக்கடை நடத்திய செல்வபதி செட்டியார், அரிசி மண்டி நடத்திய இராமாஞ்சலு நாயுடு. இருவரும் இளைஞர்கள், நண்பர்கள். இருவரது கடைகளும் பெரம்பூர் பட்டாளத்தில் டிமெல்லோ சாலையில் பக்கிங்ஹாம் கர்நாடிக் ஆலைகளுக்கு அருகில் இருந்தன. …தன் கடைக்கு வரும் பி அண்ட் சி மில் தொழிலாளர்கள் சொல்லும் அன்றாட துன்பங்களை கேட்டு வருத்தப்பட்டார் செல்வபதி. குறிப்பாக 1917இல் நடந்ததாக கூறப்பட்ட ஒரு நிகழ்வு அவருக்கு பேரதிர்ச்சியை தந்தது. கழிப்பறைக்கு மிக அவசரமாக செல்ல வேண்டிக் கேட்ட ஒரு தொழிலாளிக்கு மேலாளர் அனுமதி மறுத்தார். துன்பம் தாங்கமுடியாத தொழிலாளி வேலைத்தலத்திலேயே மலம் கழித்துவிட்டார். கோபமுற்ற மேலாளர் அந்த தொழிலாளியையே மலத்தை அப்புறப்படுத்தி இடத்தை கழுவ செய்தார். இது கேட்ட செல்வபதி, இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று துடித்தார். இந்தியன் பேட்ரியாட், சுதேசமித்திரன் பத்திரிகைகளில் இந்த நிகழ்ச்சி பற்றியும் மில் தொழிலாளர்கள் அவலநிலை பற்றியும் கட்டுரை ஒன்றை வெளியிட செய்தார்.
செல்வபதி செட்டியார் தன் பாட்டனார் நிறுவிய  ஒரு பஜனை மடத்தை நிர்வகித்து வந்தார். ஸ்ரீ வேங்கடேச குணாம்ருத வர்ஷிணி சபா என்ற அந்த அமைப்பு, அவருடைய கடை இருந்த அதே கட்டிடத்தில்தான் இயங்கி வந்தது. சபையின் ஆதரவில் கதா காலட்சேபம், சமய சொற்பொழிவுகள், பஜனைகள் நடைபெற்று வந்தன. கண்ணபிரான் முதலியார், திரு வி க உள்ளிட்ட பலரும் இங்கு சொற்பொழிவு ஆற்றுவர், ஆலைத்தொழிலாளர்கள் இந்த கூட்டங்களுக்கு வருவார்கள்.
… …. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளையர் கொடுமைகளை எதிர்த்து காந்தி இந்தியர்களை திரட்டிய செய்தியால் உற்சாகம் அடைந்த அவர், இராமாஞ்சலு நாயுடுவுடன் பேசினார். சபையின் கூட்டங்களுக்கும் தம் கடைகளுக்கும் வரும் தொழிலாளர்களின் குறைகளை கேட்டு குறிப்புகள் எடுத்தார். அவர்களின் தனிப்பட்ட குறை தீர்க்க ஆலை நிர்வாகத்துக்கு மனுக்கள் எழுதலானார். இதனால் ஓரளவு வருமானமும் கிடைக்க, உற்சாகம் அடைந்த இரு நண்பர்களும் 1917ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று சபையின் ஆதரவில் ஒரு கூட்டம் கூட்டினார்கள். 30 தொழிலாளர்கள் வந்தார்கள். வைணவ சமயப்பிரச்சாரகர் கண்ணபிரான் முதலியார் மகாபாரதம் பற்றிய பேருரை ஆற்றி இறுதியில் தொழிலாளர்கள் சங்கம் அமைக்க வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார். சங்கத்தில் சேர விரும்பும் தொழிலாளர்கள் இராமாஞ்சலு நாயுடுவின் கடையில் வைத்திருக்கும் பதிவேட்டில் கையொப்பம் இடவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. கணிசமான தொழிலாளர்கள் கைச்சாத்து இட்டு தம் ஒப்புதலை தெரிவித்தனர்.
…1918 மார்ச் 2 அன்று பெரம்பூர் ஸ்டாதம்ஸ் சாலையில் உள்ள ஜங்க ராமாயம்மாள் தோட்டத்தில் கவுரவ மாஜிஸ்திரேட் ஆக இருந்த சுதர்சன் முதலியார் என்பவரின் தலைமையில் 10000 தொழிலாளர்கள் திரண்ட கூட்டத்தில், திரு வி க எளிய தூய தமிழில் ஆணித்தரமாக சொற்பொழிவு நிகழ்த்த, கூட்டுறவு துறை அலுவலர் குலாம் முகமது என்பாரும் பேசினார். பெரும் உற்சாகம் பெற்ற தொழிலாளர்கள், சங்கம் தொடங்கப்படும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நின்றார்கள்…. ஆலை நிர்வாகம் எச்சரிக்கை அடைந்தது. காவல்துறையினர் காரணங்கள் சொல்லி தலைவர்களை மிரட்டியது. இவ்வாறு முதலாளியும் காவல்துறையும் சேர்ந்து சங்கத்தை முளையிலேயே கிள்ளி எறிய முயன்றனர்.
…… …. சங்கம் அமைக்க வேண்டும் எனில் இளைஞர்கள் ஆன தாங்கள் இருவரால் மட்டுமே முடியாது என்று உணர்ந்த இருவரும், மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற பெரிய மனிதர்கள் சிலரை ஈடுபடுத்த வேண்டும் என்று கருதி, திவான் பகதூர் குத்தி கேசவப்பிள்ளையை அணுகினார்கள். திரு வி கவும் அவரை அணுகினார். சென்னை மாகாண சபை என்னும் மதிப்புக்கு உரிய அமைப்பின் தலைவராக இருந்த அவர், ஏற்கனவே ரயில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட தொழிலாளர் பிரச்சினைகளில் முன்னின்றவர், பத்திரிகைகளில் தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து எழுதுபவர். தகுதி வாய்ந்த அவரோ தான் சென்னையில் வசிக்காத போது அப்பதவியை ஏற்பது சரியில்லை என்று மறுத்தார். ஆனாலும் இளைஞர்கள் இருவரையும் அன்னி பெசன்ட் அம்மையாரை பார்க்க அழைத்துக்கொண்டு சென்றார். அம்மையார் அப்போது இல்லாமல் இருந்ததால் அவருடைய சீடர் பி பி வாடியாவிடம் தங்களது நோக்கத்தை விரிவாக எடுத்து சொல்ல, பின்னி ஆலை பிரச்சினைகள் பற்றி அதுவரை ஒன்றும் அறிந்திடாத வாடியா உள்ளம் நெகிழ்ந்து தொழிலாளர்களை சந்திக்க முன்வந்தார்.
1918 ஏப்ரல் 13 அன்று வாடியா தொழிலாளர்கள் மத்தியில் பேச, திரு வி க அதனை தமிழில் மொழிபெயர்த்து கூறினார். தொடர்ந்து 7 சனிக்கிழமைகள் இப்படி கூட்டங்கள் நடந்தன. மூன்றாவது கூட்டம் நடந்த 1918 ஏப்ரல் 27 அன்று மதராஸ் லேபர் யூனியன் Madras Labour Union முறையாக நிறுவப்பட்டது. சங்கத்தின் தலைவர் வாடியா, துணைத்தலைவர்கள் கேசவப்பிள்ளை, திரு வி க, இன்னும் சிலர், செயலாளர்கள் செல்வபதி செட்டியாரும் இராமாஞ்சலு நாயுடுவும்.
… …. ….
அதன் பின் பிற தொழில்களில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்களும் சங்கம் அமைக்கலாயினர். டிராம்வே, மின் விநியோகம், எம் எஸ் எம் ரயில்வே பட்டறை, அச்சகங்கள், மண்ணெண்ணெய் விநியோகம், அலுமினிய பாத்திர உற்பத்தி தொழிலாளர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், துப்புரவு தொழிலாளர்கள், ரிக்சா இழுப்போர், ஐரோப்பியர்கள் வீடுகளில் வேலை செய்தோர் என அவர்களும் சங்கம் நிறுவினார்கள். காவல்துறையினர், அஞ்சல் துறை ஊழியர்களும் கூட சங்கம் அமைக்க முயன்றார்கள் என்றால் அப்போது நிலவிய தொழிற்சங்க உணர்வின் தீவிரத்தை உணரலாம். ஒவ்வொரு சங்கமும் முறையான சட்ட திட்டங்களுடன் நிர்வாகிகளுடன் இயங்கின.
… …
பி பி வாடியா, திரு வி க, இ எல் ஐயர், கஸ்தூரிரங்க அய்யங்கார், வ உ சி, இராஜகோபாலாச்சாரி, தண்டபாணிப்பிள்ளை, ஹரி சர்வோத்தமராவ், வி சக்கரைச்செட்டியார், குமாரசாமிச்செட்டிஆகியோர் வெவ்வேறு சங்கங்களில் நிர்வாகிகளாக இருந்தனர்.
… … …. …. … ….
உதவிய நூல்: சென்னைப்பெருநகர தொழிற்சங்க வரலாறு, 
முனைவர் தே. வீரராகவன், தமிழில் ச சீ கண்ணன், புதுவை ஞானம்.
அலைகள் வெளியீட்டகம், 2003 பதிப்பு.
Elango Sivam
Prabhu
Robert Ebenazer
Paulsamy Balu
Lenin Sundar

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *