#Bookday
#April23
புத்தகம் – சென்னையிலிருந்து 400 கி.மீ
ஆசிரியர் – திரு. மானா பாஸ்கரன்
வெளியீடு – முற்றம்
புத்தகம் அற்புதமான 20 கதைகளைக் கொண்டது. ஒவ்வொரு கதையும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்களையும், கள்ளம் கபடம்ற்ற அவர்களின் தூய்மையானப் புன்னகைபையும், தனது கதைகளின் ஒட்டத்தில் விதைத்திருக்கிறார்கள்.
எளிமையாய், வாழ்க்கைச் சக்கரத்தில் பயணம் செய்யும் மானுட நேசர்களை, அவர்களின் சோகங்களையும், துக்கங்களையும் கதையாய் சொல்லி நமக்கு அப்படியான மனிதர்களை அறிமுகம் செய்கிறார்கள்.
“ஆகாயம் நீயே” எனும் கதையில் சிறு வயதிலே தந்தை இறக்க தயாளனும், அம்மாவுமாய் வாழ்க்கைச் சக்கரத்தில் ஓடுகிறார்கள். படித்து முடித்து எட்டு ஆண்டுகள் கடந்தவனுக்கு மெட்ராசில் வேலைக்காக ஆர்டர் வர மாலை கிளம்ப வேண்டும். அம்மாவுக்கு மூச்சு திணறல், சுவாசக் கோளாறில் இறந்து போகிறார். இன்று மாலை கிளம்பினால் தான் நாளை வேலையில் சேர முடியும். அம்மாவை அடக்கம் செய்ய வேண்டும். உறவினர்கள் தயாளனை சென்னைக்கு கிளம்பச் சொல்ல, அம்பிடித்து மாட்டேன் என்பவனை, அம்மாவின் ஆசை அது தானே தயாளா என சுந்தர் மாமா சொன்ன பின் பேருந்தில் பயணம் செய்கிறான். கொஞ்ச தூரம் சென்றதும் இடையில் பேருந்து நிற்கிறது. அங்கு ஒரு அம்மா தனது மகனைத் தேடி பரிதவிக்கிறாள். இதைப் பார்த்த தயாளன் அடுத்த நொடியே நம் அம்மாவும் இப்டித்தானே நம்மை அலை மோதித் தேடுவாள் என கண்கள் அழுது கொண்டே ஊருக்கு அம்மாவுக்காக திரும்புகிறான் என கதை முடிகிறது.
அதில் ஒரு கவிதை இடம்பெறுகிறது.
//அம்மாவின்
எல்லா நகையும் மூழ்கியது
நான் கரையேறினேன்//.
“விடியலை நோக்கி ” எனும் கதையில் தனபால் எனும் கதாபாத்திரம் வழியாக, நேர்மையாய் வாழவும், யாருடைய சிபாரிசுக்காகவும் நின்று வேலை வாங்கக் கூடாது என்பதை தனபால் வழியாக நேர்மையை கதையாக பரிசளிக்கிறார்கள்.
அதில் ஒரு வரி….
பெட்டியை எடுத்துக் கொண்டு கீழிறங்கி “அவன் கால்களால் அவன் நடக்க” ஆரம்பித்தான் என முடியும்.
செங்காய் எனும் கதையில் கேசவன் அப்பா ஒரு கம்பெனியில் எல்லாமே அவர்தான். அந்தக் கம்பெனியில் வேலை செய்ய ஆசைப்படுகிறான் கேசவன். இண்டர்வியூ நடந்து முடிகிறது. ஆனால் கேசவன் தேர்வாகவில்லை. அப்பா தன் பிள்ளையைப் பற்றி நன்றாக தெரிந்து இருந்ததால், மகன் என்று தெரிந்தும், நேர்மையாய் நடக்கிறார். பின் கேசவனுக்கு வாழ்க்கையில் எப்படி நடக்க வேண்டும் புரிய வைக்கிறார். அதைப் புரிந்து பழமாய் பழுக்க ஆரம்பிக்கிறான்.
இப்படியாக ஒவ்வொரு சிறு கதையும், நேர்மையையும், அறத்தையும் எளிய மனிதர்கள் மூலம் தன் தேன் தமிழ் சொற்கள் வழியாய் மனிதர்களுக்கு ஊட்டுகிறார்கள்.
தனது பால்யங்களில் நடந்த நிகழ்வுகளை பத்திரமாய் பத்திரப்படுத்தி கதைவழி மாந்தர்களாய் நம் முன் காட்சிப்படுத்துகிறார்கள். அதில் கமலாலய குளமும் தப்பவில்லை.
“தரைக்கு வந்த நட்சத்திரம்: எனும் கதையில் எதிர் வீட்டில் வந்தமரும் புது ஸ்வீட்டி பெண். அம்மா மற்றும் மகனுக்கும் இடையில் மனதை புரிந்து கொள்வதில் யார் கை தேர்ந்தவர்? கடைசியில் அம்மாவை மிஞ்ச முடியுமா? அற்புதமான இளசுகளை சுண்டி இழுக்கக் கூடிய கதை.
“வானத்தை குழைத்து” சாவி வார இதழில் நடந்த போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளது.
ஒரு ஒவியரின் வாழ்க்கையை தூரிகையாய் எழுத்தில் வனைந்து இருப்பார்கள். ஒவியம் வரைபவரின் நேர்மை, அவரின் வாழ்க்கை மாறிய விதம், எந்த சிறுவனுக்கு ஒவியம் வரைய கற்றுத் தந்தாரோ அதே சிறுவன் தான் பெரியவன் ஆனதும், ஒரு விளம்பரம் பார்த்து அவரின் ஓவியம் வாங்க சந்திக்க என கதை நெடுகும், ஒவியமும், நேர்மையையும் பேசிப் போகும் கதை. கடைசியில் க்ளைமாக்ஸ் வரிகள் நம்மை அழுகவே வைத்து விடும்.
அப்பா எனும் கதை அப்பா மகனுக்கு இடையில் பாசம், அன்பு, வேலை , உழைப்பு, அவர் சொல்லித் தந்த வார்த்தைகள் னெ கதைகள் எங்கும் விதைத்திருப்பார்கள். அப்பா கேட்ட ஒரு உல்லன் சால்வை வாட்டி வைத்து இருப்பான். இதற்கிடையில் அப்பா இறக்கிறார். இறந்த அப்பாவின் உடலுக்கு போர்த்தி அழகு பார்க்கும் அந்த நிமிடம் நம்மையே வார்த்தைகள் கண் கலங்க வைத்திடும்.
“சென்னையிலிருந்து 400 கிலோ மீட்டர்” எனும் கதையில் கிராமத்து மனுசியின் மனதை அச்சு அசலாய் கதையில் கொண்டு வந்து நகரத்தின் நரகத்தை தோலுரித்து காண்பிக்கிறார்கள். நகரத்தின் நல்ல உள்ளங்களையும் காண்பிக்கத் தவறவில்லை. கிராமத்தில் வாழ்ந்த மனிதர்கள் வயதான போதிலும் கிராமத்திலேயே இருக்கவே நினைக்கும். நகரத்தில் அதுவும் நான்கு சுவருக்குள் அவர்களால் இருக்க முடியாது என்பதற்கு இந்தக் கதையே காட்சி மற்றும் சாட்சி.
நாம் வாசிக்க வேண்டிய கதைகள். ஒரு வேளை அது நமக்காகக் கூட நடந்து இருக்கலாம். இதன் இருபது கதைகளும் என்னை பாதித்தன. எனது வாழ்வியலோடு தொடர்புடையது.
மொத்தக் கதைகளும் மனிதத்தையும், மானுட நேசர்களின் ஈரத்தையும், தனது சொல்லாடல்கள் மூலம் கதைகளாய்ப் பேசுகிறார்கள். குடும்ப நிகழ்வுகளையும், இளைஞர்கள் பற்றியும், சிறு சிறு பிரச்சினைகளையும், மனித வாழ்வியலை மனிதப் புதையலை கதை மாந்தர் வழியே பேசுகிறார்கள்.
வீரசாேழன்.க.சாே.திருமாவளவன்