சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்

 

சிம்சனில் பெற்ற பயிற்சி

சிம்சன் நிறுவனத்தில் எனது பணியும், அங்கு அன்றையத் தேதிகளில் நடந்த போராட்டங்களும் எனது வாழ்க்கையில் முற்றிலும் எதிர்பாராத திருப்பங்களை கொண்டதாக அமைந்துவிட்டது.  1962ல் சிம்சன் நிறுவனத்தின்   பிளான்ட்1 (மவுண்ட்ரோடு)இல் பயிற்சியாளனாக சேர அனுபவித்த சிரமங்களை முதலில் சொல்லியாக வேண்டும்.  அதோடு புத்தி கொள்முதல் பெற்றதையும் சொல்லவேண்டும்.

சிம்சன் முதலாளி அனந்த ராமகிருஷ்ண ஐயர் எனது ஊருக்கு அருகிலிருந்த ஆழ்வார்குறிச்சியை சார்ந்தவர்.  1962ல் ஆழ்வார்குறிச்சி கிராம முன்சீப் உதவியுடன் அவரை ஆழ்வார்குறிச்சிலேயே சந்தித்து  சிம்சனில் எ.ஐ.எம்.இ படிக்க பயிற்சியாளனாக சேர மனுக் கொடுத்தேன்.  அவர் சென்னையில் சிம்சன் நிறுவனத்தின் ஜெனரல் மனேஜரும், தனது உறவினருமான  அனந்தராம ஐயரைப் பார்த்து மனுவைக் கொடுக்கச் சொன்னார்.  அவரை சந்திக்கும் பொருட்டு மவுண்ட்ரோடு சிம்சன் அலுவலகம் சென்றேன்.   அவரது அறைக்கு வெளியே இருந்த அவரது உதவியாளரிடம் விவரம் கூறினேன்.  அவர் எனது மனுவைப் பெற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் கழித்து சரியாக எட்டு மணிக்கு வரச்சொன்னார். இரண்டு நாட்கள் கழித்துச் சென்றேன்.  ஜெனரல் மனேஜர் அறைக்கு வெளியே  எட்டு மணியிலிருந்து பதினொன்று மணிவரை காத்திருந்தேன்.   . உதவியாளர் மணிச்சத்தம் கேட்டதும் உள்ளே போங்கள் என்று கூறிவிட்டு, அலுவல் காரணமாக அகன்று விட்டார்.   மணி அடித்ததும் உள்ளே சென்றேன். உள்ளே போனதும் கடுகடுப்பான முகம் கொண்ட அனந்தராம ஐயர், “யார் நீ? மணி அடித்ததும் உள்ளே நுழைந்து விட்டாய்” என்று கேட்டார்.  நான் விவரம் கூறினேன். “இதென்ன பள்ளிக்கூடமா, படிப்பதற்கு மனுப்போடுகிறாய்?  உன்னை படிக்க வைக்க உங்கப்பன் வீட்டுச் சொத்தா? பலலட்சம் முடக்கி எந்திரங்களை வைத்துள்ள தொழிலகமாகும்.  பயிற்சியாளனாக சேர்க்க முடியாது”  என்று துரத்திவிட்டார்.  அவர் அதிகம் படிக்காதவர் என்று தெரிந்து கொண்டேன்.

Simpson & Co Limited | Clientele Gallery - V3 Colour Solutions

நான் கடிதம் மூலம் கோவிந்தப்பேரியிலிருக்கும் எனது தந்தைக்கு தகவல் கொடுத்தேன்.  இதற்கிடையில் அந்த கிராம முன்சீஃப் சாவடி சிதம்பரம் பிள்ளை என் தந்தையிடம் ஒருவண்டி வைக்கோல், மூன்று மரக்கால் ஆனைக்கொம்பன் நெல்விதை  ஆகியவற்றை அன்பளிப்பாக பெற்றுவிட்டார்.  எனது தந்தை அவரிடம் தகவல் கூறியதும் அவர் சென்னைக்கு வரும்போது அவரை சந்திக்கும்படி கூறியதாக முகவரியையும் சேர்த்து எனது தந்தை கடிதம் மூலம் தகவல் கொடுத்தார்.   அவர் சென்னை வந்தவுடன் மீண்டும் அனந்தராமகிருஷ்ண ஐயரை சந்திக்க என்னை அழைத்துச் சென்றார்.  போகும்போதே “தம்பி நான் முதலில் அவரது அறைக்குள் போவேன், பின்னர் அழைக்கும் பொழுது உள்ளேவா, வந்தவுடன் கும்பிடு போட்டு கையைக்கட்டி நில்.  அவர் சொல்லுகிறவரை உட்கார்ந்துவிடாதே, அதிகம்பேசாதே”  என்று உபதேசம்செய்தார்.  அது போல் நான் நடந்து கொண்டேன்.  அவர் உடனே கிருஷ்ணமூர்த்தி ஐயர்  என்ற பஞ்சகச்சம் கட்டி தலைப்பாகை தரித்திருந்த உதவியாளரை வரவழைத்து ஆங்கிலத்தில் என்னைப் பற்றிக் கூறி பின்புறமிருக்கும் பரந்த ஒர்க் ஷாப்பிற்கு அனுப்பி வைத்தார்.   1962 ஜுன் முதல் 1963 ஏப்ரல் வரை நான் சம்பளம் பெறாத பயிற்சியாளனானேன்.

எனது கனவு சிம்சன் டூல் ரூமில் என்ஜினின் உதிரி பாகங்கள் செய்யும் கருவிகளைத் தயாரிக்கும் அனுபவங்களை பெற்று, சொந்தமாக தொழில் செய்வது என்பதுதான்.  அது கனவாகவே நின்று போனது.   என்னை அங்கே எக்சாஸ்ட்ஃபேன் இரைச்சலிலே என்ன நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க வைக்கப்பட்டேனே தவிர, எந்திரத்தை கையாள அனுமதிக்கப்படவில்லை.

ஒர்க் ஷாப்பிற்கு உள்ளே போனபிறகுதான் ஒன்றைக் கண்டேன்.  ஆழ்வார்குறிச்சி கிராம முன்சீஃப் ஏராளமான நெல்லை மாவட்டத்து படிப்பில் தேறாத இளைஞர்களுக்கும், எல்.எம்.இ படித்த இளைஞர்களுக்கும் சிம்சனில் வேலை வாங்கி கொடுத்து விசுவாசத்தையும் அன்பளிப்பையும் பெற்றுவருபவர் என்பதை அறிந்தேன்.  சிம்சன் நிர்வாகம் யாரையும் நேர்காணல் மூலம் வேலைக்கு ஆள் எடுப்பதில்லை, எல்லா மாவட்டங்களிலிருந்தும் அரசு  அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து முதல் சட்டமன்ற உறுப்பினர்வரை சிபாரிசு செய்பவர்களையே வேலைக்கு ஆள் எடுக்கும் முறையாக கையாண்டது.  நான் பள்ளிக்காலங்களில் அறிந்த பையன்களும் எனது உறவினர் வீட்டுப் பிள்ளைகளும் இங்கே பணி புரிவதைக் கண்டேன்.   அவர்களில் சிலர் பழைய கதவு எண் 145 சாமிநாயக்கன் தெரு வீட்டு மாடி முழுவதையும் வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர்.  பலர் திருவல்லிக்கேணியிலிருக்கும் லாட்ஜுகளில் மாத வாடகைக்கு இருந்தனர்.

Simpson & Co Ltd, Mount Road - Diesel Engine Dealers in Chennai - Justdial

எந்திரங்களைத் தொடவிடாமல் வேடிக்கை பார்க்கிற நிலையை நினைத்து அவர்களிடம் புலம்புவேன்.  சிம்சன் தொழிலகத்தில் ஒரு விநோதம் இருந்தது.  அங்கு கழிப்பறைகளின் ஒரு பகுதியான வரண்டாவே தகவல் பரிமாறும் மன்றமாக இருந்தது.  அந்தப்பகுதியில் உள்ள கழிப்பறைகளை அதற்காக யாரும் பயன்படுத்தமாட்டார்கள். புகை பிடிக்குமிடமாகவும், சீட்டாடுமிடமாகவும், அரட்டை அடிக்குமிடமாகவும் அப்பகுதி இருந்தது.  நிர்வாகம் இதை அறிந்தே கழிப்பறை வளாகத்தின் தலைவாசலில் டைம்கீப்பர்  ஒருவரை நியமித்து கண்காணித்தது.  இவர் உள்ளே போய் வெளியே வருகிற தொழிலாளியின் டோக்கன் நம்பரோடு கழித்த நேரத்தை குறிப்பிடுவார்.  அது அந்த ஊழியரின் ஜாப்கார்டிலே பதிவாகும்.  ஒரு தொழிலாளி ஜாப்கார்டில் குறிப்பிட்ட அளவை எட்டிவிட்டால் கழிப்பறை டைம் கணக்கில் வராது.  அந்த அளவை தொடவில்லையானால் இங்கு கழித்தநேரம் சம்பள வெட்டாகும்.

பூசாரியைக் கண்டேன்

என்னோடு பணிபுரிந்த எனது நண்பர்கள் அங்கேயே பணிபுரிய சம்மதித்தால் பயிற்சியாளனாக எந்திரங்களை இயக்க கற்க முடியும், அதற்கு நிர்வாகத்திடம் போக வேண்டாம், தொழிற்சங்க தலைவர் மனது வைத்தால் போதும் என்ற ஆலோசனையை கூறினர்.     அப்போது தொழிற்சங்க தலைவராக குருமூர்த்தி ஐயர் இருந்தார்.   ஒரு தொழிலாளி பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டுமானால் தொழிற் சங்கத் தலைவர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்றநிலை அங்கு இருந்ததை அறிந்தேன்.  அதே நேரத்தில் நிர்வாகம் ஏற்கிறவரையோ அல்லது அன்றைய முதல்வர் காட்டுகிறவரையோ தொழிற்சங்கம் தலைவராக வைத்துக் கொள்ளமுடியும்.  குரூப் லீடர்களை வேண்டுமானால் தொழிலாளர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை இருந்தது என்பது எனக்கு பின்னர்தான் தெரிய நேர்ந்தது.

குரூப் லீடர் நடேசன் என்பவர் உதவியுடன் சங்க அலுவலகம் சென்று தலைவர் குருமூர்த்தியை சந்திக்கச் சென்றேன். அவர் அறைக்கு வெளியே என்னை உட்கார வைத்துவிட்டு தலைவர் கூப்பிடும் பொழுது உள்ளேபோ என்று கூறிவிட்டு, வேறு  வேலையை கவனிக்கப் போய்விட்டார்.  சிம்சன் நிர்வாக அலுவலகத்திலிருந்த அதே கெடுபிடி இங்கும் இருப்பதைக் கண்டேன்.   அங்கு தலைவரின் எடுபிடிகள் காட்டும் பந்தாக்கள் என்னை அசரச் செய்தது.  தலைவரின் தரிசனத்திற்கு என்னைப் போண்று பலர் காத்துக் கிடந்தனர்.  கடைசியில் தலைவர் உள்ளே கூப்பிடுவதாக ஒருவர் சொன்னார்.  உள்ளே சென்றேன்.  முதலாளி அனந்தராமகிருஷ்ணன் அறையில்கூட வருவோர் போவோர் உட்கார நாற்காலிகள் போடப்பட்டிருக்கும்.  ஆயின் தொழிற்சங்கத் தலைவர் அறையிலே அவர் உட்கார்ந்திருந்த நாற்காலி தவிர வேறு நாற்காலி கிடையாது. நான் நின்று கொண்டே பதில் சொன்னேன். “போ,ஒரு வாரத்திலே உனது அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை ஒர்க்ஸ் மனேஜர் தருவார்” என்று அனுப்பிவிட்டார்.

கல்லூரியில் படிக்கும் பொழுது கம்யூனிஸ்டுகள் நடத்தும் கூட்டங்களுக்குச் செல்வேன். அங்கு சமூக மாற்றங்களை குறிப்பிடும் பொழுது பழைய பண்ணை அடிமை முறையில், உழைப்பாளிகளை அவமானப்படுத்தியே வேலை வாங்குவதையும். முதலாளித்துவ கட்டத்தில் வர்க்கப் போராட்டத்தின் காரணமாக சமமாகவே கருதுவர் என்பதையும், அவமானப்படுத்தினால் உழைப்பாளிகளின் கைகள் ஒத்துழைக்காது என்பதை முதலாளிகள் அறிவர் என்பதையும் கூறக் கேட்டிருக்கிறேன்.   ஆயின் சிம்சனில் அதற்கு நேர்மாறாக இருப்பதை  கண்டேன்.

வே .மீனாட்சிசுந்தரம்

அப்பாவி தொழிலாளர்கள் சிம்சன் முதலாளியை குலதெய்வமாகவும்,  தொழிற்சங்கத் தலைவர் குருமூர்த்தியை பூசாரியாகவும் கருதும் படாடோபம்  இருப்பதைக்  கண்டேன். அநேகமாக சென்னையில் பல  புதிய என்ஜினியரிங் தொழிற்சாலைகளில் தொழில்  நடத்தும் தெய்வங்களை ஆட்டிப்  படைக்கும் பூசாரிகளாக தொழிற்சங்கத் தலைவர்களை கருதும் பார்வை முதல் தலைமுறை  தொழிலாளர்களிடையே பரவலாக அன்று இருந்து வந்தது என்பதை காலப்போக்கில் அறிந்தேன்.

எனது கிராமத்தில் எங்களது வயலில் வேலை செய்பவர்களையும், மாடு மேய்ப்பவர்களையும் நான் எப்படி சிறுவயதில் அவமதித்தேனோ அது இங்கே எனக்கே நேர்ந்தது.   அது எப்படி வலிக்குமென்பதை அப்பொழுது உணர்ந்தேன்.  இந்த வரியை எழுதுகிற பொழுது எனக்கு 2006 ம்ஆண்டு தலித்முரசு இதழில் வந்த கவிதையை வாசகர்களோடு பகிர்வது அவசியமென கருதுகிறேன்.

வலி

சாணிப்பால் ஊற்றி

சவுக்கால் அடித்தான்

என் பூட்டனை உன் பூட்டன்.

காலில் செருப்பணிந்ததால்

கட்டி வைத்து உதைத்தான் 

என் பாட்டனை உன் பாட்டன்

பறைக்கு எதுக்குடா படிப்பு என

பகடி செய்து ஏசினான்

என் அப்பனை உன் அப்பன்.

‘உங்களுக்கென்னப்பா?

சர்க்காரு வேலையெல்லாம்

உங்க சாதிக்குத்தானே’

என சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

ஒன்று செய்

உன்னை அறியாத ஊரில்போய்

உன்னைப் பறையனென்று சொல்!

அப்போது புரியும் என் வலி

  • ராசை.  கண்மணி ராசா (தலித் முரசு: பிப்ரவரி 2006)

இந்த தொழிலாளர்கள் சிங்காரவேலரையோ, திரு.வி.கவையோ அறியாதவர்களாக இருந்தார்கள்.   அதைவிட 1950களில் பிரிட்டீஷ் முதலாளியிடமிருந்து சுதேசி முதலாளியான அனந்தராமகிருஷ்ண ஐயருக்கு கைமாறிய காலத்து நிகழ்வுகள்கூட இவர்களுக்குத் தெரியாது.  தொழிலதிபர் அனந்தராமகிருஷ்ணன்,  தொழிற் சங்கத்  தலைவர்   குருமூர்த்தி ஆகியோரின் படங்களை பையில் வைத்து கும்பிடுவதை பார்த்திருக்கிறேன்.  இந்த உழைப்பாளி மக்கள் தங்களது நிலையை அறிய இயலாதவாறு ஆன்மிக அடிமைகளாக,  அடிமை புத்தியோடு இருக்க வைக்கவே முதலாளியும் தொழிற்சங்கத் தலைவரும் படாடோபத்தையும் பகட்டையும் பயன்படுத்துகின்றனர் என்பது என் புத்தியில் படத்துவங்கியது.  சுதேசி முதலாளித்துவத்தின் கட்டமைப்பு மேலை நாட்டு முதலாளித்துவத்தைவிட சற்று வேறுபட்டது என்பதை இப்பொழுது போல் அன்று நான் உணரவுமில்லை. எனது கனவு ஒரு தொழில் முதலாளியாக வேண்டும் என்பதோடு  அதற்கான அறிவைப்பெறுவதே ஆசையாகவும் இருந்தது.

குருமூர்த்தி சொன்னபடியே 1963ல் 4மாதம் பயிற்சிக்குப் பின், உதிரி பாகங்களின் தரநிர்ணய கண்காணிப்புத் துறையில் பணி நிரந்தரம் செய்யப்பட்டேன்.  இதனால் தொழிலாளர்களின் உதவியுடன் பலவற்றைக் கற்றுக் கொண்டேன்.  இடையிலேயே நெல்லை தொழிற்பேட்டையில் எனது நண்பரின் உறவினரும், நானும் பங்குதாரராகக் கொண்ட மோகன் இண்டஸ்டீரிஸ் எனும் நிறுவனத்தை பதிவுசெய்து அதற்கான தொழிற்கூடத்தை பெற ஏற்பாடுகள் செய்யத் துவங்கினேன்.  எனது பங்குதாரர் ஏனோ என்னை நம்பவில்லை.  சில மாதங்களிலேயே உறவு முறிந்தது.  நான் தனியாக தொழில் துவங்க இயலாத நிலையில் புதிய பங்குதாரரை தேடுவதென முடிவுசெய்தேன்.  ஆனால் சில நிகழ்வுகள் என்னை குருமூர்த்தி சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதை  கேள்விக்குரியதாக்கியது.  

(அடுத்துவரும்)

 

தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்க

தொடர் 9 ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 10ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்