சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

 

நிர்வாகத்தின் பிடியில் தொழிற்சங்கம்

“சில நிகழ்வுகள் என்னை குருமூர்த்தி சங்கத்தில் உறுப்பினராக நீடிப்பதை  கேள்விக்குரியதாக்கியது” என்ற வரிகள். இந்த தொடரின் 11வது கன்னியில் நிறைவு வரியாக வரும். இப்பதிவு அதன் தொடர்ச்சியாகும். 1963 அல்லது 1964 துவக்கமா என்பது ஞாபகத்தில் இல்லை. சிம்சன் தொழிற்சங்கத் தலைவர் குருமூர்த்தியின் மகள் திருமணத்திற்கு தொழிலாளர்கள் ஒருநாள் சம்பளத்தை நிர்வாகம் பிடித்து கொடுக்க ஒப்புதல்  கடிதத்தை கொடுக்கவேண்டுமென குரூப்லீடர்கள் தொழிலாளர்களை கேட்டு வந்தனர். சம்பளப் பட்டுவாடா சட்டப்படி நிர்வாகம் தொழிலாளியின் சம்பளத்தில் சம்மதமின்றி பிடித்தம் செய்யக்கூடாது என்பதால் அந்த ஒப்புதல் கடிதத்தை கேட்டனர்.  நான் சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்து விட்டேன். சில தொழிலாளர்கள் திருமணத்தன்று மொய்எழுதுவோம்  என்று கூறி கடிதம் தர மறுத்துவிட்டனர்.

ஷிஃப்ட் முடிந்து வெளியே போனதும் மில்ரைட்பிரிவிலிருக்கும் தலைவரின் விசுவாச ஊழியர்கள் கடிதம் கொடுக்க மறுத்த ஊழியர் ஒருவரை எதிரிலிருந்த பூங்காவிற்குள் இழுத்துச் சென்று மூக்கிலே குத்தி, கடிதம் கொடுக்காதவருக்கெல்லாம் இதுதான் கிடைக்குமென்று எச்சரித்து அனுப்பினர். மறுநாள் ஆலையில் இச்செய்தி தீயாய் பரவியது. மூக்கில் குத்து வாங்கிய தொழிலாளி சம்மந்தப்பட்ட குரூப் லீடரான நடேசனிடம் சொன்னபோது, அவர் தாக்கியவருக்கு ஆதரவாக பேசினார்,  அத்தோடன்றி ஒருநாள் சம்பளம் கொடுக்க உனக்கு வலிக்குதா தலைவர் குருமூர்த்தி சம்மதமில்லாமல் உனக்கு வேலை கிடைத்திருக்குமா?  நன்றி விசுவாசம் கெட்டவர்களுக்கு இதுதான் தண்டனை என்றெல்லாம் வாதிடலானார்.  கேட்டுக் கொண்டிருந்த நான் நடேசனை மடக்கி விவாதிக்கலானேன். அவர் என்னை மிரட்டும் தொனியில் பேசலானார்.   கூடஇருந்தவர்கள் விலக்கி விட்டனர். எனது சகபணியாளரான பி.ஜி.கே.மேனன் என்பவர் என்னிடம் பலவிவரங்களை கூறிய பின்னரே தொழிற்சங்கத்திற்கும் அரசியலுக்கும் உள்ள தொடர்பு இருப்பதை உணரத் தலைப்பட்டேன்.

சிம்சன் குரூப் தொழிலகங்களில் குருமூர்த்தி சங்கம் தவிர ஐ.என்.டி.யு.சி சங்கம் இருப்பதையும் பி.ஜி.கே.மேனன் அதன் நிர்வாகிகளில் ஒருவர் என்பதையும் அறிந்தேன். அதன் தலைவராக ரெங்கசாமி என்பவர் இருப்பதையும் அறிந்தேன்.  இது தவிர ஐ.என்.டி.யு.சியின் அகில இந்திய தலைவராக ராமானுஜம் என்பவர் இருப்பதையும் அறிந்தேன். 

Simpson & Group of Companies

அதேவேளையில் சிம்சன் நிர்வாகம் மேலைநாட்டு நிறுவன நிர்வாக முறையையும், அர்த்த சாஸ்திர சாரத்தையும் இணைத்து நிர்வகிப்பதில் பரிசு பெற்ற ஒன்று என்று அன்று என்னால் உணரமுடியவில்லை. சிம்சன் குரூப்பில் சில தொழிலகங்களில் ஐ.என்.டி.யு.சி ரெங்கசாமியை நிர்வாகம் ஏற்றுக் கொண்டிந்தது.  இன்று அண்ணாசாலை அன்று மவுண்ட்ரோடில் இருந்த அடிசன் டூல்ஸ் நிறுவனம் அதில் ஒன்றாகும்.   அங்கு குருமூர்த்தி சங்கம் நிர்வாக அங்கீகாரம் பெறாத போட்டி சங்கமாக இயங்கியது.  ஆனால் சிம்சனில் குருமூர்த்தி சங்கம் அங்கீகாரம் பெற்றதாகவும், ரெங்கசாமி சங்கம் அங்கீகாரம் பெறாத சங்கமாகவும் இயங்கி வந்தன.

அப்போதெல்லாம் சென்னையில் சங்கத்தின் தலைவரை தொழிலாளர்கள் தேர்வு செய்ய இயலாது. சம்பந்தப்பட்ட தொழிலதிபர் விரும்புகிற ஒருவரை தொழிற்சங்க தலைவராக அடையாளப்படுத்தி, அவரோடு தொழில் தகராறுசட்டம் 18(1) பிரிவின்படி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுக்கொள்ளும். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்கிற தொழிலாளிக்கு  மட்டுமே சம்பள உயர்வு கிடைக்கும். போட்டி சங்க உறுப்பினர்கள் தனித்தனியாக கையொப்பமிட்டால் ஒப்பந்தத்தில் உள்ள சலுகை கிடைக்கும்.

சிம்சன் குழுமத்தின் நிர்வாகத் தலைவரான அனந்தராமகிருஷ்ண ஐயர் போட்டி சங்கங்களை ஊக்குவித்து தொழில் அமைதியை நிலைநாட்டும் நிர்வாகத் திறமையை முதலில் வெளிப்படுத்தியவர். பத்திரிகை உலகம் அவரை “ஜே” என்றே குறிப்பிடும்.  அவரது ஆளுமை பற்றி தனியாக சொல்ல வேண்டும்.  ஏனெனில் தொழிலாளி சங்கம் வைப்பதே தனது உழைப்பு தனக்கெதிராக போவதை தடுக்கவே. ஆயின் அந்த சங்க அமைப்பையே தொழிலாளர்களுக்கெதிராக செயல்படவைக்கும் ஆற்றல் படைத்தவராக “ஜே” இருந்தார்.

குருமூர்த்தி மகள் திருமணத்தையொட்டி நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு குரூப் லீடர்கள் தேர்வு நடைபெற்றது. குரூப் லீடர் நடேசனின் அடாவடித்தனம் பிடிக்காத அந்தப் பகுதி தொழிலாளர்கள் அவரைத் தோற்கடிக்கத் திட்டமிட்டனர்.  தேர்தல் அன்று நடேசனை எதிர்த்து எபனேசர் என்பவரை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்து, முன்மொழிபவனாக நான் கையெழுத்திட்டேன்.

இந்த தேர்தலே வினோதமானது. தலைவர் நாற்காலி போட்டு மேசைமுன் தொழிலக போர்ட்டிகோவிலே உட்கார்ந்திருப்பார். வேலை நேரத்திலேயே தேர்தலும் நடக்கும் . துறைவாரியாக அழைக்கப்படும் பொழுது தொழிலாளி அவர் அருகே போய், யாருக்கு வாக்களிக்க விரும்புகிறோமோ அதை அவரிடம் சொல்லவேண்டும். தேர்தல் முடிவை அவர் மாலையில் ஊழியர்கள் கூட்டத்தில் அறிவிப்பார். இதுவே வழக்கமாக இருந்தது.

மாலையில் நடேசன் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக குருமூர்த்தி அறிவித்தார்,  மறுநாள் வேலைக்கு போகும்போது குருமூர்த்தியின் தில்லுமுல்லை பேசி தொழிலாளர்கள் ஆத்திரத்தை கொட்டித் தீர்த்தனரே தவிர, தலைவரை கும்பலாக போய்கேட்கக்கூட துணியவில்லை.

சகபணியாளரும் நண்பருமாகிவிட்ட பி.ஜி.கே.மேனன் குருமூர்த்தி சங்கம் உன்னை பழிவாங்கத் துடிக்கும், எனவே அதிலிருந்து விலகிவிடு என்றார். குருமூர்த்தி சங்கத்தை ஜனநாயகப்படி நடத்தபோராடுவேனே தவிர, விலகமாட்டேன், போராடுகிற வழியைக் காட்டுங்கள் என்றேன். அவர் என்னை திருவல்லிக்கேணியிலிருக்கும் சங்கத் தலைவர் ரெங்கசாமியிடம் அழைத்துச் சென்றார்.  அவர் தொழிற்சங்க விதிப்படி ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்திட தொழிலாளர்நல இலாகாவை அணுகினால் தீர்வுகிடைக்கும், அதற்கான உதவியை தானும் மேனனும் செய்வதாக  நம்பிக்கையூட்டினார். பி.ஜி.கே.மேனனுக்கு என்னைவிட ஆங்கிலம் சரளமாகவரும்.  திருமணமாகாத அவர் தனியறையில் தங்கியிருந்தார்.  அவரிடம் டைப்ரைட்டர் மெஷின் இருந்தது.  இரண்டு கடிதங்கள் டைப் அடித்து கையெழுத்திட்டு பதிவுத் தபாலில் அனுப்பினேன்.  குரூப் லீடர் தேர்தலையும், சங்கம் நடத்தும் கூட்டுறவு சங்கத்திற்கு நிர்வாகிகளையும் ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்த வேண்டும்  என்றும், தலைவர் டிக்அடிக்கும் தேர்வுமுறை சட்டவிரோதமென அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அக்கடிதங்களை அவர் படித்தாரா என்பது தெரியவில்லை.  அவைகள் கடலில் வீசிய குண்டூசியாகிவிட்டது.

Simpson & Co Limited | Clientele Gallery - V3 Colour Solutions

புதிய பாதை

இதற்கிடையில் சிம்சன் தொழிலகத்தில் கம்யூனிஸ்ட்குழு ஒன்று என்னோடு தொடர்பு கொள்ள நேர்ந்தது.  அன்று மெயில் பில்டிங் அருகிலிருந்த கட்டிடமாடியில் என்.சிபி.ஹெச்சின் புத்தகக்கடை இருந்தது.  நான் அங்கு சென்று புத்தகங்கள் வாங்குவது வழக்கம்.  அவர்கள் கொடுத்த தகவலை வைத்து நன்கொடை வாங்க இக்குழுவின் செயலாளர் என்னை சந்தித்துப் பேசுவது வழக்கமாகியது. அக்குழு ரகசியமாக இயங்கிய குழுவாகும்.  அன்றைய கட்சியின் முடிவுப்படி கிளை அரசியல் கருத்தை தொழிலாளர்கள் மனதில் பதிய வைக்கவேண்டுமே தவிர போட்டி சங்கவேலையில் ஈடுபடக்கூடாது என்பதாகும்.  அதில் சிம்சன் உணவகத்தில் பணிபுரிந்த கண்ணன் என்ற கட்சி உறுப்பினரின் பங்குபற்றி சொல்லவேண்டும்.  சிம்சன் உணவகம் மலிவுவிலையில் தொழிலாளர்களுக்கு தரமான சைவஉணவு வழங்கியது. ஊழியர்கள் தவிர வேறு யாருக்கும் அங்கே அனுமதியில்லை. நிர்வாகம் கொடுக்கும் டோக்கனே அங்கு செல்லுபடியாகும். கேன்டீன் கண்ணனதுபணி தொழிலகத்தில் தள்ளுவண்டியில் துறைவாரியாக டீ கொடுப்பதோடு, சாப்பாட்டு டோக்கன் வழங்குவதுமாகும். அவர் பள்ளிப் படிப்பு குறைவாக இருந்தாலும், நடப்பு அரசியல் தெரிந்தவர்.  அதாவது கம்யூனிச கருத்துக்களை விதைப்பதில் வல்லவர். அவர் போன்றவர்கள் தொடர்பால் சிம்சனின் தொழிற்சங்க வரலாற்றை அறிய வாய்ப்பு கிடைத்தது.1950களில் சிம்சனில் வி.பிசிந்தன் என்பவர் தலைவராகவும், அசெம்பிளி பிரிவில் பணியாற்றிய துரைக்கண் என்பவர் செயலாளராகவும் கொண்ட சங்கம் இருந்ததாகவும். அதனை நிர்வாகம் செயலிழக்கச் செய்ததாகவும், அதன்பிறகு ஆர்.வெங்கட்ராமன் தலைவராகவும், குருமூர்த்தி செயாளராகவும் கொண்டசங்கத்தையே நிர்வாகம் ஏற்றது. வெங்கட்ராமன் அமைச்சரான பிறகு குருமூர்த்தி தலைவராக செயல்படுகிறார் என்பதை தெரிந்துகொண்டேன்

பின்னர் திருவல்லிக்கேணி நாகப்பா தெருவில் வாடகை வீட்டில் குடியேறிய பொழுது, பக்கத்து வீட்டில் துரைக்கண் குடியிருக்கிறார்  என்பதை அறிந்தேன். அவரைப் பார்க்க சில சிம்சன் கம்யூனிஸ்ட்கிளை உறுப்பினர்கள் வந்த பொழுது என்னை அறிமுகப்படுத்தினர்.  அவர் கம்யூனிஸ்டு கட்சியோடு நெருக்கமாக இருந்ததால் அவரோடு கலந்துரையாடும் பொழுது புத்தகம் மூலம் பெற முடியாத பல தகவல்கள் கிடைக்கும். அதில் ஒன்றுஅவரை வேலைநீக்கம் செய்யநிர்வாகம் செய்த சதிஆகும்.  அவர் தனியாக போராடுவதால் பயனில்லை, சட்டப்படி, வழக்கு, தொடுப்பதோடு, தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி போராடவைக்க தயார் செய்வது கட்டாயமென்றும், இதன் பொருட்டு  துண்டுப்பிரசுரங்களை தயார் செய்யவேண்டும் என்று கூறினார். இதுவே சரியான பாதை என்பதை உணர்ந்தேன். 

நிர்வாகம் செய்த சதி என்ன? “ஜே”யின்ஆளுமைஎன்ன? போராடும் மனப்பாங்கு எங்கனம் பெற்றேன்? 

(அடுத்துவரும்).

தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்க

தொடர் 9 ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 10ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 11ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *