சிம்சனில் திருகாணி
தோழர் துரைக்கண்ணு சிம்சன் நிர்வாகம் செய்த சதியை விளக்கினார். “தோழா! நான் பணிபுரிந்த இடம் என்ஜின்களை 24 மணிநேரமும் தொடர்ந்து ஓட்டி சோதிக்கிற பிரிவு. மூன்று ஷிஃப்ட் வேலையாகும், பணிபுரியும் தொழிலாளர்கள் மாறுவார்கள். ஒரு நாள் சோதனைக்கிருந்த என்ஜினுக்குள் ஒரு திருகாணியை போட்டு என்ஜினை பழுதாக்கிய குற்றத்தை அபாண்டமாக என்மீது சுமத்தி, வேலை நீக்கம் செய்தனர். சிந்தன் தலைவராகவும், நான் செயலாளராகவும் கொண்ட சங்கம் சம்பள உயர்விற்கான கோரிக்கையை பரிசீலிக்க பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு கேட்டதோடு, தொழிற்தகராறு சட்டப்படி தொழிலாளர் “நல” இலாகாவிற்கும் கோரிக்கையின் நகலை அனுப்பியிருந்தோம். இதனை குற்றமாக காட்டமுடியாததால் இப்பழியை நிர்வாகம் என்மீது சுமத்தியது. இவ்வாறு திருகாணியை யாரும் அறியாமல் இன்ஜினுக்குள் போடுவது சாத்தியமல்ல. அதுமட்டுமல்ல குற்றம் செய்ததாக கூறப்படும் நேரத்தில் எனது ஷிஃப்ட் முடிந்து வீட்டிலே இருந்தேன்.
அதோடு நிர்வாகம் நிற்கவில்லை. ஆர். வெங்கட்ராமனை தலைவராகவும், எழுத்தராக இருந்த குருமூர்த்தியை செயலாளராகவும் கொண்ட சங்கம் ஒன்று சிலநாட்களிலேயே உருவானது. சிம்சன் நிர்வாகமும், காமராஜர் அரசும் சேர்ந்து திட்டமிட்டதால் இது சாத்தியமாயிற்று. அந்த சங்கத்தோடு நிர்வாகம் ஒரு ஒப்பந்தமும் போட்டுக்கொண்டது. இதன்படி இந்த சங்கத்தை தவிர வேறு சங்கத்தையும் நிர்வாகம் அங்கீகரிக்காது என்பதாகும். அந்த தொழிற்சங்க விதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தால் சங்க உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவார் என்ற பிரிவும் இருக்கிறது” என்ற எச்சரிக்கையையும் சேர்த்தே விளக்கினார். 1957ல் ஆர். வெங்கட்ராமன் காமராஜர் அமைச்சரவையில் ஒரு அமைச்சரானாதால் குருமூர்த்தி தலைவரானார் என்பதை அவர் மூலம் அறிந்துகொண்டேன். தோழர் துரைக்கண்ணை சந்தித்தபொழுது அவர் ஒன்றை சொன்னார். “சங்கத்தில் குருமூர்த்தி கும்பலின் ஆதிக்கத்தை எதிர்ப்பது என்றால் சிம்சன் நிர்வாகி அனந்தராமகிருஷ்ணனை எதிர்ப்பதாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். அடுத்து உன்னை கம்யூனிஸ்ட் என்று அபாண்டமாக பழி சுமத்தி சங்கத்தைவிட்டு முதலில் நீக்குவர். நிர்வாகம் சமயம் பார்த்து உன்மீது குற்றம் சாட்டி டொமஸ்டிக் என்குயரி என்ற சடங்கை நடத்தி துரத்திவிடுவர்” என்றும் எச்சரித்தார்.

ஏகனாக போராடுவது, வழக்குதொடுப்பது என்பது முட்டாள்தனமாகும். சிம்சன் “ஜே”யும், குருமூர்த்தியும் இணைந்து துரத்திவிடுவர் என்பதை தெளிவாக உணர்ந்தேன். அன்றைய நிலையில் நிர்வாகத்தின் தயவில்தான் குருமூர்த்தி ஆட்டம் போடுகிறார் என்பதை யாராலும் ஊகிக்கமுடியாது. தொழிலாளர் கூட்டங்களில் கருத்த பாப்பான் என்று ஏளனமாக “ஜே”யை குறிப்பிட்டே குருமூர்த்திபேசுவார். தான் இருக்கிறவரைக்கும் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது என்பார். தன்னை நிர்வாகம் கொல்ல சதி செய்ததாக கூறுவார். தொழிலாளர்கள் குருமூர்த்தியை ஹீரோவாக கருதி கைதட்டுவர். போண்டா சங்கத் தலைவர்கள் முதலாளியையும் அரசையும் திட்டுவதன் மூலம், தொழிலாளர்களின் ஆத்திரத்திற்கு வடிகால் அமைத்துத் தந்தது. அவனது கோபம் அறிவியல் ரீதியான சமூகஅரசியல் விழிப்புணர்வாக மேன்மை அடையாமல் போவதற்கே இந்த பேச்சு உதவுகிறது என்பதை இன்று உணர்வதுபோல் அன்று என்னால் உணர முடியவில்லை. அது போன்று சிம்சன் “ஜே”யின் சாதுர்யத்தையும் அன்றைய தினம் என்னால் உணர இயலவில்லை. “ஜே” என்கிற எஸ்.அனந்தராமகிருஷ்ண ஐயர் (1905—1964) அமால்கமேஷன் குரூப் என்ற தொழில் சாம்ராஜ்யத்தை பத்தேவருடத்தில் கட்டியவராவார் என்று வியந்திருக்கிறேன்.
சென்னை டெட்ராய்டானது!
1945க்கு முன்பு வரை சிம்சன் நிறுவனம் ஐரோப்பிய நிர்வாகிகளை கொண்ட நிறுவனமாகும். அன்று பிரிட்டனைச் சேர்ந்த சர் அலெக்சாண்டர் மாக்டுவெல் தலைவராகவும், w.w லேடன் மேனேஜிங் டைரக்டராகவும் இருந்தனர். இந்த நிறுவனத்தில் பிகாம் படித்த நமது ஜே வரவு செலவை நிர்வகிக்கும் அதிகாரியாக பணியில் இருந்தார். இரண்டாம் உலகப் போர் மூண்டதால், கடல் பாதையிலும் வர்த்தக போக்குவரத்து தடைப்பட்டது. சிம்சன் நிறுவனம் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து உருவாக்கும் ஸ்டீம் இன்ஜின் வண்டிகளை உற்பத்தி செய்ய இயலாமல் போனதால், நிறுவனத்தை மூடுகிற நிலைமை உருவாகியது. அதனை தவிர்க்க ஆலோசனைக்கும் நிதிக்கும் ஜே ஏற்பாடு செய்ததால் 1938ல் நிர்வாக போர்டில் இடம் பெற்றார். அன்று ஐரோப்பிய முதலாளிகள் ஒரு சுதேசியை நிர்வாக போர்டில் சேர்த்தது அதிசயமாகப்பட்டது. இவரது ஆலோசனையால் நிறுவனம் பிழைத்தது. 1945ல் அதன் மேனேஜிங் டைரக்டராக உயர்ந்தார். 1955க்குள் அமால்கமேஷன் குரூப் என்ற பல தொழில்களைக் கொண்ட சாம்ராஜ்யத்தின் அதிபதியானார். 12க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தாயகமாக அமால்கமேஷன் விளங்கியது. என்ஜின், அதன் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் ஆறுநிறுவனங்கள் தவிர, மெயில் என்ற ஆங்கில தினசரி, ஹிக்கின்பாதம்ஸ் புத்தக வியாபாரம், ஆசோசியேட் பிரிண்டர்ஸ் எனும் தரம் வாய்ந்த அச்சுக்கூடம், ஸ்டேன்ஸ்காஃபி, ஸ்பீடுஎவே உதிரிபாக விற்பனைக் கூடம், கும்பகோணம எஸ்.ஆர்வி.எஸ் லாரி சர்வீஸ் போன்றவை இதன் அங்கங்களாக விளங்கின. சுமார் ஆறாயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் நிறுவனமாக இருந்தது. என்ஜினியரிங் தொழில்களில் சம்பளமும் பஞ்சப்படியும் அன்று பிற தொழிலகங்களைவிட கூடுதலாகவே அமால்கமேஷன் குழுமத்தில் வழங்கப்பட்டு வந்தது..
நிதி மூலதனம் மாற்றமடைகிறது!
சிம்சன் ஜே “காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்” என்ற சொலவடைக்கு அடையாளமாக இருந்தார். பார்ப்பனீயம், மார்வாடீயம், மேலைநாட்டு நிதியியல் ஆகிய மூன்றையும் கலக்கி கையாளும் மூளை அவருக்கிருந்தது. சென்னை டெட்ராயிட் என்று பெயரெடுக்க தொழில்களை கட்டியவர் எனபத்திரிகைகள் எழுத அந்த மூளையே காரணமாகும். பார்ப்பனியம் என்றால் விளக்கம் தேவையில்லை. மார்வாடீயம் என்றால் எந்த தொழிலும் செய்யாமலே பணத்தை பெருக்கும் கலை. மேலை நாட்டு நிதியியல் என்றால் எல்லாவற்றிற்கும் விலையை நிர்ணயித்து லாபநட்டத்தை காண்பது. தொழிற் சங்கங்களை கையாள்வது பற்றி இவர் எழுதிய புத்தகமே இன்றைய இந்திய முதலாளித்துவத்திற்கு பைபிளாக விளங்குகிறது. தொழிலாளர்களின் விசுவாசத்தை அதிக செலவில்லாமல் சம்பாதிப்பது பற்றிய கருத்துப் பெட்டகமாக அது விளங்கியது. 70 ஆண்டுகளுக்கு முன்னால் இவரைப் போன்ற சுதேசி முதலாளிகள் ஏராளமாக தலையெடுத்தும் ஏன் இந்தியா இன்றும் ஏழைநாடாகவே நீடிப்பதின் மர்மம் என்ன? என்ற ஐயம் எழுவது இயல்பே. இந்த இடத்தில் இந்திய முதலாளித்துவத்திற்கும் மேலை நாட்டு முதலாளித்துவத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஆழ்ந்து பார்த்தால் புரியும். இன்றைய இந்திய முதலாளித்துமோ கோமாவில் கிடக்கும் மேலை நாட்டு முதலாளித்துவத்திற்கு பணியாளாக இருந்து வருகிறது என்பதை உணர நுண்ணிய இந்த வேறுபாடே அடிப்படையாகும். இந்திய முதலாளித்துவம் துவக்க காலத்திலிருந்தே மேலை நாட்டு சந்தை மேலை நாட்டு தொழில் நுட்பம் இவைகள் மீதுமாளாத காதல் கொண்டிருந்தது. அந்த மோகமே நமது சிம்சன் “ஜே”க்கும் கைகொடுத்தது. இந்திய முதலாளித்துவம் மார்வாடீயத்தின் தொடர்ச்சியாக இருப்பது எளிதில் தெரியாது. பணத்தை விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் கடன் கொடுத்து வட்டியாக பெருக்குவதைவிட தொழில் நடத்தினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற மார்வாடிபுத்தியே தொழில்களை கட்ட அடிப்படையானது. அதாவது நிதி மூலதனமே தொழில் மூலதனமாக மாற்றம் பெற்றது. மேலை நாட்டு முதலாளித்துவத்தின் துவக்கமோ முற்றிலும் மாறுபட்டது. தொழில் நுட்ப அறிவுள்ளவர்களே பங்குச்சந்தை வழியாக மூலதனத்தை திரட்டி நிறுவனங்களை உருவாக்கி வளர்த்தனர். உதாரணமாக அமெரிக்க நாட்டு போர்டு என்ஜின் தொழில் நுட்ப அறிவுள்ளவர். எடிசன், ராக்பெல்லர், டெஸ்லா, 21ம் நூற்றாண்டு எலோன் மஸ்க் போன்றவர்கள் அவரவர் புத்தியால் தேடிக் கிடைத்த அறிவியல் தொழில் நுட்பமே பங்குச்சந்தை மூலம் மூலதனமாகியது. அவர்கள் உருவாக்கும் சரக்குகளில் புதுமை புகுத்தி சந்தையை பிடிப்பவர்கள், பெரும்பான்மை பங்குதாரர்களின் நம்பிக்கையை பெற்றே நிறுவனத்தின் நிர்வாகியாக இருப்பார்கள். அதிக பங்குகளை சொந்தமாக வைத்து நிர்வாகியாக இருப்பதை அவமானமாகவே கருதுவர்.

சுதேசி முதலாளித்துவத்திற்கு இலக்கணம் வகுத்த அனந்தராமகிருஷ்ண ஐயருக்கு பணத்தைப் பெருக்குகிற வழிதெரியுமே தவிர, வேறு எதுவும் தெரியாது. இவர் மட்டுமல்ல இன்றைய இந்திய பெருமுதலாளி குடும்பங்கள் அனைத்தும் எந்ததொழிலையும் புதுமைப்படுத்தும் அறிவியல் தொழில் நுட்ப அறிவைப் பெற்றவர்கள் அல்ல. பணத்தைப் பெருக்குகிற பலவழிகளை தேடுவரே தவிர சரக்கு உற்பத்தியில் புதுமையைப் புகுத்தி நுகர்வோரை கவர்ந்திடத் தெரியாது. இன்றும் அமால்கமேஷன் குரூப் நிறுவனங்கள் அந்நிய தொழில் நுட்பத்தைச் சார்ந்து இருக்கிறதே தவிர வேறு எதுவும் தெரியாது. டிரம்ப் கியூபாவிற்கும், சீனாவிற்கும் விதிக்கிறமாதிரி பொருளாதாரத் தடைவிதித்தால் இந்தியாவில் தொழில்கள் விவசாயம் அனைத்தும் ஸ்ம்பித்துவிடும். இந்தியப் பங்குச்சந்தை பெரும் நிறுவனங்களின் பங்குகளை வாங்கி விற்கும் கடையாக இருக்கிறதேயொழிய தொழிலுக்கு மூலதனத்தை வழங்குமிடமாக இல்லை. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதால் கடை பெரிதாகுமே தவிர புதிய தொழில்களுக்கு மூலதனமாக உருவாகாது. இதை அறியாத மூடர்களே நம்மை ஆளுகிறார்கள். சுருக்கமாக இந்திய சுதேசி முதலாளித்துவத்தின் சாதனையை வாலி எழுதி சவுந்திராஜன்பாடி எம்.ஜி. ஆர் வாயசைத்த பாடல் நினைவூட்டுகிறது.
அண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகு என்று பெயரும் இட்டால்
இந்த பூமி சிரிக்கும், அந்த சாமி சிரிக்கும்.
சுதேசி முதலாளிக்கு எடுத்துக்காட்டாக இருந்த ஜே என்ற அனந்தராமகிருஷ்ணன் காட்டியவழியில்தான் பெரும்பாலான இந்திய முதலாளிகள் இருக்கின்றனர். பணத்தை குவிக்கிற வழிகளிலே முதலீடு செய்வதால் ரூபாயின் நாணய மதிப்பு சிதைவதைக்கூட பார்க்க மறுக்கின்றனர். இவ்வாறு இந்தியாவில் புதியரக முதலாளிகளின் எடுத்துக்காட்டாக இருந்த “ஜே” என்ற சிம்சன் தெய்வத்தையும், பூசாரியாக இருந்த குருமூர்த்தியையும் எதிர்ப்பது பாறையை மோதி உடைக்கும் முயற்சியாகும் என்பது தெரிந்தது. எனது இலக்கை படிப்படியாக அணுக முடிவு செய்தேன். பழி வாங்கினால் மீண்டும் கிராமத்திற்கே போய், எனது தந்தைவழியில் விவசாயத்தைப் பேணுவது என்ற முடிவோடு இருந்தேன், தவிர தொழிற்சங்கம் நடத்தும் கூட்டுறவு சங்க நிர்வாகிகளை சட்டப்படி ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்க வைத்துவிட்டால் தொழிலாளர்களின் கூட்டுணர்வு பலப்படும் என்பதோடு, சிம்சன் நிர்வாகமும் தனக்கெதிரான நடவடிக்கையாக இதைபார்க்காது என்று கருதி, அதற்கான ஆயத்த வேலைகளில் இறங்கினேன். எல்லாவகையான கூட்டுறவு சங்கங்களிலிருக்கும் நிர்வாகிகளுக்கு பயிற்சி கொடுக்கவும் சட்டஆலோசனைவழங்கவும் ஒருஅலுவலகம் சென்னையிலிருந்தது. அங்கு சென்று கூட்டுறவு சட்டம் மற்றும் விதிகள் புத்தகத்தை வாங்கினேன். இன்று அந்த கட்டிடம்இடிக்கப்பட்டதோடு, கூட்டுறவு இயக்கமும் மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகளின் ஆயுதமாகிவிட்டது. பி.ஜி.கேமேனன் உதவியோடு கடிதங்களை தயாரித்து அதிகாரிகளுக்குஅனுப்பத்தொடங்கினேன். துரைக்கண்ணை சந்தித்தபிறகு சிம்சனில் ரகசியமாக இயங்கிய கம்யூனிஸட்களின் தொடர்பால் வி.பி.சிந்தனை சந்திக்க முடிவு செய்தேன்.
( தொடரும்)
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க
தொடர் 5ஐ வாசிக்க
தொடர் 6ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 6 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 7 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர்: சென்னையும், நானும் – 8 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 9 ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்


ஸ்பீட்எவே போன்று ஜார்ஜ் ஓக்ஸ் எனும் உதிரிபாக விற்பனை நிறுவனமொன்றும் அமால்கமேஷன் குழுமத்தில் செயல்பட்டதாக நினைவிருக்கிறது, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கிளைகளைக் கொண்டிருந்த இந்நிறுவனம் க்ரீம்ஸ் ரோட்டில் தற்போதைய தபால் அலுவலகத்திற்கும் சசி எண்டர்பிரைசஸின் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கும் இடையில் உள்ள கட்டிடத்தில் சென்னை அலுவலகம் இருந்தது.