வேலை போனாலும் பரவாயில்லை தொழிற்சங்கத்தையும் கூட்டுறவுச் சங்கத்தையும் குருமூர்த்தி கும்பலிடமிருந்து விடுவிப்பது  அதற்காகப் பாடுபடுவது என்று முடிவு  செய்தேன். ,இது உயர்ந்த லட்சியத்தை மனதில் ஏந்தி செய்ததாகக் கருதிட வேண்டாம் அந்த அளவிற்கு என் மனது பக்குவப்படவில்லை. என்னை நிற்கவைத்து அவமானப்படுத்தியவரை உண்டு இல்லை என்று ஆக்கும் ஆத்திரமே தவிர வேறு எதுவுமில்லை. அதே வேளையில்

 எனது மன.கட்டமைப்பு நேர்மையாக எல்லோரும் ஏற்கிற வழியில் போராடுகிற பாங்கோடு இருந்தது. அதற்கு  எனது தந்தையின் ஆளுமையே அடிப்படையாகும் ஒரு பண்ணையார் குடும்பத்தில் பிறந்தாலும்   வித்தியாசமானவராக ஊரார் மெச்ச வாழ்ந்தவர். போலித்தனம் அவரிடம் கிடையாது. அது பற்றி தனியாகக் கூறவேண்டும்.  இது தவிர எனது பள்ளிப்பருவம், நெல்லை கல்லூரி வாழ்க்கை இவைகளே எனது உலகப்பார்வைக்கு அடிப்படையாகும்

 எனது பள்ளிப்பருவம் கடையத்தில் கழிந்ததால் பாரதியார் கவிதைகள்  பாரதியார் வாழ்க்கை. பாரதியாரோடு பழகியவர்கள்   கூறியது இவையெல்லாம் வீர தீரக் கதைகளாக என் மனதிலே பதிந்தது எனது தந்தையே பாரதியாரைப் பார்த்திருக்கிறார். அவர் கோவில்களில் வருவாய்க்காகப் பாடுவதைக் கேட்டுமிருக்கிறார்.

 பாரதியார் 1918-முதல் 1919 வரை ஒரு வருடம் கடையத்திலிருந்த காலத்தில்  பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த கிளர்ச்சிகள் பல செய்தவர் என்பதை மூத்தவர்கள் கூறக் கேட்டு இருக்கிறேன். கணவன் முன்னாடி. மனைவி பின்னாடி காலில் செருப்பில்லாமல் நடக்கும் பண்பாடு உள்ள அக்கரஹார தெருவிலே மனைவியின் தோழிலே கைபோட்டுக் கொண்டு இருவரும் செருப்பணிந்து தெருவிலே பாடிக் கொண்டே நடப்பது, சேரி சிறார்களை அழைத்து  பிராமணத் தெருவில் ஊர்வலமாக வருவது, கழுதை மீது சவாரி செய்து வருவது கழுதையை வீட்டு வாசலில் கட்டி வேடிக்கை பார்ப்பது. போன்ற செய்திகளை மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  கடையத்தில் வாழமுடியாத நிலையில்தான் சென்னை சென்றார் என்று கூறுவர் .

 விநோதம் என்னவெனில் நான் கடையத்தில் இருக்கிறவரைத் தாழ்ந்த சாதியினரும், கழுதைகளும் நுழையமுடியாத  அக்கிரஹாரமாகத்தான் தொடர்ந்தது. பாரதியார் எடுத்த முயற்சிகள் எதுவும் ஐயமார்களை திருத்தவில்லை. அதே வேளையில் இவர்கள் பாரதியின் பக்தி பாடல்களை ஒதுக்குவதில்லை.

 கடையத்தில் இருக்கிறவரை பாரதியின் ஆன்மீக பாடல்களைத் தவிர வேறு எதுவும் எனக்கு அதிகம் தெரியாது. 9,10ம் வகுப்பு படிக்கிற காலத்தில் ஒரு நிகழ்வு பாரதிக்கு இன்னொரு பரிமாணம் உண்டு என்பதைத் தெளிவற்ற முறையில் உணர வைத்தது.

    அன்று நாடு விடுதலை அடைந்து புதிய இந்தியா துவங்கியதால் நாட்டுப்பற்றுள்ள சில தனவந்தர்கள் பாரதி பாடிய காணி நிலம் வேண்டும் என்ற கவிதையை நினைவூட்டுகிற முறையில் அவர் வசித்த வீட்டிற்குப் பின்புறமுள்ள பிள்ளைமார் தெருவில்  10 செண்டு நிலத்தை ஒதுக்கி மணிமண்டபம் கட்ட முடிவெடுத்தனர். 1947ல் எட்டயபுரத்தில் பாரதி மணிமண்டபம் கட்டிய தமிழக அரசு ஏனோ, கடையத்தில் பாரதி பெயரில் நூலகம் கட்ட அக்கறை காட்டவில்லை.

பசுபதிவுகள்: பாரதி மணிமண்டபம் - 4

 வெகு நாள்வரை அந்த இடம் காலியாக கிடந்தது.  1952- 53 ஆண்டுகளில் எனது தந்தை அந்த இடத்தை வாடகைக்கு எடுத்து பால் பண்ணை நடத்தினார். அதே காலத்தில் பொன்னுசாமி நாடார் என்ற முற்போக்கு ஆர்வலர்  பாரதி சிறுவர் சங்கம் என்ற அமைப்பை  உருவாக்கி  பாரதியின் தேசிய பாடல்களைச் சிறுவர்களுக்கு அறிமுகப்படுத்தினார் சிறுவர்களுக்கு பாட்மிட்டன், புட்பால் வாலிபால் விளையாட கற்றுக் கொடுத்து போட்டிகள் நடத்தினார். நான் எப்போதும், படிப்பிலும், விளையாட்டிலும் சராசரிக்கும் கீழே இருப்பவன் ஆனால் அறிவைத் தேடுவதில் ஆர்வமுள்ளவன்,  பாடபுத்தகத்தை தொடுவது அபூர்வம் எனது தாய் வாங்கி படிக்கிற வார இதழ்களான ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள் அமுத சுரபி அனைத்தையும் படிப்பவன் . புதிதாக வந்த கல்கண்டு என் பையிலே இருக்கும். ஒரு கட்டத்தில் பொன்னுசாமி நாடார்   நான் படித்த சத்திரம் உயர் நிலைப்பள்ளிக்குப் பாரதியார் பெயர் சூட்டவேண்டுமென்ற கோரிக்கையோடு  காணி நிலத்தில் பாரதி பெயரில் நூலகம் அமைக்க அவர் பாரதி சிறுவர் சங்க மாணவர்களைத் திரட்டி ஊர்வலம்  எடுத்தார், விநோதம் என்னவெனில் சத்திரம் உயர்நிலைப்பள்ளியின் தாளாளர் மாதவ ஐயர் பாரதி பெயரை இனைக்க இயலாது என்று அறிவித்ததோடு நூதன விளக்கம் கொடுத்தார். கடையம் கோவிலில் குடியிருக்கும் கல்யாணி அம்பாள் இவர் கனவில் வந்து பாரதி என்றால் கல்யாணி எனவே  எனது பெயரை இனை என்று சொல்லியதாகச் சரடுவிட்டார்.

 அன்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. பின்னர் தான்  ஐயர், பிள்ளை மார், நாடார் இவர்களிடையே நிலவிய போட்டி மனப்பான்மையால் பாரதி பெயரை இனைப்பதில் சிக்கல் உருவானது என்பது தெரிந்தது சத்திரம் பள்ளி நிர்வாகம் ஐயர்களும், பிள்ளைமார்களும் உருவாக்கிய டிரஸ்ட் நடத்தியது. அதில் நாடார்கள் பங்கில்லை. ஐயர்களும் பிள்ளைமார்களும் இனைந்து நின்றே பாரதி பெயரை வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்ததால் அன்று அந்த கோரிக்கை அன்று நிறைவேறவில்லை. வெகுகாலம் கடந்தபிறகே இணைக்கப்பட்டது.

 பாரதி சிறுவர் சங்கம் சிறப்பாகச் செயல்பட வைப்பதில் ஒரு வகை அரசியல் நிலவியது.. பொன்னுசாமி நாடார்தான் உடல் ஆரோக்கியமும் நாட்டுப் பற்றுமே ஒருவனது இலக்காக இருக்க வேண்டுமென்ற பார்வையை மாணவர்களுக்குக் கொடுத்தார். அந்த பார்வையை எனது கல்லூரி சூழுலும் எனக்குப் பலப்படுத்தியது. எனது கல்லூரி சூழலே கம்யூனிச இயக்கத்தோடும் இடதுசாரி இலக்கியத்தோடும் இனைத்தது விநோதம் என்னவெனில் நான் பள்ளியில் படிக்கிற காலத்தில் விவசாயிகள் போராட்டங்களால் பண்ணையார்கள் அவர்களுக்குக் கடன் கொடுத்த ஐயர்கள் நெருக்கடிக்கு உள்ளானதால் கம்யூனிஸ்ட்டுகள் மீது இனம் புரியாத வெறுப்பு அந்த குடும்பத்தைச் சார்ந்தே என்னுள்ளே இருந்தது. அதற்குக் காரணமிருந்தது

  நான் பிறந்த கிராமமான பாப்பான் குளத்திலும் எங்களது குடும்ப சொத்துள்ள கிராமங்களிலும்  1941- 1951 வரை  குத்தகை விவசாயிகளின் வீரம் செறிந்த  போராட்டம் நடந்தது. அன்று பி.ஆர் ( அன்று மேட்டுக்குடியினர் மொழியில் நொண்டி ராம்மூர்த்தி)  பொதுக் கூட்டத்தில் பேச வருகிறார் என்றால்  வட்டித் தொழில் நடத்தும் ஐயர்களும். கடன்பட்டுக் கிடக்கும் சைவ வேளாள நிலசுவான்தார்களும் வீடுகளுக்கு  போலீஸ் பாதுகாப்பு கேட்பர்.

தமிழில் சிறுவர் இலக்கியம் - ஒரு பார்வை!- Dinamani

அன்று பாதுகாப்பு கொடுக்கவரும் நூற்றுக்கும் மேற்பட்ட பாளையம் கோட்டை ரிசர்வ் போலிசுக்கு அம்பாசமுத்திரம் மதினா ஹோட்டல் பிரியாணியுடன் நிலச்சுவான்தார்கள் விருந்து வைப்பர் .ஆயிரக்கணக்கான விவசாயிகள் அமர்ந்து  அமைதியாக பி.ஆர் பேச்சைக் கேட்பர். கூடவே ரிசர்வ் போலீசும் கேட்கும்  எந்த கலவரமும் நடக்காமல் கூட்டம் நடந்து முடியும். இதில்  வேடிக்கை என்ன வென்றால் நிலச்சுவான்தார்கள் கம்யூனிஸ்ட்டுகளை அந்நிய ஏஜெண்டு என்று வசை பாட காங்கிரஸ்காரர்களை  அழைத்து மேடை போட்டால் கூட்டம் கலவரத்தில் முடியும். உடனே கம்யூனிஸ்ட்டுகள் மீது குண்டு வீசிய வழக்குப் பதிவாகும். அதோடு அப்பாவி விவசாயிகள் மீதும் பொய் வழக்குகளும் போடுவர் இனம் புரியாத கம்யூனிச வெறுப்பு

  எனது கல்லூரி சூழலால் மாறியது. பள்ளி வாழ்க்கை நாட்டுப்பற்றை மனதிலே விதைத்தது. கல்லூரி வாழ்க்கை மார்க்சியத்தை நோக்கித் தள்ளியது

இது பற்றியும் தனியாகச் சொல்ல வேண்டும் அந்த பார்வை சிம்சனில் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளை ரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப் போராடும் பொழுது வலுப் பெற்றது.- அதற்குக் காரணம் சென்ற பதிவில் குறிப்பிட்ட வி.பி சிந்தனை சந்தித்தபிறகு கிடைத்த அனுபவங்களே அந்த அனுபவங்களே என்னை மார்க்சிய சித்தாந்த பிடிப்புள்ளவனாகக் காலப் போக்கில் ஆக்கியது அவரை சந்திக்கிறபொழுது கூடவே இருந்த அன்றைய மாநிலச் செயலாளர் எம். ஆர். வெங்கட்ராமன் அவரையும் சந்திக்க நேர்ந்தது. நான் கல்லூரியில் படிக்கும் பொழுது இவரது பெயரை கேள்விப்பட்டிருக்கிறேன். பிரபல பாடகர் எம்.எஸ் சுப்புலட்சுமியை ஒரு செட்டியார் சொந்த கொண்டாடியதை எதிர்த்து வழக்குத் தொடுத்து வாதாடிய சட்டவல்லுனர் என்று கேள்விப்பட்டிருப்பவரைச் சந்திக்க நேருமென்று நான் கனவிலும் நினைத்தது கிடையாது. நானும் எனது நண்பர்கள் இருவரும் தோழர் ஒருவரும் 4 பேரும் வி.பி.சிந்தன் , எம்ஆர் வெங்கட்ரமாமன் இருவரையும் சந்தித்துப் பேசிய பொழுது  அவர்கள் எச்சரித்த து கம்யூனிஸ்ட் தொடர்பைக் காட்டாதீர்கள்  கூட்டுறவுச்சங்க நிர்வாகிகளை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்க வழக்குத் தொடுத்து முயற்சி செய்யுங்கள்  அதுவே முதல் படி சங்க தேர்தலை இணைக்காதீர்கள்  என்பதாகும்.

கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த நான் எழுதிய கடிதங்களை பாராட்டினர் கூட்டுறவுச் சங்க தேர்தலை நடத்த நான் எடுத்த நடவடிக்கைகளுக்கு பி.கே.ஜி. மேனன் உதவியதால் அவரது சங்க வேலைகளுக்கு நானும் உதவலானேன். அன்று சிம்சன் குரூப்பை சார்ந்த எஸ்.ஆர்.வி.எஸ் சங்கம் கட்ட முயற்சியில் அவரோடு சேர்ந்து நின்றேன். அங்கு சுமைதூக்கும் பணியாளர்களுக்கு இரண்டு ரூபாய் மட்டுமே கூலியாக கொடுக்கப்பட்டதோடு வேலை நிரந்தரமும் கிடையாது சுமார் 300 தொழிலாளர்கள் இவ்வாறு காசுவல் தொழிலாளியாக இருந்தனர் பஸ் அல்லது லாரி இருந்தால் மோட்டார்வாகன சட்டப்படி டிரைவர், கீளினர் என்று இரண்டு பணியாளர்களைக்  கொண்டதாக இருக்க வேண்டும் சிம்சன் எஸ் ஆர்.வி எஸ் நிர்வாகம் தொழிலாளர்களை நிரந்தரமாக்காமல் வேலைவாங்கியது சட்டப்படியான சலுகைகளை மறுத்தது குருமூர்த்தி இவர்களைச் சங்கத்தில் சேர்க்க மறுத்துவிட்டார் ஐ.என்.டி.யு.சி சங்கத்தில் சேர்ந்தனர். ஒருகட்டத்தில் தலைவர்கள் எதிர்பார்க்காத நிலையில்  போராட்டமாக வெடித்தது.

( தொடரும்)

தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்க

தொடர் 9 ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 10ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 11ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 12ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *