நால்வரின் கூட்டு முயற்சி

எஸ்.ஆர்.வி.எஸ் தொழிலாளர்களின் போராட்டம் தொழிற்சங்க இயக்கத்தின் பலம், பலகீனம் இவைகளைப் புரிந்திட எனக்கு உதவியது.   1967ல் ஆட்சி மாறினாலும் அரசாங்க அதிகாரிகள் முதலாளி வர்க்கத்தின் அடியாட்களாக இருப்பதால் தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதில் ஆட்சியில் அமரும் கட்சி தோற்றுவிடுகிறது.  நகரமே ஸ்தம்பிக்கற மாதிரி போராட்டங்களை கண்டே முதலாளிகள் பயப்படுவர், அதிகாரிகளும் ஒடுங்குவர் என்பது அன்றைய சென்னை நகர போராடும் மக்களின் அனுபவமாக இருந்தது.

சேவை செய்யவே ஆட்சியிலமர்ந்த அண்ணாதுரையே ஒருகட்டத்தில் தான் ஒரு சூழ்நிலைக்கைதி என்று எழுதினார்.  அண்ணா அரசு  தொழிலாளர் இயக்கங்களை சுதந்திரமாக நடத்த அனுமதித்ததால் சுமூக தீர்வினை எட்ட முதலாளிகளுக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது.  ஆனால் சென்னை நகர முதலாளிகளின் வஞ்சகங்களை முறியடிக்க உருவான உழைப்பாளி மக்களின் கூட்டுணர்வின் மீது நம்பிக்கை இழக்கச் செய்த அரசு எந்திரம், முதலாளிகள்சங்கம், குருமூர்த்தி போன்ற தொழிற்சங்கவாதிகள் ஆகியோரின் சேட்டைகளால் நகரமே போர்க்களமானது. துப்பாக்கிச்சூடு உட்பட அனைத்தும் கையாளப்பட்டது. தொழிலாளர்கள் வன்முறையாளர்கள், எளிதில் ஆத்திரப்படுபவர்கள், எனவே அடக்கியே ஆளமுடியுமென ஊடகங்கள் எழுதின. நல்லவேளையாக அன்று மக்கள் குரல், அலைஓசை போன்ற மாலை தினசரிகள் எது உண்மையோ அதை மட்டும்  எழுதின.

அந்த கூட்டுணர்வை உருவாக்குவதில் சிந்தன், குசேலர், பரமேஸ்வரன், ஹரிபட் ஆகிய  நால்வரும் ஆற்றிய பணி மகத்தானது.  அதற்காக அவர்களுக்கு அரசு கொடுத்த பரிசு லத்தியடி, கண்ணீர்புகை, குண்டுவீச்சு, சிறைவாசம் போன்றவையே.  இவையெல்லாம், நான் ஐ.என்டி.யு.சி பாதையிலிருந்து விலக காரணமாக இருந்தாலும், மற்றொரு முக்கிய காரணத்தை பதிவு செய்ய வேண்டும். 

தொழிலாளர் பிரச்சினை : சங்கமாகத் திரண்டால் மட்டும் போதுமா ? | வினவு

மை காஃபி பார் போராட்டம்

1960களில் அன்று மவுண்ட்ரோடில் (இன்றுஅண்ணா சாலை)) இன்றைய தேவி தியேட்டர் நுழைவாயில் அருகில் (அன்று தேவி தியேட்டர் கட்டப்படாத காலம்) மை காஃபி பார் என்ற பிரபலமான ஹோட்டல் இருந்தது. இன்றைய சரவண பவனைவிட விதவிதமான ருசிமிக்க பண்டங்கள் நூதன பெயர்களில் அங்கு கிடைக்கும்.  நெய் ரோஸ்ட் தோசை கோபுரவடிவில் தட்டில் நிறுத்தி சர்வர்கள் கொண்டு வருவதே தனி அழகு.   பேப்பர் மசால் தேசை மிகபிரபலம். சமையல் கலையிலும், டேபிள் சேவையிலும் கை தேர்ந்த சுமார் 90 ஊழியர்கள் வரை இங்கு பணிபுரிந்தனர்.

நான் சிம்சனில் பணிபுரியும் பொழுது சாம்பார் கடலில் மிதக்கும் இரண்டு இட்லிகள், மெதுவடை மற்றும் மிளகாய், ஆப்பிள் பஜ்ஜிகள் இவைகளுக்காக இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி போவதுண்டு.

ஒரு முறை அந்த ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்தனர். தினசரி ஹோட்டல் வாசலில் ஆர்ப்பாட்டம் நடக்கும். நான் காலை ஷிஃப்ட் முடிந்து வீடு செல்கிற பொழுது பார்வையாளனாக கலந்துகொள்வேன் அதுவரை நான் கேள்விப்படாத தொ.ச தலைவர்கள் அதில் பேசுவர். 



அந்த வகையில் ஒருநாள் சாலையில் போவோர் வருவோரும் நின்று கேட்கிற முறையில் ஒருவர் பேசியதை கேட்டேன்.  அரசின் கொள்கை எப்படி ஹோட்டல் தொழிலில் ஈடுபடுவோரை நரக வாழ்க்கைக்குள்ளாக்குகிறது என்பதை தொடர்புபடுத்தி பேசியவிதம் ஒவ்வொரு தொழிலாளியின் வாழ்க்கைச் சித்திரத்தை நேரில் நிறுத்தும் விதமாக  அமைந்திருந்தது.  “உலகில் எத்தனையோ தொழில்கள் வரும் பின்னால் காணாமல் போகும், மானுடம் உள்ளவரை உணவு படைப்பது ஒன்றுதான் அழியா தொழில். இது தொழில் மட்டுமல்ல, கலையும் ஆகும்.  ஆனால் இதை  கேவலமான தொழிலாக நாகரிக மனிதன் கருதுகிறான். அதில் ஈடுபடுவோரை கேவலமாக பார்க்கிறான்” என்று விளக்கி ஒரு கேள்வியை கேட்டுவிட்டு அவர் அடுத்து குறிப்பிட்டது சிறப்பாக இருந்தது.  தோழர்களே இங்கே தொழிலாளர் நல இலாகா இருக்கிறது. சட்டங்கள் இருக்கின்றன, அதிகாரிகள் இருக்கிறார்கள்.  அவர்கள் யாரும் இந்தப்பக்கம் தலைகாட்டவில்லை.  ஆனால் இரவு பகலாக ஒரு போலீஸ் பட்டாளம் நிறுத்தப்பட்டிருக்கிறது.  தொழிலாளர் பிரச்சினை என்றால் அரசு ஏன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பார்க்கிறது?.  இது முதலாளிகளை பேணுகிற அரசு. தொழிலாளரகள் மனதில் முதலாளி இல்லாமல் வாழ இயலாது என்ற எண்ணத்தை பதிய வைக்கவே அரசு மிரட்டுகிறது.  என்று பேசியது எனக்கு புதுமையாக இருந்தது. 

அன்று வரை நான் அரசும் அதிகாரிகளும் நடுநிலை வகிப்பதாகவே கருதும் பாமரனில் ஒருவனாக இருந்தேன். அப்பொழுது பேசியது யார் என்றும் நான் அறியேன்.  இறுதியாக அவர் ஒரு வேண்டுகோள் விடுத்தார், வாரக்கணக்கில்  உள்ளிருப்பு போராட்டம் நடப்பதால் ஹோட்டலில் இருந்த உணவுப் பொருட்கள் காலியாகிவிட்டது.  இனி நிதி இல்லாமல் போரட்டம் தொடராது,  எனவே நிதி தருமாறு மற்ற சங்கங்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள். பீடி சங்கம் சார்பில் ஒரு நாள் உண்டியல் வசூல் செய்து தருவோம், மற்றவர்கள் உங்களால் முடிந்த அளவு உதவுங்கள் என்றார்.  அவர் பேச்சில் இருந்த நியாயம் என்னையும் தூண்டியது. தொழிலாளி இல்லாமல் முதலாளி இல்லை. ரோபோவானானாலும் அதை உருவாக்கவும், பராமரிக்கவும்,  சேவை செய்யவும் உழைப்பாளிகள் தேவை என்ற எண்ணம் பளிச்சிட்டது.

Simpson & Co Limited | Clientele Gallery - V3 Colour Solutions

முக்கிய திருப்பம்

மறுநாள் நான் சிம்சன்தொழிலாளர்களிடம் வசூல் செய்து 50 ரூபாய் திரட்டி அதே வாயிற் கூட்டத்திற்கு சென்று விசாரித்து அங்கு பொறுப்பிலிருந்த ராஜன் என்ற தோழரிடம் கொடுத்தேன்.  அவர் மூலமே ஸ்டிரிங்கர் தெரு தொழிற்சங்கம் பற்றி அறியவும் நேர்ந்தது.  முதல் நாள் பேசியது பீடி சங்க நிர்வாகியாக இருந்த பி.ஆர்.பரமேஸ்வரன் என்பதையும் அறிந்தேன்.   சிறு வயதிலேயே காஜா தைக்கிற தொழிலாளியாக சென்னை வந்த தோழர் பரமேஸ்வரன் பீடி சங்க நிர்வாகிகளில் ஒருவர். மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்.  தொழிலாளர் போராட்டம் எங்கு நடந்தாலும் அங்கு இவர் தலையை காணலாம் என்று ராஜன் அறிமுகம் செய்தார

அரசியல் – சமூக உறவு – உழைப்பை மட்டுமே சொத்தாக கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் வாழ்வு இவைகளுக்குள் மறைந்து கிடக்கும் உறவை மனதில் தைக்கும்படி பரமேஸ்வரன் பேசியது என்மனதில் ஆழப்பதிந்தது. ஏற்கனவே வி.பி.சிந்தனை சந்திக்க நேர்ந்தது பற்றிய காரணங்கள் முன்பதிவில் உள்ளன.   இப்பொழுது ஸ்டிரிங்கர் தெரு சங்கத்திற்கு அடிக்கடி போகிற நிலை உருவானது.  சிம்சனில் ரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் குழுக்களோடு எனக்கு ஏற்பட்ட உறவு பின்னாளில் மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைந்து செல்லவழி வகுத்தது.  அதற்கு முக்கிய காரணம் சிம்சன் கூட்டுறவு சங்கத்திற்கு தேர்தல் நடத்த நான் எடுத்த முயற்சிக்கு சரியான வழி காட்டும் தோழர்களாக ஸ்டிரிஙகர்தெரு சங்கம் இருந்ததாகும்.

சிம்சன் கூட்டுறவு சங்கத்திற்கு ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்தல் நடத்த 1965லிருந்து மேற்கொண்ட  எனது முயற்சிகள் எதுவும் எடுபடவில்லை.  என்னைத்தவிர வேறு எவரும் இந்த இயக்கத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை. கூட்டுறவு சங்கம் ஒழுங்காக நடக்கிறது அதை கெடுக்க கூடாது என்று நினைத்தனரே தவிர கூட்டுறவு இயக்கத்தின் முக்கியத்துவத்தை உணரவில்லை.  இந்த போராட்டமே என்வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அது பற்றி அடுத்து வரும்



தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்க



தொடர் 9 ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 10ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 11ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 12ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 15ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 15 | வே .மீனாட்சிசுந்தரம்



One thought on “சென்னையும், நானும் – 16 | வே .மீனாட்சிசுந்தரம்”
  1. மை காஃபி பார் போராட்டத்திற்கு சென்னை மெட்ரோ ஊழியர்கள் ஆதரவளிக்கும் படம் நிறைவாக இருக்கிறது.

    இன்னம் எத்தனை முறைதான சிம்சன் படத்தை பயன்படுத்தப் போகின்றீர்கள்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *