சென்னையும், நானும் – 18 (மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தேன்) | வே .மீனாட்சிசுந்தரம்சஸ்பென்ஷன் காலத்தில் நான் ஸ்டிரிங்கர் தெரு பக்கம் செல்லக் காரணங்கள் பலவுண்டு.  மார்க்சீய புத்தகங்களில் உள்ளதை புரிந்து கொள்வதற்கு  சிம்சன் போராட்டம் எனக்கு கற்றுக் கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். அதிலும் ஸ்டிரிங்கர் தெரு தொழிற் சங்கத்தை இயக்கிய தோழர்கள் எந்த புத்தகத்தையும் படித்தவர்கள் அல்ல, கேள்வி ஞானமே அவர்களது போராட்ட வாழ்வை ஒழுங்கமைத்திருந்தது.  அவர்கள் சந்திக்கிற தாக்குதல்களை சவால்களாக பார்க்கிற குணத்தை பெற்றிருப்பதைக் கண்டேன். 

தனிமையில் அமர்ந்தோ, குரு உபதேசத்தை கேட்டோ, தவமிருந்தோ பெறமுடியாத தைரியத்தையும் துணிச்சலையும் அவர்கள் பெற்றிருப்பதைக் கண்டேன்.  போலீஸ் லத்தியடி, கண்ணீர்புகை, குண்டு வீச்சு இவைகளை சந்திப்பதில்  அவர்களுக்கு தயக்கம் என்பது சிறிதளவும் கிடையாது. காவல் துறை வீசிய கண்ணீர் புகை குண்டை எடுத்து மீண்டும் அவர்கள் மீதே வீசும் துணிச்சல் அவர்களிடமிருந்தது.  ஊர்வலங்களில் பங்கேற்பது, கூட்டாக அமர்ந்து பிரச்சினைகளை விவாதிப்பது ஆகிய இரண்டிலும் பங்கு பெறுவதன் மூலம்தான் அவர்களுக்கு தைரியம் பிறக்கிறது என்பதைக் கண்டேன்.  எனவேதான் முதலாளி ஆதரவு அரசுகள் மத ஊர்வலங்களை, கூட்டங்களை அனுமதிக்கிறது, அதே வேளையில் தொழிலாளர் ஊர்வலங்கள், கூட்டங்கள் இவைகளை ஏன் நடத்தவிடாமல் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது என்பதை உணர்ந்தேன்.  அரசியல் விழிப்புணர்வை இவைகள் தூண்டுவதால்  முழுமையாக மறுக்கப்படுகின்றன.

சிம்சனில் மீண்டும் வேலை கிடைக்காது என்று தெரிந்ததால் ஊருக்குச் சென்று விவசாயம் செய்வதா? அல்லது பேட்டையில் ஒரு என்ஜின் உதிரி பாக பட்டறை நடத்துவதா? என்று துவக்கத்தில் தனிமையில் சிந்தித் பொழுது, எதிர்காலம் என்னுள் பயத்தை உருவாக்கியது. ஸ்டிரிங்கர் தெரு சங்க ஊர்வலத்திலும் கூட்டங்களிலும் கலந்து கொள்வது தொடர்ச்சியான பின்னர்   எனக்கும் தைரியம் முளைவிடத் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கட்சியில் சேருவது என்று முடிவு செய்தேன் அதற்கு காரணமிருந்தது  .            

இந்திய இடதுசாரி இயக்கங்களில் மார்க்சிஸ்ட் கட்சியே மக்களோடு ஓரளவு நெருக்கமாக இருந்தது.  அமைப்புக்களில் விவசாயிகளை. தொழிலாளர்களை, மாணவர்களை, இளைஞர்களை, பெண்களை, மாற்று திறனாளிகளை, மூன்றாம் பாலினத்தை அமைப்புக்களில் திரட்டுவது என்பதையே முக்கிய அரசியல் பணியாக அது கருதியது என்பதைக் கண்டேன்.கள அனுபவங்களும், வாசிப்பும்

லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்?  என்ற பிரசுரத்தில் குறிப்பிட்டபடி செயல்படும் கட்சியென ஸ்டிரிங்கர் தெரு அனுபவம் காட்டியது.  அமைப்புக்களில் திரண்ட மக்களே தலைவர்களையும், தத்துவ ஆசான்களையும் உருவாக்குகிறார்களே தவிர அவதார புருஷர்களாகவோ இவர்களின் வாரிசாகவோ யாரும் பிறப்பதில்லை என்ற பார்வையை கொடுப்பதில் கவனம் செலுத்துகிற கட்சியாக இருப்பதை ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் இருப்பதைக் கண்டேன்.

இந்த காலங்களில் அறிவியல் புத்தகங்கள், மார்க்சீய இலக்கியங்கள் இவைகளை படிப்பவனாக இருந்தேன்.   சோவியத் வெளியீடுகளில் வருகிற மேற்கோள்களே மார்க்சிய இலக்கியங்களை படிக்க என்னைத் தூண்டின. ஆனால் மார்கஸ் லெனின் எழுதிய பிரசுரங்கள்  எதையும் என்னால் முதலில் புரிந்து கொள்ள இயலவில்லை. அவைகளைத் தொட்டால் வரிக்குவரி அகராதியும், என்சைக்ளோபீடியாவும் இல்லாமல் நகர முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டேன். அன்று கம்யூனிச இயக்கத்தின் அரிச்சுவடிகளாக இருந்தவைகள் லெனின் எழுதிய என்ன செய்ய வேண்டும்? மற்றும் இந்தியாவைப் பற்றி மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைத் தொகுப்பு ஆகியவைகளே.

அன்று கட்சி வகுப்புகள் என்றால் லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற பிரசுரத்தின் உள்ளடக்கம்,  உபரி மதிப்பு சுரண்டல் பற்றிய விளக்கம், மார்க்ஸ் எங்கெல்ஸ் எழுதிய இந்தியவைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பு இவைகளே அடங்குவதாயிருந்தது.  வகுப்பெடுக்கும் ஆசிரியருக்கு இலக்கியங்கள், அறிவியல் தகவல்கள், வரலாறு ஆகியவை பற்றி எவ்வளவு பொதுஅறிவு இருக்கிறதோ அதைப் பொறுத்தே இவற்றை புரியம்படி அவரால் சொல்ல முடியும் என்பதையும் கண்டு கொண்டேன்.

 இந்த வகுப்புகள் கொடுக்கும் தகவல்களிலிருந்து உண்மையைத் தேடுகிற ஆர்வம் என்னுள் பிறந்தது. இந்த காலங்களில் வி.பிசிந்தனின் தொடர்பால் இந்துஎன்.ராம்., மைதிலி, வி.கேராமச்சந்திரன் போன்ற ஆழ்ந்த படிப்புள்ள மாணவர்க ள்ஸ்டிரிங்கர் தெருவிற்கு வந்து வி.பிசிந்தனோடு அரசியல் சித்தாந்த சர்ச்சைகளில் ஈடுபடுவர். நான் பார்வையாளனாக கலந்து கொள்வேன்.  அவர்களது வருகையால் சரியான முடிவெடுக்க கள அனுபவம் மட்டுமே போதாது புத்தக ஞானமும் இணைக்கப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்தேன்.  வரலாற்று ஞானத்தை விரிவு படுத்தாமல், அவைகளை புரிய முடியாது என்பதை உணர்ந்தேன். சிம்சனில் வேலை செய்யும் பொழுதே நான் சென்னை பல்கலைகழக நூலகம், கன்னிமாரா நூலகம், பிரிட்டீஷ் கவுன்சில் நூலகம் ஆகியவற்றில்  டெப்பாசிட் கட்டி உறுப்பினராகி புத்தகம் எடுப்பது வழக்கமாக இருந்தது. அங்கு சென்று என்சைக்ளோபீடியாவை பார்த்து வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வுகளை தெரிந்து கொள்வேன்.  எந்த வரலாற்றுப் புத்தகத்தையும் முழுமையாக படித்தவனல்ல.  சொல்லுக்கு பொருள் தேடியோ, குறிப்பிட்ட நிகழ்வை பற்றிய தகவல்களை சேகரிக்கவோ புத்தக பக்கங்களை தேடும் பழக்கம் எனக்கு உண்டு.  கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே பாடப் புத்தகத்தை படிக்காமல் நூலகம் சென்று கையில் கிடைத்ததை எடுத்து படிக்கும் பழக்கம் இருந்தது.  நாவல்கள், சிறு கதைகள், கவிதைகள் இவைகளை முழுமையாக படிக்கும் பழக்கம் மற்ற தகவல்களைத் தேடவே படிப்பேன்.  அதிலும் என்னைவிட சுமார் 12 வயது இளைய மாணவன் வி.கேராமச்சந்திரனின் அரசியல் பொருளாதார ஞானம் .மற்றும் மார்க்சை புரிந்த விதம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அன்று இந்த மூவருமே புத்தகஞானத்தையும், களப் போராட்டத்தையும் இணைத்து மாவட்டக் குழுவை செயல்பட வைக்க உதவினர் என்றால் மிகையன்று.. 

மார்க்சியத் திறனாய்வும் தமிழ் இலக்கியமும்

மார்க்சீய  அணுகுமுறை

உண்மையைத் தேடுகிற விவாத முறைகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.  இது  பற்றி தனியாக சொல்ல இருக்கிறேன். 

அன்று சோவியத் யூனியன் ஏராளமான கையடக்க புத்தகங்களை ஆங்கிலத்தில் பிரசுரித்து இந்தியாவில் குவித்து வந்தது. அறிவியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, இலக்கியம், தத்துவம். போன்றவை வரலாற்றுப் பொருள் முதல்வாத பார்வையை கொண்டிருந்தது. பூர்சுவா கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் அம்பலப்படுத்தும் வகையில் அவைகள் இருந்தன. நியூட்டனைப் பற்றிய வாழ்க்கை வரலாறு பிரிட்டீஷ் என்சைக்ளோபீடியா கூறுகிற முறைக்கும், சோவியத் ஆசிரியர்கள் விளக்குகிற முறைக்கும் வேறுபாடுஇருந்தது.   அன்று நியூட்டனின் கண்டு பிடிப்பிற்கும் சர்வதேச வர்த்தக உறவிற்கும் இருக்கும் தொடர்பு,  கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஆகியவை பற்றி என்சைக்ளோபீடியா குறிப்பில் இருக்காது.  சோவியத் விளக்கமோ அறிவியலுக்கும் முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் உள்ள உறவை எடுத்துக்காட்டும் முறையில் இருந்தது.  மானுட வாழ்வைப் புரிந்து கொள்ள மார்க்சீயப் பார்வையோடு வரலாறு எழுதப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்தேன்.  ஆனால் சோவியத் அறிவாளிகள் இந்தியாவை புரிந்து கொண்டவிதத்தில் எழுதப்பட்டதால் பாமர மக்கள் வியந்தனரே தவிர, தங்களது தனது அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டவல்லதாக இவைகளை ஏற்கவில்லை என்பதை பின்னாளில்தான் என்னால் உணர முடிந்தது.  அதற்கம்  இந்திய மார்க்சீய அறிவுலகம் தந்த எழுத்துக்கள்தான்  உதவின  .இந்திய சமூக கட்டமைப்பின் தனித்துவத்தை புரிந்து கொள்ள உதவின.

மேலை நாடுகளைப்போல் முதலாளித்துவம் முழுமையாக இந்தியாவில் இன்றும் வளரவில்லை.  பெரும்பான்மையான ஏழை மக்கள் சுயதொழிலைச் சார்ந்திருப்பதால் குலத்தொழில் சாதிக்கட்டமைப்பை நீடிக்கவே செய்கிறது. மன்னர்கள் காலத்தில் கோவில் திருப்பணியே உழைப்பைச் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரமாக இருந்தன.   இன்றும் அதன் மிச்சசொச்சம் நீடிப்பதை காண்கிறோம். இது அரசியலில் முக்கிய பங்காற்றுகிறது. ஜெயலலிதா முதலமைச்சரான பிறகு அரசு ஏழைகளை கவர கோவிலை பயன்படுத்தியதை அறிவோம்.  இப்பொழுது மோடி அந்த திருவேலையில் முனைப்புக் காட்டுகிறார்.  அவ்வையார் காலத்திலிருந்து சாதிக் கட்டமைப்பை தொலைத்துக் கட்டப் எழுதப்பட்ட இந்துமத உபதேசங்களும் மற்றும் அற நூல்களும்  எதுவாகட்டும் அவை இன்றுவரை சாதிகளைத் தாண்டி பார்க்கிற அரசியல் பார்வையை ஏழைகளுக்கு கொடுத்து விடவில்லை.  சைவ, வைணவ இலக்கிய சொல்லாடல்கள் அன்றைய உழைப்பை சார்ந்து வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை போராட்டத்தை வரலாற்று ரீதியாக கணக்கிட உதவும்.  அந்த கோணத்தில் அந்த இலக்கியத்தை ஆய்வு செய்கிறமுறை இனிதான் வரவேண்டும்.

மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது … – Marxist Reader

மார்க்சிஸ்ட் கட்சியில் சேர இன்னொரு முக்கிய காரணம் அதனுடைய அரசியல் நடைமுறை, வர்க்க முரண்களை கணக்கிலெடுக்கும் அணுகுமுறை ஆகிய இரண்டும் என்னை ஈர்த்தது.  லெனின் சொன்னார் “ரஷ்ய பாராளுமன்றமோ, பிரிட்டீஷ் பாராளுமன்றமோ பன்றிகளின் தொழுவமாக இருப்பதை மாற்றிட மார்க்சிஸ்டுகள் உள்ளே செல்ல வேண்டும்.  மார்க்சிஸ்ட்டுள் பங்கேற்காத தொழிற்சங்கம் முதலாளித்துவ உற்பத்தி முறையோடு சமரசம் செய்து மக்கள் விரோதமாக போய் உழைப்பாளி வர்க்கம் தனிமைப்படும். மார்க்சிஸ்டுகள் பங்கேற்காத விவசாய சங்கம் ஊசலாடும் விவசாயிகளை சுரண்டும் வர்க்கத்தின் பக்கம் தள்ளிவிடும்.  மார்க்சிஸ்டுகள் பங்கேற்காத மாணவர் அமைப்பு கலவரசக்தியாக மாறிவிடும்” இந்த லெனினீயப் பார்வையோடு மார்க்சிஸ்ட் கட்சி செயல்பட முயற்சிப்பதால் இந்த பக்கம் வந்தேன். கட்சியால் நான் அடைந்த பலன் கடலிலும் பெரிது. என்னால் கட்சி அடைந்த பலன் என்று எதுவும் சொல்வதற்கில்லை.  அது எப்படி என்பதை போகப்போக எனது குடும்ப பின்னனி பற்றிய தகவல்கள் மேலும் பதிவாகி வருகிறபொழுது வாசகர்கள் உணர்வர்..

(தொடரும்)தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்கதொடர் 9 ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 9 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 10ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 10 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 11ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 11 | வே .மீனாட்சிசுந்தரம்
தொடர் 12ஐ வாசிக்க
சென்னையும், நானும் – 12 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 15ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 15 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 16ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 16 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 17ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 17 | வே .மீனாட்சிசுந்தரம்