ஆதிக்க சக்திகள் பழசும்,புதுசும், கொரானாவும் எடப்பாடி லத்தியும்
கோவிந்தப்பேரியில் ஒரேபண்ணையார் குடும்பத்தில் பிறந்த பங்காளிகளுக்குச் சொந்தமாக இருந்த (நஞ்சை 900 ஏக்கர், புஞ்சை 500 ஏக்கர்) நிலங்கள் அனைத்தும் 1970களில் சிறுகுறு விவசாயிகள் கையில் பிரிந்துபோகத் தொடங்கி விட்டது. இது உச்சவரம்பு சட்டத்தினால் நிகழவில்லை. பிரிட்டீஷ் ஆட்சியின்போதே பணப்புழக்கத்தை மையமாக வைத்து பொருளாதாரம் வளரும் பாதையை நோக்கியதால் வர்த்தகமும் வட்டித்தொழிலும் வளர்ந்தன.
நெல்லை மாவட்ட ஜமீன்தார்களும், மிட்டா மிராசுகளும், பண்ணையார்களும் ஆடம்பர செலவுகளுக்கு நிலங்களை வட்டிக்காரர்களிடம் அடமானம் வைத்தே இழந்தனர். அந்த வட்டிக்காரர்கள் அதை சிறுகுறு விவசாயிகளுக்கு விற்றுவிட்டனர். இதன் விளைவாக எசமான விசுவாசம் கொண்ட அடிமை புத்தியைப் பேணும், பழைய பண்பாட்டைக் கொண்ட பண்ணையார்கள் ஆதிக்கம் செல்வாக்கிழந்தது.. இந்த புதியவகை ஆதிக்கம் சாதியரசியலை அடிப்படையாகக் கொண்டு பிறந்தது.
அதனால் எனது கோவிந்தப்பேரியின் ஆன்மா பழையரக ஆதிக்கசக்திகளை விரட்டினாலும். புதிய வகை ஆதிக்கசக்திகளால் திணறுகிறது. இந்த மாற்றம் ஒருவகையில் முற்போக்கானது. ஏனெனில் புதியவகை ஆதிக்கசக்தி பழமைவாத ஏற்றத்தாழ்வு பண்பாட்டுப்பாறை மீது கட்டப்படவில்லை. இந்த பலவீனம் அதனை எதிர்க்கும் ஜனநாயக அரசியலுக்கு வெல்லுகிற வாய்ப்பை அளிக்கிறது. இதுபற்றியும் என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் அடுத்துவரும் பதிவுகளில் விரிவாக வெளிப்படுத்துகிறேன்.
நான் சென்னைக்கு முதலில் 1952ல் (அப்பொழுது எனது வயது16) வந்தேன். அதன் பிறகு 1957ல் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழாவிற்கு எனது கல்லூரி சார்பில் மாணவ பிரதிநிதியாக வந்திருக்கிறேன். 1959ல் வந்த பின்னர் சென்னைவாசியாகி விட்டேன். 1952ல் வந்த பொழுது கூவம் நதி ஓடியது. சித்ரா, கெயிட்டி என இரண்டு டாக்கீஸ்கள் கூவத்தின் கரையையொட்டி இருந்தன . விநோதம் என்னவெனில் சிலர் பாலத்தின் சுவரில் உட்கார்ந்து தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இரண்டு கரைகளிலுமிருந்த படித்துறைகளில் மக்கள் துணிகளைத் துவைத்தனர். சிலர் ஆற்றின் நடுவே சென்று குளித்தனர். குடங்களில் நீரை நிரப்பிச் சென்றனர்.
1957ல் நான் வந்தபோது டிராம்களும் குதிரைவண்டிகளும் காணாமல்போனது, கூவமும் முன்போலில்லை. விஞ்ஞானிகள் ஆய்வின்படி கூவம், அடையாறு, கொசத்தலை ஆகிய மூன்று ஆறுகளிலும், கால்வாய்களிலும் 1950களில் 49வகை மீன்கள் ஐரை முதல் வாளை வரை இருந்தன. மனிதர்களுக்கு அடுத்து மீன்களுக்குத்தான் பெயர்களுண்டு. 1970களில் இருபது வகையே வாழ முடிந்தது. இன்று சாக்கடை வாழ் நுண்ணுயிர் தவிர ஆக்ஸிஜனை சுவாசிக்கிற எந்த ஜீவராசியும் இல்லை. இந்த சாக்கடைகள் ஐம்பது ஆண்டுகளாக ஆய்வாளர்களின் ஆய்வகமாக இருந்து வருகிறது. சுருக்கமாகச் சொன்னால் உலக நாடுகளிலிருந்து, அதிலும் சாக்கடையில்லா நகரங்களிலிருந்து பல ஆய்வாளர்களுக்கு சோதனைச்சாலையாக இன்றும் தருமமிகு சென்னை இருந்து வருகிறது.
இதில் கலந்திருக்கும் உலோக ரசாயனங்கள், பூச்சிகொல்லிகள், மனிதக் கழிவுகள் என்று வகைப்படுத்தி ஆய்வுகள் நடக்கின்றன. மண்ணிலே வாழ்கிற வைரஸ் சாக்கடையில் தொற்றுமா? என்று வைரஸ் வேட்டையாளர்களும் தேடுகிறார்கள் சென்னைவாழ் மக்களுக்குச் சென்னை நோய்களின் கோவில் அதே தருணத்தில் பிற நாட்டவர்க்கு ஆய்வகம் என்பதைத் தயங்காமல் கூறலாம்..
இத்தோடு ஆறுகளைக் கெடுத்த கயவர்களையும் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். முதலிடத்தில் இருப்பது சென்னை மாநகராட்சியாகும்.. இன்றும் தினசரி ஐந்தரைக்கோடி லிட்டர் சுத்தப்படுத்தப்படாத சாக்கடை நீரை ஆறுகளிலும், கால்வாய்களிலும் தள்ளி வருகிறது. அதிகாரிகளிடம் கேட்டால் ஒரு வெள்ளம் வந்தால் எல்லாம் கடலுக்குப்போய் சுத்தமாகிவிடும் என்கின்றனர். அட மூடர்களே இந்த சாக்கடை கடல் வாழ் ஜீவராசிகளை அழிக்காதா? என்று வினவினால் அது மக்கள் வாக்களித்த அரசின் முடிவு என்கின்றனர்.
2019ல் எடப்பாடி அரசு ஆறுகளையும், கால்வாய்களையும் ஓட வைக்க 2371கோடி ரூபாய் ஒதுக்கியதாகச் சட்டமன்றத்தில் அறிவித்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நீரோடைகளைச் சுத்தம் செய்ய என்று ஒதுக்கிய கோடிகளின் வரலாறு தெரிந்தவர்கள் கலைஞர், தளபதி, மேயர்சுப்பிரமனியம், எடப்பாடி போன்ற ஒரு சிலரே இருப்பர். இப்பொழுது இவர்களால் அறிவிக்கப்படும் நூற்றுக்கணக்கான கோடிகளாய் இருந்த ஒதுக்கீடுகள் ஆயிரக்கணக்காக அதிகரித்தபோதும் சென்னையில் ஆறுகளும், கால்வாய்களும் மாற மறுக்கின்றன. அது ஏனென்று ஆள்வோருக்குத் தெரிவதில்லை. எதைச் செய்ய வேண்டுமோ அவற்றை நிறைவேற்றிடப் பணத்தைச் செலவழிக்காமல், இவர்கள் வேறு எதையாவது செய்துவருவதைக் காண்கிறோம். இதேநிலையை கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையிலும் காண்கிறோம். கொரோனாவை விரட்ட லத்தியை நம்புகிற மருத்துவ அரசியல் மேதைகள் எடப்பாடியும், உ.பி ஆதித்யநாத்தும். இந்தியாவில் தற்போதைக்கு இவர்களைத் தவிர வேறு யாருமிருப்பதாக தெரியவில்லை.
விளக்கம் தொடரும்!
தொடர் 1ஐ வாசிக்க