சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

 

சென்னையும் பிணந்திண்ணிகளின் கண்டனமும்

காக்கி உடை தரித்த பிணந்திண்ணிகள் இன்னும் உலாவுவதை எதைக் காட்டுகிறது? ஆட்சி மாறினாலும் கொள்கை மாறவில்லை என்பதைக் காட்டவில்லையா?  நமது சட்டங்கள், நீதிமன்றங்கள் மனித உரிமையை காக்கத் தவறுகிறது என்று புலம்பினால் மட்டும் போதுமா?  கொரானா காலத்து விதிப்படி கடையை மூடவில்லை என்ற காரணத்திற்காக ஒரு வியாபாரியை காவல் நிலைய அதிகாரிகள் சித்திரவதை செய்தனர். அதைத் தடுக்க முயன்ற மகனையும் கொடுமைக்குள்ளாக்கினர்.  இருவரையும்  சிறையில் அடைத்தனர்.  பின்னர் மருத்துவ மனையில் இருவரும் பிணமாகினர் .

இதன் மூலம் காவல் நிலைய அதிகாரிகள் சித்திரவதை செய்ய பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் என்பது தெரிய வருகிறது. இல்லையெனில் வியாபாரியை இரும்புப்பூண் கொண்ட லத்தியை மலத்துவாரம் வழியாக சொறுகி துன்புறுத்தியிருப்பார்களா?

அமெரிக்காவின் மினிசோட்டா மாகாணத்தின் மினியாபோலிஸ் நகரில் நான்கு  ஆங்கிலோ அமெரிக்க காவல் அதிகாரிகள் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கனை கைது செய்ய முயன்றபோது முழங்காலால் கழுத்தை நெறித்ததால் சாவு நேர்ந்தது.  அமெரிக்காவே கலவரபூமி ஆகிவிட்டது,  அட்லாண்டிக் கடலைத் தாண்டி ஐரோப்பாவிலே இச்செய்தி பரவியவுடன் மக்கள் கொதித்தெழுகிறார்கள். அரசுகள்யோசிக்கின்றன.

இங்கே சொந்த மண்ணில் வழக்கம் போல், சட்டம் ஒழுங்கு சோதனை என்ற பெயரில் சாத்தான்குளம் காவல் நியைத்தில் பணிபுரிந்து வரக்கூடிய  கொலைவெறி பிடித்த காவலர்கள் தந்தையும் மகனையும் ஒரு சேர  கொலை செய்துள்ளனர்.  பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபிறகும், காவல் நிலையக் கொலைகளை நியாயப்படுத்துவது அரசின் கொள்கையாகவே இருந்து வருகிறது. காவல் நிலையத்தில் பெண்ணை வன்புணர்ச்சி செய்வது, சட்டம் ஒழுங்கு போதனையின் அம்சம் என்று எம்ஜிஆர் சட்டமன்றத்தில் கொடுத்த விளக்கம் உணர்த்தியதை மக்கள் மறந்துவிட்டனர்.

அமெரிக்காவில் நடப்பது போல் கலவரம் செய்ய வேண்டிய அவசியமில்லை.  அன்று மெரினாவிலே ஜல்லிகட்டுக்கு கூடியதுபோல் அவரவர் தெருக்களிலே அமர்ந்தால் போதும்.  இவ்வாறு மக்கள் தெருக்களிலே இறங்காமல், எத்தனை சட்டம் வந்தாலும் காக்கியுடை தரித்த பிணந்திண்ணிகள் ஒடுங்கப் போவதில்லை.  ஆட்சிகள் மாறினாலும் காலனியாதிக்க அரசின் ஒடுக்கு முறைகள் நீடிக்கிறது.  பிணந்திண்ணி அரசியலை விரட்டாமல் பிணந்திண்ணிகளாக காவலர்கள் ஆவதை தடுக்க இயலாது.

1984ல் ஐக்கியநாட்டு சபை காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை செய்ய சித்திரவதை செய்வதை தடுக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த போது  நல்ல பெயரை எடுக்கும் நோக்கில்  இந்திய அரசு அதை ஏற்று கையெழுத்திட்டது. அந்த தீர்மானத்தை நாடாளுமன்றம் 1987ல் விவாதித்து ஏற்றிருக்க வேண்டும். ஆனால் இந்திய அரசு அதைச் செய்யவில்லை.  அதையொட்டி காவல் நிலைய சித்ரவதை தடுப்புச் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். அதையும் இன்று வரை செய்யவில்லை.  அரசியல் எதிரிகளை வேட்டையாடும் மோடி அரசும் இதைச் செய்யாது.  இதற்கு ஓரே வழி மக்களின் அமைதியான பெருந் திரள் கூட்டமேயாகும்.

நாற்பதாண்டுகளுக்குமுன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக தொழிலாளர்கள் ஒன்று பட்டு ஆதரவு இயக்கத்திற்கு வழிகாட்டியது போல் இதற்கும் சென்னை மக்கள் ஒன்று திரண்டு வழிகாட்ட வேண்டும். இதுவும் பேணவேண்டியமரபு என்று இன்றைய சென்னை அதற்கு வழிகாட்டுமா? அந்தமரபு பற்றி அடுத்து வரும்.

ஊரும் ஸ்தலபுராணங்களும்!

போஸ் சமூக நல சங்கம் கோவிந்தப்பேரி ...

எனது ஊரான கோவிந்தப்பேரியில் நில உடமையில் ஏற்பட்ட மாற்றங்கள் எவ்வாறு நேர்ந்தது என்பதை முன்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். நிலஉச்சவரம்பு சட்டப்படி அரசு கைப்பற்றி உழுபவனுக்கு சொந்தம் என்று கொடுத்ததால் ஏற்படவில்லை.  நில உடமையாளர்களின் ஆடம்பர வாழ்வு,பாகப் பிரிவினை, பிரிட்டீஷ் அரசுகொண்டுவந்த பண மைய- வர்த்தக-பொருளாதாரசூழல் ஆகியவைகளே மாற்றங்களை கொண்டுவந்தன என்று குறிப்பிட்டிருந்தேன்.

உழுபவனுக்கு நிலம் என்ற காந்தியின் கனவை நிறைவேற்ற அவரது விசுவாசிகள் இயற்றிய உச்ச வரம்பு சட்டத்தைவிட பிரிட்டீஷ் அரசு விட்டுச்சென்ற வர்த்தக வட்டி கட்டமைப்பு அதிக பங்காற்றியது என்பதற்கு சான்றாக எனது ஊர் இருந்தது என்பதை கோடிட்டுகாட்டினேன்.

1952 பொதுத் தேர்தலில் பல காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர் உட்பட உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கோட்பாட்டை கிண்டல் செய்து பேசியதை நான் கேட்டிருக்கிறேன்.  அப் பொழுது எனக்கு 16 வயது.  வீடு வீடாகச் சென்று வாக்குச்சீட்டை எழுதிக் கொடுத்திருக்கிறேன்

இன்று கோவிந்தப்பேரியின் தோற்றம் சிறு குறு நில உடமை விவசாயிகளின் உழைப்பால் சிறப்பாக மாறிவிட்டது. கள்ளு இறக்க தடை வந்த பிறகு ஆயிரக்கனக்கான பனை மரங்கள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் தென்னந் தோப்புகள் வந்து விட்டன. பனை மரங்கள் அனைத்தும் செங்கல் சூளைக்கு விறகுகளாக எரிக்கப்பட்டன. பண்ணையார்களுக்கு சொந்தமாக இருந்த தரிசு நிலங்கள் கைமாறி சிறு குறு விவசாயிகளின் உழைப்பால் இன்று தோட்டங்களாகிவிட்டன. பண்ணையில் வேலை செய்ய என்று தனியாக இருந்த சேரி மறைந்து வயல்களாகி விட்டன. இரண்டு சேரிகள் ஒரே சேரியாகிவிட்டது. அதன் பெயர் ராஜாங்கபுறம் ஆகும்

நான் சிறுவனாக இருந்தபோது எனது கிராமம் சிறியது. மேலபாச்சேரி, கீழப்பச்சேரி என்று இரண்டு பச்சேரிகள் இருந்தன. சானாக்குடிமேடு என்று ஒரு பகுதி இருந்தது. தவிர சாதி அடிப்படையில் தெருக்கள் இருந்தன. மறவர்கள் வசிக்கும் தெருக்கள். பண்ணையார் குடும்பம் வசிக்கும் தெரு. பண்ணைகளில் கணக்கு வழக்கை கவனிக்கும் பிள்ளைமார்கள் தெருக்கள் இருந்தன.  எல்லாம் சேர்த்து சுமார் 550 குடும்பங்கள் வசித்தன எனலாம். பண்ணையார்கள் சைவ முதலியார்கள். இங்கு பிராமணர்கள் யாரும் கிடையாது. கோவிந்தப்பேரிக்கு ஸ்தலபுராணமும் கிடையாது, சைவ வைணவ கோவிலும் கிடையாது, இங்கே ஒரு பேச்சியம்மன் கோவில் மறவர் சமூக மரபுகளால் பேணப்படுகிறது.  நாட்டுப்புற கலைஞர்கள் விழாக்காலங்களில் கலக்குவார்கள். அதற்கு சொத்து கிடையாது. சேரிப்பகுதியில் மாடசாமி வெல்லகட்டி வடிவில் நிற்கிறார். இது தவிர பண்ணையார் குடும்பம் கட்டிய பிள்ளையார் கோவிலுண்டு அதற்கு பூசை செய்ய ஓதுவாருமுண்டு.  காட்டுக்குள்ளே ஒரு சாஸ்தா கோவிலுண்டு.   சில செண்டு நிலம் பிள்ளையார் கோவிலுக்குண்டு.

Sakthi Vikatan - 14 January 2020 - மஞ்சள் இடித்தால் ...

கோவிந்தப்பேரிக்கு அருகிலிருக்கும் கடையம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி போன்றவை ஸ்தலபுராணங்களை கொண்ட ஊர்களாகும். அங்கு குலதெய்வங்கள். சைவ வைணவ கோவில்கள் உண்டு. அதற்கு சொத்துக்களுமுண்டு. மன்னர்கள் காலத்திலேயே உருவான ஊர்களுக்கு அடையாளம் ஸ்தலபுராணம்  என்பதை அறிவோம்.

சிறுவயதில் என் தாத்தா இந்த புராணங்களை கூறும் பொழுது ஏன் கோவிந்தப்பேரிக்கு ஊர் பெயரிருந்தும் ஸ்தல புராணமில்லை என்பதற்கு விளக்கம் கொடுப்பார். இந்தப்பகுதி நிலமனைத்தும் ஸ்தல புராணமுள்ள சிவசைலம் கோவிலுக்கு சொந்தமான இடம்.  அதனால் இதற்கென தனியான புராணமில்லை.  பிரிட்டீஷ் அரசின் தயவால்அந்த கோவில் தருமபுர மடத்திற்கு சொந்தமாக இருந்தது.

20 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் அந்த மடத்தின் ஒரு சன்னிதானம், பாப்பான்குள முதலியார் குடும்பத்திற்கு உறவினராக இருந்ததால் சிலதங்க,வெள்ளி நாணயங்களைப் பெற்று இந்தப் பகுதியை கொடுத்து விட்டார். இது ஒரு பண்ணையார் குடும்பம் உருவாக்கிய குடியிருப்பாகும். எனவே ஸ்தலபுராணமோ புறம்போக்கு நிலமோ இல்லாத ஊராகிவிட்டது.

குளங்கள் உட்பட பண்ணையார் வசமே இருந்தன. ஆனால் கிராம நிரவாகம் பிரிட்டீஷ் அரசின் கையிலிருந்தது.  நிலவரி,குளம்பாசி அனுபோக வரி செலுத்த வேண்டும்.

பிரிட்டீஷ் அரசு ஊர்நிர்வாகத்திற்கு மன்னர்கள் காலத்து மரபுகளை பேணியவிதம். ஸ்தல புராணங்களின் தாக்கம் இவைகளை பற்றிய தகவல்கள் அடுத்துவரும்.

தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்