பனை உத்திரங்களும், மஞ்சனத்தி பலகை ஊஞ்சலும். . .
எனது முந்தைய பதிவு உள்ளத்தழுக்கை சென்னை கழுவத் தொடங்கியது என்ற வாசகத்தோடு முடியும். அது வெற்றுரை அல்ல என்பது நான் எழுத எழுதவே புரியும். அதுபோல் சென்னையின் ஆன்மீக அழகு என்று சென்னைவாசிகளை குறிப்பிட்டிருந்தேன். அதுபற்றி சில தகவல்களை இங்கே பதிவு செய்கிறேன்.
1959ல் சென்னைக்கு வருமுன்னர் எனது இலக்கு வேறு. வந்த பின்னர் அது திசை மாறியது. ஏ.ஐ.எம்.இ படிப்பது எனது இலக்கானது. அதற்கு ஒரு தொழிற்சாலையில் பயிற்சியாளனாக இருக்க வேண்டும். எனவே 1960-61ல் மவுண்ட்ரோடிலிருந்த ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் பழுதுபார்க்கும் பிரிவில் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன். (மின் வாரியத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேர் எதிரில் சுரங்கப்பாதையையொட்டி ஸ்டாண்ட்ர் மோட்டார்ஸ் நிறுவனம் அமைந்திருந்தது. இப்போது அங்கே ரஹஜா அடுக்கு மாடி அலுவலக வளாகம் அமைந்திருக்கிறது,) அங்குதான் முதன் முதலாக நவீன தொழிலாளர்களோடு எனது உறவு உருவாகிறது. எசமான விசுவாமில்லாத, செய்யும் தொழிலை கலையாக நேசித்து, பெருமையாக கருதும் ஒரு புதியரக உழைப்பாளிகளைக் கண்டேன். இது பற்றி தனியாக பின்னர் சொல்வேன். அங்கிருந்து 1962-ம் ஆண்டு பெர்க்கின்ஸ் டீசல் என்ஜின் கட்டியமைக்கும் சிம்சன் தொழிற்சாலையில் பயிற்சியாளனாகச் சேர்ந்தேன். இப்பொழுது எனது இலக்கு மாறியது. ஏ.ஐஎம்.இயின் இரண்டு கட்ட பரீட்சையை எழுதி வெற்றி பெற்ற பிறகு, நெல்லை தொழிற்பேட்டையில் என்ஜின் உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலை கட்டுவது என்று ஆனது.

அதிகாரிகளாக இருக்கும் உறவினர்கள் உதவுவதாக கூறியதால் எந்திர இயக்க அனுபவம் பெற சிம்சனில் லேத் மில்லிங் மெஷினை இயக்கி அனுபவம்பெற முடிவு செய்தேன். அதற்கு பணியாளனாக சேராமல் இயலாது என்ற நிலை இருந்தது. அதற்கு நான் பட்டபாடு தனிக்கதை. 1963ல் நான் சிம்சனில் பணியாளானாகச் சேர்ந்தேன். அதே ஆண்டிலிருந்து நானும் எனது துணைவியும் சென்னைநகர ஒண்டுக் குடித்தனவாசியானோம். நான் கல்லூரியில் பட்டப்படிப்பிற்காக சேருவதற்கு முன்னரே திருமணமானவன் என்பதை குறிப்பிடவேண்டும். 1959ல் சென்னைக்கு புறப்படும் பொழுதே எனது தந்தை சென்னைக்கு போனதும் ஒரு வீட்டைப்பார்த்து மனைவியை கூட்டிச்செல், செலவிற்கு பணம் அனுப்புகிறேன் என்று சொன்னதோடன்றி, அதன்படி மாதந்தோறும் பணத்தையும் அனுப்பி வைத்தார்.
நான் படிக்க வருவதால் அதைக்காட்டி தள்ளி வைத்தேன். சிம்சனில் சம்பளம் கிடைப்பதால் வாடகைக்கு குடியேற முடிவு செய்தேன். அதற்குமுன் கோவிந்தப்பேரியில் எனது வீட்டைப்பற்றி சிலவரிகள் குறிப்பிடவேண்டும்
கோவிந்தபேரியில் பழைய காலத்தில் வைரம்பாய்ந்த பனை மரங்களை மட்டுமே வெட்டிச் செதுக்கி வீடுகளுக்கு கூரைவேய மற்றும் மச்சு வீடு கட்ட உத்திரமாக பயன்படுத்துவர். தோதகத்தி (ரோஸ்வுட்) மரத்திற்கு ஈடாக அதன் கரு நிறம் பளபளக்கும். எங்கள் வீடு சிறியதுதான். செங்கலும் சுண்ணாம்புக் கலவையும் கொண்டு கட்டிய சுவர்களும், தேக்குத் தூண்களும், வைரம் பாய்ந்த பனை உத்திரங்களும், ரோஸ்வுட் கதவுகளும், மஞ்சனத்திபலகை ஊஞ்சலும் வீட்டை அலங்கரித்தன. மேற்குத் தொடர்ச்சி மலையின் இப்பகுதியில் தேக்கு.தோதகத்தி. நாங்கு.கோங்கு.கோங்குஏச்சான்.சூரைப்பிறம்பு. ஈத்தக்களி இவைகளே அதிகமுண்டு. இங்கு சந்தனமரம் அவ்வளவாக கிடையாது. மான்களும் கிடையாது. மிளா என்ற புள்ளி இல்லாத மான்வகை அதிகமுண்டு. மிளா. காட்டெருமை, காட்டுப்பன்றி. முயல். உடும்பு இவைகளே வேட்டை விலங்குகளாகும். புனுகுப் பூனைகளை பொறிவைத்துப் பிடித்து வீடுகளில் கூண்டிலே அடைத்து வளர்ப்பது என்பது ஒருதொழிலாகவே இருந்தது.
எங்க வீட்டில் புதுமை என்னவெனில், எங்கள் ஊரில் யார் வீட்டிலும் இல்லாத வகையில் புகைக்கூண்டு கோபுரம் போல் உயர்ந்து நின்றது. சாணியையும்,மாட்டுக்கோமியத்தையும் கொண்டு (கோபர்) எரிவாயு தயாரிக்கும் கட்டமைப்பு இருந்தது. என் தாத்தா வேட்டையாடிக்கொண்டு வந்த மிளாக்கொம்பு பொருத்திய மிளாமுக மரபொம்மை வீட்டு வரவேற்பறையின் சுவற்றில் இருந்தது. வீர சைவ குடும்பமானாலும் வேட்டையாடுவது என்பது பொழுதுபோக்காக இருந்தது. எங்கள் ஊருக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. காடுகளுக்கு வேட்டையாட லைசென்ஸ் உள்ள துப்பாக்கியைவிட லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகளே அதிகம். அதற்காக தோட்டாக்களும் சொந்தமாக செய்து கொள்வர். இதன் பொருட்டு வெடிமருந்தும் அவர்களே தயாரித்துக் கொள்வர். திப்புசுல்தான் காலத்திலிருந்தே தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு குடிசைத் தொழிலாக இருந்தது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் அறிவர். பிரிட்டீஷ் ராணுவத்திற்கு நெப்போலியனை வெல்ல வீரியமிக்க இந்திய வெடிமருந்தே பயன்பட்டது என்பது வரலாற்றில் புதைந்து கிடக்கும் ஒரு உண்மை.
காட்டில் உள்ள ஒருவகை மரங்களின் பட்டை, வெல்லம், கருப்பட்டி, சில மூலிகைகள் இவைகளைக் கொண்டு சாராயம் காய்ச்சுவது ஒரு தொழிலாகவே இருந்தது. பிரிட்டீஷ் அரசாலோ ஏன் எம்.ஜி.ஆர் காலத்து சாராயமோ இதன் அளவிற்கு தூய்மை இருக்காது. தவிர இது மருத்துவர்கள் பயன்படுத்தும் மருந்தாகவும் இருந்தது. இன்று அந்த தொழில் மறைந்துவிட்டது. இதில் விநோதம் என்னவெனில் பண்ணையார்கள் அருந்துவது சீமைச்சாராயம். மற்ற உழைப்பாளிகளுக்கு கள்ளுக்கு அடுத்த தேவாமிர்தம் இதுதான். 1947க்குப் பிறகு காட்டிற்குள் தங்கி வேட்டையாடுவதும், லைசென்ஸ் இல்லாத துப்பாக்கிகள் வைத்திருப்பதும் அரசின் கொள்கையால் மறையத் தொடங்கின. முன்பு போல் காடுகளை சூறையாடுவதும் குறைந்து போனது. இந்த மாற்றங்களை தொடர்ந்து எசமான விசுவாசமும் மங்கத் தொடங்கியது. கிராமத்துச் சாணி-புழுதி வாசனை நகரத்தாருக்கு வாந்தியை வரவழிக்கும். கிராமவாசிக்கோ நகர சாக்கடை குடலைப் புரட்டும்.
அன்றைய சென்னையில் 90சத மத்தியதர வர்க்கத்தினர் வாடகை வீடுகளில் ஒண்டுக் குடித்தனவாசிகளே. ஹவுஸ்ஓனர்கள் எல்லாம் சாம்ராஜ்யவாதிகளாகவும் வாடகைகொடுப்போர் எல்லாம் அடிமைகளாகவும் சித்தரிப்பதை கேள்விப் பட்டிருக்கிறேன்.
ஆனால் எனது அனுபவம் வேறு. நான் வாடகைக்கு குடியேறிய வீடுகளின் சொந்தக்காரர்கள் யாரும் நிபந்தனைகள் போடுவதோ, மின்விளக்குகளை அணைக்க உத்திரவு போடுவதோ இல்லை. மிகவும் நேசமாக நடந்து கொண்டவர்களாகவே இருந்தனர். இரவு ஷிப்ட் முடித்து வீட்டிற்கு வந்தால் முகம் சுளிக்காமல் கதவைத் திறந்துவிடுவர். காபித்தூள்,சர்க்கரை,பால்மற்றும் தின்பண்டஙகள் கொடுக்கல் வாங்கல் என்று சொல்லமுடியாது. எடுத்தல் கொடுத்தல் என்றே சொல்லவேண்டும். அந்த அளவிற்கு நெருக்கமிருந்தது. ஒரு டாய்லெட்டை பலர் பயன்படுத்தவேண்டிய பிரச்சினையால் நான் குடியிருப்பை மாற்றிமாற்றி அந்த ஆறு வருடத்தில் (1962- 1968) ஏழு வீடுகள் மாறி விட்டோம். வீட்டுச்சொந்தக்காரர்கள் பிரியாவிடை கொடுத்தே அனுப்புவர். சிம்சனில் நிரந்தரபணி எனது சொந்த தொழில் துவங்கும் இலக்கை திசைமாற்றிவிட்டது அதுபற்றிபின்னர்.
ரயில் தடம் புரள்கிறது!
அண்மையில் மோடி அரசு இந்திய ரயில்வேயை பல பிரிவுகளாக பிரித்துத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் போவதாக அறிவித்தவுடன் 1849லிருந்து இந்திய ரயில்வே அடைந்த மாற்றங்களின் வரலாற்றை தேடலானேன். கிளைவ் பேட்டரி அருகேயுள்ள ராயபுரம் ரயில்நிலையத்திற்கு வாய் இருந்தால் அது பல உண்மைகளைச் சொல்லும். பிராட்கேஜ், மீட்டர்கேஜ், நேரோகேஜ் என மூன்றுவகை ரயில்பாதைகள் போடப்பட்ட கதைகளை அது சொல்லும்.
பிரிட்டீஷ் அரசு ராணுவ நடவடிக்கைகளை மனதில்கொண்டு, ராயபுரம் ரயில் நிலையத்திலிருந்து ஆற்காடு நவாப் அரண்மனைவரைக்கும் ஒரு ரயில்பாதையை உருவாக்கியது. அது பயணிகள் சேவைக்கானதல்ல என்று கூறினாலும், பின்னர் லாபம் கருதி பயணிகள் சேவையை புகுத்தினர் என்பதும் புரியும். இந்த வரலாறு காட்டுகிற ஒருவிநோதம். பிரிட்டீஷ் அரசு காலத்திலேயே நிகழ்ந்தது. 1859ல்லிருந்து 1935-36 வரை 12தனியார் நிறுவனங்கள் வசமிருந்த இந்திய ரயில்வேயை பிரிட்டீஷ் அரசு தேசஉடமையாக்கியது. அன்று நிகழ்ந்த முதல்உலகயுத்தம், அதையடுத்து பங்குச்சந்தை சரிவு,. இரண்டும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை பிரிட்டனுக்கு கொடுத்தது. காலனிநாடுகளின் விடுதலை இயக்கம் காலனி ஆதிக்க அரசியலை கேள்விக்குறியாக்கியது. இந்த கட்டத்தில் கேந்திர தொழில்களை தேசஉடமையாக்காமல் நெருக்கடியிலிருந்து மீள முடியாது என்றுணர்ந்த பிரிட்டீஷ் அரசு இவற்றை பாராளுமன்ற கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது.
இன்று பலகாரணங்களால் இந்திய பொருளுற்பத்தி சரிந்து நெருக்கடி எனும் தீப்பற்றி எரிகிறது. இக்கட்டத்தில் மைய அரசு ரயில் போக்குவரத்து பொதுத்துறையை தனியார்வசம் கொடுக்க துடிப்பது என்பது எரிகிற தீயைஅணைக்க பெட்ரோலை ஊற்றுவதற்கொப்பாகும். சென்னை வர்க்கஅரசியலின் குவிமையம் என்று வரலாறுகூறுகிறது. அத்தகைய சென்னை மோடிஅரசின் விவேகமற்ற தனியார்மயத்தை ஏற்குமா?
தொடர் 1ஐ வாசிக்க
தொடர் 2ஐ வாசிக்க
தொடர் 3ஐ வாசிக்க
தொடர் 4ஐ வாசிக்க