சென்னையும், நானும் – 6 | வே .மீனாட்சிசுந்தரம்

 

மூன்று தளங்களும்….. பகடியும்

சென்னையும் நானும் என்ற தொடருக்கு ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.  தலைப்பிற்கு சற்றும் பொறுந்தாத “அவியல்” எழுத்துகளாக இருக்கிறதே என வாசகர்கள் கருதலாம். அதிலும் எந்த தகவலையும் முழுமையாக சொல்லாமல் கிளைக்கு கிளை தாவும் குரங்கு போல் தொடர்பற்ற அரைகுறை தகவல்களுக்கு தாவுவது, எரிச்சலை தூண்டுகிற எழுத்து நடையென கருதலாம்.  ஒவ்வொறு பதிவிலும் வாசகனின் தேடல் ஆர்வத்தை தூண்டுவது என்ற எனது நோக்கம் சரியாக பதிவாகவில்லையோ  என கருதுகிறேன்..

எனது நோக்கம் மூன்று தளங்களில் நான் கண்டுணர்ந்தவைகளை இணைத்து பதிவு செய்வதேயாகும். அதன் மூலம் அந்த மூன்றும் தனிநபரின் வாழ்க்கையை தனித்துவமிக்கதாக காட்டமுயல்வதாகும்..

(அ)ஒரு கடையனை கடைத்தேறவைக்க சென்னை உழைக்கும் மக்கள் வாழ்க்கைச் சூழல் எப்படி உதவியது என்பதைச் சொல்வது.

(ஆ)மரபு பேணல் என்ற சமூகபண்பு உருவாக்கும் விளைவுகளை பதிவு செய்வது.

 (இ)சமூகஅரசியல் பண்பாட்டுத்தளங்களில் ஏற்படும் மாற்றங்களை பற்றி நான் கருதுவது.

வேறு மாதிரி சொல்வதென்றால் மக்கள் தொகுதியில் ஒருபகுதி வர்க்க மற்றும் சாதிபாகுபாடின்றி மரபுபேணலுக்கு நிற்கிறது.  மரபை எதிர்த்து புதுமையை வரவேற்றிடும் இன்னொரு பகுதி மக்கள் அதுவும் வர்க்க சாதிபாகுபாடின்றி நிற்பதை காண்கிறோம்.

ஆனால் மரபிற்கும் புதுமைக்கும் நடக்கிற மோதலாக எதார்த்த வாழ்வு இல்லை என்பதையும் காண்கிறோம்.  எந்தமரபு உசத்தி என்ற சண்டையும் எது புதுமை என்ற சண்டையும் மறுபுறமும் நடப்பதைக் காண்பதால் பேணவேண்டிய மரபு எது? ஏற்கவேண்டியபுதுமை எது? என்பது தெளிவாகஇல்லை.

 இந்த நிலை தனிநபரின் வாழ்க்கையில் ஏற்படும் தாக்கத்தையும் உணர்த்துகிற முறையில் மூன்று தளங்களில் எனக்கு கிடைத்த தகவல்களை வாசகர்களின் விமர்சன பார்வைக்கு சமர்பிப்பதாகும்.

தனித்தனியாகச் சொல்லாமல் மூன்றிலும் கொஞ்சம் பதிவு செய்கிறேன்.  வெந்தும் வேகாத அரை வேக்காடாக பதிவாகிற இந்த எழுத்துக்களை, ஒரு உரையாடலின் துவக்கப் புள்ளியாக  கருதிட வேண்டுகிறேன்.  எனவே வாசகர்கள் தங்கள் மனதில்பட்டதை [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறேன்.

பாரதியார் - பாரத தேசம் கவிதை ...

இவ்வாறு மூன்று தளங்களில் எழுத என்னைத் தூண்டியது பாரதியின் கவிதை வரிகளே ஆகும்.  அவ்வரிகள் அவர் தன்னை பெண்ணாக உருவகப்படுத்தி அதற்கு வேண்டுகோள் விடுக்கிற கவிதையாகும்.  நாற்பது வரிகளைக் கொண்ட அந்த கவிதையில் சராசரி இந்திய மானுடத்தின் மனநிலையை படம் பிடிக்கிற வரிகளை மட்டும் கீழேபதிவு செய்கிறேன்.

மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்!

ஒன்றையே பற்றி ஊசலாடுவாய்

அடுத்ததை நோக்கியடுத்தடுத்துலாவுவாய்

நன்றேயேன கொள்ளெனிற் சோர்ந்து கை நழுவுவாய்

விட்டுவிடென்றதை விடாது போய் விழுவாய்

தொட்டதை மீளமீளவும் தொடுவாய்

புதியது காணிற் புலனழிந்து விடுவாய்

புதியது விரும்புவாய், புதியதை அஞ்சுவாய்

அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டு போல்

பழமையாம் பொருளிற் பரிந்து போய் வீழ்வாய்

பழமையேயன்றி பார் மிசையேதும்

புதுமை காணோமென பொருமுவாய், சீச்சீ

பிணத்தினை விரும்பும் காக்கைபோல

அழுகுதல், சாதல். அஞ்சுதல் முதலிய

இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய்——

( மனப்பெண்-பாரதியார் கவிதைகள்)

இன்றைய சூழலுக்கும் இக்கவிதை வரிகள் பொருந்துவதை காண்கிறோம். பிணத்தினை விரும்பும் காக்கை போல பழமையை நோக்கிப் பாயும் சமூக மனப்போக்கையும்,  கந்தர் சஷ்டி கவசம் கெட்ட அரசியலுக்கு பயன்படுவதையும், அதே தருணத்தில் அதை பகடி செய்வதை கிரிமினல் குற்றமாக கருதுவதையும் காண்கிறோம்.  கார்டூன்கள், பகடி, நையாண்டி இவைகள் மானுட மனத்தை பக்குவப்படுத்தி மெய்யை தேடவைக்கும் கருவிகள் என்பதை மக்கள் ஏற்க மறுப்பதாக ஊடகங்கள் பொருமுவதைக் காண்கிறோம்.

ஆத்திக- நாத்திக சொற்போர் ஆணவத்தையும் மூடநம்பிக்கைகளையும் கரைக்கும் அமிலமாகும் என்பதை வரலாறு காட்டுவதை பார்க்க மறுக்கிறோம். வேதங்கள் குறிப்பிடும் இந்திரன் என்ற கடவுளே இல்லை என்று சொல்லி புத்தர் நடத்திய சொற்போரே யாகங்கள்,பலிகள் நீங்கிய பல தெய்வ பக்திமார்க்கம் இந்த மண்ணிலே பிறந்திட வழிவகுத்தது. அதே வேளையில் தெய்வ மறுப்பினைக் கொண்டிருந்த புத்தரையும் தெய்வமாக்கிய புராணங்களையும் காண்கிறோம்.  அதாவது புத்தரின் சிந்தனைவழி அடைபட்டு மரபாகும் தகுதியை இழந்தது.

 இந்த மண்ணில் இனக் குழுக்களாக வாழ்ந்த காலத்தை ஆரியப் பழமை திராவிடப் பழமையென பிரித்து வரலாற்றை சிதைக்கிறோம். உண்மையான வரலாற்றை ஏற்க மறுக்கிறோம்.  பாரதி கூறியதுபோல் “அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல் பழமையாம் பொருளிற் பரிந்துபோய்” வீழ்கிறோம். “புதியதை விரும்புவாய் ஆனால் புதியதை அஞ்சுவாய்” என்பதும் இன்றைய பண்பாக நீடிப்பதை காண்கிறோம். சமத்துவ கருத்துக்களை விரும்புகிற வேளையிலே அதனைக்கண்டு அஞ்சுவதையும் காண்கிறோம்.

Discovery of Metteyya the Awakened One with Awareness Universe ...

அர்த்தசாஸ்திர பாதையில் ஊர்க்கட்டமைப்பும், நிர்வாகமும்

சென்ற பதிவில் கிராமத்து புழுதி மற்றும்  சாணியின் வீச்சத்திலிருந்து குடலைப் பிடுங்கும் சாக்கடை நாறும் சென்னையில் குடியேறிய துவக்காலத்தை குறிப்பிட்டிருந்தேன்.  எனது கிராமத்தில் நான் வாழ்ந்த வீடு சொர்க்கமென்றால், சென்னை ஒட்டுக் குடித்தன அறைகள் கழிப்பிடவசதி குறைவால் நரகமெனலாம்.  அதுவே வீட்டு உரிமையாளர்களின் அன்பால் சொர்க்கமாகியதென எழுதினேன்.  அதோடு இந்திய மக்களின் ராஜவிசுவாசமும் ரயில்வேயும் பிரிட்டன் முதல் உலகப்போரில் வெல்ல முக்கிய பங்காற்றியது என்ற வரலாற்றை தேடவைக்க சிலகுறிப்புக்களை எழுதியிருந்தேன்.

அதற்கு முந்திய பதிவுகளில் எப்படி விக்டோரியா மஹாராணி ஊர் நிர்வாக பதவிகளையும் கட்டமைப்பையும்  அர்த்தசாஸ்திர கோட்பாட்டின்படி வம்சாவளி உரிமையாக ஆக்கியது  மேலோட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அது பற்றிய மேலும் சில தகவல்கள்.

ஸ்தல புராணங்களின் உருவகங்கள் தெய்வங்களை இச்சமூகம் பெருமளவில் உற்பத்தியாக்கினவிதம், அசுரர் தேவர் குறியீடுகள், இவை அனைத்தும் மனுஸ்மிருதி, அர்த்தசாஸ்திரம் இவைகளின் தாத்பரிய செல்வாக்கின் விளைவாகும்.  இதனை ஆரிய திராவிட மோதலாக சித்தரிப்பது வரலாற்றை சிதைப்பதாகும்

சுமார் 2300 ஆண்டுகளுக்குமுன் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட இந்தியவின் வடபகுதியில் ஆட்சி செய்த சந்திரகுப்தமவுரியர் காலத்து அரசியல் சாஸ்திரமான அர்த்தசாஸ்திரம் புதிய ஊர்களை உருவாக்குவது பற்றியும், நிர்வாக கட்டமைப்பு பற்றியும் அரசன் செய்யவேண்டியதை குறிப்பிடுகிறது.“ அரசன் தனது ஆளுகைக்கு அப்பாலிருந்து வருகிற மக்களையோ. அல்லது ஒரு ஊரில் வாழும் மக்களின் எண்ணிக்கை அளவைமீறி இருப்பவர்களையோ குடியமர்த்த ஒருபுதியஊரை உருவாக்கவேண்டும்.  அந்த ஊரில் 500 சூத்திரக் குடும்பம், பிறசாதியினர் 100க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  அதில் சூத்திரக் குடும்பம் கூப்பிடு தூரத்திற்கப்பால் குடியமர்த்தப்படவேண்டும்.  ஒவ்வொரு சாதிக்குடியிருப்பும் தனித்தனியாக இடையிலே மரவேலியோ மண்சுவரோ எல்லைகளாக கொண்டு அமைக்கவேண்டும் என்கிறது. பத்தாம் நூற்றாண்டிற்கு பிறகு இந்தியா முழுவதும் தமிழகம் உட்பட இந்த சாஸ்திரபடிதான் ஊர்கள் உருவாகின. 

அவ்வாறு உருவாகும் ஊரை தெய்வத்தின் செயலாக காட்டிட புராணங்களும் உருவாக்கப்பட்டன.  பலபுராணங்கள் சிலஊர்களுக்கு இருப்பதை வைத்துப் பார்த்தால் குடியேறுகிற குலங்கள் உரிமை கொண்டாட தயாரிக்கப்பட்டிருக்கலாம் எனத்தோன்றுகிறது.  அரசர்களின் தெய்வநம்பிக்கை மாறும்பொழுது புராணங்களும் மாற்றப்பட்டிருக்கலாம் எனவும் கருத இடமளிக்கிறது.  இதுபற்றி சிலபுராணங்களை அடுத்துவரும் பதிவுகளில்அலசலாம்.

10 facts about Queen Victoria: The woman who made Britain a global ...

உத்திரமேரூர் மற்றும் தஞ்சை கல்வெட்டுகள் தருகிற தகவல்படி ஊர்நிர்வாகிகளை அரசன் நியமிப்பான் அல்லது குடவோலை முறை மூலம் நியமிக்கப்படுவர் என தெரிகிறது.  குடவோலை முறை என்பது மக்கள் வாக்களிக்கும் முறையல்ல.  அரசன் பலபெயர்களை ஓலையில் எழுதி குடத்தில் போட்டு குலுக்கி எடுப்பது.  இவ்வாறு தீர்மானிப்பது தெய்வச் செயலாகஅன்று மக்கள் கருதினர்.  அரச பதவியைப் போலவே இந்த ஊர் நிர்வாகிகளும் வம்சாவழி பதவிகளாகின.  மன்னன் ஆரியனா, திராவிடனா என்ற பாகுபாடு இல்லாமல் ஊர் நிர்வாக பதவிகளை அரசர் நிர்ணயிப்பார்.  இல்லையெனில் தெய்வம் நிர்ணயிக்கும் என்பதே நடைமுறையாக இருந்தது.

விக்டோரியா மஹாராணி ஊர்களின் நிர்வாகிகளையும், ஊர் பஞ்சாயத்தையும் அர்த்தசாஸ்திர முறைப்படி நியமித்து வம்சாவழியாக பதவிகளை அனுபவிப்பதை நிலை நிறுத்தியதன் மூலம் மக்களின் விசுவாசத்தைப் பெறுவதில் வெற்றிபெற்றார் என்றே கூற வேண்டும்..

விடுதலைக்குப்பிறகு இந்த மரபுகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து மக்களால் தேர்வு செய்யபட்ட ஆட்சிமன்றமுறை வந்தது.  ஆனால் வம்சாவழி மரபு வேறு வடிவில் தொடர்கிறது.  அரசியல் கட்சிகளின் தலைமைகள் வம்சாவழி மரபை பேணுவதைக் காண்கிறோம்.  ஒரு நூதன வம்சாவழி ஜனநாயகம் இந்தியாவில் நிலவுவதாக சிலநிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் இது உண்மையா?

தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்