சென்னையும், நானும் – 7 | வே .மீனாட்சிசுந்தரம்

சென்னையும், நானும் – 7 | வே .மீனாட்சிசுந்தரம்

 

 தாளகதி இசைக்கு மட்டுமல்ல என்ஜினுக்கும் தேவை!

1959ல் சென்னைக்கு வர என்னை உந்திய கனவுகள்,ஆசைகள் வேறு.  சிம்சனில் வேலைக்கமர்ந்த பிறகு அங்கிருந்த நிலைமை என்னை போராட வைத்துவிட்டது. தொழிற்சங்கமும் அதுநடத்திய கூட்டுறவுச் சங்கமும் என்னை மாற்றிவிட்டன.  நான் ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனத்தின் கார் பழுது பார்க்கும் தொழிலகத்தில் பயிற்சியாளனாக பெற்றஅனுபவம் வேறு. சிம்சனில் நான் கண்டது வேறு.  ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனத்தின் கார்பழுதுபார்க்கும் தொழிலகத்தில் தொழிற்சங்கமில்லை. இருந்தாலும் சம்பளம் பிற இடத்தை விட அதிகமாகவே நிர்வாகம் கொடுத்தது. அது தவிர கார் ஓனர்கள் தருகிற டிப்ஸ். நிர்வாகம் கூடுதல் சம்பளம் கொடுக்க காரணங்கள் இரண்டு உண்டு,  பழுதுபார்க்கும் சேவைக்கான கட்டணத்தை காரின் சொந்தக்காரர் கொடுப்பதால் சம்பளம் என்ற வகையில் நிர்வாக செலவு என்று எதுவுமில்லை. என்ஜினை பழுது பார்க்கும் தொழில் நுட்பத்திறன் கொண்டவர்கள் சந்தையில் கிடைக்காததால் நிர்வாகம் சற்று கூடுதல் சம்பளமே கொடுக்க வேண்டியிருந்தது.

இன்று போல் பெருமளவு மோட்டார் வாகன உற்பத்தி மையமாக அன்றுசென்னை இல்லை.  இன்று சென்னை ஆசியாவின் டெட்ராயிட் என்றழைக்கப்படுகிறது. டெட்ராயிட் அமெரிக்காவில் கோடிக்கணக்கான கார்களை உற்பத்தி செய்யும் தொழிலகங்கள் இருந்த இடமாகும். சென்னை அந்தப் பெயரெடுத்த வரலாறு அடுத்த பதிவில் விரிவாக வரும்.

Image may contain: 1 person

ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனத்தின் கார் பழுது பார்க்கும் தொழிலகத்தில் தொழிலாளி நிர்வாக உறவு எசமான்-பணியாள் உறவாக இல்லை. உழைப்பு சக்தியை விற்கிற வர்த்தக உறவெனலாம்.  உழைப்பை நேசிக்கும் சுயமரியாதை உள்ள தொழிலாளியை முதன்முதலாக சந்தித்தேன் என்பதை முன்பே குறிப்பிட்டிருந்தேன். அவர்களது கூட்டுணர்வையும், போராட்ட உணர்வையும் என்னால் உணர முடிந்தது. அங்கு என்ஜினை பழுதுபார்ப்பது என்பது தேய்ந்த உதிரிபாகங்களை மறுசீர் செய்வது, அல்லது புதியதை பூட்டுவது மட்டுமல்ல அவர்களது மொழியில் என்ஜினை ட்டியூன் செய்வது என்பது ஒரு கலையாகவே இருந்தது.

இசைக்கருவிகளை ட்டியூன் செய்வதை கேள்விப்பட்டிருக்கிறேன், கார்இன்ஜின் என்ன இசைக் கருவியா ட்டியூன்செய்வதற்கு என்று முதலில் மயங்கினேன். பின்னர் என்ஜின் வால்வுகளை திறக்கும் சுத்தியல்கள் போன்ற அமைப்பு அடிக்கும் பொழுது எழுகிற சத்தம் சீராக அமையும் பொழுதுதான் எரிபொருள் வீணாகாமலும் பிஃளைவீலை சுழற்றுகிற பிஸ்டன் சிரமமில்லாமல் மேலும் கீழும் அசைகிறதா என்பதையும் தீர்மாணிக்கமுடியும் என்பதை அறிந்தேன். அதற்கு முக்கியமாக வால்வின் தலைக்கும் அதைதட்டித் திறக்கிற சுத்தியலுக்கும் இடைவெளி அளவை தீர்மானிப்பதுதான் என்ஜினை ட்டியூன் செய்வது ஆகும். என்ஜின் இயங்கும் பொழுது பலவிதமான சப்தங்கள் எழும்.  அதில் சுத்தியலின் தாளசப்தத்தை கூர்ந்து கவனித்து இசைவாக அமைப்பதற்கு அனுபவம் வேண்டும்.

“பாட்டுக்கும் கூத்துக்கும் தாளம் வேண்டும், தாளமில்லா இசை வாசல் இல்லாதவீடு என்பதை இசைஞானி ஒரு பாட்டில் அறிவுறுத்தியிருப்பார்”  தாளம் இசைக்கு மட்டுமல்ல இயங்குகிற என்ஜினுக்கும் தேவை.  இன்று இதனை கணக்கிட ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் கருவிகள் வந்துவிட்டன அன்றுகிடையாது. இன்று வேறு வகையான என்ஜின்கள் வந்துவிட்டன. என்ன மாற்றம் வந்தாலும் அது எழுப்புகிற ஓசைதாளம் தவறுகிறதா என்பதை வைத்தே கோளாறை அடையாளம் காணமுடிகிறது. விமான விபத்தில் கூட பிளாக்பாக்ஸ் சப்தங்களை வைத்தே என்ன நேர்ந்தது என்பதை அறியமுடிகிறது. ஸ்டாண்டர்டு மோட்டார் தொழிலாளர்களின் இந்த என்ஜினின் தாளத்தை நேர்படுத்துகிற ஆற்றலே பாட்டாளி வர்க்க பெருமிதத்தின் அடிப்படையெனலாம். இன்னொரு விவரத்தையும் இங்கே குறிப்பிடவேண்டும்.

ஸ்டாண்டர்டு மோட்டார் பழுது பார்க்கும் சேவை தொழிலக உழைப்பாளிகளில் பெரும்பாலோர் இரண்டாம் தலைமுறை உழைப்பாளிகள் எனக்கண்டேன். .அதாவது அவர்களது பெற்றோர்களும் தொழிலாளர்களே. பிரிட்டீஷ் அரசின் வடிகட்டும் கல்விமுறையால் தொழிலாளர் குடும்ப பிள்ளைகள் 8ம்வகுப்பை தாண்டுவதே அபூர்வம்.  சென்னையில் அத்தகைய தொழிலாளி குடும்பங்களின் பிள்ளைகள் வாரிசுக்கு வேலை என்ற சம்பிரதாயமுறையில் அப்பா வேலை பிள்ளைக்கு கிடைக்க வாய்பில்லாத சிறுவர்கள் இத்தகைய சேவைத் தொழிலில் ஈடுபட நேரிடுகிறது. அவர்கள் கல்விபெறுகிற இடமாக தொழிலகங்கள் மாறிவிடுகின்றன. அன்றைய கார் என்ஜினுக்கும் இன்றைய கார் என்ஜின்களுக்கும் இருக்கிற மேன்மைகளின் வரலாற்றைப் பார்த்தால் இத்தகைய  தொழிலாளர்களின் புத்தி கூர்மையே மேன்மைபடுத்தியது என்பது தெரியவரும்.

File:Chennai Central.jpg - Wikipedia

 தொழிலாளர் மத்தியில் தலைமுறை இடைவெளி

ஆனால் சிம்சனில் எனது அணுபவம் வேறு இங்கு பெரும்பாலான தொழிலாளர்கள் என்னைப் போன்றே முதல் தலைமுறை தொழிலாளர்களாக இருந்தனர். சாதி உணர்வு மங்காத தலைமுறை எனலாம். விவசாய குடும்பம், பணக்கார விவசாயக் குடும்பம். அல்லது கிராமப்புற வறுமை துரத்தியதால் வந்தவர்கள் பிறந்தவர்க்கத்தின் குணங்களோடு தொழிலாளியானவர்கள்.  சிம்சன் நிறுவனத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் கிராமத்திலிருந்து வந்தவர்களே. தென் மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் எண்ணிக்கை சற்று கூடுதலாகவேஇருக்கும். பயிற்சியாளர்களாக சேர்த்து எந்திரத்தை இயக்கக் கற்றபின் நிரந்தரமாக்கப்படுவர். டிரில்லிங் மெஷின், மில்லிங் மெஷின்,லேத் இந்த மூன்றிலும் தனித்தனியாக பயிற்சி கொடுத்து வேலைக்கமர்த்துவர். மூன்றிலும் ஒருவருக்கு பயிற்சி கொடுக்கமாட்டார்கள்.

வெகுநாட்கள் கழித்த பிறகே சென்னை நகர தனியார் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை நிர்வகிக்கும் திறமையின் சூட்சமத்தை அறிந்தேன். இந்த தொழிற்சாலையில் பெறுகிற அனுபவத்தைக் கொண்டு ஒரு தொழிலாளி வெளியேறினால் அந்த அனுபவம் செல்லுபடியகாது.  அதோடு வேலைகளை சுளுவாக செய்வதற்கு என்று எந்திர கட்டமைப்புக்களை மேன்மைபடுத்துகிற ஒவ்வொரு முயற்சியும், தொழில்நுட்பங்கள் அதிகம் தேவையில்லை.  அதற்கென தேவையான அறிவியல் அறிவும் தேவையில்லை என்ற நிலையை படிப்படியாக உருவாக்கிவிடுகிறது.  சிம்சனில் நான் பணியில் சேரும் பொழுது பிளாண்ட்1ல் 1800 தொழிலாளர்கள் இருந்தனர்,  இவர்களில் தொழில்நுட்ப அனுபவம் பெற்ற மேஸ்திரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம்  ஒரு எந்திரத்தை இயக்கி ஒருகுறிப்பிட்டஉதிரிபாகத்தை செய்து குவிக்க மாட்டுக்கு தீவணம் போட எவ்வளவு அறிவு தேவையோ அந்த அளவு அறிவு இருந்தால் போதும்.

சுளுவாக வேலைகளை செய்யபயன்படும்  எந்திர கட்டமைப்பை தொழிலாளர்களின் உரிமைக்கு போராடுகிற உணர்வை மட்டுப்படுத்த பயன்படுத்த முடியும் என்பதை சிம்சன்தொழிலகத்தில் கண்டேன். மூளையையும் உடலையும் அதிகம் அசைக்காமலே வேலை செய்ய உருவாக்கப்படும் எந்திர கட்டமைப்பின் முன்னோடி அமெரிக்க ஃபோர்டு கம்பெனியாகும்  .அது புகுத்திய கட்டமைப்பை டெய்லர் சிஸ்டம் என்று அழைக்கப்படுகிறது.

அந்த கட்டமைப்பையே சிம்சன் நிறுவனமும் வளர்த்தெடுத்தது. சிம்சன் நிறுவனத்தில் நான் பணியில் சேருகிற பொழுது கடந்த காலம் போல் இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களை கோர்த்து என்ஜின் கட்டுகிற வேலை மட்டுமில்லாமல் எல்லா உதிரி பாகங்களும் இங்கேயே உருவாக்குகிற தொழிலகமாக விரிவாகிக் கொண்டிருந்தது. பழைய மெசின்களும் புதிய மெசின்களும் வரவழைக்கப்பட்டு பொறுத்தும் வேலை நடந்து கொண்டிருந்தது.அவைகளை இயக்கு முறையை பயிற்றுவிக்க பம்பாயிலிருந்து ஸ்கில்டுகளை மேஸ்திரியாக வரவழைத்திருந்தனர்.  டெய்லர் சிஸ்டப்படி எந்திரகட்டமைப்பு விரிவடைந்து வந்ததால் உதிரிபாகங்கள் சுளுவாககுவிந்தன.  சென்னையில் பிரிட்டீஷ் ஆட்சி காலத்திலேயே ஏராளமானதொழில்கள் வளர்ந்து உழைப்பை நம்பியே வாழ்கிற குடும்பங்கள்உண்டு அந்த குடும்பத்து பிள்ளைகளை வேலைக்கமர்த்தினால் என்ன நடக்குமென்பதை அன்றைய சிம்சனின் புதிய முதலாளி ஆழ்வார்குறிச்சி அனந்தராமகிருஷ்ண ஐயர் நன்கறிவார்.

இந்த ஐயரும் முதல் தலைமுறை முதலாளிரகமே, வடபுலடாட்டா, பிர்லா, தமிழக செட்டியார் வகையறாக்கள் மாதிரி பரம்பரை முதலாளிரகமல்ல, அனந்தராமகிருஷ்ண ஐயரும் இதே சிம்சன் நிறுவனத்தில் வரவு செலவு கணக்கு பிரிவில் வேலை செய்தவரே.  நவீன உழைப்பாளிகளின் கூட்டுணர்வு பற்றிய அனுபவமுண்டு..  போராட்ட குணம் படைத்த பின்னிமில் தொழிலாளி குடும்ப பிள்ளையானால் தினக்கூலி 87 நயா பைசாவிற்கு ( மாதசம்பளம் 26 ரூபாய்) வேலைக்கமர்த்த முடியுமா? இவர் மட்டுமல்ல விடுதலைக்குப் பிறகு தலையெடுத்த முதல் தலைமுறை இந்திய தொழில் முனைவர்கள் முடிந்தவரை சென்னை தொழிலகங்களில் முதல் தலைமுறை தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவதை ஒரு கொள்கையாக வைத்திருந்தனர். இந்த அணுகுமுறை ஒருவகையில் தொழில்களைவளர்க்கவும், கிராமத்தில் பிழைப்பு கெட்டு நகருக்கு வரும் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக அமைந்தது.

கிராமங்களிலிருந்து பிழைப்பு கெட்டு சென்னைவரும் பெரும்பாலான உழைப்பாளிகள்முதலில் ஹோட்டலில் பணியைத் தொடங்குவர், பசிக்கு உணவும். படுக்கஇடமும் அந்ததுறையில்தான் உத்தரவாதமாகும்.  டிரைவிங் கற்றுதேறுவார்கள். சிலர்படித்து மெட்டிரிக்குலேஷன் பரிட்சைதேறி டிகிரி என்றுதேர்வுபெற்று வக்கீலாகவோ, என்ஜினியர்களாகவோ சார்டர்டு அக்கவுண்டென்டுகளாகவோ ஆவர். அவ்வாறு உயர வாய்ப்புக்கள் இருப்பதான தோற்றம் அன்று மக்களை கவர்ந்தது.இந்த தோற்றமேமுதலாளித்துவம்நீடிப்பதற்கானஅடிப்படையாகும்,

 இது ஒரு மாயத்தோற்றம் என்பதை அன்று ஒரு சினிமா.பாடலே சுட்டிக்காட்டியது கண்ணதாசன் எழுதியவரிகள் “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை, வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை” ஆனால் இந்த பாடல் அன்று பழமைவாத மனப்பாங்கோடிருந்த உழைப்பாளி மக்களை உண்மையை தேட தூண்டவில்லை.  வேடிக்கை என்ன வென்றால். நான் பணியில் சேருகிற பொழுதே சிம்சனில் ஒரு தொழிற்சங்கமிருந்தது. அதற்கொரு வரலாறும் உண்டு அதுபற்றியும்அடுத்தபதிவில் இடம் பெறும். இரண்டாம் தலைமுறை தொழிலாளர்களுக்கும் சிம்சனில் முதல்தலைமுறைதொழிலாளர்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதை நான் உணர்ந்தாலும் முதலாளித்துவ சமூகம் வர்க்க பிரிவினை கொண்டதென்ற புத்தக அறிவு எனக்கிருந்தாலும் சிம்சனில் இருக்கும் முதல் தலைமுறை தொழிலாளர்களை வர்க்க, பார்வையோடு, பார்க்க வைக்கும் முறை எது என்பது, எனக்கு, உதிக்கவே இல்லை.

சிம்சன் பற்றியும் தமிழகம் வாகன உற்பத்தியில்சிறப்பிடத்தை பிடித்தது பற்றியும்அடுத்துவரும்

 

தொடர் 1ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 1 | V. மீனாட்சி சுந்தரம்

தொடர் 2ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 3ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 3 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 4ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 4 | வி. மீனாட்சி சுந்தரம்

தொடர் 5ஐ வாசிக்க

சென்னையும், நானும் – 5 | வே .மீனாட்சிசுந்தரம்

தொடர் 6ஐ வாசிக்க

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *