கதிகலங்கும் கள்ளத் தராசுகள் – சென்னிமலை தண்டபாணிஒரு
மாநிலத்தின் பிரச்சனை
என்கிறார்
மந்திரியார்..
வயிறு
எல்லா மக்களிடமும்
இருப்பது
ஏன் தெரியவில்லை அவருக்கு?
பஞ்சாப் கோதுமை
பரிதவிக்கும் போது
தஞ்சை நெல்மணிகள்
தகிக்காமல் இருக்குமா?
முதலாளிகளின்
கைகளில்
நாட்டை
மூட்டைகட்டிக் கொடுக்க
உழைப்பவன்
எப்படி ஒப்புக் கொள்வான்?
குடியானவர்களின்
குமுறலில்
நேத்திரம் திறக்கிறது
நியாயம்.
கண்மூடிக் கிடக்கும்
அதிகாரத்தின்
செவிகளைக்
கலப்பையின் கூர்முனை
கிழிக்கிறது..
புறப்பட்டு வருகிற
புதிய வேளாண் சட்டங்கள்
உழுபவனின்
இறப்புக் கணக்கை
எழுதிச் செல்லலாம்..
வாழ்க்கையைத் தர
வரப் போவதில்லை.
பனி, மழை, குளிர்
எல்லாம்
குடியானவன் கொதிப்பில்
பொடிப் பொடியாகின்றன.
குடும்பம் குடும்பமாய்
வெட்டவெளியில்
கொந்தளிக்கின்றன.
கபட நரிகளோ
கண்ணாமூச்சி ஆடுகின்றன.
கொழுத்த கொள்ளையில்
புழுத்துக் கிடப்பவர்கள்
‘எழும்
இப்படி ஒரு புரட்சி’
என்று
எண்ணவே இல்லை.
கள்ளத் தராசுகள்
கதிகலங்குகின்றன.
அப்புறப் படுத்த
இவர்கள் என்ன
குப்பையா?
நாட்டின் முதுகெலும்பல்லவா?
வெட்டிப்
பேச்சு வார்த்தைப்
பஞ்சு மிட்டாய்களில்
ஏமாறுகிறவர்களா இவர்கள்?
பறிபோய்விடும்
வாழ்க்கை என்று
பதறிப்
போராடுகிறார்கள்.
இங்கு போராடாமல்
எங்குப்போய்ப் போராடுவார்கள்?
‘உரிமையில்லை போராட’
என்று
எவராவது
உளறினால்
எதைத் தின்றார்களோ இதுநாள்வரை?
தரகுப் பேர்வழிகளின்
அதிகாரம்
எல்லாவற்றையும்
ஏலம்விடலாம்..
நாடு, மக்கள் என்று
எதைப்பற்றி என்ன கவலை?
ஆனால்
வயிற்றுக்குச் சோறிட்டவனை
வஞ்சித்தால்
வரலாற்றின்
தீராத கறையாய்
‘அதிகார மமதை’
நாளை
அசிங்கப்பட்டு நிற்கும்.
நாட்டின்
‘முதுகெலும்பை’
உடைத்தெறிந்துவிட்டால்
எப்படி எழுந்து நிற்கும் நாடு?
எல்லார்க்கும் புரிகிறது.
இவர்களுக்கு மட்டும்
ஏன் தெரியவில்லை..?
ஏனெனில்
பார்வையிலும் கோளாறு
மூளையிலும் கோளாறு..
இவர்கள்தாம்
இவர்கள்தாம்
நாட்டுநலம் குறித்து
நாளும் கதைக்கிறார்கள்!