நிழற்படக் கலை, திரையாக்க ஒளிப்பதிவுக்கலை குறித்த அடிப்படைகளையும், ஒளிப்பதிவின் நுணுக்கங்களையும், பாலுமகேந்திரா உள்ளிட்ட ஆளுமைகளுடனான செழியனின் சொந்த அனுபவங்களையும் உள்ளடக்கிய கட்டுரைகளைக் கொண்ட நூலே ‘ஒளியில் எழுதுதல்’ என்ற இந்நூல்.
Photography என்ற தொழில்நுட்ப வார்த்தைக்கு ‘ஒளியில் எழுதுதல்’ என்ற சொற்சேர்க்கையைப் பயன்படுத்துவது தொடங்கி, ஒளிக்கும் இருளுக்குமான விளையாட்டே சகலமும் எனத் தொடர்ந்து, இசைக்கும் ஒளிக்குமான இசைவைக் கண்டறிந்து, முடிக்கையில் பாரதியைத் துணைக்கழைத்து ‘ஒளியே நீ இனியை’ என அற்புதமான ஒரு முன்னுரையிலேயே நம்மை நூலுக்குள் இழுத்துச் சென்று விடுகிறார் செழியன்.
‘அப்ஸ்க்யூரா முதல் அலெக்ஸா வரை’ என்ற முதல் இயலில் ஒளிப்பதிவுக் கலையின் வரலாற்றைத் தொகுத்து சுமார் ஐந்து நூற்றாண்டு காலப் பரிணாமங்களை ஒரு கைப்பிடியளவில் கொடுத்து விடுகிறார். 1545ல் ஜெம்மா ப்ரிசியஸ் என்கிற ஜெர்மானியர் வெளியிட்ட நூலில் கேமரா அப்ஸ்க்யூராவின் (camera obscura) வரைபடத்தைத் தொட்டு, அடுத்தடுத்து மேஜிக் லேண்டர்ன் (Magic Lantern), ஸ்ட்ரோபோஸ்கோப் (Stroboscope), Kinematoscope, Kodak Brownie snapshot camera, Kinatograph, Chronophotography, Phonograph, Kinetoscope, Bioscope, Cinematographe, Vitascope, Camcorder வழியே Arri நிறுவனத்தின் அலெக்சா (டிஜிட்டல் கேமரா) என்ற நூல் வெளிவந்த காலத்திய கேமரா தொழில்நுட்பம் வரையிலான வளர்ச்சியை எளிமையாகவும் நேர்த்தியாகவும் கதை போல சொல்லிவிடுகிறார். பெரிய பெரிய தொழில்நுட்பப் பதங்களை மட்டும் பயன்படுத்தி வாசகரைப் பயப்படுத்தாமல் அவற்றையே இலகுவாகச் சுவைபடச் சொல்வதில் அவரது எழுத்து அனுபவமும் மிளிர்கிறது.
குதிரையின் கால்கள் நான்கும் அந்தரத்தில் இருப்பது போல ஒரு நிழற்படமெடுக்க குதிரை ஓடும் பாதையின் பக்கவாட்டில் 24 கேமராக்களை வரிசையாக அடுக்கி, எல்லாக் கேமராக்களையும் ஒரே இயந்திரத்தின்வழி முடுக்குவது போல இணைத்து, ஒரு நொடியில் 24 படங்களை எடுத்த எட்வர்ட் மைபிரிட்ஜின் (Eadweard Muybridge) முயற்சி போன்ற ஆச்சரியமூட்டும் செய்திகள் இப்பகுதியை மேலும் சுவாரசியமாக்குகின்றன. திரைப்படத்தின் இன்றைய ஒளிப்பதிவுக்கான தொழில்நுட்ப வளர்ச்சியை அடைய பாடுபட்ட – முயற்சி மேற்கொண்ட – ஆளுமைகளின் விபரங்கள் அனைத்தும் வியப்பைத் தரும் அதே நேரத்தில் ‘எடிசன்’ போன்றோர் (எடிசனின் பங்களிப்பை மறுக்கவில்லை) தனது செல்வாக்கினாலும் பணபலத்தாலும் பிறரின் உழைப்பின் பேரில் மேலாதிக்கம் செய்து பெயர் பெற்றுக் கொண்ட மறைக்கப்பட்ட வரலாற்றையும் கோடிட்டு காட்டவும் செழியன் தயங்கவில்லை.
‘ஒளியை எழுதுதல்’ எனும் இரண்டாம் இயலில் நிழற்படக்கலை/திரையாக்க ஒளிப்பதிவு குறித்து அடிப்படை விபரங்களை – படத்துணுக்கு (shot), டேக் (Take), ரீடேக் (Re-take), காட்சி, காட்சித் தொடர் (sequence), மூவகைப் பிரதானக் கோணங்கள் – வெளியிலிருந்து பார்க்கும் கோணம் (objective angle), பார்வையாளரின் கோணம் (subjective angle), காட்சிக்குள் இருப்பவரின் பார்வைக் கோணம் (point of view), அதி தொலைவுக் காட்சி (Extreme Long Shot), தொலைவுக்காட்சி (Long shot), மத்திமக்காட்சி (Medium Shot), மத்திம தொலைவுக்காட்சி (Mid long shot), அண்மைக்காட்சி (Close up), வெகு அண்மைக்காட்சி (Extreme Close up) போன்றவற்றை – தொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கு விளக்குவது போல், ஒவ்வொன்றுக்கும் எளிய உதாரணங்களோடு, நிதானமாக நம் கைப்பிடித்து ஒவ்வொன்றாய் விளக்கிச் செல்கிறார். ஒளிப்பதிவு குறித்த எவ்விதப் பயிற்சியும் அற்ற எனக்கே இதைப் படித்ததும் கையில் ஒரு கேமராவைத் தூக்கிக் கொண்டு படம் எடுக்கக் கிளம்பிவிடத் தோன்றுகிறது. மேலும் இந்நூலை வாசித்த பின் பார்த்த 2, 3 திரைப்படங்களில் வைக்கப்பட்டுள்ள கேமரா கோணங்கள், ஒளிப்பதிவு நுட்பங்கள் குறித்தெல்லாம் தீவிரமாகக் கவனிக்கவும் புரிந்து கொள்ள முற்படுவதும் இந்நூல் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவே.
‘ஒளிப்பதிவில் அழகியல்’ மற்றும் ‘படச்சுருளின் மறுபக்கம்’ ஆகிய இரண்டு இயல்களுமே காட்சிப்பிழை இதழுக்காக சொர்ணவேல், செழியனை எடுத்த நேர்காணல்களாகும். கதையின் இயல்பும் உண்மையுமே ஒளிப்பதிவின் அசல் அழகியல் என்று நிறுவும் செழியன் ஒளிப்பதிவாளரின் அக அழகும் இயல்புமே அதை வெளிப்படுத்த இயலும் என்றும் கூறுகிறார். விதிகளை அறிந்து கொண்டால்தான் விதி மீறலை நிகழ்த்த முடியும் என்கிறார்.
படைப்பின் பித்து மனநிலையானது ஏற்படுத்தும் அக நெகிழ்ச்சி குறித்து – தனது பரதேசி படத்தில் கிராமத்தை விட்டு ஏதிலியாக மக்கள் மலங்காட்டுக்குக் கங்காணிக்குப் பின்னால் அணிவகுத்துச் செல்லும் காட்சியைப் படம்பிடித்த போது பொங்கி அழுதது, கல்லூரி படத்தில் நாயகி தன் காதலை உணரும் காட்சியில் நாயகன் கால்பந்து விளையாடுகையில் பெய்த இயற்கை மழை, மதுரை யாதவா கல்லூரி அரச மரத்தை புலரும் அதிகாலையில் படம் பிடித்த போது உண்டான தரிசனம், நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோவிலில் தை மாத ஐந்தாம் நாள் பண்டிகையை பலரின் சொல்லை மீறிப் படம் பிடித்த பின் பார்த்தால் படமே பதிவாகாதது, காளையார் கோவில் அருகே உருவாட்டி பெரியநாயகியம்மன் கோயிலில் நடந்த திருமண ஒளிப்பதிவு மாயமானது போன்ற சொந்த அனுபவங்களின் வழியே – செழியன் முன்வைக்கும்போது அவர் அனுபவித்த படைப்பின் அக நிறைவுக்கான கணத்தை நமக்கும் தமது எழுத்தின்வழி கடத்தி விடுகிறார்.
‘வாசிப்பும் ஒளிப்பதிவும்’ என்ற இறுதி இயலில் ஜெயகாந்தனின் ‘ஒரு பிடிச் சோறு’ கதையை முன்னிருத்தி, அக்கதையே ஒளிப்பதிவின் வழிகாட்டியாக எவ்வாறு விளங்குகிறது என்றும், கதையின் ஒவ்வொரு வரியும், விவரணையுமே எவ்வாறு கோணம் முதற்கொண்ட அக்கதையின் ஒளிப்பதிவுக்கான தேர்வுகளையும் சுட்டிச் செல்கிறது என்றும் விரிவாக விளக்குகிறார். ஒரு நல்ல புனைவானது தன்னளவில் ஒளிப்பதிவின் அடிப்படைகளைக் கொண்டிருப்பதை இவ்வியலில் எடுத்துக்காட்டுகிறார். அதனால் புனைவெழுத்தைத் தொடர்ந்து ஓர் ஒளிப்பதிவாளர் வாசித்தபடியே இருக்க வேண்டிய அவசியத்தையும் இப்பகுதியில் செழியன் முன்வைக்கிறார்.
பி.சி.ஸ்ரீராமின் பட்டறையில் பயிற்சி பெற்றவராக இருந்தாலும், பாலுமகேந்திராவுக்கும் தனக்குமான உறவு குறித்து விரிவானதொரு பதிவை செழியன் இந்நூலில் முன்வைப்பதில் இருந்து பாலுவுக்கும் செழியனுக்குமான மானசீகமான பந்தத்தையும் உணர்வு நெருக்கத்தையும் அப்பதிவில் இருந்து உணர முடிகிறது. அதில் பாலுமகேந்திராவின் அந்திம காலத்தில் தன்னுடனான நெருக்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த உரையாடல்கள் பற்றி மிகுந்த நெகிழ்ச்சியூட்டும் தருணங்களைக் குறிப்பிடுகிறார். தலைமுறைகள் சிறப்புக்காட்சி பிரசாத் லேபில் திரையிட்ட அன்று பாலுமகேந்திராவைச் சந்தித்த அந்த சஞ்சலம் மிக்கதான கடைசி இரவில் செழியனிடம் பாலு சொல்கிறார்…’வாப்பா செழியன்.. என் வேல முடிஞ்சிருச்சுப்பா… என் படங்கள உங்ககிட்ட குடுத்துட்டேன். இனி நான் செய்ய என்னப்பா இருக்கு.. எல்லாம் செஞ்சாச்சு… இனி நீங்கதான். உன்னை மாதிரி யங்ஸ்டர்ஸ்தான் இதை அடுத்த இடத்துக்கு எடுத்துட்டுப் போகணும்’. இதை வாசித்து முடித்ததும் ‘உங்களது வேலையை முழுதாக முடிக்காமல் அவசரமாகச் சென்றுவிட்டீர்களே செழியன்’ என்று மனசுக்குள் ஒரு குரல் அரற்றியது.
குரசோவா பற்றிய ஆவணப்படம் ஒன்றில் அவரது ‘Rhapsody in August’ என்ற படத்தில் ஒரு காட்சியில் ‘பாட்டி மழையில் ஓடுகிறாள்… அவளது பேரக்குழந்தைகள் பின்னால் ஓடுகிறார்கள். பாட்டி குடை பிடித்திருக்கிறாள். காற்றில் எதிர்பாராத கணத்தில் குடை பின்பக்கமாக மடங்கி விடுகிறது. இந்தத் தருணத்தை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் படம் பிடிக்கும்போது சிலிர்ப்பைத் தந்த தருணம் அது என்றும் இந்தக்காட்சி திரையில் ஓடும்போது பாட்டியின் குடை எதிர்த்திசையில் மடங்கியதும் பார்வையாளர்கள் அழுதார்கள். ஏன் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை’ என்று அவர் குறிப்பிடுவதாக நூலில் ஓரிடத்தில் செழியன் கூறுகிறார். அந்தப் பாட்டியின் குடை எதிர்த் திசையில் மடங்கியது போன்றதே உங்கள் அகால மரணம் செழியன். செழியன்… நீயே ஒளி..!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | ஒளியில் எழுதுதல் |
| ஆசிரியர்: | செழியன் |
| வெளியீடு: | எதிர் வெளியீடு |
| விலை: | ₹.250 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 அன்புச்செல்வன் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

