செழியன் எழுதிய “உலக சினிமா” புத்தகம் | Chezhiyan's Ulaga Cinema (World Cinema) Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

இயக்குநர் செழியன் எழுதிய “உலக சினிமா” – நூல் அறிமுகம்

உலக சினிமா எனும் தரமான புத்தகத்தை மக்கள் பதிப்பாக கொண்டு வந்த சீர் வாசகர் வட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிக பக்கங்கள் உயர் தர தயாரிப்பு குறைந்த விலை இக்காலத்தில் யாரால் தர முடியும். அந்த வகையில் இந்த நூல் வெளிவர உதவிய அத்துணை நல் உள்ளங்களுக்கும் நன்றி.

உள்ளூர் சினிமாக்களை பார்த்து பார்த்து அலுத்து சலித்த நமக்கு உலகில் உள்ள தரமான சினிமாக்களை தேடித் தேடி சேகரித்து, குப்பையில் கிடந்த சிடிக்களை கூட தோண்டி எடுத்து அதன் கதையை, ஒளிப்பதிவை, இசையை, தொழில்நுட்பங்களை தனது நேர்த்தியான எழுத்துக்களின் வழியே வாசிப்பாளருக்கு கடத்தியதில் பெருவெற்றி பெற்றிருக்கிறார் செழியன்.

ஒவ்வொரு படத்தையும் ஒரு சிறுகதை போல் சொல்கிறார். படம் பார்த்த உணர்வை விட ஒரு நல்ல சிறுகதையை வாசித்த திருப்தி கிடைக்கிறது. அந்த படத்தின் இயக்குநர் அவர் குறித்த தகவல்கள் பெற்ற விருதுகள் என மிக ஆழமாக தகவல்களை தேடிச் சேகரித்திருக்கிறார். கடின உழைப்பை நூல் முழுவதும் விதைத்திருக்கிறார் புத்தகம் நன்கு விளைந்திருக்கிறது. மொத்தம் மூன்று பாகங்கள் 93 படங்கள் 768 பக்கங்கள் என கனமான தயாரிப்புதான். சினிமா குறித்தான புத்தகம் செய்நேர்த்தியிலும் அழகிலும் வசீகரிக்கிறது நூல்.

முதல் படம் செருப்புக்காக சிறுவனும் சிறுமியும் படும் துயரங்கள், அந்த ஏழ்மையிலும் சக ஏழ்மைச் சிறுமி கண்டு இரங்கும் இரக்க குணம் என கதையை வாசிக்கும் போதே படத்தை பார்த்து விட துடிக்கிறது மனசு.சில்ரன் ஆப் ஹெவன் துவங்கி 93வது படமான வேலைக்கு போக வைத்திருக்கும் மிதிவண்டி காணாமல் போய் அவதிப்பட்டு கையறு நிலையில் நிற்கும் இளைஞன் வரை அபாரம் தி பைசைக்கிள் தீஃப் வரை அத்தனையும் சுவாரசியமான கதைகள்.

இந்திய மொழியில் இருந்து ஒரே ஒரு படம் சத்யஜித் ரே இயக்கிய பதேர் பாஞ்சாலி மட்டும் இத்தொகுப்பில் இடம் பெற்று இருக்கிறது. காந்தி படம் இருந்தாலும் அது வெளிநாட்டுக்காரர் இயக்கிய படமாகியதால், அதை இந்தியக் கணக்கில் சேர்க்க முடியவில்லை. உலகில் அதிக சினிமாக்கள் வெளிவரும் இந்திய சினிமாவில் இருந்து நம்மால் ஒரு படத்தைத் தான் சுட்டிக்காட்ட முடிகிறது என்றால், நாம் சினிமாவை சரியாக புரிந்து கொள்ள முடியாத இடத்தில் இருக்கிறோம் என்று பொருளாகிறது. இந்நிலை மிகவும் வருந்தத் தக்கது.

ஆனாலும் செழியன் அவர்களிடம் கேட்க ஒரு கேள்வி இல்லாமல் இல்லை. உலக சினிமா என்ற வரையறையை எதில் இருந்து துவக்குகிறீர்கள். அதன் கதையிலா வெளிப்பாட்டுத் தன்மையிலா உள்ளடக்கத்திலா காட்சிகளிலா தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் திறமையிலா எதை வைத்து முடிவு செய்கிறீர்கள். ஏன் உங்களால் இந்திய சினிமாக்களை தமிழ்ப் படங்களை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

நீங்கள் எழுதி இருக்கும் 93 படங்களில் ஒன்றைக் கூட நான் மட்டும் அல்ல இந்திய சினிமா ரசிகர்களில் 95 சதவீதம் பேர் பார்த்ததும் மட்டும் அல்ல, கேட்டுக் கூட இருக்க மாட்டார்கள். எப்படி விழுகிறது இந்த இடைவெளி சினிமாக்களை கொண்டாடும் ஒரு மாபெரும் சந்தை இந்தியா. அங்கு உருவாகும் படங்கள் ஏன் உலகத்தரத்திற்கு செல்ல முடியவில்லை என்று யோசித்தீர்களா? அல்லது இந்திய தமிழ் சினிமாக்களை புறக்கணிப்பது அறிவுலகத்தின் செயல்பாடு என்று எண்ணுகிறீர்களா

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் வரும் ஒரு கலை வடிவம் இந்தியத் தன்மை பெறும் போது, அது தன்னளவில் பெரும் மாற்றங்களை சந்திக்கிறது. இந்திய தமிழ் கலை மரபு நாடகத்திலிருந்து கூத்துக் கலையிலிருந்து பிறந்தது. அது தன்னை விழுங்கி செரிக்கும் விஞ்ஞானம் கலையேந்தி வருகையில் ஒன்றையொன்று விழுங்கி மக்களின் கலையாக மலர்கிறது. கோடானு கோடி ரசிகர்கள் அதை ரசிக்கிறார்கள். மிகவும் பிரமாதமான இந்திய தமிழ் சினிமாக்கள் இங்கேயும் எடுக்கப்படுகின்றன. அந்தத் தமிழ் சினிமா பார்த்துத் தான் நீங்கள் உலக சினிமாவிற்குள் உள் நுழைந்தீர்கள்.

நூறாண்டு கண்ட தமிழ் சினிமாவில் எண்ணற்ற இயக்குநர்கள் அற்புதமான படைப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள் ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாரதிராஜா, பாக்கிய ராஜ், பாலச்சந்தர், மணிரத்னம், மோகன் தேவராஜ், ராம், ரஞ்சித், மாரி செல்வராஜ் என விரிந்த பட்டியல் கொண்டது. உலக சினிமா மாதிரி உள்ளூர் சினிமா குறித்தும் புத்தகம் எழுதுங்கள்.

வெளிநாட்டு வியப்பை இங்கே திணிப்பது போல், இங்கிருக்கும் நல்லவற்றை அங்கே கொண்டு செல்லுங்கள். நீங்கள் சொல்லும் பல வெளிநாட்டு படங்கள் யதார்த்தத்திற்கு மீறியவை. முதல் படமே கட்டுடைத்தால் ஒன்றும் தேறாது.உலக சினிமா என்பதை இந்தியச் சூழலோடு பொறுத்திப் பாருங்கள். மற்றபடி உங்கள் தேடலும் எழுத்தும் போற்றுதலுக்குரியவை வாழ்த்துகள்.

📚 நூலின் விவரங்கள்:
தலைப்பு விவரம்
நூலின் பெயர்: உலக சினிமா
ஆசிரியர்: செழியன்
வெளியீடு: சீர் வாசகர் வட்டம்
விலை: ₹.200
அறிமுகம் எழுதியவர்:    செ. தமிழ்ராஜ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *