செழியன் (Cheziyan) எழுதி சீர் வாசகர் வட்டம் (Seer Vaasagar Vattam) வெளியிட்ட ‘உலக சினிமா’ (Ulaga Cinema) புத்தகம் ஓர் அறிமுகம்

செழியனின் ‘உலக சினிமா’ புத்தகம் – நூல் அறிமுகம்

செழியனின் ‘உலக சினிமா’ புத்தகம் விமர்சனம்

பார்க்காமல் படம் பார்த்தப் பரவசம்

– ரவி அல்லது

தோழர் மதிக்கண்ணனின் கதவு பதிப்பகம் நூல் அங்காடியில் வழியாக வாங்கிய ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான செழியனின் உலக சினிமாப் புத்தகம் மறுபடியும் மொத்தமாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் கொஞ்சமாக படித்தது சமீபத்தில் கால் பாதத்தில் செய்த சிறு அறுவை சிகிச்சையின் மூலம் கிடைத்த ஓய்வில் முழுமையாக படிக்க முடிந்தது.

கல்லூரி நாட்களில் விகடனில் தொடராக வந்து சுவராசியம் கூட்டிய அநேக தொடர்களில் இதுவும் ஒன்று. அன்றைய கால கட்டத்தில் இளைஞர்களுக்கு சினிமாவைத் தவிர சிறந்த பொழுதுபோக்குகள் பெரிதாக எதுவும் இல்லை. எல்லோரையுமே சினிமா வசீகரித்து வைத்திருந்தது. உலக சினிமாவைப் பற்றிய புரிதலும் தேடலும் இருந்த காலத்தில் மிகவும் சரியாக விகடன் இந்த தொடரை ஆரம்பித்தது.

நான் கல்லூரியில் படிக்கும்போது இந்த தொடரைப் படிக்கவே விகடன் புத்தகம் ஹாஸ்டலில் ஒவ்வொரு ரூமிற்கு சென்று நொந்து நூடுல்ஸ்ஸாகி என்னிடம் வந்து சேரும் போது அடுத்த வார விகடன் வந்துவிடும். சில சமயங்களில் சீனியர் ரூமிற்கு சென்று முழு ஹாஸ்டலுக்கும் சென்று என்னிடம் திரும்பி வராமலையே பயணித்துவிடும். ஒரு முறை நான் வேலையின் காரணமாக உலக சினிமா தொடர்ப் படிக்க முடியாமல் போனதால் அந்த தொடரை மட்டும் கிழித்து என் பெட்டிற்குக் கீழே வைத்துவிட்டு நான் வழக்கமாக படிக்கும் வார,மாத இதழ்களை எனது பெட்டிக்கு அடியில் வைத்திருந்தேன். (நான் மறைத்து வைப்பதாக அங்கு புத்தகங்களை வைத்திருப்பது ரூமிற்கு வரும் எல்லோருக்கும் தெரியும்.). அதை வழக்கம்போலவே கல்லூரியின் விடுதியின் அறைகள் எங்கும் சென்றதில் இந்த தொடர் இல்லாத கடுப்பில் சீனியர் ஒருவர் ஜேம்ஸ் பாண்ட் போல துப்பறிந்து என்னை மிரட்டியதோடு இல்லாமல் விகடன் படித்து முடித்ததும் என்னிடம் கொண்டு வந்து கொடுடா என்று மிரட்டி சொன்ன பல சுவாரசியமான சம்பவங்கள் எனக்கு நினைவுக்கு வருகிறது.

Buy Ulaga Cinema - 1 Book Online at Low Prices in India | Ulaga Cinema - 1 Reviews & Ratings - Amazon.in

மேலும் இந்தத் தொடர் வந்த சமயத்தில் விகடன் ஒவ்வொரு வாரமும் அந்தந்தப் படத்தின் டிவிடியையும் கொடுக்கலாமே என்று கடிதம் எழுதலாம் என்ற எண்ணத்தையும் எனக்குள் அப்போது தோன்ற வைத்தது.

சினிமாவை நேசிக்கிறவர்கள் குறிப்பாக சினிமா துறைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தையும் வாங்கி உங்கள் புத்தகங்களோடு வைத்திருப்பது சிறந்தது. மேலும் எழுத்தாளராக வரவேண்டும் என ஆசைப்படுகிறவர்களும் இதை வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் தான் பார்த்த சம்பவத்தை ஒருவர் எப்படி இவ்வளவு நேர்த்தியாக சுவாரசியம் கூட்டி சொல்ல முடிகிறது என்பதை அறிவதற்கான ஒரு ஆவணமும் கூட இந்தப் புத்தகம். நான் இந்தப் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. உங்களிடம் இந்த புத்தகம் இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை நீங்கள் ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள்.

செழியன் அவர்கள் இந்த தொடருக்காக பட்ட மெனக்கடல்களை சுவாரசியமாக ஒரு கதை போல சொல்லி இருப்பார். தஸ்தவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ திரைப்படமாக ‘ஒயிட் நைட்ஸ்’ என்று வந்ததை தொடராக்க டிவிடியை தேடிச்சென்ற இடமும் கிடைத்த விதமும் கற்பனைக்கு அப்பார்ப்பட்டது. ஒயிட் நைட்ஸ் டிவிடி உங்களிடம் இப்போது இருக்கிறதென்றால் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது யாருக்கு என்று அவர் சொல்வதை நீங்கள் சொல்லிவிட்டால் நிச்சயமாக என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் நான் பரிசு தருகிறேன்.( கண்டிசன் 1. நீங்கள் இந்த புத்தகம் முன்பே படிக்காதவராக இருக்கவேண்டும். 2. இதுபற்றி எவரும் உங்களிடம் சொல்லாமல் இருக்க வேண்டும்.)

இந்தப் புத்தகத்திற்குள் நுழைவதற்குள் செழியன் அவர்கள் நம்மிடம் இந்த புத்தகம் படிப்பதற்கான நோக்கத்தை தெளிவு படுத்த மூன்று கேள்விகளை முன் வைத்து அதற்கு அவரே தெளிவான பதிலைக் கொடுத்து நம்மை படம் பார்க்க மன்னிக்கவும் படிக்க உள்ளே அழைத்துச் செல்கிறார்.

உலக சினிமா (பாகம் 2) - செழியன் - விகடன் பிரசுரம் | panuval.com

1. எது நல்ல திரைப்படம்.
2. ஒரு திரைப்படத்தை எப்படிப் பார்க்கவேண்டும்.
3. ஒரு நல்ல திரைப்படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்.

இந்தப் புத்தகத்தில் 93 படங்களைப்பற்றி ஒவ்வொன்றையும் ஒரு சிறுகதைப் போல அழகாக சொல்வதோடு மட்டுமல்லாமல் அந்தப் படங்களில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் படத்தைப் பாருங்கள் என்பார். இன்று யூடியூபில் உட்கார்ந்து கொண்டு சினிமாப் படங்களை பங்கம் பண்ணுகிறவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய அறம் சார்ந்த நேர்மையின் பாடம்.

மனிதன் தொடக்கம் சொர்கத்திலிருந்து தொடங்குவது போல குழந்தையும் தெய்வமும் ஒன்று என்கின்ற அடிப்படையில் தொடங்கினாரா என்று தெரியாது. மஜித் மஜிதியின் ‘சில்ரன் ஆஃப் ஹெவன் ‘ படம் தொடரின் நல்லத் தொடக்கம். அலி,சாரா சகோதரர்களின் ஏழ்மையின் அன்பினை பரஸ்பரம் நேசித்தலை படம் நேர்த்தியாக சொன்னதை நம் முன் காட்சிப்படுத்தி அலி போட்டியில் வென்றான,ஷூ கிடைத்ததா என்பதை போகிற போக்கில் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார்.

நேற்றும் இன்றும் ஓயாமல் போர்கள் உலகின் ஏதோவொரு மூலையில் நடைபெறும்போது ஒவ்வொரு குடும்பமும் அல்லல்படுவதை அந்தக் குழந்தைகளை பெற்றவர்கள் காக்கப் போராடுவதை நகைச்சுவையாக ‘லைப் ஈஸ் பியூட்புஃல்’ திரைப்படம் சொன்னாலும் அதன் தீவிரமறியாத ஜோஸ்வா விளையாட்டாக பீரங்கியில் ஏறுவது நமக்குள் வலியைக்கூட்டுகிறது. ‘உடமைகளை இழந்து சோகம் ததும்ப நிற்கும் பெரியவர்களின் தோள்களில் ஏதுமறியாத குழந்தைகள் தூங்குகின்றன.ஜோஸ்வாவைப்போல் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அந்த அப்பாவிப் பெற்றோர்களிடம் என்ன பதில் இருக்கமுடியும் ‘ என்று செழியன் அவர்கள் இங்கு எல்லோரையும் பார்த்து கேட்கிறார்.

அடுத்த படம் ‘தி வே ஹோம்’ தென் கொரியப்படமென்றாலும் நான் சீனாவில் இருந்த நாட்களை அது நினைவூட்டியது. அங்கு குழந்தைகள் பெரும்பாலும் தாத்தா பாட்டிகளிடம் வளர்வார்கள். அங்கு பார்க்கிலும்,பள்ளிக்குமாக தள்ளாத வயதுடையவர்களுடன் அந்த குழந்தைகள் நடந்து போவது நிதானத்தைப் பழகுவதாக தோன்றும். இந்தப் படத்தைப்பற்றி சொல்லும்போது இதன் வசனங்களை ஒரு பக்கத்தில் அடக்கிவிடலாம் என்கிறார். இது எத்தனை கவித்துவமான உணர்வுக் கடத்தலானப் படம் என்பதை இதைவிட அழகாக சொல்ல முடியாது.

நீங்கள் ‘தி ரோடு ஹோம்’ பார்த்திருக்கிறீர்களா என்பது தெரியாது. ஆனால் இந்த புத்தகத்தில் இதை நீங்கள் படித்தால் அழகான காதல் கதை நாம் படித்த உணர்வு அதன் கூறுகளோடு இருப்பதோடு மட்டுமல்லாமல் நாம் படம் பார்த்த உணர்வையும் ஏற்படுத்திவிடும்.

உலக சினிமா (பாகம் 3) - செழியன் - விகடன் பிரசுரம் | panuval.com

இப்படியாக ‘சினிமா பேரடைஸோ’ டோடோ என்ற சிறுனோட திரையரங்கில் பயணிக்கும் இந்தக் கட்டுரைகள் ‘ரன் லோலா ரன்’ என வேகமெடுத்து லோலா ஓடுவது போல அடுத்து படிக்கத் தூண்ட வைக்கிறது ‘மரியா ஃபுல் ஆஃப் கிரேஸ்’ ‘டூகெதர்’ரென ‘சென்ட்ரல் ஸ்டேசனு’க்கு இழுத்து வந்து நிறுத்தி விடுகிறது. அங்கு கடிதம் எழுதிக் கொடுக்கும் ஆசிரியை தோராவை பார்த்தால் நமக்கு அன்பு என்பது எவ்வளவு மகத்தானது என்பது புரியும்.

பிக்பாக்கெட், தி பியானிஸ்ட், ஹோட்டல் ருவாண்டா, தி சைக்கிளிஸ்ட் என்று கடந்து வந்தால் ‘சிட்டி லைட்ஸ்’ஸில் வோறொரு மூன்றாம் பிறையை நினைவூட்டும் காதல் கதையாக சொல்லி விட்டுச் செல்கிறார்.

இப்படியாக வெளிநாடுகளில் வேடிக்கை பார்த்து ‘தி ரிட்டர்ன் ‘னோடு ரிட்டனாகாமல் இருந்த நம்மை ‘மேஹே தகே டாரா’ வில் இந்திய சூழலுக்கு கொண்டு வந்து ‘குடும்பத்துக்காக தன் விருப்பங்களை விட்டுக்கொடுப்பதும்.அதற்காகவே தன் வாழ்க்கையின் அரிய விசயங்கள் அனைத்தையும் தியாகம் செய்வதுமான’ இந்தியச் சூழலுக்குள் தள்ளி கண்ணீர் சிந்த வைத்துவிடுகிறார்.

நம் இந்தியச் சூழலில் அழுது ஆற்றாமையில் இருந்தால் அடுத்து ஆறுதலுக்கு வருவது காதல்தான். அதுதான் ‘எ ஷார்ட் ஃபிலிம் அபவ்ட் லவ்’ தொலை நோக்கி வழியாக தொலைந்து போகாத காதலை சொல்விட்டுச் சொல்கிறது அழுத்தமாக. பைபிளின் பத்துக் கட்டளைகளை குறும்படமாக எடுத்த டைரக்டர் கிறிஸ்டோஃப் கீவ்ஸ்லோவ்ஸ்கியின் முக்கியமான படம் இதுவெனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

அடுத்தடுத்து ஒவ்வொரு படத்திற்காக செழியன் அவர்கள் எழுதியவைகளைப் படிக்கும்போது நான் முன்பே சொன்னது போல ஒரு சிறுகதையைப் படித்த உணர்வே மிகைக்கிறது. இந்தக் கட்டுரை எழுத ஆரம்பிக்கும்போது ‘குட் பை லெனின்’, ‘பதேர் பாஞ்சாலி ‘, ‘ஹிரோஷிமா மை லவ்’, ‘தி கிரேண்ட் இல்யூஷன்’, ‘தி காட்பாதர்’, ‘எர்த்’ இல்லை என்றால் கண்டிப்பாக ‘,தி பைசைக்கிள் தீஃப்’ பற்றியாவது எழுதிவிட வேண்டும் என்று நினைத்தேன் கட்டுரையின் நீளம் கருதி செழியன் அவர்கள் முன்னுரையில் ‘ஒரு நல்ல திரைப்படத்தை நாம் ஏன் பார்க்க வேண்டும்’ என்பதில் சொன்னதை சொல்லி முடித்தால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உலக சினிமா-செழியன்

அதில் தவறுதலாக நாம் எடுத்துக்கொள்ளும் மோசமான ஓர் உணவு, அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு நமக்குத் தொந்தரவாக இருக்கலாம். ஆனால், வெறும் பொழுதுபோக்குத்தானே என்று நினைத்துத் தொடர்ச்சியாக நாம் பார்த்துக்கொண்டிருக்கும் தவறான திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், மெல்லக் கொல்லும் நஞ்சு (Slow poison) போல முழு வாழ்க்கைக்குமான நம் இயல்பையே மாற்றத் துவங்குகின்றன.

‘இருட்டைப் பற்றி புலம்புவதைவிட ஒரு விளக்கை ஏற்றி வையுங்கள்’ என்றொரு பழமொழி இருக்கிறது. தவறான படங்களைப் பற்றி வருந்துவதைவிட நல்ல படங்களை அறிமுகப்படுத்துவதே சிறந்தது. அந்த வகையில் உலகமெங்கும் எடுக்கப்பட்ட நல்ல படங்களைத் தேடிப் பார்ப்பதன் மூலம் மோசமான திரைப்படத்தை மட்டுமல்ல, நல்லவை என்ற போர்வையில் இருக்கும் போலிகளையும் நாம் அடையாளம் காணமுடியும். அதற்கு ஒரே வழி உலகின் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பதுதான். அதன்மூலம் குடும்பத்திலும், நம் நண்பர்கள் மத்தியிலும் ஒரு மாற்று ரசனையை ஏற்படுத்த முடியும்.

இந்த தொடர் வந்த நேரத்தில் தமிழ் சினிமா இருந்த நிலை வேறு இப்போது இருக்கும் நிலை வேறு. அப்போது புறப்பட்ட இளைஞர்கள் அதன் தொடராக அடுத்தடுத்து வந்தவர்கள் உலகின் ஆகச்சிறந்த சினிமாக்களை தமிழிலும் எடுத்திருக்கிறார்கள். உலகின் ஏதோவொரு மூலையில் தமிழ் சினிமாக்களை சிலாகிக்கும் யாராவது ஒருவர் இப்பொழுதும் இருந்தே தீருவார்கள். தமிழ் சினிமா கண்டிருக்கும் மாற்றம் அத்தகையது.

இந்தப் புத்தகம் இந்தியா முழுமைக்கும் குறைந்த பட்சம் தமிழகத்தில் திரைப்படக்கல்லூரிகளின் நூலகங்களில் அவசியம் இருக்க வேண்டியப் புத்தகம். ஆகக்கனமான புத்தகத்திற்கு சொற்ப விலையை நிர்ணயித்திருக்கும் சீர் வாசகர் வட்டத்திற்கு பாராட்டுகளும் நன்றியும்.

(உலக சினிமா, சீர் வாசகர் வட்டம்,11, தமிழ் நகர், இரண்டாவது தெரு, மருத்துவக்கல்லூரி சாலை, தஞ்சாவூர்-613004. கைபேசி:9566331195, 9600652285, 9865252105).
***

எழுதியவர்:-

✍🏻 ரவி அல்லது
ravialladhu@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *