ஒன்பது பதிப்புகளைக் கண்ட நூல் இது. மொழிபெயர்ப்பு நூல் என்று அறியாத வண்ணம் சிறப்பாக ஆக்கம் செய்யப்பட்ட நூல்.
இது ஒரு சுயத்தை அறிந்தவனின் கதையென்று கூறமுடியாத படைப்பு. தான் ஒரு அயோக்கியன் என்று வெளிப்படையாகச் சொன்ன யோக்கியனின் கதை இது. மனிதமே உருவான ஒப்பற்ற மனிதனின் கதையிது. பிடிவாதம், உறுதி, கொள்கைப் பிடிப்பு, இரக்கம், கருணை, பாசம், நேசம், சபலம் மற்றும் பல கீழ்மைகள் நிறைந்த ஒரு கலவையான குணம் கொண்ட ஒப்பற்ற கவிஞனின் கதை இது. இருபத்தியொரு கட்டுரைகள் கொண்ட தொகுப்பு இது.
முதல் கட்டுரை “சிதம்பர நினைவுகள் “என்பதில் வசதியாக வாழும் மகன்களையும் மகள்களையும் கொண்ட ஒரு முதிய தம்பதியினரைச் சிதம்பரம் கோயிலில் காண்கிறார், சிதம்பரம் மண்ணில் தங்கள் உயிர் போக்கவேண்டுமென ஒரே உறுதியுடன் வாழும் அவர்களுடன் பேசுகிறார். இறுதியில் யார் முதலில் இறந்திருப்பார்கள் ரெங்கநாதனா? கமலாம்பாளா? என்று கேள்வி கேட்டு நம்மை நெகிழவைக்கிறார்.
**”அப்பா” என்ற கட்டுரை. அப்பாவின் உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறி கொள்கைகளுக்காகத் தன்னை வருத்திக்கொண்டு, பிச்சையெடுக்கும் நிலையிலும் வீடு திரும்பாமல் திரிகிற கவிஞர் அப்பாவின் மரண செய்தி கேட்டு வீட்டிற்குச்செல்கிறார், உறவினர்களின் நிந்தனைகளைப் பொறுத்துக்கொண்டு, அம்மாவின் வேண்டுகோளை ஏற்று அப்பாவின் ஈமச்சடங்குகளைச் செய்யும் கவிஞர், தான் அப்பாவின் வாழ்நாள் துயரமாக வாழ்ந்ததை எண்ணி வெடித்து அழுகையில் நம்மையும் நெகிழ வைத்துவிடுகிறார்.
**”தீப்பாதி” என்ற கட்டுரையில், தன் பதின்ம வயதில் அவரால் மிகவும் நேசிக்கப்பட்ட அழகு மிக்க ஷகினாவை ஒரு ரயில் நிலையத்தில் சந்திக்கும் போது தீக்காயங்களால் வெந்து உருமாறி இருப்பதைப் பார்க்கும்போது அதிர்ச்சியடைகிறார். அவளுடன் பயணப்பட்டு அவள் வீட்டிற்குச் சென்று அவளின் கதையெல்லாம் கேட்டு அவளின் கஷ்டத்திற்காகப் பணம் கொடுத்தால்?! ஒருவேளை மறுத்துவிட்டால்?! என நினைத்து விடைபெறும்போது சிறுவயதில் அவளிடம் அடாவடித்தனம் பண்ணி வாங்கிய ஒரு முத்தத்தை தீய்ந்து போன அவளது கன்னத்தில் முத்தமிட்டு தன்னுடைய கடனை தீர்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
**”கர்ப்பவதம்” என்ற கட்டுரையில் தன்னை காதலித்து திருமணம் செய்துகொண்டதினால், தன் உறவினர்களால் வெறுக்கப்பட்டு, கஷ்டத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட விஜயலட்சுமி M. A படித்துக்கொண்டுள்ளபோது கர்ப்பம் ஆகிவிடுகிறாள். அப்போது கவிஞரும் அதே கல்லூரியில் படித்துக்கொண்டுள்ளார், இருவருக்கும் வேறு வருமானமில்லாமல் நண்பர்கள் உதவியுடன் விடுதியில் தங்கியுள்ளனர். ஒரு நாள் வெளியே தங்கியதினால் வந்த சோதனை. குழந்தைப் பேறு என்பது எவ்வளவு பெரிய விஷயம், ஆனால் அப்போது அவர்கள் இருக்கும் சூழ்நிலையில் அக்குழந்தை பாரமாகிவிடும் என்று உணர்ந்து கருக்கலைப்பு செய்யப்படுகிறது. அதில் பிறக்காத அந்த குழந்தையிடம், இந்த உலகத்தைப் பார்க்காமலே உயிர் நீத்த அந்த குழந்தையிடம், பாவ மன்னிப்பு கேட்கும்போது நம்மை அந்த வார்த்தைகள் உலுக்கி எடுத்துவிடுகிறது.
** “ரத்தத்தின் விலை” என்ற கட்டுரையில் ஒரு தோசை சாப்பிட்டதற்காகப் பணம் இல்லாததினால் அந்த ஹோட்டலின் சமையலறையில் எழும் புகையின் இடையில் கஷ்டப்பட்டு வேலை செய்துவிட்டு வெளியேறும்போது, அந்த ஹோட்டல் முதலாளியின் வழிகாட்டுதலில், அரசு மருத்துவமனையில் ரத்தம் கொடுத்து, அந்தப்பணத்தை வைத்து ஊருக்குப்போகலாம் என நினைத்து மருத்துவமனை செல்கிறார். ஒரு பாட்டில் ரத்தம் கொடுத்தால் பதினாறு ரூபாய் கிடைக்கும். காத்திருக்கும் நேரத்தில் அங்குக் கிருஷ்ணன் குட்டியைச் சந்திக்கிறார், அவன், அவனுடைய தங்கைக்கு மருந்து வாங்குவதின் பொருட்டு கையில் பணம் இல்லாமையால் ரத்தம் கொடுக்க வந்ததாகச் சொல்வான். இருவரும் ரத்தம் கொடுத்து முடிந்ததும் மருந்துக் கடைக்குப் போகின்றனர், ஆனால் அங்கு மருந்தின் விலை இருபத்தியேழு எனத்தெரியக் கிருஷ்ணன் புலம்ப, தன் கையில் இருக்கும் பணத்தை அவனுக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்புகிறார். எவ்வளவு பெரிய மனது, அதை எண்ணி வியக்காமல் இருக்கமுடியுமா.
**”அக்கினி காவடி” என்ற கட்டுரையில் ஆண்டாண்டுகளாய் முருகனுக்குக் காவடி எடுத்த எண்ணெய் செட்டியார், ஏற்கனவே வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட தன் மகன் இறந்ததினால் மனம் விட்டு எல்லாம் துறந்து விட்டேத்தியாய் இறுதிக் காலத்தைக் கழிப்பது பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த செட்டியார் மீது இரக்கம் கொள்ளவைக்கிறார்.
**”முகம்” என்ற கட்டுரை. நிச்சியமாகக்கூறலாம் இந்தியாவில் உள்ள எந்த எழுத்தாளரும் எழுதத் தயங்கும் விஷயம். கேரள இலக்கிய உலகமே கொண்டாடும் ஒரு மாபெரும் கவிஞன் ஒரு சின்னப் பெண்ணிடம் அடி வாங்கியதைத்தான் அதில் எழுதியிருப்பார். ஊறுகாய் விற்க வந்த ஸ்ரீதேவியிடம் ஏற்பட்ட ஒருவினாடி சபலத்தில் அவளை தொடமுயற்சிக்க வெகுண்டெழுந்த அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட, நிதானம் வந்து அவளிடம் மன்னிப்புகோருகிறார் கவிஞர். இது மனைவிக்கும் தெரிந்து போகிறது. பிறிதொரு நாளில் அவள் கவிஞரைச் சந்தித்து தன்னுடைய ஏழ்மையைக் கூறுகிறாள். அவளின் கதை நம்மை வியக்கவைக்கிறது. ‘வறுமையிலும் செம்மை’ என்ற வார்த்தைகளின் மனுஷி அவள். இறுதியில் கணவனுடன் வந்து இவரிடம் ஆசீர்வாதம் பெறுகிறாள். இதைப் பதிவு செய்வதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும், கவிஞர் தைரியசாலி மட்டுமல்ல நேர்மையானவரும் கூட.
**”அம்மா” என்ற கட்டுரை. தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஒரு புத்தக விழாவிற்குக் கவிஞர் செல்கிறார். அங்கு ‘மார்த்தா’ என்ற முதியவளைச் சந்திக்கிறார். அவளுக்கு ஆறு குழந்தைகள் என்றும், அதில் நான்கு ஆண்குழந்தைகளும் தென் ஆப்பிரிக்க விடுதலைப்போரில் உயிரிழந்து போயினர் என்றும், மீதமிருக்கும் இரு மகள்களும் தனித்தனியே குடியிருக்கின்றனர் என்றும் கூறுகிறாள். அவள் வீட்டிற்குக் கவிஞர் செல்கிறார், அங்கு மார்த்தா தன் கையுறைகளை நீக்கும்போது கவனிக்கிறார். அவளின் கையில் சில விரல்கள் இல்லாமல் இருப்பது பற்றிக் கேட்கிறார், அப்போது அவர்களின் குலவழக்கப்படி போரில் இறந்துபோன மகன்களின் நினைவாக விரல்களை வெட்டிக்கொண்டேன் என்று சாதாரணமாகக் கூறி கவிஞருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் வீரத்தாய். விடுதலைக்கு எதையெல்லாம் விலையாகக் கொடுக்கவேண்டியுள்ளது என்பதை நினைக்கும்போது, அந்த விடுதலையின் அருமை புரிகிறது.
இவ்வாறு இந்நூலில் உள்ள அனைத்தும் சிறப்பான கட்டுரைகள். வாசிக்கும்போது நாம் நெகிழ்வோம், சுயத்தைப் பரிசீலிப்போம், மனிதர்களின் மேன்மையை உணர்வோம், நேர்மையான ஒரு மனிதனைச் சந்தித்த அனுபவம் ஏற்படும்.
அன்புடன்,
பெ. அந்தோணி ராஜ்
தேனி.
நூல்: சிதம்பர நினைவுகள்
ஆசிரியர்: பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
தமிழில்: K V சைலஜா
பதிப்பகம்: வம்சி
விலை: ரூ 150