கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவராக இருப்பினும் சரியான கவனம் பெறாமல்தான் இருந்து வந்திருக்கிறார். இசைப் பின்னணியில் இவர் எழுதிய இதய நாதம் இசையில் சிகரத்தை நோக்கிய நவீனமாகும். இசைப் பின்னணியைக் கொண்ட ரகுபதியின் அவஸ்தை எனும் இச்சிறுகதை 1942க்கு முன்னர் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுபதியின் அவஸ்தை
ந. சிதம்பர சுப்ரமணியன்
“சீக்கிரம் கிளம்பு நாழிகையாகிவிட்டது” என்று அவசரப்படுத்தினான் ரகுபதி. சரஸ்வதி புடைவையைச் சரிப்படுத்திக் கொண்டு அவசர அவசரமாகக் குங்குமம் இட்டுக் கொண்டாள். ரகுபதி வீணையை ஜாக்கிரதையாகத் தூக்கிக் கொண்டுபோய் வாசலில் நின்ற டாக்ஸியில் வைத்தான். சரஸ்வதி அவனைப் பின் தொடர்ந்து சென்று வண்டியில் ஏறிக் கொண்டாள். டாக்ஸி புறப்பட்டு வித்வத் சபையை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.
ரகுபதி நல்ல பையன் ரசிகன் புத்திசாலி, அவனுக்குக் கொஞ்சம் வீண் பெருமை மாத்திரம் உண்டு. ஆனால் கர்வி அல்ல. அவனுடைய வீண் பெருமை பிறரை அவமதிக்கவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடியதன்று. தான் செய்யும் காரியங்களைப் பிறர் போற்ற வேண்டுமென்பது அவன் அவா.
அவனுக்குக் கொஞ்சம் பூர்வீக சொத்து உண்டு. பட்டினத்தில் வேலை வேறு. அவன் மனைவி விஷயத்தில்தான் அதிருஷ்டத்தின் சிகரத்தை அடைந்து விட்டான். சரஸ்வதி நல்ல அழகி. எஸ்.எஸ்.எல்.சி வரை படித்திருக்கிறாள். அவளுடைய சங்கீதத்தில் கற்பனையும் ஜீவனும் ததும்பி நிற்கும். ஒரு தேசல் ஸ்வரம் இருக்குமா? சரஸ்வதி தனக்கு மனைவியாக வாய்த்ததில் மட்டில்லாப் பெருமை கொண்டான் ரகுபதி.
சர்மா சென்னை வித்வத் சபைக் காரியதரிசி, சரஸ்வதியின் பெற்றோர்களுக்கு வேண்டியவர். சரஸ்வதியின் வாசிப்புத் திறமையை நன்கு அறிந்தவர். வித்வத் சபையின் வருடாந்திரப் போட்டியில் சரஸ்வதி கலந்து கொள்ளுமாறு செய்ய அவர் விரும்பினார்.
வருடாந்திரப் போட்டி தினத்தன்று வித்வத் சபை வாசலில் டாக்ஸி வந்து நின்றது. வீணையை பெருமையுடன் தூக்கிக் கொண்டு முன் நடந்தான் ரகுபதி. அடக்க ஒடுக்கத்தோடு பின் தொடர்ந்து வந்தாள் சரஸ்வதி. மேடைமேல் ஜட்ஜுகளாக நியமிக்கப்பட்ட மூன்று பேர்களும், பல முக்கியஸ்தர்களும் உட்கார்ந்திருந்தனர். மொத்தம் ஐந்து ஸ்திரீகள் போட்டியிட்டனர். போட்டி போடுபவர்கள் ஜாபிதாவில் சரஸ்வதியின் பெயர் கடைசியில் இருந்தது. கனகம் முதலில் எழுந்து வாசிக்க ஆரம்பித்தாள். அடுத்தது பங்கஜத்தின் முறை. ரகுபதிக்கு அது ஒன்றும் பிரமாதமாகத் தோன்றவில்லை. அடுத்தபடியாக வாசித்த ராஜலட்சுமியையும் தங்கத்தையும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதித்தவர்களிடம் கோபம் கொண்டான்.
சரஸ்வதியின் முறை வந்தது. முதலில் வாசித்தவர்களின் பாட்டுக்கும் இவளுடையதற்கும் உள்ள வித்தியாசத்தைக் கண்டு பிரமிக்கப்போகும் ஜனங்களை ரகுபதி அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தான். தந்தியைத் தடவுவது போல் ஓர் இழுப்பு இழுத்து விட்டு வாசிக்க ஆரம்பித்தாள் சரஸ்வதி. ரகுபதி அவள் பேகடை ஆலாபனம் செய்து கொண்டிருந்தபோது அப்படியே மெய்ம்றந்து அனுபவித்துக் கொண்டிருந்தான். ஜனங்கள் ரசிப்பதைக் கவனிப்பதற்காகத் தலையை ஒரு சுற்றுச் சுற்றினான்.
இரண்டு நாற்காலிகளுக்கு அப்பால் உட்கார்ந்திருக்கும் ஒருவன் பக்கத்திலிருக்கும் மற்றொருவனிடம் ஏதோ சொல்லத் தலையை நீட்டினான். “பெண்கள்தான் பாடவேண்டுமப்பா, அப்பொழுதுதான் சரீரமும் சாரீரமும் இனிமையாயிருக்கும் பாரேன், குஷியாயிருக்கு” என்று சரீரத்தையோ சாரீரத்தையோ வியந்து பேசிக் கொண்டிருந்தான் அவன். ரகுபதிக்கு தூக்கிவாரிப் போட்டது, அந்த வார்த்தைகள் நாராசம்போல் அவன் காதில் விழுந்தன. எதையோ எதிர்பார்த்த அவனுக்கு இவ்வார்த்தைகள் சுறுக்கென்று தைத்தன. மறைந்து கிடந்த ஒரு பொறி பற்றி எரிய ஆரம்பித்தது. வீண் பெருமைக் கோட்டையைப் பொறாமை வெள்ளம் தகர்த்து எறிந்து விட்டது.
தூரத்திலிருந்த ஒருவன் முண்டியடித்துக்கொண்டு முன்பக்கம் வர முயற்சி செய்து கொண்டிருந்தான். ‘தூரத்திலேயிருந்து கேட்டால் போதாதோ? கிட்ட வந்து பார்க்க வேண்டுமோ? வெளியில் துரத்த வேண்டும் அந்தப் பயலை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். யாவர் மேலும் சந்தேகத்துடன் ஆத்திரமும் வந்தது. சங்கீத ரசிகர்கள் தலையை ஆட்டும்போது அவர்கள்மேல் பாய்ந்துவிட வேண்டும்போல் தோன்றிற்று.
முறுக்காக ஒருவன் நாடகக்காரன் போல் உட்கார்ந்து கொண்டிருக்கும் அவன் மேலே போட்டுக் கொண்டிருக்கும் பட்டு, வாயில் குதப்பிக் கொண்டிருக்கும் வெற்றிலை, நெற்றியிலிருக்கும் ஜவ்வாது, கையிலிருக்கும் சங்கிலி, சரஸ்வதியைப் பார்த்துக் கொண்டிருக்கும் பார்வை எல்லாம் ரகுபதியின் வயிற்றெரிச்சலைக் கொழுந்துவிட்டு எரியச் செய்தன. ‘காலிப்பயல் முதல் நம்பர் போக்கிரி, பாட்டு கேட்கவா வந்தான் திருடன்’ என்று முணுமுணுத்துக் கொண்டான். தினம் தவறாமல் கட்டாயப்படுத்தி வாசிக்கச் சொல்லும் நாதநாமக்கிரியைப் பதம் அவனுக்கு அப்பொழுது வேம்பாயிருந்தது. பாட்டு முடியாதா என்று நினைக்க ஆரம்பித்தான்.
கூடத்தில் தொப்பென்று போடுவதுபோல் வீணையை வைத்தான். திரும்பினான். சரஸ்வதி ஒன்றும் புரியாமல் பயந்தபடியே நின்று கொண்டிருந்தாள். “பெரிய ஸதஸிலே பாடிவிட்டோமென்று உனக்கு சந்தோஷம் தாங்கவில்லை போலிருக்கிறது” என்றான். “நீங்கள்தானே இழுத்துக் கொண்டுபோய்ப் பாடச் சொன்னீர்கள்?” என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
“சீ, சீ வாயை மூடு. நான் சொல்வதை எல்லாம் நீ செய்து விடுவாயோ? நான் சொன்னால் உன் புத்தி எங்கே போயிற்று? உடம்பில் கொஞ்சம் சொரணையும் கூச்சமும் இருந்தால் அப்படிக் கிளம்பி வந்திருப்பாயா?” என்று அவனுக்குத் தெரிந்த பாஷையால் அளந்து கொண்டிருந்தான். அவன் தர்க்க நீதி அவளுக்குப் புரியவில்லை. நான் என்ன செய்வது? என்ன செய்திருக்க வேண்டும்? என்று கேள்வி கேட்க ஆரம்பித்தாள், அவளுக்கு கோபம் வேறு பொங்கிக் கொண்டு வந்தது. “உங்களுக்கு வேலை என்ன ? எல்லாம் வேண்டியும் இருக்கும் வேதனையும் செய்யும்” என்று அலட்சியமாகப் பதில் சொல்லி வைத்தாள்.
“சரிதான் அப்படியா சமாசாரம்? நீ என்ன பண்ணுவாய்? உனக்கு இடம் கொடுத்தேனே, என்மேல் தப்பு. இனிமேல் வீணையைத் தொடு வீணையையும் உன் கையையும் சேர்த்து அடுப்பில் வைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு சாய்மான நாற்காலியில் தடாலென்று வீழ்ந்து சாய்ந்தான். தான் செய்யாத குற்றத்திற்காக புருஷன் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டு சரஸ்வதி வீணையை எடுத்து நகர்த்தி வைத்தாள்.
அவன் புருஷன், கணவன், யஜமான், கஷ்டப்படவோ கஷ்டப்படுத்தவோ எல்லாவற்றுக்கும் அவனுக்கு உரிமை உண்டல்லவோ! ஆயிரம் வருஷங்களாக மனைவி அடைந்த அனுபவம் அது.
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
Leave a Reply
View Comments