Child labour in India; Covid-19 pandemic Economical Article by Prof P. Anbalagan. Book Day And Bharathi TV are Branch of Bharathi Puthakalayam

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும்; கோவிட்-19 பெருந்தொற்றும்



பேரா. பு. அன்பழகன்

குழந்தைகள் நாட்டின் செல்வமாகும் அவர்களின் கல்வி, நலம், சுற்றுப்புற சூழல்களை நல்ல முறையில் வளர்த்தெடுத்தால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஐரோப்பிய நாடுகளில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் குழந்தைகளை உடல்அளவில் பல்வேறு வகைகளில் சுரண்டும் நிலை காணப்படுகிறது. பொருளாதார சிக்கல், வறுமை, உள்நாட்டு போர், இயற்கை சீற்றம், நோய் தொற்று போன்ற நிலைகளில் குழந்தைகள் மற்றவர்களைவிட அதிக அளவில் பாதிக்கின்றனர்.

மேற்குறிப்பிட்ட நாடுகளில் பிள்ளைப் பருவத்திலே வேலைக்கு அனுப்பபடுவது அதிக அளவில் காணப்படுகிறது. நாட்டில் நிலவும் குறைவான கூலி, குடும்பத்தின் அளவு, பாலின வேற்றுமை, சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வு போன்றவைகளால் குழந்தைத் தொழிலாளர்களின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. உலக தொழிலாளர் அமைப்பு (ILO), வேலைகளை குழந்தைகளிடமிருந்து அவர்களின் பிள்ளைப் பருவத்திலேயே உரிஞ்சிக்கொள்வதாகும் இதனால் அவர்களின் முழு ஆற்றல் மற்றும் மேன்மை, உடல் மற்றும் மனதளவில் பாதிக்கபடுகிறது என்று குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) குழந்தைகளிடமிருந்து ஏதேனும் ஒருவகையில் உழைப்பினை சுரண்டுவதை குழந்தைத் தொழிலாளர்கள் என குறிப்பிடுகிறது. ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் 17 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றம் என்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரையில் 14 வயது கீழ் உள்ள குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாகும். இந்த குறிப்பிட்ட வயதுக்கு கீழ் வேலைக்கு குழந்தைகள் அமர்தப்படுவதால்; மன, உடல், சமூக அளவில் பெரும் துயரத்தினை இவர்கள் எதிர்கொள்கின்றனர். வறுமையும் குழந்தைத் தொழிலாளர்களின் அளவும் நேர்மறை தொடர்புடையது. வறுமையின் அளவு 1 விழுக்காடு புள்ளி உயர்ந்தால் குழந்தை தொழிலாளர்கள் 0.7 விழுக்காட்டு புள்ளி உயர்கிறது என்கிறது ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம். உலகத்தில் ஒவ்வெருமுறையும் பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் எழும்போதும் மனிதனின் வாழ்கைத்தரம் பாதிக்கப்படுகிறது இதில் அதிகமான குழந்தைகள் பாதிக்கின்றனர். குறிப்பாக வளரும் நாடுகளில் இப்பாதிப்பு அதிகமாக உணரப்படுகிறது. இதன் விளைவு குழந்தைகளின் படிப்பு தடைபடுதல் அல்லது படிப்பு தொடர முடியாமல் இடைநிறுத்தம் ஏற்படுகிறது அல்லது பள்ளிகளில் சேர்க்கை குறைகிறது மேலும் வேலைக்குச் செல்லவேண்டிய நிர்பந்தத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர்.

எடுத்துக்காட்டாக 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் 3 விழுக்காடு அளவிற்கு பள்ளிகளில் சேர்க்கை குறைந்தது, 5 விழுக்காடு புள்ளிகள் குழந்தைத் தொழிலாளர்களின் அளவு அதிகரித்தது. இந்த வழியில் அன்மையில் உருவான கோவிட் பெருந்தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு கோவிட் கால முதல் காலாண்டில் 130 மில்லியன் வேலை இழப்பினை சந்தித்தது இரண்டாவது காலாண்டில் 305 மில்லியன் வேலைஇழப்பினை எதிர்கொண்டது. வேலைவாய்பின்மை, குறைவான கூலி, அதிக அளவு உழைப்பினை சுரண்டுவது போன்றவைகள் தற்போது சமூகத்தில் நிலவுகிறது. இயல்பாக வேலைசெய்பவர்களுக்கு கொடுக்கும் கூலியைவிட குறைவான கூலியினை குழந்தைத் தொழிலாளர்களுக்கு அளித்து உழைப்பினை பெறலாம் என்கிற காரணத்திற்காக பல வணிக நிறுவனங்கள் குழந்தைகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கிறன. இதனால் செலவினை குறைத்து வருமானத்தை பெருக்கிக்கொள்ளமுடியும் என்ற அடிபடை போக்கு வாணிபத்தில் எழுந்துள்ளது.



கோரானாவால் பள்ளிகள் மூடப்பட்டது, குடும்பத்தில் வேலைக்கு செல்பவர்கள் வேலைஇழப்பினை எதிர்கொண்டது, குடும்பத்தை நடத்த வருமானத்திற்கான ஆதாரம்மின்மை, வணிக நிறுவனங்கள்; குழந்தை தொழிலாளர்களை விரும்பி வேலைக்கு சேர்த்துக்கொள்வது என பல காரணங்களால் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை 2020 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது (UNICEF 2020). பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் புள்ளிவிரப்படி தற்போது 152 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் உலகளவில் உள்ளனர் இதில் ஆண் குழந்தைத் தொழிலாளர்கள் (88 மில்லியன்) 58 விழுக்காடும் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் (64 மில்லியன்) 42 விழுக்காடும் உள்ளனர். அதாவது உலகில் 10 குழந்தைகளில் ஒருவர் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். 71 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் வேளாண்மையில் ஈடுபடுகின்றனர், 20 விழுக்காடு சேவைத் துறையிலும், 10 விழுக்காடு தொழில் துறையிலும் ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில் கோவிட் பெருத்தொற்று காரணமாக சுமார் 8 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர் என்கிறது புள்ளிவிவரம்.

இந்தியா உலக அளவில் அதிக குழந்தைகளைக் கொண்ட நாடாகும். உலக அளவில் உள்ள மொத்த குழந்தைத் தொழிலாளர்களில் 7.3 விழுக்காடு இந்தியாவில் உள்ளனர். இந்தியாவின் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 5 லிருந்து 14 வயதுடைய குழந்தைகள் 259.6 மில்லியன் ஆகும் இதில் குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளவர்களின் எண்ணிக்கை 10.11 மில்லியனாகும் இது மொத்தத்தில் 3.9 விழுக்காடாகும். மேலும் 42.7 மில்லியன் குழந்தைகள் பள்ளி செல்வதில்லை. தற்போதைய நிலவரப்படி 33 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் இதில் 80 விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இந்திய மாநிலங்களிலேயே அதிகமாக குழந்தைத் தொழிலாளர்கள் உத்திரப் பிரதேசத்தில் (20 விழுக்காடு) உள்ளனர். இந்தி அரசிலமைப்பு பிரிவு 21(ஆ)வின்படி இலவச கட்டாய கல்வியினை 6-14 வயதுடைய குழந்தைகளுக்கு அளிக்கப்படவேண்டும் என்கிறது மேலும் பிரிவு 24, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை தடைசெய்கிறது.

குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவதினை தடுப்பதற்காக குழந்தைத் தொழிலாளர் சட்டம் 2016ஆம் ஆண்டு இயற்றபட்டது. இதற்கு முன்பு கொண்டுவரப்பட்ட சட்டங்களான தொழிற்சாலை சட்டம் 1948, தோட்டத் தொழிலாளர் சட்டம் 1951, சுரங்க சட்டம் 1952, குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் 2000 போன்றவைகள் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குற்றம் எனவும் அவர்களை பாதுகாக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறது. குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 குழந்தைகள் கல்வி கற்க வழிவகை செய்துள்ளது. இதன்படி தனியார் பள்ளிகளில் 25 விழுக்காடு சேர்கையில் ஒதுகீட்டை ஏழை குழந்தைகள் கல்வி பெற வழிவகை செய்துள்ளது. ஆனால் 2014ஆம் ஆண்டு கல்வி உரிமை அமைப்பின் அறிக்கையின்படி 10 விழுக்காட்டிற்கு குறைவான பள்ளிகள் மட்டுமே இவற்றை ஏற்றுக்கொண்டுள்ளது. இச்சட்டத்தின்படி 41.35 லட்ச்சம் குழந்தைகள் 2018-19ஆம் ஆண்டில் பயன் அடைந்ததாக ஐனெயைn யுஉவழைn தெரிவிக்கிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அதிக அளவு இச்சட்டத்தின் கீழ் சேர்க்கை நடந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறன.

இதுபோன்ற நடவடிக்கைகளால் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் கோவிட் பெருந்தொற்றினால் வேலை இழப்பு, கூலி குறைப்பு போன்ற காரணங்களில் பெருமளவிற்கான மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவு குடும்ப செலவுகளை எதிர்கொள்ள குழந்தைகளை வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் பல குடும்பங்களில் தற்போது எழுந்துள்ளது. மேலும் பள்ளிகள் பெருந்தொற்றினால் மூடப்பட்ட நிலையில் குழந்தைகளை வேளாண்மை மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்பபவேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.



அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி 35 விழுக்காடு குழந்தைகள் பிச்சை எடுப்பதும்;, 21 விழுக்காடு குழந்தைகள் அபாயகரமான வேலைகளிலும், 14 விழுக்காட்டினர் உணவகங்களிலும், 10 விழுக்காட்டினர் வீட்டு வேலைகளுக்கும், 8 விழுக்காட்டினர் குடும்ப தொழிலிலும், 4 விழுக்காட்டினர் ஒப்பந்த தொழிலிலும்; ஈடுபடுவதாக தெரிவிக்கிறது (Navpreet Kaur & Roger W Byard, Sage Jounals, 9.5.2021). குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவதற்கான முக்கியமாக காரணம் பொருளாதாரக் நிலை (வீட்டிற்கு கூடுதலாக வருமானம் ஈட்டுதல், பெற்றோர்கள் வேலையின்றி இருத்தல், பெற்றோர்கள் வீட்டு வேலைசெய்து குறைவான கூலியினைப் பெறுதல்), சொந்த வேளாண் நிலங்களில் வேலை செய்தல், தொழிற்சாலைகளில் பகுதி நேர வேலை செய்தல், குடும்பத்தில் வேலைசெல்பவர்கள் வேலையினை இழக்க நேரிடுதல் அல்லது பல காரணங்களினால் உழைக்க முடியாத நிலைக்கு செல்வது, வீட்டைவிட்டு குழந்தைகள் வெளியில் ஒடிப்போவது போன்றவைகள் ஆகும்.

குழந்தைத் தொழிலாளர்கள் பெருமளவிற்கு முறைசாரா தொழில்களில் ஈடுபடுகின்றனர் அதிக அளவில் கட்டுமானம், வீட்டு வேலை, சிறு தொழில் நிறுவனங்கள், வேளாண்மை போன்றவற்றில்; ஈடுபடுகின்றனர். அபாயகரமான தொழிலான வேதிப்பொருட்கள் உற்பத்தி, தீப்பெட்டி, பீடி, செங்கல் தயாரித்தல், பட்டாசு தொழில். கல் உடைத்தல். சுரங்க வேலை, மோட்டார் வாகன பழுது பார்த்தல் போன்றவற்றில் ஈடுபடும்போது அவர்களில் உடல் மற்றும் மன நிலை பாதிப்படைகிறது. இந்தியாவில் 73 மில்லியன் குழந்தைத் தொழிலாளர்கள் (5-17 வயது) அபாயகரமான தொழிலில் ஈடுபடுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறன இதன் மூலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் உயிரிழக்கின்றனர். இது மட்டுமல்ல இவர்களின் உழைப்பு ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்ற அளவுவரை செல்கிறது. இவர்களுக்கு பணியிடங்களில் எந்த பாதுகாப்பும் அளிக்கப்படுவதில்லை.

கோவிட் பெருந்தொற்றினால் 457 மில்லியன் பொருளாதாரக் காரணங்களுக்காக உள்நாட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர் இது இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 37 விழுக்காடாகும். இதில் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிதியத்தின் கணக்கின்படி 160 மில்லியன் குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்கள் ஆவர்கள். 2020-21 ஆண்டுகளில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை பலமடங்கு பெருகியுள்ளது. மேலும் பள்ளிகள் பெருந்தொற்றினால் மூடபட்ட நிலையில் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை பெருமளவிற்கு உயர்ந்துள்ளது. தற்போதைய பெருந்தொற்று காலங்களில் குழந்தைத் தொழிலாளர்கள் அதிக அளவில் பீகார், ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ராஜஸ்தான், டில்லி போன்ற மாநிலங்களில் அதிக அளவிற்கு அதிகரித்துள்ளது. இம்மாநிலங்களில் இவர்கள் அதிக அளவில் சாரயம் காச்சுதல், செங்கள் சூளைகள், வயல், காட்டன் மில்கள், கிரானைட் தொழிற்சாலைகள் போன்றவற்றில் வேலை செய்கின்றனர்

மேலும் கோவிட் பெருந்தொற்றினால் பெண்குழந்தைகள் பெரும் துயரத்தினை சந்திக்கின்றனர். அதாவது குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக உருவெடுக்கின்றனர். இந்த வகையில் 0.5 மில்லியன் பெண்குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெண் குழந்தைகள் கடத்தப்படுவது மற்றும் அவர்கள் மீது பாலியல் வன்முறையினை அரங்கேற்றுவது (இந்தியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் குழந்தைகள் கடத்தப்படுவது புள்ளி விவர கணக்கில் இல்லாமல் உள்ளது ஒவ்வெரு நாளும் 150 குழந்தைகள் காணமல் போகின்றனர்) என பல நிகழ்வுகள் நடைபெறுகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மீண்டும் பள்ளிக்கு குழந்தைகள் திரும்புவதில்லை. ஆண்டு கல்வி நிலை அறிக்கை 2017ஆம் ஆண்டின்படி 6-10 வயதுடைய குழந்தைகள் 1.5 விழுக்காடு பள்ளி செல்லாமல் இருந்தனர். இது 2020ஆம் ஆண்டில் 5.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்த நிகழ்வினை தடுக்க அரசு குறைந்த பட்ச்ச குடும்ப வருமான நிலையினை உறுதிபடுத்த வேண்டும். அரசின் குழந்தைத் தொழிலாளர் தடுப்பு தடைச்சட்டங்களை தீவிரமாக நடைமுறைபடுத்தவேண்டும், பொதுமக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும், கல்விக்கான திட்டகால ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும். நாடுமுழுவதும் தன்னார்வளர் குழுக்களை அமைத்து வாணிப நிறுவனங்களை கண்கானித்து குழந்தைத் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்த வேண்டும், கோவிட் போன்ற பெருந்தொற்று காலங்களில் குழந்தைகளுக்கான உணவு தேவையினை பூர்த்தி செய்யப்படவேண்டும், குழந்தைகள் மீண்டும் பள்ளி திரும்புவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும்.

கட்டுரையாளர்: பேரா. பு. அன்பழகன்

முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

இந்திய அரசின் தடுப்பூசிக் கொள்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரம் – நா.மணி

பொருளாதார கட்டுரை 2: ஊரடங்கும் வாழ்வாதாரமும் – முனைவர் வே. சிவசங்கர்

பொருளாதார கட்டுரை 3: வரிச்சுமையை மறக்க பக்தியென்னும் மயக்க மருந்து: ஓர் வரலாற்று பார்வை ~ பேரா. மா. சிவக்குமார்

பொருளாதார கட்டுரை 4: கோவிட்-19 பெருந்தொற்றும், இந்திய கிராமப்புற பொதுசுகாதார உள்கட்டமைப்பும் – பேரா. பு. அன்பழகன்

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *