“மழலையின் மொழி” கவிதை – சாந்தி சரவணன்

Childrens Language Poetry By Shanthi Saravana. "மழலையின் மொழி" கவிதை - சாந்தி சரவணன். Book Day is Branch of Bharathi Puthakalayam.“மழலையின் மொழி”

இருள் சூழ்ந்து உள்ளபோதிலும்
எனக்கு ஐயமில்லை!
ஏனெனில்
நான் குடியிருக்கும் இடம்
அம்மா உன் கருவறையில்!

உன் உதிரத்தில் கருவாக உருவானேன் !
கத கதவென உன் அணைப்பில்,
உன் உயிரில் கலந்து,
உயிராய் உருவானேன்!

உன் சுவாசத்தால் நான்
சுவாசிக்கிறேன்!

நறுநீர் அருந்தி,
சுகமாய், இதமாய்
உன் கருவறையில்
தேனிசை கேட்டு
ஆனந்தக் களியாட்டம்
ஆடிக் கொண்டு இருக்கிறேன்!

அம்மா, குசு குசுவென
நாம் கதை கதைப்போம்
கதகதப்பாய்
துயிலும் போது
என் அசைவை உணர்ந்து
நீ இன்புற்றுத் துயில்வாய்!

அப்பா உன் காலைைப் பிடித்துவிட,
சிணுங்குவாய்!
அப்பாவிற்கு,
என் அசைவைக் காட்டி,
அகம் மகிழ்வாய்!

ஐயிரு மாதமாய் பொக்கிஷமாய் என்னைச்
சுமக்கிறாய்!
நான் வெளிவரும் அந்த தருணத்திற்காகக்
காத்திருக்கிறாய்!

உன் கையில் நான் தவழ,
உன் அன்பு முகம் நான் காண
தவமிருக்கிறேன் அம்மா!

அம்மா எங்கே இருக்கின்றாய்?
ஏதோ வாசம் என் மூச்சை மூட்டுகிறதே!
மருத்துவமனையா!

ஏதோ பிதற்றுகிறார்கள்?
நாள் நட்சத்திரம் பார்த்து
சிசேரியன் செய்யலாம் என்று ஒரு பாதகத்தியின் குரல் !

அம்மா, வேண்டாம் அம்மா
அவர்கள் பேச்சை கேட்காதே !
என் மௌன பாஷையை,
என் மௌன மொழியை
என் உடலின் மொழியை
நீ மட்டுமே அறிவாய்.
!

அஞ்சாதே, அச்சம் கொள்ளாதே
என்னை கவனி,
என் துடிப்பை உணர்!

சுகமாக உன் கருவில்
என்னை சுமந்தாய்!
உன் உடல் உள்ளுறுப்புகள்
என்னை வழி அனுப்ப
ஆயுதமாகிக் கொண்டு இருக்கிறது!
மனம் உறுதிகொள்!

உனக்கு வடுவில்லாமல்,
வலியில்லாமல்
இந்தப் பிரபஞ்சக் காற்றை

நான் சுவாசிக்க
சுகமான சுகப்பிரசவம்
இன்பத்தை நீ அனுபவிக்க
எனக்கு சில நொடிகள் மட்டுமே
அனுமதி தா!
என்னுயிர் தாயே!

நன்றி

திருமதி. சாந்தி சரவணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.