வன்மி எழுதிய கூடாரம் பதிப்பகத்தின் சிறார் குறுநாவல் எறும்புகளின் நகரம் (Erumbukalin Nagaram) - நூல் அறிமுகம் - https://bookday.in/

எறும்புகளின் நகரம் – நூல் அறிமுகம்

எறும்புகளின் நகரம் – நூல் அறிமுகம்

ஒரு கோட்டை ! அதற்குள் அரசி இருக்கிறாள். வேலையாட்கள் இருக்கிறார்கள் . ராஜாக்களும் கூட உள்ளார்கள் . ஆராய்ச்சியாளர்களும் , காவலர்களும் , உணவுக் கிடங்கும் இருக்கிறது . இது யாருடைய கோட்டையாக இருக்கும் உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா..?

இப்போது இது போன்ற கதைகளை சொல்வதற்கு ஆட்கள் தான் இல்லை . பரவாயில்லை வாருங்கள் இந்த கதையை எறும்பு சிறுவனின் பார்வையில் பார்க்கலாம் என்று அணிந்துரை வழங்கியுள்ளார் பட்டுக்கோட்டை வாழ் தமிழ் அறிஞர் அ.த. பன்னீர்செல்வம் அவர்கள்.

அதி நுட்பமான காலத்தில் சிறார்கள் மனதிற்கு ஏற்றவாறு வெகு நுட்பமாக இப் புத்தகத்தை அளித்துள்ளார் ஆசிரியர் வன்மி அவர்கள். இது சிறார் குறுநாவல் வகையைச் சார்ந்தது என்றாலும் , வாசிக்கும் நபர்களுக்கு தாங்களும் ஓர் எறும்பாகவே மாறி கார்ட்டூன் கதாபாத்திரமாக வாழ்வது போன்ற உணர்வை ஆசிரியரின் எழுத்துக்கள் தந்து , வேறொரு உலகில் நம்மை பயணிக்க வைக்கிறது.

கதாபாத்திரங்கள் :

யேச்சன் , பிக்கு , மிருதி எனும் ழிதி எறும்பு ராணி, காவலர்கள் , காப்பாளர்கள் , விஞ்ஞானி எறும்பு

இனி குறுநாவல் குறித்து…

இல்லை இல்லை வாருங்கள் புதிதாய் ஒரு கேலிச் சித்திரத்தின் சுவாரஸ்யமான கதையை குறித்து கேட்க…

வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் அவர்களின் கேள்விகளுக்கு விடை சொல்லத் தெரியாமல் முழிப்போம் அல்லவா .. அதுபோல்தான் இங்கு யேச்சன் எனும் சிறுவன். கேள்வி கேட்கும் நபர் “பிக்கு” எனும் எறும்பிடம் தான். யேச்சன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பொறுமையாக , அழைத்துப் போகச் சொல்லும் இடங்களுக்கு எல்லாம் நிதானமாக பிக்கு பயணிக்கும் போது , ஒரு முதிர்ந்த எறும்பாகவே பிக்கு நம் கண்ணில் படுகிறான்.

எறும்புகள் வரிசையில் சற்று தவறி விட்டால் அவைகள் படும் பாட்டை கதை வாசிக்கும் போது நான் உணர்ந்தேன். பல வகையான இடையூறுகள் எறும்பு இனத்திற்கு இருந்தாலும் , மனிதனால் எறும்பினம் படும் அவஸ்தைக்கு விடை தேடும் கதையாக இக்குறுநாவல் அமைந்துள்ளது.

இயற்கையில் தாய் வழி சமூகமாகத்தான் இருந்தது என்பதற்கு அடையாளமாக , இங்கு எறும்பு கூட்டத்தின் தலைவியாக இருக்கும் ராணி தன் இறக்கைகளை விரிக்கும் போது கிளியோபாட்ராவாக கண்ணுக்குத் தெரிகிறாள். எறும்புகளின் சிறு சிறு அசைவுகளுக்கும் ஆசிரியர் ஒவ்வொரு அர்த்தம் கற்பிப்பதும், உலகை முதன்முதலாக காணும் சிறுவனின் ஆவல் எப்பேற்பட்டதாக இருக்கும் + எத்தனை இடையூறுகளை அது கொண்டு வரும் என்பதையும் எறும்புகளின் கண்ணோட்டத்திலேயே வாழ்ந்து இந்நாவலை படைத்திருக்கிறார். அவை ரசிக்கும்படியாகவும் இருந்தது .

ஆங்கில பாடத்தில் Alice in Wonderland என்று ஒரு துணைப்பாடம் இருக்கிறது . இந்த நாவலை வாசிக்கும் போது அந்த கதைக்கருவை மனம் தொட்டுச் சென்றதை தவிர்க்க இயலாது. ழிதி யேச்சனுக்கு மட்டுமல்ல வாசிப்பவர்கள் அனைவருக்கும் விரும்பும் கதாபாத்திரம்.

எந்த இனமாக இருந்தால் என்ன ..? தாய்மை உணர்வு வந்து விட்டால் சிறுவர்களையும் சிறுமிகளையும் காப்பது முன்னே வந்து நின்று விடுகிறது. எதிர்பாராதவிதமாக மனிதனை வைத்து செய்ய விரும்பும் ஆராய்ச்சியை ழிதி மீது பிக்குவும் யேச்சனும் முயற்சிக்க, தன் தவற்றை உணர்ந்து அதற்கு என்ன பரிகாரம் செய்தார்கள் என்பது மீதி கதை.

நாவல் மீது கொண்ட ஆவலால் கதை முழுதும் சொல்லிவிட தோன்றிவிடும் போல. வாசிக்க வாசிக்க பக்கங்களை புரட்டச் சொல்லும் அளவுக்கு நாவல் சுவாரசியமாக உள்ளது. குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் இந்த புத்தகத்தை வாசித்தால் தன்னை கடிக்க வரும் எறும்பையும் நசுக்காமல் கடிக்க விட்டு அமைதி காத்திருப்பர் என்பது மறுக்க முடியாத உண்மை.

மனிதன் எனும் ச*ர்*வா*திகாரி இந்த உலகத்தில் தன் அறிவுத்திறத்தால் எப்படி பிற உயிர்களை எல்லாம் சற்றும் நினைத்துப் பார்க்காமல் வ*தைக்கிறான் என்பது தான் இந்த நாவல் கூற வரும் கருத்து.

யேச்சன் சிறுவனும் ராணி எறும்பும் என் மனம் கவர்ந்த கதாபாத்திரங்கள் . நீங்கள் இந்த புத்தகத்தை வாசிக்க நேர்ந்தால் உங்களுக்கு எந்த கதாபாத்திரம் பிடித்து இருக்கிறது என்பதை கண்டிப்பாக கூறுங்கள். அதற்கு நீங்கள் புத்தகத்தை வாசிக்க வேண்டும் அல்லவா..
இதோ புத்தகம் குறித்த விவரங்கள்…

நூலின் தகவல்கள் : 

புத்தகத்தின் பெயர் : எறும்புகளின் நகரம் (Erumbukalin Nagaram)
ஆசிரியர் : வன்மி
விலை : 80
தலைப்பு : சிறார் குறுநாவல்
பதிப்பகம் : கூடாரம்
பக்கங்கள்: 71

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பா விமலா தேவி
பட்டுக்கோட்டை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *