1.
நிலாவில் பாட்டி
வடை சுடுவதை நிறுத்தி விட்டாள்
அங்கே அடிக்கடி
விண்வெளி வீரர்கள் இறங்கி
எதையோ தேடுகிறார்கள்
பாட்டியிடம் மட்டும்
யாரும்
வடை வாங்கி தின்றதில்லை
ஆதலால், பாட்டி
வடை சுடுவதை
நிறுத்தி விட்டாள்
இப்பொழுது பாட்டி
பூமிக்கு போய்விடலாமா? என்று
யோசித்துக் கொண்டிருக்கிறாள்.
2.
அழும் குழந்தைக்கு
யாரும் நிலாவைக் காட்டி
சோறு ஊட்டுவதில்லை
கையில் செல்போன் கொடுத்து
படம் போட்டுக் காட்டி
நிதானமாக
ஊட்டி விடுகிறார்கள்.
3.
குழந்தைக்கு சோறூட்ட
வாசலில் நிற்கிறாள்
இடுப்பில் குழந்தையோடு தாய்
வாலாட்டி நிற்கும் நாய்
காட்டி ஊட்டுகிறாள்
பாதையில் போகும்
வாகனங்கள்
காட்டி ஊட்டுகிறாள்
பள்ளி செல்லும் குழந்தைகள்
காட்டி ஊட்டுகிறாள்
அந்த வீட்டின் அருகில்
எந்த மரமும் இல்லை
குழந்தைக்கு பறவைகள் காட்டி
சோறூட்ட
தண்ணீர் குடிக்கும் போது
குழந்தைக்கு புரையேறியது
உச்சந் தலையில் தட்டிவிட்டாள்
இன்னும் கொஞ்சம் என்றாள்
குழந்தை வாங்க மறுத்தது
வயிறு நிறைந்தது
வெளியில் எதையோ பார்த்து
சிரித்தது குழந்தை.
4.
ஸ்கூட்டர் கண்டதும்
குழந்தைக்கு சிரிப்பு
அப்பாவுக்கு முன்
அமர்ந்து கொண்டு
ஓட்டுவது போல பாவனை
செய்து சிரிப்பு
நின்றிருந்த அம்மாவுக்கு
டாட்டா சொல்லி சிரிப்பு
” அப்பா ஆபிஸ் போகணும்
இறங்குடா ” என்று கேட்டும்
இறங்க மறுத்து
அழுது கொண்டே இருந்தது
ஸ்கூட்டர் மறையும் வரை…