காட்டூர் தேசத்தில் முட்டாள் குரங்கு ராஜாவாக இருந்தது. ராஜா தான் முட்டாள் என்றால், விலங்குகள் அடிமுட்டாள்கள். வானம் இடிந்து விழுந்தது என்றாலும், ஒற்றை யானை கடல் தண்ணீரை குடித்து வற்ற வைத்தது என்றாலும் அப்படியே நம்பின. எந்த விலங்கின் மூளைக்கும் வேலையே இல்லை. அதனால் ராஜாவின் சொல்லே, வேதவாக்கு.
பேச்சு என்றால் குரங்கு ராஜாவிற்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அது பேசுவது மட்டும் தான். மற்றவர்கள் பேசுவதல்ல. பேசிப்பேசியே ஆட்சியை பிடித்த தன்னை, வேறு யாரும் பேசிப்பேசி வீழ்த்தி விடக்கூடாது. கூடவே யாரும் எதிர் பேச்சு பேசாமல் தான் பேசுவதையே கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என எண்ணியது.
காட்டூர் அமைச்சரவை கூடியது. ராஜா சிம்மாசனத்தில் ஒய்யரமாக அமர்ந்திருந்தது. யானைக் குட்டிகள் இரு புறமும் நின்றபடி, விசிறிக் கொண்டிருந்தன. ராஜாவின் கண்கள் மூடியிருந்தது.
”கொர்… கொர்…” என குரட்டைச் சத்தம் வந்தது.
ராஜா கண்களை மூடி ஆழ்ந்த சிந்தனையில் இருந்தது. அதனை தூக்கம் என யாராவது சொல்லி விட்டால் அவ்வளவு தான். காட்டு துரோக வழக்கில், காடு கடத்தப்படுவார்கள். காட்டூர் தேசத்தை வல்லரசுக் காடாக உயர்த்தாமல் தூங்க மாட்டேன் என குரங்கு ராஜா சபதம் எடுத்திருந்தது. அதனால் தினமும் இருபது மணி நேரம் இப்படி தான் கண்களை மூடிச் சிந்திக்கும். மீதமுள்ள நேரத்தில் விருந்து உண்டு காடு சுற்றக் கிளம்பிவிடும்.
சட்டென கண்ணைத் திறந்தது. சிவந்த கண்களோடு ஒரு உத்தரவைப் போட்டது.
“பேச்சு எனும் ஆயுதம் கொண்டு ஆட்சியை கவிழ்க்க சதி நடந்து வருகிறது. அதனை முறியடிக்க காட்டு நலன் கருதி இன்று நள்ளிரவு 12 மணி முதல் வாய்ப்பூட்டு சட்டம் அமலுக்கு வருகிறது. இதனை மீறுபர்களுக்கு ஐம்பது பிரம்படி வழங்கப்படும்” முதல் வேளையாக குரங்கு ராஜா அமைச்சர்களுக்கு தனது கையால் வாய்ப்பூட்டைப் போட்டு விட்டது. காட்டு நலன் கருதி விலங்குகள் அனைத்தும் தாங்களாகவே வாய்ப்பூட்டை போட்டுக் கொண்டன. எல்லா விலங்குகள் வாயிலும் பூட்டு.
விலங்குகள் சாப்பிடுவதில் சிக்கல் எழுந்தது. வாயை திறக்க முடியவில்லை. எவ்வளவு முயன்றும் உணவு வாய்க்குள் செல்லவில்லை. காட்டு பக்தியை தாண்டி, விலங்குகளுக்கு பசி எடுத்தது. தங்களது காட்டு பக்தியின் மீது பல விலங்குகளுக்கு சந்தேகமே வந்து விட்டது. சாப்பிட முடியாமல் விலங்குகள் உடல் மெலிந்து பலவீனமாகக் காட்சியளித்தன.
இதனைப் பார்த்து பரிதாபப்பட்ட குரங்கு ராஜா, வாய்ப்பூட்டில் தளர்வுகள் அளித்தது. அதன்படி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மூன்று நிமிடம் சாப்பிடுவதற்காக வாய்ப்பூட்டை திறந்து கொள்ளலாம். மூன்று நிமிடங்களுக்கு மேல் மூன்று விநாடிகள் தாமதம் ஆனாலும் ஐம்பது பிரம்படிகள் வழங்கப்படும். அவசர அவசரமாக அறைக் குறையாக சாப்பிட்டன. தண்ணீர் குடிக்க நேரமில்லாமல் விக்கிக் கொண்டே அலைந்தன. முறையாக விதிமுறையை பின்பற்ற முடியாததால், அனைத்து விலங்குகளின் உடல் எங்கும் வரிக்குதிரை போல கோடு கோடாக வீங்கியிருந்தன.
கதை: சிங்கத்தை ஓட வைத்த குரங்கு | Story ...
காட்டூர் பேரமைதியை குரங்கு ராஜாவின் ஓயாதப் பேச்சு குலைத்தது. ராஜாவின் பேச்சை கேட்டுக் கேட்டு விலங்குகளின் காதில் இரத்தம் வழிந்தது.
ஒருநாள் ஒரு புலிக்குட்டிக்கு பயங்கர பசி. வாய்ப்பூட்டை திறக்க இன்னும் வெகு நேரம் இருந்தது. புலிக்குட்டிக்கு கடும் கோபம் வந்தது. தனியாக கண்ணீரோடு அழுதுக் கொண்டிருந்தது.
புலிக்குட்டி வனதேவதையை நினைத்து வேண்டியது. திடீரென வன தேவதை புலிக்குட்டியின் முன் தோன்றியது. நீல வானில் கருப்பு நிறத்தில் இருந்த வனதேவதை, சிவப்பு உடையணிந்து காட்சியளித்தது.
“யாரு என்னச் சொன்னாலும் அதை அப்படியே கேட்டா இப்புடி தான் ஆகும். அநீதிக்கு எதிராக முணுமுணுத்தால், பூட்டு உடைந்து விழும்” என வனதேவதை வரமளித்து மறைந்தது.
புலிக்குட்டி குரங்கு ராஜா மீதிருந்த கோபத்தில் முணுமுணுத்தது. அதன் வாய்ப்பூட்டு உடைந்து விழுந்தது. மெல்ல காட்டிற்குள் நடந்தது. அனைத்து விலங்குகளின் பூட்டுகளும் விழுந்திருந்தன. குரங்கு ராஜா மீது அனைத்து விலங்குகளுக்கும் கோபமிருந்தது என்பது அப்போது தான் தெரிந்தது.
விலங்குகள் வயிறார உண்டன. வாயாரப் பேசின.
குரங்கு ராஜா சிம்மானசனத்தில் ஒய்யரமாக அமர்ந்திருந்தது. வழக்கம் போல கண்களை மூடி வல்லரசு சிந்தனையில் இருந்தது. சிந்தனை கலைந்து கண்களை திறந்தது. இந்நேரம் வந்திருக்க வேண்டிய கொட்டாவி வரவில்லை. யோசித்தபடி ராஜா வாயை திறக்க முயன்றது. வாயினை திறக்க முடியவில்லை.  உதட்டுகள் இரண்டும் ஒட்டிக் கொண்டிருந்தன. அதன் மேல் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது.
விலங்குகளின் பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது. “ஆல் ஆண்டி அனிமல்ஸ்” என நினைத்தது. பேச்சு சத்தம் ஓயாமல் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. ராஜாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  தன்னால் பேச முடியவில்லை என்பதை விட, மற்ற விலங்குகளின் பேச்சு சத்தம் தான் கோபமூட்டியது.
கைகளால் காதினை மூடியும், பஞ்சினை வைத்து அடைத்தும் பயனில்லை. தூங்கினாலும் காதுக்குள் பேச்சு சத்தம் ஒலித்துக் கொண்டே இருந்தது.
சிம்மாசனத்தில் இருந்து குரங்கு ராஜா இறங்கி ஓடியது. பேச்சு சத்தம் துரத்திக் கொண்டே சென்றது. குரங்கு ராஜா மரத்திற்கு மரம் தாவிச் சென்றது. ஆறுகளை, மலைகளை கடந்து ஓடியது. பேச்சு சத்தமும் விடாது பின் தொடர்ந்தது.
குரங்கு ராஜா காட்டூர் தேசத்தை விட்டே ஓடியது. பேச்சு சத்தமும் தூரத்திக் கொண்டே ஓடியது.
………
பிரசாந்த் வே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *