சிறார் மொழிபெயர்ப்புக் கதை: கிராமக் காக்காயும், நகரக் காக்காயும் – ச.சுப்பாராவ்

Children's Story of Bihar in Tamil Translation by C. Subba Rao. Book Day is Branch Of Bharathi Puthakalayam.ஒரு கிராமத்தில் ஒரு காக்கா சந்தோஷமாக வாழ்ந்து வந்தது. கிராமத்தின் வயல்கள் முழுக்க நிறைய கோதுமை, நெல், தானியங்கள் விளைந்தன. காக்கா அவற்றை சாப்பிட்டுக் கொண்டு ஜாலியாக இருந்தது.

ஒரு சமயம் அந்த கிராமத்தில் கடுமையான பஞ்சம் வந்துவிட்டது. பயிர்கள் கருகிவிட்டன. குளங்கள் காய்ந்துவிட்டன. மனிதர்கள், விலங்குகள், பறவைகள் எவருக்கும் உணவே கிடைக்கவில்லை. மக்கள் பிழைப்பு தேடி வெளியூர் செல்ல ஆரம்பித்தனர்.

காய்ந்து போன நிலங்களைப் பார்த்து காக்கா மிகவும் வருத்தப்பட்டது. அதற்கு ஒரே பசி. சரி, உணவு, தண்ணீர் தேடி, நகரத்திற்குப் போவோம் என்று முடிவு செய்தது.

கிராமத்திற்குப் பக்கத்தில் இருந்த நகரத்திற்கு பறந்த சென்றது. அங்கு ஒரு மரத்தில் போய் உட்கார்ந்தது. அப்போது அங்கு வேறொரு காக்காவும் வந்து உட்கார்ந்தது. சக காக்காயைப் பார்த்ததும் நம் கிராமக் காக்காவிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. ‘நீங்கள் உள்ளூர்காரர் போலத் தெரிகிறீர்கள். எனக்கு உணவு எங்கே கிடைக்கும் என்று வழிகாட்டுங்கள்,‘ என்றது.

நகரக் காக்கா, ‘நகரத்தில் எல்லாம் ரொம்ப புத்திசாலியாக இருக்க வேண்டும். முட்டாள்கள் இங்கு வாழ முடியாது. நீ வாழ்க்கை முழுவதும் கிராமத்தில் இருந்தவன். உன்னை மாதிரி முட்டாள்களுக்கு நகரத்தில் பிழைக்க சாமர்த்தியம் போதாது,‘ என்றது திமிராக.

கிராமக் காக்கா பணிவாக, ‘மற்ற பறவைகளைவிட ஆண்டவர் நமக்கு சற்று அதிகமான அறிவைத் தந்திருக்கிறார். என்னை முட்டாளாக நினைக்காதே. நானும் உன்னை மாதிரியான காக்கா தானே. எனக்கு தயவு செய்து உணவு எங்கெல்லாம் கிடைக்கும் என்று வழி காட்டு,‘ என்றது.நகரக் காக்கா, ‘சான்ஸே இல்லை. இங்கே வயல்கள், குளங்கள் எதுவும் கிடையாது. கடைகளில் எல்லாம் பயங்கரமான காவல் இருக்கும். சின்ன தப்பு செய்தாலும் உயிர் போய்விடும். இங்கிருக்கும் மனிதர்கள் எல்லாம் கிராமத்து ஆட்கள் மாதிரி கிடையாது. இவர்கள் இரக்கமில்லாதவர்கள். கொஞ்சம் கூட யோசிக்காமல் உன்னை கல் வீசிக் கொன்று விடுவார்கள்,‘ என்றது.

இப்படியே இருவரும் கடுமையாக வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது, ஒரு சிறுவன் கையில் ஜிலேபியை வைத்துக் கொண்டு, சாவகாசமாக நடந்து வருவதை நகரக் காக்கா பார்த்தது. ‘இவனிடமிருந்து ஜிலேபியை யார் பிடுங்குகிறார்கள் என்று நமக்குள் போட்டி வைப்போம். ஜிலேபியைப் பறிப்பவர்தான் புத்திசாலி,‘ என்றது.

கிராமக் காக்கா சரியென்று சொல்லிவிட்டு, ‘முதலில் நீங்கள் முயற்சி செய்யுங்கள்,‘ என்றது. உடனே நகரக் காக்கா, அந்தப் பையன் அருகே தாழ்வாகப் பறந்தது. காக்கா தன் அருகில் பறந்து வருவதைப் பார்த்த பையன் ஜிலேபியை அப்படியே வாய்க்குள் போட்டுக் கொண்டுவிட்டான்.

ஏமாறிப் போன நகரக் காக்கா மரத்திற்குத் திரும்பியது. இப்போது கிராமக் காக்காவின் முறை. கிராமக் காக்கா பையனின் தலையருகே பறந்து போய், அவன் தலையில் தன் அலகால் ஒரு கொத்து கொத்தியது. பையன் ஆ என்று அலறினான். வாயில் வைத்திருந்த ஜிலேபி கீழே விழுந்தது. சட்டென்று அதைக் கொத்திக் கொண்டு மரத்திற்கு வந்து அமர்ந்தது கிராமக் காக்கா.

நகரக் காக்காவிற்கு அவமானமாகிப் போனது. ‘நீ நல்ல புத்திசாலிதான். நகரத்தில் பிழைத்துக் கொள்ள வாழ்த்துகள்,‘ என்று வாழ்த்தியது.