Children's Story: Sarrak....Sarrak Story By Udhaya Sankar. *சர்ரக்….சர்ர்ரக்* சிறார் கதை - உதயசங்கர். Book Day And Bharathi Puthakalayamமேப்புலியூர் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த கதை. மேப்புலியூர் ஒரு காட்டு ஸ்டேஷன். அத்துவானக்காட்டுக்குள் அந்த ஸ்டேஷன் இருந்தது. சுற்றிலும் ஆள் நடமாட்டமும் இருக்காது. எப்போதாவது ஆடு மேய்க்கும் பையன்கள் வந்து தண்ணீர் குடித்து விட்டுப் போவார்கள். அவ்வளவுதான். அப்புறம் எதுக்கு அந்த ஸ்டேஷன் இருக்கிறது என்ற சந்தேகம் வரும். ரயில்கள் ஒன்றை ஒன்று கிராஸ் செய்வதற்காக அந்த ஸ்டேஷனை வைத்திருந்தார்கள்.

ஸ்டேஷன் மாஸ்டர் துரை அவருடைய உதவியாளரிடம் கேட்டார்.

“ நீ பார்த்தியா ராமு..

ஆமா சார்.. நான் சிக்னலுக்கு எண்ணெய் ஊத்த போனப்ப அதைப் பார்த்தேன்..

எப்படி இருந்துச்சி? “

“ கன்னங்கரேலென்று இருந்துச்சி.. கடவாய்ப்பல்லு வெளியே நீட்டிக்கிட்டிருந்திச்சி.. ஒரே ரத்தக்கவிச்சி வாடை…

யப்பா பயங்கரமா இருக்கே..

அது சர்ரக் சர்ர்ர்ர்க் என்ற சத்தத்துடன் நடந்து போனிச்சு சார்.. ரத்தக்காட்டேரி சார்.. மாட்டுனோம் அவ்வளவுதான் “

“ உன்னிய ஒண்ணும் பண்ணலையா..

சார்.. நான் அதைப் பார்த்ததுமே பக்கத்திலிருந்த வேப்பமரத்துக்குப் பின்னாலே போய் ஒளிஞ்சிகிட்டேன். வேப்பமரம்னா அது வராதுல்ல.

ஸ்டேஷன் மாஸ்டர் துரை அன்று இரவுப்பணிக்கு வந்திருந்தார். ராமு சொன்னதைக் கேட்டபிறகு ஸ்டேஷனுக்கு வெளியில் பார்த்தாலே ஏதேதோ உருவங்கள் நடமாடுகிற மாதிரி தெரிந்தது. பகலிலேயே ஒரு சுடுகுஞ்சி கூட இருக்காது என்றால் ராத்திரி எப்படி இருக்கும்? இரவில் கேட்கவே வேண்டாம். அருகில் நின்றால் கூட ஆள் தெரியாதபடி இருட்டு கருங்கும்மென்று இருக்கும். ஸ்டேஷனில் எரியும் விளக்குகளைத் தவிர தூரத்தில் கூட ஒரு பொட்டு வெளிச்சம் தெரியாது. பூச்சிகளின் சத்தம் கொய்ங் கொய்ங் என்று காதைத்துளைக்கும். திடீர் திடீரென்று காட்டுப்பூனைகளின் சத்தம் குழந்தை அழுவதைப்போல ஞ்ஞ்யா ஞ்ஞ்ய்யா என்று இழுவையாகக் கேட்கும். குள்ளநரிகளின் ஊளைச்சத்தம் ஊஊஊஊஊஊ என்று தூரத்தில் கேட்ட மாதிரி இருக்கும். படாரென்று மிக அருகில் கேட்கும். ஸ்டேஷன் வெளிச்சத்திற்கு வந்து விழும் பூச்சிகளைத் தின்பதற்குப் பாம்புகள் அடிக்கடி வருகை தரும்.

அந்த ஸ்டேஷனுக்கு எதிரே ஒரு ஆலமரம் தலைமுடியை விரித்துப்போட்டு உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணைப்போல நின்று கொண்டிருந்தது. காற்று வீசும்போது அந்த ஆலமரத்தின் கிளைகளும் விழுதுகளும் பேயாட்டம் போடும். இரவில் அந்த ஆலமரத்தைப் பார்த்தாலே பயமாக இருக்கும்.

அந்த ஸ்டேஷனுக்கு யாரும் விரும்பி வந்து வேலை பார்க்க மாட்டார்கள். வேறு வழியில்லாமல் தான் வேலைக்கு வருவார்கள். அங்கே ஏராளமான பேய்க்கதைகள் உலவிக் கொண்டிருந்தன. எல்லா ஊழியர்களும் ஏதாவது ஒரு பேயைப் பார்த்ததாகச் சொல்லுவார்கள். ஆண் பேய், பெண் பேய், குழந்தைப்பேய், கிழவிப்பேய், கிழவன் பேய், என்று எல்லாவயதிலும் பேய்கள் அந்த ஸ்டேஷனைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தன. அடிக்கடி பேய்க்கதைகளைப் பற்றித்தான் பேச்சு நடக்கும்.

ரயில்கள் வந்து போய்க்கொண்டிருந்தன. நள்ளிரவு இரண்டு மணி இருக்கும். திடீரென்று அந்த சத்தம் கேட்டது.

சர்ர்க் சர்ர்ரக் சர்ர்க் சர்ரக்

ஸ்டேஷன் மாஸ்டர் துரை, அரைத்தூக்கத்திலிருந்த உதவியாளர் ராமுவை எழுப்பினார். அவரும் அந்தச் சத்தத்தைக் கேட்டார்.

சர்ர்க் சர்ர்ர்ரக் சர்ர்க் சர்ரக்..

“ ஆமா சார்.. ஏதோ வாடை கூட வருது ..என்று ராமு சொன்னார். அப்போதுதான் ஸ்டேஷன் மாஸ்டர் துரையும் கவனித்தார். ஒரு நீர்க்கவிச்சை வாடை அதாவது பாசி வாடை அடித்தது.

“ ஆமா.. நீர்க்கவிச்சை வாடை அடிக்குது..

இல்ல சார் ரத்தக்கவிச்சை வாடை  அடிக்குது.. “ என்று ராமு சொன்னான். அவன் சொன்னபிறகு அது ரத்தக்கவிச்சை வாடை மாதிரியே தெரிந்தது.

உடனே ராமு ஒரு கையில் விளக்குமாற்றையும் ஒரு கையில் செருப்பையும் எடுத்துக் கொண்டான். செருப்பையும் விளக்குமாற்றையும் பார்த்தால் பேய் ஓடி விடும் என்று பொதுவான நம்பிக்கை. ஸ்டேஷன் மாஸ்டர் துரை அங்கிருந்த இரும்பு கடப்பாரையை எடுத்துக் கொண்டார். இரண்டுபேரும் தயாராக இருந்தார்கள்.

கொஞ்ச நேரத்துக்கு எந்த சத்தமும் இல்லை. அமைதியாக இருந்தது. திடீரென ஸ்டேஷன் வாசலுக்கு முன்னால் அந்தச் சத்தம் சர்ர்க் சர்ர்ரக் சர்ர்க் சர்ர்ரக் என்று கேட்டது. அப்புறம் எந்தச் சத்தமும் இல்லை. ஸ்டேஷன் மாஸ்டர் துரையின் இதயம் படபடவென அடித்தது. கைகளில் லேசான நடுக்கம் வந்தது. ராமுவின் முகம் வெளிறிப்போய் விட்டது.

இன்னும் சில நிமிடங்களில் அந்த ரத்தக்காட்டேரி வரப்போகிறது. இதோ. இதோ.

மறுபடியும் சத்தமில்லை. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு வாசலுக்கு இரண்டுபேரும் வந்து எட்டிப்பார்த்தார்கள். எங்கும் இருள். வேறு ஒன்றும் தெரியவில்லை. வீணாகப்பயந்துட்டோமோ என்ற சந்தேகத்துடன் மறுபடியும் மறுபடியும் இருட்டுக்குள் கூர்ந்து பார்த்தார்கள்.

இரண்டு பேரின் ஈரக்குலை பதறும்படி மறுபடியும் அந்தச் சத்தம் இன்னும் அருகில் கேட்டது. நாற்றமும் அடித்தது.

சர்ர்க் சர்ர்ரக்

சத்தம் வந்த இடத்தில் முதலில் எதுவும் தெரியவில்லை. சற்று கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டு பார்த்தார்கள். அங்கே சிமெண்ட் தரையில் மெல்ல சர்ரக் சர்ர்ர்க் என்று தன் ஒவ்வொரு காலாக எடுத்து வைத்து ஒரு கிணற்று ஆமை நடந்து போய்க் கொண்டிருந்தது. அதனிடமிருந்து தான் அந்த நீர்க்கவிச்சி வாடையும் வந்து கொண்டிருந்தது.

ஸ்டேஷன் மாஸ்டர் துரைக்கு வெட்கமாகி விட்டது. அவர் அதை மறைப்பதற்காக ராமுவிடம்,

“ ராமு.. உன்னோட ரத்தக்காட்டேரி.. போகுது பாரு.. “ என்று சொல்லிச் சிரித்தார். ராமுவும் அந்தச் சிரிப்பில் சேர்ந்து கொண்டார்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 3 thoughts on “*சர்ரக்….சர்ர்ரக்* சிறார் கதை – உதயசங்கர்”
  1. குழந்தைகளின் மூடநம்பிக்கைகளை போக்கி, பகுத்தறிவோடு சிந்திக்கத் தூண்டும் சிறந்த கதை… இரவு 9 மணிக்கு இதை வசிக்கும்போது என் 5வயது மகள் ஆவலோடு கேட்டாள். எனக்குதான் பயங்கரமான பயமாக இருந்தது. எங்களுக்கெல்லாம் இதுபோன்ற கதைகள் எட்டாக் கனிகளே…மிகச் சிறப்பு தோழர்👌👌👌

    1. குழந்தைகளின் மூடநம்பிக்கைகளை போக்கி, பகுத்தறிவோடு சிந்திக்கத் தூண்டும் சிறந்த கதை… இரவு 9 மணிக்கு இதை வசிக்கும்போது என் 5வயது மகள் ஆவலோடு கேட்டாள். எனக்குதான் பயங்கரமான பயமாக இருந்தது. எங்களுக்கெல்லாம் இதுபோன்ற கதைகள் எட்டாக் கனிகளே…மிகச் சிறப்பு தோழர்👌👌👌

  2. சிவகங்கையில் கழிந்த பால்ய நாட்களை நினைவுபடுத்துகிறது. இரயில்வே ஸ்டேஷனை சுற்றி கதைகளில் உலாவும் பேய்களை அழகான மொழி நடையில் காட்சிப் படுத்தியுள்ளீர்கள். சிறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *