தூங்காநகரமும் தூங்குமூஞ்சி ராஜாவும் சிறார் கதை – உதயசங்கர்

Children's Story: Thoonganagaramum thoongumoonji raajavum story By Udhaya Sankar. உதயசங்கரின் சிறார் கதை தூங்காநகரமும் தூங்குமூஞ்சி ராஜாவும்



முன்னாடி ரொம்ப காலத்துக்கு முன்னாடி தூங்காநகரம் என்ற நாடு இருந்தது. அந்த நாட்டில் எப்போதும் மக்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். இரவும் பகலும் கடைவீதிகள் திறந்திருக்கும். மக்கள் கூட்டம் அலைமோதும். அப்படிப்பட்ட நாட்டில் பட்டத்துக்கு வந்த ராஜா தான் தூங்குமூஞ்சி ராஜா.

தூங்குமூஞ்சி ராஜா என்பது அவருடைய பட்டப்பெயர் தான். மக்களுக்கு அவருடைய உண்மையான பெயரே மறந்து விட்டது. எல்லோருக்கும் அவர் தூங்குமூஞ்சி ராஜா தான். ஏன் ராஜாவுக்கே கூட தன்னுடைய பெயர் தூங்குமூஞ்சி தான் போல என்று நினைத்துக் கொண்டார். அதனால் தூங்குமூஞ்சி ராஜாவே என்று கூப்பிட்டால் தான் திரும்பிப்பார்ப்பார். தூக்கம்னா தூக்கம். உங்கவீட்டுத்தூக்கம் எங்க வீட்டுத்தூக்கமில்லை. உலகத்தூக்கம் தூங்குவார் தூங்குமூஞ்சி ராஜா.

எப்படின்னு கேட்கறீங்களா?

முதல்நாள் இரவு படுத்தார் என்றால் மறுநாள் பகல் முழுவதும் தூங்கி இரவில் எழுந்திரிப்பார். உடனே,
“ அட இன்னும் விடியலையா? “ என்று சொல்லிவிட்டு திரும்பிப் படுத்து விடுவார். தூக்கத்திலேயே பல் துலக்குவார். ஒன்பாத்ரூம் போவார். டூ பாத்ரூம் போவார். குளிப்பார். சாப்பிடுவார். தூங்கிக்கொண்டே பேசவும் செய்வார். ஆனால் கண்களை மட்டும் திறக்கமாட்டார்.

அரண்மனையிலிருந்து அரசவைக்குச் செல்ல உருளைச் சக்கரங்கள் வைத்த கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டே போவார். அந்தக் கட்டிலைத் தூக்குவதற்குக் கட்டில் தூக்கிகள் இருந்தார்கள். அப்படியே அசங்காமல் அந்தக் கட்டிலிலிருந்து சிம்மாசனக்கட்டிலில் தூக்கிப் படுக்க வைப்பார்கள். அதில் படுத்துக்கொண்டே மந்திரிகள் சொல்லும் எல்லாப்பிரச்னைகளுக்க்கும் தலையாட்டுவார். மந்திரிகள் தங்களுடைய விருப்பத்துக்கேற்ப ராஜா சொன்னதாகச் சட்டம் போடுவாரகள்.

“ அரசே! மக்களிடம் வாங்கும் வரிப்பணத்தை குறைக்க வேண்டும். என்று மக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள் .”

ராஜா தலையாட்டுவார்.

“ ராஜா குறைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டார்..” என்று மந்திரிகள் சொல்வார்கள்.

“ நாம் நம்முடைய காடுகளை அந்நியருக்கு விற்றுவிடலாமா ராஜா..”
ராஜா தலையாட்டுவார்.

“ விற்றுவிடலாம் என்று ராஜா உத்தரவு கொடுத்து விட்டார்.,.. “ என்று காட்டிலாகா மந்திரி சொல்லுவார்.

“ நமது ஆற்று நீரை குளிர்பானக் கம்பெனிக்கு விற்று விடலாமா அரசே? “
ராஜா தலையாட்டுவார்.

“ ராஜா ஆற்றுநீரை விற்கச் சொல்லி உத்தரவு கொடுத்து விட்டார்..” என்று நீர்வளத்துறை மந்திரி சொல்லுவார்.

“ நம்முடைய மலைகளையெல்லாம் கிரானைட் கம்பெனிகளுக்கு விற்று விடலாமா ராஜா? “
என்று மலை மந்திரி கேட்பார். வழக்கம் போல ராஜா தலையாட்டுவார்.

“ ராஜா உத்தரவு போட்டு விட்டார்..” என்று மலைமந்திரி மலைகளை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்று விடுவார்.
ஒருநாள் கல்வி மந்திரி வந்தார்.

“ ராஜா.. படித்த இளைஞர்களும், படிக்கும் குழந்தைகளும் நாம் செய்கிற பொருளாதாரச் சீர்திருத்தங்களைக் கேள்வி கேட்கிறார்கள்.. போராட்டம் செய்கிறார்கள்..கல்வியை விற்று விடலாமா? ”
என்று கேட்டார். தூங்குமூஞ்சி ராஜா வேகமாகத் தலையாட்டினார். கல்வி மந்திரி கல்வியை கூறுபோட்டு விற்றார். அதையும் மீறி படிக்கவந்த ஏழைக்குழந்தைகளைப் பொதுப்பரீட்சை வைத்துத் துரத்தினார்.

தொழில் மந்திரி மட்டும் சும்மா இருப்பாரா? அத்தனை அரசுத்தொழில்களையும், பணக்காரர்களுக்கு விற்றார். பணக்காரர்கள் எல்லாவற்றையும் அந்நிய நாட்டுக்கு விற்றுவிட்டார்கள். அந்நியர்கள் இப்போது தூங்காநகரம் நாட்டுக்குள் நுழைந்து விட்டனர். ரொம்ப காலமாக ஒரு நாட்டிடம் அடிமைப்பட்டிருந்த தூங்காநகரம் கொஞ்சநாட்களுக்கு முன்னால் தான் விடுதலையடைந்தது. இப்போது பல நாடுகளுக்கு அடிமையாக மாறிவிட்டது.

தூங்குமூஞ்சி ராஜாவின் தூக்கம் கலையவில்லை.

நாடே அந்நியர்கள் கையில் போய் விட்டது.

தங்களுடைய நாட்டுக்குள்ளேயே மக்கள் அகதிகளாகி விட்டார்கள். ஒரு தெருவிலிருந்து அடுத்த தெருவுக்குப் போகவேண்டுமென்றால் வரி செலுத்தவேண்டும். ஒரு ஊரிலிருந்து அடுத்த ஊருக்குப் போகவேண்டுமென்றால் வரி செலுத்தவேண்டும். எதற்கெடுத்தாலும் வரி. நடை வரி, உடை வரி, கடை வரி, நில் வரி, உட்கார் வரி, படு வரி, முழி வரி, என்று எல்லாம் வரி தான்.

இதைப் பற்றி எதுவும் தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தார் தூங்குமூஞ்சி ராஜா. ஆனால் மக்கள் விழித்து எழுந்தார்கள். ஒன்று சேர்ந்தார்கள்.
அந்நியர்களுக்கு எதிராகப் போராடினார்கள்.

ஆண்கள் போராடினார்கள்.

பெண்கள் போராடினார்கள்.

இளைஞர்கள் போராடினார்கள்.

குழந்தைகள் போராடினார்கள்.

அந்நியர்களால் தாக்குப் பிடிக்கமுடியாமல் ஓடிப்போனார்கள்.

பணக்காரர்கள் ஓடிப்போனார்கள்.

மந்திரிகள் ஓடிப்போனார்கள்.

படைத்தளபதிகள் ஓடிப்போனார்கள்.

வீரர்கள் ஓடிப்போனார்கள்.

மக்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது தூங்குமூஞ்சி ராஜா மட்டும் தூங்கிக் கொண்டிருந்தார். அங்கே வந்த இளைஞர்கள் அவரை அப்படியே கட்டிலோடு அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் கடலில் போட்டார்கள். அப்போதும் தூங்குமூஞ்சி ராஜா தூங்கிக் கொண்டிருந்தார்.
இப்போது தூங்காநகரம் நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

என்ன? கடலில் போட்ட ராஜாவைப் பற்றிக் கேட்கிறீர்களா? உங்கள் ஊர்ப்பக்கம் கடல் இருந்தால் பாருங்கள். ஒரு கட்டில் மிதந்து வருகிறதா? அதில் தான்

தூங்குமூஞ்சி ராஜா தூங்கிக் கொண்டே வருவார்.

பாவம்!
இன்னும் அவருக்கு தான் கடலில் மிதப்பது தெரியாது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.